Friday, March 20, 2026

வாழ்வின் தருணங்களையும் கலையாக்கிய இரு கலைஞர்கள்...


செர்பியாவைச் சேர்ந்த மேடைக் கலைஞர் மரீனா அப்ரமோவிக்கின்(Marina Abramovic) புகழ்பெற்ற உணர்ச்சிகரமான படைப்பான  The Artist is Present என்கிற கலைநிகழ்வு 2010 ல் நியூயார்க்கில் நடந்தது. 



மரீனாவின் 40 வருட கலைப் படைப்புகளான மேடை நாடகங்கள்,  ஒலிப் படைப்புகள், காணொளிப் படைப்புகள்,  புகைப்படங்கள், தனிநபர் மேடை நிகழ்த்து-கலைகள்(peformance arts),மற்றும் அவருடைய முன்னாள் காதலரும் கலைஞருமான உலாய் (Frank Uwe Laysiepen aka Ulay) உடன் மற்றும் பிற கலைஞர்களுடன் அவர் இணைந்து நிகழ்த்திய கூட்டு நிகழ்த்து-கலைகள் என்று அனைத்து படைப்புக்களையும் சேர்த்து காட்சிப் படுத்திய நிகழ்வு தான் 'The Artist is Present'. மூன்று மாதங்கள் நடந்த இந்த  நிகழ்வில் மரீனாவின் அனைத்து கலைப் படைப்புக்களை பார்ப்பதோடு அவரையும் பொதுமக்கள் நேரடியாக சந்திக்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த கலைப் படைப்புக்களோடு கலைஞரையும் நேரில் சந்திக்கும் நிகழ்வு நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தில் (MoMA) சுமார் 3 மாதங்கள் (736 மணிநேரம்) நடைபெற்றது.️ அதன் முக்கிய ஒரு நிகழ்வாக மரீனாவை பார்வையாளர்கள்  நேருக்கு நேர் சந்திக்கும் வித்தியாசமான ஒரு நிகழ்வும் இருந்தது. 

அருங்காட்சியகத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு அரங்கில் மரீனா ஒரு நாற்காலியில் அசையாமல் அமர்ந்திருப்பார். அவருக்கு நேர் எதிரே காலியாக ஒரு நாற்காலி இருக்கும். பார்வையாளர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த நாற்காலியில் அமரலாம். சந்திக்கலாம். ஆனால் உரையாடக் கூடாது.

பார்வையாளர் சந்திப்பின் விதிமுறைகள்:
பார்வையாளர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர் முன்னால் அமர்ந்திருக்கலாம். ஆனால் பேசக்கூடாது, ஒருவரையொருவர் தொடக்கூடாது. வெறும் கண்களால் மட்டுமே பார்த்துக்கொள்ள வேண்டும்.

மரீனா ஒவ்வொரு நாளும் 8 மணிநேரம் முதல் 10 மணிநேரம் வரை அருங்காட்சியகம் திறந்திருக்கும் வரை உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல், கழிவறை கூட செல்லாமல் பார்வையாளர்களை சந்திக்க அமைதியாக அமர்ந்திருந்தார். அவரது கலைப் படைப்புகளை காட்சிப்படுத்திய அந்த 3 மாதங்களும் அமைதியாக அமர்ந்திருந்து பார்வையாளர்களை இப்படி சந்தித்தார்.  

மக்களின் அனுபவம்:
இந்த நிபந்தனைகளோடு ஆயிரக்கணக்கான மக்கள் அவர் முன் அமர்ந்தனர். அவரை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தனர். பல நிமிடங்கள் மரீனாவின் கண்களை உற்றுப் பார்த்தபோது, மக்கள் தங்களுக்குள் இருக்கும் சோகம், வலி அல்லது மகிழ்ச்சியை உணர்ந்து கண்ணீர் விட்டு அழுதனர். மரீனா அவர்களுக்கு ஒரு 'கண்ணாடி' போல இருந்து, அவர்களின் மன உணர்வுகளை அவர் பிரதிபலித்தார்.

இந்த நிகழ்வின் போது நடந்த மிக முக்கியமான சம்பவம் மரீனாவின் முன்னாள் காதலர் உலேயும் (Ulay)அந்த பார்வையாளர் சந்திப்பு நிகழ்விற்கு வந்ததுதான்.

மரீனாவும் உலாயும் 12 ஆண்டுகள் இணைந்து கலைப் பயணமும், காதல் பயணமும் மேற்கொண்டவர்கள்.  1988ல் அவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்தனர். அதன் பிறகு 20 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் சந்திக்கவோ, பேசிக்கொள்ளவோ இல்லை. அவர்களுடைய பிரிவையும் கூட ஒரு கலைப்படைப்பாக அவர்கள் உருவாக்கி வெளியிட்டிருந்தனர்.

மரீனா பார்வையாளர்களை சந்திக்க அந்தப் பெரிய ஹாலில் கண்களை மூடி அமர்ந்திருக்கும்போது, உலாய் அவருக்குத் தெரியாமல் வந்து எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். கண்களைத் திறந்து பார்த்த மரீனா, அதிர்ச்சியில் உறைந்து போனார். எந்த வார்த்தைகளும் பேசாமல் கண்களாலேயே இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டனர். விதிமுறையை மீறி, உலாயின் கைகளைத் தொட்டு அவர் அழுத அந்த ஒரு நிமிடம் உலகையே நெகிழச் செய்தது.

இந்த கலை மக்களுக்கு என்ன சொல்கிறது..?
இந்த அவசரமான உலகில், ஒருவருக்கொருவர் நேரத்தைச் செலவிடுவதும், அமைதியாக ஒருவரின் கண்களைப் பார்ப்பதும் அருகிப்போய்விட்டது.

இருத்தல்" (Presence) என்பது எவ்வளவு வலிமையானது என்பதையும், வார்த்தைகள் இன்றி மௌனத்தின் மூலமே ஆழமான அன்பைப் பரிமாற முடியும் என்பதையும் இக்கலை விளக்கியது.

மரீனாவும் உலேயும் சந்தித்த அந்த நிகழ்வு கீழே...

The Artist is Present.



மரீனா - உலாய். The Great Wall Walk.

மரீனாவும் உலாயும் 1988-இல் பிரிந்தபோது, அதை கலைப்பூர்வமாக அறிவிக்க சீனப் பெருஞ்சுவரில் (The Great Wall Walk)மேற்கொண்ட அந்த வித்தியாசமான பிரிவினைப் பயணம் பற்றித் தெரிந்துகொள்ள விருப்பமா?

மரீனா மற்றும் உலாயின் காதல் மற்றும் கலைப்பயணம் எவ்வளவு தீவிரமானதோ, அதே அளவு அவர்களின் பிரிவும் உலகத்தையே வியக்க வைத்தது.

1988-இல் அவர்கள் மேற்கொண்ட அந்த கலைப் பயணத்தின் பெயர் "தி லவ்வர்ஸ்" (The Lovers).

இதோ அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிவின் பின்னணி:
அவர்களது காதலை தங்கள் காதலை உலகிற்கு வித்தியாசமாக அறிவித்து செய்துகொள்ளத் திட்டமிட்டனர். அதை ஒரு கலையாகவே வெளிப்படுத்தினர். அதன்படி அவர்கள் இருவரும் சீனப் பெருஞ்சுவரின் இரு முனைகளிலிருந்தும் கிளம்பி ஒருவரை நோக்கி ஒருவர் நடந்து வந்து, நடுவில் வந்து சந்தித்து திருமணம் செய்துகொள்வதாகத் திட்டம். 

ஆனால், சீனாவிடம் இந்த நடைப் பயணத்துக்காக அனுமதி பெறுவதற்குள் 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டு, பிரிவது என்று முடிவெடுத்துவிட்டனர். திருமணத்திற்காகத் திட்டமிட்ட அதே பயணத்தை, அவர்கள் தங்களின் பிரிவை (Breakup) அறிவிக்கும் கலைப் பயணமாக மாற்றினார்கள்.

அதன்படி,
மரீனா: மஞ்சள் கடலின் கரையில் (Shanhaiguan)இருந்து சீனப் பெருஞ்சுவரில் கிழக்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
உலாய்: கோபி பாலைவனத்தின் (Gobi Desert) பகுதியிலிருந்து சீனப் பெருஞ்சுவரில் மேற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.

இறுதிச் சந்திப்பு
இருவரும் கரடுமுரடான மலைப்பாதைகள் மற்றும் கடுமையான வானிலையைக் கடந்து தலா 2,500 கிலோமீட்டர்கள் நடந்தனர். நடுவில் இருந்த விடுதிகளில் தங்கினர். சரியாக 90 நாட்களுக்குப் பிறகு, அவர்களின் பாதைகளின் நடுப்பகுதியில் சீனப் பெருஞ்சுவரில் ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.

அவர்கள் சந்தித்துக் கொண்டபோது, ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிப்பிடித்து அழுதனர். அப்படி சிறிது நேரம் சிரிப்பு, அழுகை, உணர்ச்சிப் பெருக்கு போன்ற கலவையான உணர்வுகள் எழ நின்றிருந்தனர். கைகுலுக்கியபடியே நின்றிருந்த அவர்கள், மீண்டும் ஒரு வார்த்தை கூட பேசாமல் எதிர் திசையில் நடந்து சென்றனர். அதுவே அவர்களின் அதிகாரப்பூர்வமான பிரிவாக அமைந்தது.

ஏன் இது ஒரு சிறந்த கலையாகக் கருதப்படுகிறது..?
சாதாரண மனிதர்கள் சண்டையிட்டோ அல்லது வெறுப்பிலோ பிரிவார்கள். ஆனால், ஒரு நீண்ட கால உறவை இவ்வளவு பெரிய தியாகம் மற்றும் பயணத்தின் மூலம் "கௌரவமாக", கலை வடிவமாக முடிவுக்குக் கொண்டு வந்தது இதுவே முதல் முறை. காதலைப் போலவே பிரிவையும் மிக உயர்ந்த கலையாக அவர்கள் மாற்றிக் காட்டினர்.

மரீனாவும் உலேயும் தங்கள் பிரிவுப் பயணத்தை கலை வடிவமாக உருவாக்கிய , The great wall walk இணைப்பு கீழே.



இந்தக் கடைசி சந்திப்புக்குப் பிறகு சுமார் 22 ஆண்டுகள் கழித்துத்தான்,  முன்பு குறிப்பிட்ட "The Artist is Present" நிகழ்வில் அவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

An Interesting article about Marina and Ulay's life together.


Marina and Ulay. About their great wall walk.


Marina's works. In MoMA website.  


Saturday, March 15, 2025

புதிய கல்விக் கொள்கை 2025. மும்மொழிக் கொள்கை என்கிற வேஷம் போட்டு வந்திருக்கும் இந்தித் திணிப்பு.





தற்போது வந்துள்ள பாஜகவின் புதிய மும்மொழிக் கொள்கை என்பது நேரு காலத்திலேயே கொண்டு வரப்பட்ட இந்தியை மூன்றாவது மொழியாக திணித்த கல்விக் கொள்கையின் மேக்கப் போட்ட வேறு வடிவம் ஆகும்.

70 வருடமாக இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசுகளான காங்கிரஸும் தற்போது பாஜகவும் தொடர்ந்து முயன்று வந்துள்ளன.

உண்மையில் சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவதுதான் இந்தியாவை ஆளும் சங்கிகளின் திட்டம். அது ஆர்எஸ்எஸ்ன் கோட்பாடுகளில் எழுதப்பட்டு இருக்கும் திட்டம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களில் பெரும்பாலோர் பிராமணர் மற்றும் உயர்சாதியினர். அவர்களில் பெரும்பாலோர இந்துத்துவ அமைப்புகளான ஆர்எஸ்எஸ் போன்றவற்றில் ஈடுபாடு அல்லது தொடர்பு கொண்டவர்கள். அம்பேத்கர் மட்டுமே ஒரு தலித். ஆனால் அவர் மட்டுமே அவர்கள் எல்லோரையும் விட படித்தவர். அறிவாளி. அம்பேத்கரை சட்டம் இயற்றும் குழுவின் தலைவராகப் போட்டது நேரு மற்றும் காந்தியடிகளின் அழுத்தத்தாலேயே. இவை எல்லாவற்றையும் தாண்டி அரசியலமைப்பு சட்டம் 343லியே இந்தி வலியுறுத்தப்படுகிறது. தென் மாநிலங்கள் போராடிய பின்புதான் ஆங்கிலமும் இருக்கட்டும் என்று சேர்த்துக் கொண்டார்கள்.

2019 ல் கஸ்தூரிரங்கன் என்கிற பிராமணர் தலைமையிலான குழு இந்த புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியது.

ஏன் முன்று மொழி வந்தது ?  சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்தது. அரசு அலுவல்கள் இப்போதுவரை பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான்.

இந்த 70 வருடங்ஙளில் ஆங்கிலம் உலக அளவில் முக்கியமான அறிவியல் மொழியாக வளர்ந்துவிட்டது. உலகின் பெரும்பாலான நாடுகளிடையே தொடர்பு மொழியாக ஆங்கிலம் வந்துவிட்டது. ஆங்கிலத்தின் இந்த பெரும் வளர்ச்சி ஆங்கில மொழியை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டது. இந்தி மொழி இன்னும் அதே வளர்ச்சியில்லாத நிலையிலேயே தொடர்கிறது. தமிழ் கூட அறிவியல் வார்த்தைகள் சேர்த்து தன்னை புதிதாக வளர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது.

பெருமளவு அறிவியல் மற்றும் அனைத்து உலக முன்னேற்றங்களின் கருவியாக , உலக மக்களின் தொடர்பு ஊடகமாக வளர்ந்து கொண்டே வருகிறது ஆங்கிலம். இதே ஆங்கில மொழியை இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் தாய் மொழியை முதல் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும் படித்தால் இந்தியாவையே உலகத்துடன் இணைத்துவிட முடியும். இந்தியாவில் மாநிலங்களிடையேயான மொழிப் பிரச்சனைக்கு ஆங்கிலம் மிக எளிய தீர்வாக அமையும்.

ஆனால் அதைச் செய்ய சங்கிகள் விரும்பவில்லை. அவர்களுடைய நோக்கம் இந்தியாவில் இருந்து ஆங்கிலத்தை விரட்டிவிட்டு அங்கே சமஸ்கிருதத்தை கொண்டு வருவதாக ஆகிப் போனது.

அதனால் தான் மும்மொழி என்று மூன்றாவதாக ஆங்கிலத்தை தள்ளிவிட முயல்கிறார்கள்.

மும்மொழியை சொல்லி  ஏற்கனவே இந்தியைத் திணித்த சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ சிலபஸ்கள் எல்லாம் ஒன்றிய அரசின் கல்வித் திட்டங்கள்.அதன் மூலம் படித்தால் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆசை காட்டப்பட்டது. அதனால் தமிழ்நாட்டில் பலரும் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தேடி ஓடினார்கள். (இன்றைக்கு நிலைமையே வேறு. அரசுத் துறைகளை வரிசையாக விற்றுக் கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு. அரசுத்துறை வேலைகளே இல்லை. குறைந்த படியே இருக்கின்றன. இதில் எங்கே போய் ஹிந்தி படித்து ஒன்றிய அரசில் வேலை வாங்குவது )

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இருந்தாலும், நடைமுறையில் அந்த மூன்றாவது மொழியாக ஹிந்தியே கற்றுத் தரப்படுகிறது.

எப்படி ? மூன்றாவது மொழியாக தமிழ்நாட்டில் தமிழை ஒருவர் விருப்ப பாடமாக படிக்க. வேண்டும் என்றால் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் வேண்டுமல்லவா ?

தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்து சொச்ச கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சிபிஎஸ்ஈ பள்ளிகளில் ஒன்றில் கூட தமிழ் சொல்லித் தரும் ஆசிரியர்கள்  இல்லை. வட மாநிலங்களில் இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களில் ஹிந்தியைத் தவிர வேறு எந்த மொழியும் கற்றுத் தரப்படுவதில்லை. இதுதான் அவர்கள் மும்மொழிகளை அமல்படுத்தும் லட்சணம்.

ஆக, இவர்கள் நோக்கம் இவர்கள் செய்யும் செயல்களில் தெளிவாக தெரிகிறது. மும்மொழி என்று இந்தி பற்றி பேசாமல் இருப்பதாலேயே இது மும்மொழிக் கொள்கை ஆகிவிடாது.

நேற்று வரை அசைவம் சாப்பிட்ட நரி இன்று முதல் நான் சுத்த சைவம். நான் இந்தியே சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் அதை நம்ப நாங்கள் ஆட்டுக் கூட்டமல்ல.

இருமொழிக் கொள்கையில் ஆங்கிலத்தில் பாஸ் செய்ய முடியாமல் அதில் பெயிலாகி பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்தியவர்கள்‌ ஏராளம்.

ஆங்கிலம் உலகளாவிய இணைப்பு மொழி. அதைப் படித்தால் நல்லது. ஆனாலும் கூட ஆங்கிலத்தை படித்து பாசாக முடியாமல் பெயிலாகும் மாணவர்கள் இருக்கும்போது ,

இந்தியையும் மூன்றாவதாக ஒரு மொழியாக சேர்ப்பதால் அதிலும் பாசாக முடியாமல் பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்துபவர்கள் எண்ணிக்கை இன்னும் பல மடங்குகளாகும்.

ஏதோ சில மாணவர்கள் இயல்பாகவே பல மொழிகளை எளிதில் கற்க முடிபவர்களாக இருப்பதால் எல்லா மாணவர்களும் மூன்று மொழி நான்கு மொழி படிக்கும் வல்லவர்கள் என்பதாக பில்டப் செய்து, மூன்றாவதாக ஒரு மொழியைப் படித்து பாசாகியே தீரவேண்டும் என்று அவர்கள் வாழ்க்கையையே பாழாக்குவது சரியா. 

மூன்று மொழிக் கொள்கையே தவறானது என்று நாம் கேள்வி கேட்கிறோம். இவர்கள் மூன்று மொழி தானே ஈசியா எல்லாரும் படிச்சிடலாம் என்பதும், அதில் இந்தியை மூன்றாவதா எல்லாரும் படிச்சிடுவாங்க என்று நைசாக திணிப்பதும் எப்படி மாணவர்கள் கல்வியை மேம்படுத்தும் ?  உண்மையில் நிறைய மாணவர்களை பள்ளிப் படிப்பை தாண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவே புதிய கல்விக் கொள்கை  வடிகட்டியாக பயன்படுகிறது.

 புதிய கல்விக் கொள்கை மூலம் 3,5,8 வகுப்புகளில் வடிகட்டும் முறை 

மூன்றாவது ஐந்தாவது எட்டாவது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்கள் அத்தோடு படிப்பை நிறுத்த செய்யும் ஏற்பாடே ஆகும். முன்பெல்லாம் மாணவர்களை பெயிவாக்கும் முறை இருந்தது. பெயிலான மாணவர்கள் அதே வகுப்பை மீண்டும் படிக்க வேண்டும். தன் வகுப்புத் தோழர்கள் மேல் வகுப்புக்கு போய்விட தான் மட்டும் தன்னை விட இளம் வயதினருடன் மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் அவமான நிலையால் பெயிலான மாணவர்கள் அத்தோடு பள்ளிப்படிப்பை நிறுத்தினர். இதைத் தடுக்கவே கலைஞர் இனிமேல் பத்தாம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளில் யாரையும் பெயிலாக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

மாணவனின் கல்வி தரமாக இருக்க வேண்டும் என்பது இரண்டாவது விஷயம். முதல்‌ விஷயம் அவன் 10 வருடங்கள் பள்ளியில் வந்து படிக்க வைப்பது. பள்ளி அவனுக்கு பாடம் தவிர பல சமூக பண்புகளையும் கற்றுத் தரும் ஒரு இடம்.

சங்கிகள் எப்போதும் தரம் தரம் என்றே சொல்லி ஏழை எளிய மாணவர்கள் படிப்பதையே கெடுக்க‌ நினைப்பார்கள்.

குலக்கல்வி:

ராஜாஜி 1960 களில் வெளிப்படையாக குலக்கல்வி என்று திட்டத்தை கொண்டு வந்தார். இப்போது அதற்கு வேறு கலர் பூசி தொழில் கல்வி என்று பெயிண்ட் அடிக்கிறார்கள்.

இந்தக் கல்வியிலும் மாணவன் தனது குடும்பத்தினர் செய்யும் குலத்தொழிலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறான்.

அதாவது கூலிவேலை செய்பவரின் மகன் பள்ளி நேரத்தில் மதியான பாடத்திற்கு பதிலாக அப்பாவோடு சேர்ந்து கூலி வேலைக்கோ அவர் செய்யும் வேறு எந்த வேலைக்கோ செல்லலாம். அப்பாவின் அல்லது சித்தப்பாவின் தொழிலை மாணவன் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வேறு ஒரு வக்கீலிடம் சென்று அவரிடம் வேலை பார்த்து வக்கீல் தொழிலை கற்றுக்கொள்ள நினைத்தால் முடியாது. புரிகிறதா ?

புதிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளுக்கு எதிரானது:

ஆம். வட இந்தியாவில் ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலம் எதுவுமே கிடையாது என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆனால் அதுதான் உண்மை.

ஒவ்வொரு வட இந்திய மாநிலத்திலும் சுமார் மூன்‌று முதல் ஐந்து‌ வகையான இந்தி அல்லாத மொழிகள் தான் தாய்மொழிகளாக பேசப்பட்டு வருகின்றன.

ஹிந்தி என்கிற மொழியே இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ளைக்காரரால்‌ உருவாக்கப்பட்டது.

வடமாநில மொழிகளின் பொதுவான மூலங்களை வைத்து தேவநாகரி எழுத்து வடிவத்தை எடுத்து எழுத்து உருவாக்கி வந்தது தான் இந்தி மொழி. 2025 கணக்கெடுப்பின்படி, அந்தந்த மாநிலங்களின் மொழிகளை விட்டுவிட்டு, இந்தி மொழியை ஆட்சி மொழியாக ஆக்கியதால், இந்த 2025 ஆம் வருட கணக்கெடுப்பின் படி, 220 வட இந்திய மொழிகள் அழிந்து போய்விட்டன. இன்னும் சுமார் 800 மொழிகளுக்கு மேல் அழியும் நிலையில் உள்ளன.

 போஜ்பூரி, ஹரியான்வி, மராத்தி , டோக்ரி, ராஜஸ்தானி, மைதிலி, விரசு போன்ற மொழிகள் அழிந்த வடஇந்திய தாய்மொழிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்.

எனவே இந்தித் திணிப்பு தென்னிந்தியாவை மட்டுமல்ல வட இந்தியாவையே பாதித்திருக்கும் விஷயமாகும்.

இப்போது தமிழ்நாட்டின் எதிர்ப்பை கண்டு வடமாநிலங்களும் தங்கள் தாய்மொழியை பாதுகாக்க வேண்டுமே என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டன.

இந்திய அரசியலமைப்பு சட்டமே பிராமணர்கள் பெரும்பான்மை கொண்ட உயர்சாதியினரால் உருவாக்கப்பட்டது. அதில் இருந்த ஒரே அறிஞர் மற்றும்  சிந்தனையாளர் அம்பேத்கர் மட்டுமே. அவரே கூட இந்த ஆரியக் கூட்டங்களின் அழுத்தத்தில் எதை பொது மொழியாக வைக்க வேண்டும் என்கிற சிந்தனையில் கொஞ்சம் குழம்பித்தான் போனார்.

எனவே பெரும்பான்மை ஆரியர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இதுபோன்ற இந்தியை, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் பிரிவுகள் நிறைய உண்டு.

அவற்றை எல்லாம் நீக்க வேண்டும். கல்வி‌ மீண்டும் மாநிலங்களின் உரிமைப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அதுவே இந்தியா பல்வேறு இனங்களும் சேர்ந்து வாழும் ஒரே நாடாக தொடர வழிசெய்யும்.

இப்படி இந்தியை பிற‌ மாநிலங்கள் மேல் மறைமுகமாக திணித்தால் இந்தியா துண்டு துண்டாக உடைந்து போகும்.

அதுதான் நீங்கள் விரும்புவதா ?

Monday, November 25, 2024

தளபதி ஜெயம். போராளியின் இறுதி வெடி !





எல்லாம் முடிந்துவிட்டது.

முன்னால் கடல்.
பின்னால் நிலம்.

இதுதான் நான் இறுதியாக காணப்போகும் விடியும் வானம்.
நிலம் பூராவும் எதிரிகள். கந்தகமணம். சிறு பற்றைகள். அவற்றுக்கப்பால் நம் நிலம்பூராயும் எதிரிகள்.
எதிரிகள் பேசும் சத்தம் கேட்கிறது.

வானம் வெளித்ததும் அவர்கள் முழுமையாக பிடித்துவிடுவார்கள்.
சிலவேளை இறுதியாய் இருப்பது நாம் இருவராக இருக்கலாம்.
எங்கள் தரப்பின் துப்பாக்கி வேட்டுகள் பூராகவும் ஒய்ந்துவிட்டது.
திடீரென ஏற்பட்ட புவி அதிர்வில் உதிர்ந்த கோட்டைபோல் ஆகிவிட்டது எங்கள் தேசம்.

அருகே கபிலன். அவன் கட்டாய ஆட்சேர்ப்பில் வந்த பிள்ளை. ஆனால் கடைசிவரை என்னோடு வந்துவிட்டான். நீ போய்விடு என்றால் அடம்பிடித்துவிட்டான். என்னோடு ஒரு வருடமாகத்தான் இருந்தான். சரணடைய மறுத்தே விட்டான். எத்தனையோ போராளிகளை சந்தித்தேன். இவன் வாழ வேண்டிய பிள்ளை.
‘அண்ண உங்களுக்கு என்ன முடிவோ அதுவே எனக்கும் என்கிறான்.’
கபிலன் அறிவான பிள்ளை. ஒரு முழுமையான போராட்ட வாழ்வில் என் இறுதி கணம் கபிலன் அருகில் முடியப்போகிறது. எம்மை உயிரோடு எதிரி பிடிக்க முடியாது. இரண்டு குப்பிகள், இரண்டு கைத்துப்பாக்கி. இதுபோதும்.

நளாவும் வீரச்சாவு என்று அறிந்தேன். முக்கியமான அந்தத்தாயுடன் சேர்ந்து நளா வெடித்துச்சிதறிவிட்டாள். பிள்ளைகளோடு எவ்வளவு பிரியமாக இருந்தாள் ? அவளால் இதை எப்படிச்செய்ய முடிந்தது ? அவள் தியாகங்களுக்கு உலகில் உதாரணம் கிடையாது. தாயை விட்டுவிட்டு போர்க்களம் சென்ற பிள்ளைகள் இருந்தார்கள். தன் குழந்தைகளை விட்டுவிட்டு களமுனை சென்று வெடிக்கும் தாயை யாரும் அறிந்ததுண்டா ? தன் வீரச்சாவவைக்கூட மக்கள் அறியார் என்று தெரிந்தும், போராட்டம் இன்றோ நாளையோ வீழ்ந்துவிடும் என்று அறிந்தும் அவள் தன் மண்ணுக்காக வீழ்ந்தாள். அவளை இந்த இறுதி நேரத்தில் நினைக்கவேண்டும். என் மனம்போல இருந்தாள்.

பிள்ளைகளை உறவுகளுடன் விட்டுவிட்டு களமுனையில் கடைசிவரை நின்ற தாயாக நளா இருப்பாள். அது யாருக்கும் தெரியாமல் இருக்கும். இப்போது நடக்கும் எந்தக்காவியத்தையும் சொல்பவர்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை. நானே ஒருமுறை , ‘நீ பிள்ளைகளோடு வெளியேறு’ என்றபோது, மறுத்துவிட்டு கோள்சறோடு களமுனை சென்றாள்.
அன்பு நளா ! உன் திண்மை என்னிடம் இல்லை. உனக்கு என் நன்றி. நான் போராளியாக மட்டும் இருந்தேன். நீ தாயாக, போராளியாக, மனைவியாக.. என் விழுப்புண்கள் வலிதரும்போது தாதியாக.. உன் மனபலம் எந்த இரும்பையும் நொருக்கும். எந்த வலியையும் தாங்கும். நான் வலியால் துடிக்கும்போது ‘ஒருதளபதி இப்படி துடிப்பதா’ என்பாய். ஒருபோதும் உனக்கு வலித்தபோதும் நீ துடித்ததில்லை. எத்தனை மகத்தான துணையாக இருந்தாய் ?
உன் உடல் எங்கு சிதறியதோ நானறியேன். ஆனால் இந்த நிலத்தில் மிக அருகில் எங்கோ வெடிகுண்டு கட்டி வெடித்தாய் என்பது மட்டும் தெரியும்.
சூரியன் வரமுதல் உன்னை என் ஆன்மா சந்திக்கும். மறுமுறை பூரணவாழ்வு கிடைத்தால் உன்னோடு வாழவேண்டும். நாம் குறைந்த நாட்கள் வாழ்ந்து, நிறைய நாட்கள் போராளியாக இருந்தோம்.

ஓ.. என் பிள்ளைகள் ! ஆகரன் ! சிந்துசை ! நீங்கள் இப்போது வவுனியா அகதி முகாமில் இருப்பீர்கள். என் பிள்ளைகள் என்று இராணுவம் கண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும். நீங்கள் கேட்ட பரிசுப்பொருட்களை தமிழீழம் கிடைத்தததும் வேண்டித்தருவேன் என்றேன். உங்கள் அடிமைப்பட்ட இனத்தின் தந்தையால் அதை செய்ய முடியவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆனால் அப்பாவையும், அம்மாவையும் நினைத்தபடியே இருப்பீர்கள். உங்களை அனாதையாக்கிவிடப்போகிறோம். இந்த பாவப்பட்ட பெற்றோரை பற்றி என்ன நினைப்பீர்களோ தெரியவில்லை.
எப்போதும் உங்களை பேரன்போடு வருடும் உங்கள் அம்மா நேற்று மாலை இறந்துவிட்டார். உங்கள் அப்பா இன்னும் சிறிய நேரத்தில்.

அப்பா, அம்மாவின் கனவுகளை மறக்க மாட்டீர்கள். எப்படியும் உங்களை என் தம்பி லண்டன் அழைத்துவிடுவான். நீங்கள் உறுதியோடு வளருங்கள். நம் மக்கள் உங்களை கைவிட மாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தான் நாம் போகிறோம்.

ஓ.. எத்தனை தியாகங்கள் ? எத்தனை உயர்த வீர புருசர்கள் ? எத்தனை தியாகங்களால் தேசம் உருவானது. இதோ.. இதோ.. எல்லாம் முடியப்போகிறது. இந்த முடிவு வேறொன்றின் தொடக்கம் ஆகலாம். ஆனால் இந்த உலகு அதர்ம அச்சிலே சுழல்கிறது. அதை மாற்றும் மனிதன் வருவான். காலம் எல்லாவற்றையும் உருவாக்கும்.
இந்தப்போராட்டம் உயிர்களை கொல்லத்தோன்றியதில்லை. கொலைகளை நிறுத்தத்தோன்றியது.

அவர்கள் தமிழர்களை தேடித்தேடி வேட்டையாடியபோது விரும்பா பிறப்பாகத்தானே பிறந்தது. இத்தனை இளைஞர்களின் உயிர்களும் இந்தத்தோல்விக்காகவா கொடுக்கப்பட்டது ? இத்தனை இறப்புகளும் நம் விடுதலைக்காகவே விதைக்கப்பட்டது. எப்படி இது தோற்றது?
காலம் ஆராய்ந்து கருத்திடட்டும். அது காலத்தின் வேவல.

நான் நம்மக்களுக்காக உண்மையாய் இருந்தேன். இந்த மரண நொடிவரை. என்னைப்போலவே உயிர்கொடுத்த என் வீரர்களும். இது நம் கடன். அதை நாம் தவமாக செய்தோம்.

இங்கினியாகலையில் காடையர்கள் 150 இளைஞர்களை வெட்டியதில் ஆரம்பித்தார்கள். அதன்பின் எத்தனை கொலைகளை மக்கள் சந்தித்தார்கள். ?ஆண்டாண்டுகாலம் வாழ்ந்த எங்கள் மண்ணில் எங்கள் மக்கள் முப்பது ஆண்டுகளாக துரத்தப்பட்டும், கொல்லப்பட்டதால்தானே ஆயுதம் ஏந்தினோம். ! அன்று அந்தக்கொலைகளை தடுத்திருந்தால் இந்த கொலைத்தொழிலை நாம் விரும்பி ஏற்றிருப்போமா ?
எனக்கு அந்த நாள் நினைவுக்கு வருகிறது..

வவுனியா எல்லைக்கிராமத்தில் நாம் இருந்தோம். எப்போதும் பதட்டத்துடனே ஐயா, அம்மா இருப்பார்கள். காடையர்கள் எப்போது வருவார்கள் ? வந்தால் மொத்த உயிரும் சிரச்சேதம் செய்யப்படும் என்று தெரியும். எமக்கு பாதுகாப்பென்று அன்று யாருமில்லை. நம்முயிரை எப்போதும் பறிக்கும் உரிமை சிங்களக்காடையருக்கு இருந்தது. முதலில் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது ? மனிதர்களை மனிதர்கள் கொல்ல எப்படி முடிகிறது ? சிங்களவர்களுக்கு நாம் என்ன செய்தோம் ? என்று புரியவில்லை.

ஒருநாள் அருகே இருந்த கிராமத்தில் புகுந்து வெட்டிவிட்டு சென்றுவிட்டனர். அம்மா கண்ணீரோடு இருந்தார். அப்போதுதான் அம்மாவிடம்
‘ஏன் அம்மா சிங்களவர் எம்மை கொல்கிறார்கள் ? ’
என்று கேட்டேன். அம்மாதான் கொலைகாலக்கதைகளைச்சொன்னார்.

என் மனமெங்கும் வேதனையும், கொடும் கோபமும் இருந்தது. இதற்கு சிறுவனான என்னால் எப்படி தடுக்க முடியும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டிருந்தேன்.
இந்தச்சம்பவம் நடைபெற்று சரியாக ஒருமாதம் கழிய எம் கிராமம் தாக்கப்பட்டது. என் அப்பா படுகாயத்தோடு தப்பியிருந்தார். மாட்டுப்பட்டவர்கள் வீடுகள் கொழுத்தப்பட்டு தலைகளை வேலிகளில் குத்திவிட்டு சென்றனர். பட்ளிக்கூடத்தால் வந்த எனக்கு கிடைத்த காட்சி மனிதத்தலைகளும், எரிந்த வீடுகளும். எங்கள் வீடும் எரிந்திருந்தது. முதல்நாள் என்னோடு விளையாடிய பத்துவயதான சிவதாசன் தலை வேலியில் குத்தப்பட்டிருந்தது. பிள்ளைத்தாச்சியாக இருந்த வக்சலா அக்காவின் வயிறு கிளிக்கப்பட்டு சிசுவை எடுத்து தடியில் குத்தி வைத்திருந்தார்கள். ஆண்களின் உடலங்கள் அங்கம் அங்கமாக வெட்டப்பட்டிருந்தது.

இந்தக்காட்சிதான் என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. வன்னியில் மாத்தையா அண்ணரின் தொடர்புள்ளவர்களோடு தொடர்பை கடுமையான பிரயத்தனத்தில் ஏற்படுத்தி புலிகள் இயக்கத்தில் இணைந்தேன்.

எனது நோக்கம் எங்கள் மக்களை காப்பதே. அதைவிடுத்து எந்த மாற்றமும் என்னிடம் இருந்தால் மரணம்தான். என்று நானே முடிவெடுத்திருந்தேன்.
இயக்கத்தினுள் நடந்த சூறாவளிக்காலத்தில் என் மனம், உடல் வதங்கியகாலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன். போராட்டம் என்பது எவ்வளவு கடுமையானது என்பதை சொல்லித்தந்தது அந்த நாட்கள். உயிரையும் கொடுத்து காக்க வேண்டியவரே தவறு செய்திருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் ?

எந்த நிலையிலும் இறுதிவரை களமுனையில் போராடிச்சாவதே என் நோக்கம். நான் பார்த்த இனக்கொலைக்காட்சி எப்போதுமே என் மனதில் இரும்புத்திரையாக நிற்கும். அதனாலே உறுதியோடு இருந்த என் நிலையால் 1994 இல் மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.

அதைவிட கொடுமையான காலத்தை நான் சந்தித்ததில்லை. இதோ இப்போது நாம் முற்றாக அழியும் நிமிடங்களானாலும் நாம் நம் மக்களுக்காக இறக்கின்றோம் என்ற நிம்மதி உண்டு. போராடப்புறப்பட்டவர்களின் ஆசைகளால் ஏற்படும் தவறுகளால் இழந்த உயிர்களும், தவறும் இலட்சியச்சியத்தை விட கொடிய விசம் வேறொன்றுமில்லை.

எந்தச்சூழலிலும் என்கிராமத்தில் நான் கண்ட காட்சிதான் எத்தடையையும் தாங்கி இந்த மக்கள் இலட்சியத்தில் என்னால் இந்த நிமிடம்வரை நிற்க முடிந்தது.

எங்கள் மக்களுக்கு என்ன சொல்வது ?! உங்கள் இயக்கம் உங்களை விட்டுப்போகிறது. உங்களில் இருந்துதோன்றிய இந்த வீரர்களில் சில தவறுகளும் பல தியாகங்களும் நிகழ்ந்தன. எந்த சமூக அமைப்பிலும் குழப்பமானவர்கள் இருப்பார்கள். அவர்களின் செயல்களால் உங்களுக்காக உயிர்கொடுத்த அந்த உன்னதங்களை மறந்து விடாதீர்கள்.
உங்களை மீண்டும் ஒரு அனாதை நிலையில் விட்டுவிட்டு நாம் செத்துப்போகிறோம். நீங்கள் பட்ட துயர்களுக்கு உண்மையானவர்கள் உண்மையாக இறுதிவரை போராடினோம். எங்களை மீறிய முட்கள் உங்களை குத்தியதை நாம் அறிவோம்.
உங்களின் நல்வாழ்வுக்காக உண்மையோடிருந்த உங்கள் பிள்ளைகளின் ஏக்கங்கள் ஒருநாள் உங்களுக்கு நிம்மதியான வாழ்வைத்தரும். நீங்கள் ஒற்றுமையாக காத்திருங்கள். உங்கள் பிள்ளைகளை அறிவானவர்களாக வளர்த்தெடுங்கள். வரலாறு உங்கள் கைகளில் ஒருநாள் வந்துசேரும்.

மனிதனை மனிதன் கொல்வது கொடிது. இந்த கொடிய காலம் எங்கள் கரங்களில் திணிக்கப்பட்டது. கொலைவெறியற்ற சிங்களம் உருவானால் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழமுடியும். அதன் வழிமுறைகளை கண்டுபிடிக்க உங்கள் குழந்தைகள் முயலட்டும்.
எங்கள் மரணத்தின் பின்னாவது உலகம் உங்களை காக்கும்.

விடமாட்டார்கள் ! எங்கள் மக்கள் விடமாட்டார்கள் ! நம் தமிழக உறவுகள் கொதித்தெழுவார்கள் ! புலம்பெயர் உறவுகள் சேர்ந்தெழுவார்கள்.
இந்த இழப்பு. இன்னொன்றை பிறப்பிக்கும். நிச்சயம் நம் மக்களின் கொடிய வாழ்வு முடிவுக்கு வரும்.
எங்கள் மக்களே ! சென்று வருகிறோம். மண்ணே ! உன்மடியில் நீண்ட ஓய்வெடுக்கப்போகிறேன்.
‘’கபிலன் ! கபிலன் ! வானம் வெளிக்கிறது.. தயாராகு… இதோ நான் தயாராகிவிட்டேன் . குப்பியை வாயில் கடித்ததும் காதுக்குள் பிஸ்ரலால் சுட்டுவிடு. அடுத்த நொடி உடல்மட்டும் மிஞ்சும்.’’

வலப்பக்கத்தில் தென்னைமரம் ஒன்று நின்றது. காகம் ஒன்று பதட்டத்தோடு குறுக்கே பறந்து சென்றது. அலை வீசிய கடல் அழுதுகொண்டிருந்தது. எங்கள் கடலில் எதிரிகளின் போர்க்கப்பல் தெரிந்தது. எங்கும் துப்பாக்கி இயங்கிக்கொண்டே இருந்தது. அவை இராணுவத்தின் துப்பாக்கிச்சத்தங்கள்தான். அவர்கள் வீரர்கள் வாழ்ந்த காற்றுக்கும் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.

மேகங்கள் ஒன்றையும் காணவில்லை. அதிகாலைக்குருவிகளின் சத்தம்கூட இல்லை. அவை எங்கு பறந்து போயினவோ தெரியவில்லை. தங்களோடு வாழ்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பறவைகள் அழுதிருக்கும். மனிதர்களை நினைத்து அவை குளம்பிப்போயிருக்கும். ‘இவர்கள் அறிவற்றவர்கள்’ என்று அவை நினைத்திருக்கும். மனிதனை மனிதன் கொல்வதை பார்க்கும் பறவைகளால் வேறெதை நினைக்க முடியும். ?!

அண்ணருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. வரலாறு ஒரு பெருமகனை இழந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் இருந்து மனிதர்கள் கற்காவிட்டால் அவை மீண்டும் மீண்டும் நிகழும்.

‘’ கபிலன்…. கபிலன்.. சத்தம் அருகே கேட்கிறது. நிலம் வெளிக்கிறது, தயாராகு ! நாம் உயிருடன் பிடிபடக்கூடாது.. நாமிருவரும் இந்த மண்ணில் வாழும் நிமிடங்கள் இவைதான். ‘’

இருவரும் தயாரானார்கள்.
குப்பி கொடுப்பில் வைக்கப்பட்டது.
வலக்கையில் இருந்த பிஸ்ரல் காதோரம் வந்தபோது, இடக்கை அருகே இருந்த அறுகம்புல்லோடு சேந்த தாய்மண்ணை அள்ளி நெஞ்சில் வைத்துக்கொண்டு தளபதி ஜெயம் 1994 இல் தலைவரால் மீண்டும் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை தன் காதோரம் வைத்து விசையை அமத்தினார்.

பட்ட்டீர்ர்….பட்ட்டீர்ர்.. !

‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ‘

என்று கூற அதன்பிறகு அந்த நிலத்தில் யாரும் இருக்கவில்லை.

பிரிகேடியர் ஜெயம் வீரவணக்கம்-விம்பகம் | ஈழவிம்பகம்\ Eelam Images

———————————————————————-

இக்கட்டுரை ஜெனரல் ஜெயம் அவர்களின் போராட்டத்தின் கடைசி நாள் பற்றியது. விடுதலைப் புலிகளின் ராணுவத்தில் ஜெனரலாக இருந்தவர். ஆஸ்லோ பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர். இவரது மனைவி நளா. இவரும் ஒரு போராளி. தங்களது இரு குழந்தைகளான சிந்துசை மற்றும் துவாரகனை இயக்கமும் மக்களும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டு இருவரும் போராடி வீரமரணம் அடைந்தார்கள். 

ஜெனரல் ஜெயம் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பு கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
https://eelamhouse.com/?p=2173

Tuesday, June 14, 2022

பெரியார் தமிழின எதிரியா ?








சமீபத்தில் யூ ட்யூபில் சீமானிய தமிழ்த் தேசியர்களின் சேனலான பேசு தமிழா பேசுவில் திராவிட இயக்கத்தைச் சார்ந்த அருண் துரை என்பவரை பேட்டி கண்டிருந்தார்கள்.

அந்தப் பேட்டியை பார்த்ததும் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.

பேட்டியானது திராவிட இயக்கத்தை 'அம்பலப்படுத்துவோம்' என்பதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. 

திகவின் வழக்கறிஞர் அருண் துரை நிதானமாகவே பேசினார். தமிழ்த்தேசிய தம்பிகள் அளவுக்கு புள்ளி விவரங்களை அவர் தரவில்லை தான். ஆனால் திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்கையும், திராவிட இனக்குழு என்பது வேறு என்பதையும், இன்று தமிழ்த் தேசியம் திராவிடத்தை எதிரியாகச் சித்தரிக்கிறது என்பதையும் தெளிவாகவே சொல்லி, அப்படிச் செய்யாதீர்கள் அது இனவெறி வெறுப்பு வாதத்தை நோக்கியே செல்லும் என்றும் அறிவுறுத்தினார்.

அருண் துரையை நோக்கி பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று எந்த வருடம் கேட்டார் சரவணன், தமிழ்நாடு திராவிடருக்கே என்று எந்த வருடம் மாற்றினார், மொழிவாரிக் கோரிக்கை முதன் முதலில் எழுப்பியது தெலுங்கர்கள், 1909லேயே கேட்டுவிட்டார்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு அதற்கு அருண் துரை பதிலளிக்கவில்லை என்றதும் அவரை முட்டாளாக்கி நிறுத்தி சந்தோஷப் பட்டுக் கொண்டனர் பேசு தமிழா பேசுவினர்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த ஆண்டு எது என்றால் நான் இணையத்தில் தேடிப் பார்த்து தான் 1956 என்று சொல்லுவேன். அவ்வளவு தான் எனது மனதில் பதிந்த புள்ளி விவரங்கள்.  ஆனால் வரலாறை முழுவதுமாக தேதி வாரியாக நியாபகம் வைத்திருப்பது முக்கியமல்ல. அந்த வரலாறு எதை நோக்கியது என்கிற அறிவை வரலாற்றிலிருந்து நாம் எந்தெந்த விஷயங்களை கருத்தில் கொண்டு பெறுகிறோம் என்பதும் முக்கியம்.


உதாரணமாக விடுதலைப் புலிகளை ராஜீவ் காந்தியின் படுகொலையிலிருந்து எடுத்துப் பார்ப்போம். அது புலிகள் செய்தனரா  என்பதே கேள்வி. முன்னாள் புலியாக இருந்த சிவராசன் சிஐஏ கைக்கூலியாக செயல்பட்டு அந்த அரசியல் படுகொலையைச் செய்தான் என்பது போன்ற தகவல்களை விட்டுவிட்டு பாஜக புலிகளை பயங்கரவாதிகள் என்று எப்படி இன்றும் முத்திரை குத்த முடிகிறது ? குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றில் ஒருவரை ஹீரோவாகவோ வில்லனாகவோ இன்று மாற்றி விட முடியும். புலிகளும், காஷ்மீர் தீவிரவாதிகளும் இப்படி வில்லனாக மாற்றப்பட்டவர்கள் தான்.

அத்தகைய தகவல் தொழில்நுட்ப உலகில் நாம் இருக்கிறோம். விரல் நுனியில் லட்சக்கணக்கான தகவல்களை நாம் பெற முடியும். அதை வைத்து யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் காட்டிவிட முடியும். இந்தப் பேட்டியில் அது போன்ற ஒரு முத்திரை குத்துதல் விஷயம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தான் பல திராவிட எதிர்ப்பு விஷயங்களும் இவர்களால் கையாளப்பட்டிருக்கும் என்பது உறுதி.

இச்சேனலில் பிரதான ஊடகவியலாளராக பேட்டி எடுக்கும் மகிழன் என்பவர் ஒரு தமிழ்தேசிய அறிவு ஜீவியாக இங்கே புகழப்படுகிறார். அவரும், சரவணன் என்னும் இளைஞரும் துடிப்பாக கேள்விகள் கேட்டதை, குறிப்பாக, சரவணன் அருண் துரையை கேள்வி கேட்டதற்கு திராவிட முகமூடியை கிழித்ததாக பின்னூட்டத்தில் பாராட்டி சந்தோஷப்படுபவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள வேண்டும். 

எவ்வளவோ புத்தகங்களை எடுத்துப் படித்த மகிழனும், சரவணனும் அதைப் பயன்படுத்தும் விதம் அறிவியல் பூர்வமாக இல்லை.

திராவிடம் என்பது தீது. அது தமிழை அழிக்கவே உருவாகியது. 

இந்த முன்முடிவோடு வரலாற்றைப் படிப்பதும், அதிலிருந்து நூறு ஆதாரங்களைத் திரட்டுவதும், அதை வைத்து கேள்விகள் கேட்டு, திராவிடம் தமிழருக்கு துரோகம் செய்தது, தமிழ்த்தேசியமே சிறந்தது என்பது போன்ற தோற்றம் காட்ட நினைப்பதும் வஞ்சகமான நோக்கம் கொண்டதாக மட்டுமே இருக்கிறது. அறிவை நோக்கிய தேடலாக இல்லை.  இது ஆராய்ச்சி செய்யச் செல்பவர் முதலில் முடிவை ரெடி பண்ணி வைத்து விட்டு அப்புறம் அதற்கேற்ற தகவல்களாக தேடுவது போல இருக்கிறது. கொலையை இவன் தான் செய்திருப்பான் என்று முடிவு செய்துவிட்டு பின்பு அதற்கென்று ஆதாரங்களை ரெடி பண்ணுவது போலத் தான் நீங்கள் செய்வதும் இருக்கிறது.

திராவிடம் என்பது ஒரு இனக்குழு அடையாளம். 

பின்பு அந்தப் பெயர் ஒரு சமூக அரசியல் இயக்கமாக உருவெடுக்கும் போது பயன்படுத்தப்பட்டது. அந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டதன் நோக்கம் ஆரம்ப கால மதராஸ் மாகாணத்தில் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பல மொழி பேசுபவர்களும் இருந்ததால். இப்படி  வெவ்வேறு மொழி பேசுபவர்களும் மொழி வேற்றுமையைத் தாண்டி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற நோக்கமே திராவிடம் என்கிற சமூக இயக்கப் பெயராக அமையக் காரணம். சரி உங்களுக்கு திராவிடம் என்று பெயர் வேண்டாம் அது தமிழம் என்று தான் வந்திருக்க வேண்டும் என்கிறீர்களா. சரி வைத்துக் கொள்ள வேண்டியது தான். பிரச்சனை தீர்ந்தது. அதை விடுத்து திராவிடம் என்பது தீரா விடம் என்பது போன்று அதன் தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தையுமே  திட்டமிட்ட சதி என்ற கதையாடல் தான் நெருடுகிறது.

திராவிட இயக்கத்தின் முன்னோடியான பெரியாருக்கு கன்னடரை முன்னிலைப் படுத்த வேண்டும் என்று கூட தோன்றியிருக்கலாம். பெரியார் ஒரே சீராக சிந்தித்தார் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நிலை நிறுத்த முயல்வார்கள். அருண் துரை கூட அப்படித் தான் பேசினார்.  ஆனால் அது உண்மையல்ல தானே. அவர் ஒரு மனிதர். பல வகையான காலச்சூழலில் வெவ்வேறு வகையான முடிவுகளை அவர் எடுத்திருக்கிறார்.  

பெரியார் தீவிர மொழிப் பற்றாளர் இல்லை. ஒரு கட்டத்தில் வெள்ளையன் நம்மை ஆளட்டும் எனவே வீட்டில் எல்லோரும் ஆங்கிலம் பேசுங்கள். அவனது கலாச்சாரத்தை பின்பற்றினால் நம் எல்லோரும் சாதி ஏற்றத் தாழ்விலிருந்து வெளியேறிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார். சுதந்திரமடைந்த இந்தியாவில் திராவிட நாடு என்று ஒரு பெரும் பகுதியாக ஆரியர் அற்ற பகுதியாக ஹிந்தி பேசாத தென்மாநிலங்களை பிரித்துக் கொள்ளலாம் என்று கருதியிருக்கிறார்.  கீழ் வெண்மனியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய மக்களை இவன்கள் ஏன் போராடுகிறான்கள் என்று இழிவாகக் கேட்டிருக்கிறார். அதே பெரியார் பிற்காலத்தில் தெளிவு பெறுகிறார். திராவிட நாடு என்ற கருத்தில் மொழி வாரியாகப் பிரிந்த மாநிலங்கள் சுயநலமோடு பிரிந்து போனதை வருத்தமாகத் தெரிவிக்கிறார்.  அதன் பின் தனித் தமிழ்நாடு என்று பேசி, இந்தியா மாநிலங்களோடு சுதந்திரம் தரப்பட்டதை பிராமண ஆதிக்கத்திடமே மீண்டும் மாட்டிக் கொண்டோம் என்று எதிர்த்தார். 


பெரியாருடைய நோக்கமெல்லாம் பார்ப்பனீய எதிர்ப்பு, கடவுள், மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமத்துவம், சமூக நீதி, பெண்ணியம் என்ற விஷயங்களை மையமாகக் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர் பல இடங்களில் தனது நிலை பிறழ்ந்த முடிவுகளை எடுத்தவராக இருந்திருக்கிறார். எல்லோரும் இந்தி பேசுங்கள் என்றெல்லாம் கூட சொல்லியிருக்கிறார். அவர் பிறழ்ந்த இடங்களை வைத்து அவரை எதிரி என்று முடிவு செய்யக் கூடாது.


பெரியாரின் பிறழ்வுகளையெல்லாம் எடுத்து அவரை ஆய்வு செய்து இன்று விலாவரியாகப் பேச நேர்ந்திருப்பது தமிழ் தேசிய அமைப்புக்களால் தான். இது ஒரு நல்ல விஷயம். பெரியார் மாபெரும் தலைவர் தான். அவரும் தவறான பல முடிவுகளை எடுத்திருக்கிறார் என்று அறிந்து கொள்வது நிச்சயம் வரலாற்றுத் தெளிவுக்கான விஷயம் தான். திராவிட மாடல் பேசுபவர்கள் தங்களது கடந்த காலத் தவறுகளையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். பெரியார் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை என்று மறுதலிப்பது சரியல்ல. அது பூசி மெழுகி பெரியார் ஹீரோ என்பதாக நிலைநிறுத்த மட்டுமே பயன்படும். பெரியார் ஹீரோ தான். தவறு செய்யாத ஹீரோ அல்ல. தவறுகள் பல செய்த ஹீரோ தான்.


இதையெல்லாம் தெரிந்தும் நான் அவரை வெறுக்கவில்லை. அவரது வாழ்வின் போராட்ட நோக்கத்தில் குறை காணவில்லை. பெரியாரே பொய்யென்று சொல்ல விரும்பவில்லை. நீங்கள் அப்படி சொல்ல விரும்புகிறீர்கள். அதாவது பெரியார் ஹீரோவே அல்ல அவர் ஒரு பயங்கரமான வில்லைன் என்று எதிரான விஷயத்தை நிறுவ முயல்கிறீர்கள். அதன் மூலம் திராவிடம் என்கிற அடையாளத்தை அழிப்பதே சீமானின் தமிழ் தேசிய தம்பிகளின் முதல் மற்றும் முற்றான அறிவியல் ஆய்வாக இருக்கிறது. 


அப்படி ஒரு முன்முடிவோடு வரலாற்றை அனுகினால் நீங்கள் ஆயிரம் புத்தகம் படித்தாலும் அறிவு வெளிச்சம் பெறமுடியாது. மாறாக சீமானிசம் என்பதன் இனவெறிப் பக்கங்களுக்கு பல புதிய தகவல்களை திரட்டித் தருபவர்களாகவே நீங்கள் சுருங்கிப் போவீர்கள்.


திராவிட இயக்கம் ஒன்றாக இருந்த மொழிவாரி மாநிலங்கள் காலத்தில் தொடங்கி, அவை தம்தம் மொழியே தமக்குப் பெரிது என்று குறுகிய மனப்பான்மையோடு போன பின்பும் திராவிட இயக்கமாக தமிழ்நாட்டில் தொடர்ந்தது. ஏன் ? தமிழன் இளிச்சவாயன் என்று அர்த்தமல்ல.

தமிழன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை இயல்பாகவே உள்ளுணர்ந்தவன் என்பதால்.


உங்கள் நோக்கம் திராவிட இயக்கத்தின் மூலவரான பெரியாரின் பிம்பத்தை உடைப்பது. அதன் மூலம் திராவிடம் பொய் என்று நிருவுவது. அதைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு வரலாறைப் பாருங்கள். எந்த ஒரு சமூக இயக்கமும் பொய்களாலேயே கட்டப்பட்டு காலம் காலமாக நிலவி வர முடியாது. திராவிடம் திட்டமிட்டு பொய்யாகக் கட்டப்பட்டு உருவானது என்பது மிகைப்படுத்தலான வெறுப்பு வாதத்தின் வெளிப்பாடே.


பெரியாருக்குப் பின்பு வந்த அண்ணா, கலைஞர் போன்றவர்கள் சமூக இயக்கமாக இருந்த திராவிட இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்கள். அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.


அப்படி தமிழக அதிகாரத்தை கைப்பற்றியது  ஆரியரல்லாத ஒரு இடைத்தர சாதி இனக்குழு. தமிழர் தான் அவர்கள். என்றாலும் இடைச்சாதி என்று இங்கே குறிப்பிடக் காரணம், ஆரியம் என்ற உயர் சாதியினரிடமிருந்து விடுதலை பெற போராடக் கிளம்பி அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தவர்கள் இடைநிலைச்சாதியினரே. தலித்துக்கள் அல்ல.


எனவே திராவிடம் என்பது சாதீய நோக்கில் பார்த்தால் இடைநிலைச் சாதியினரின் அதிகாரக் கைப்பற்றலாகக் கருதலாம். அதனால் விளைந்த நன்மைகள் தான் அனைவருக்கும் கல்வி, வேலை என்கிற சமூக கோட்பாட்டின் படி தாழ்த்தப்பட்டவர் வரை அனைவருக்கும் கல்வியும், வேலையும், சமூக அடையாளமும் பெற்றுத் தரப்பட்டது.


அதே சமயம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிட இயக்கம் தனது கொள்கைகளிலிருந்து பெருமளவு சமரசம் செய்து கொள்ளவும் செய்தது. அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். கலைஞர் அறிஞராக திராவிட இயக்கச் சிந்தனைகளுக்கு ஓரளவு உயிரூட்டினாலும், அவர் காலத்தில் வந்த கார்ப்பரேட் உலகில், சுயநலமிக்க அரசியல்வாதியாக சீரழிந்து போனதில் ஈழத்தில் நம் இரத்த உறவுகளையே அதிகாரத்திற்காக காட்டிக் கொடுக்கும் நிலைக்குப் போனார். 


இது திராவிட மாடல் மெது மெதுவே சீரழிந்து வந்து கடைசியில் முடிந்து போன வரலாற்றைக் காட்டுகிறது. சமூக நீதிக் கோட்பாட்டிலிருந்து பணம் சம்பாதிக்கும் அரசியலாக திமுக சுருங்கிய போதிருந்தே அதன் அழிவு ஆரம்பமாகிவிட்டது. இப்போது ஸ்டாலின் திராவிட மாடல் என்பது செத்த பாம்பிற்கு உயிர் கொடுப்பது போலத் தான். கட்சியில் உள்ள பெரும்பான்மை தொண்டர்கள் ஊழல் மிகுந்தவர்களாகவும், சமத்துவக் கொள்கை என்றால் என்ன என்று கூடத் தெரியாதவர்களாகவும், ரவுடிகளாகவும், பொறுக்கிகளாகவும் இருப்பதே திராவிட மாடலின் இன்றைய பலவீனமாந நிலைக்குச் சான்று. 


இவர்களை எல்லாம் அம்பலப்படுத்துவதில் தமிழ்த்தேசியம் தன்னை மெருகேற்றிக் கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் கலைஞர் செய்த துரோகத்திலிருந்து பின்னோக்கி ஆரம்பித்து திராவிடமே துரோகம் என்கிற முதிர்ச்சியற்ற வரலாற்றுப் பார்வையே இந்தக் கார்ப்பரேட் உலகில் மாறிக் கொண்ட இந்துத்துவா பாசிசத்தின் எடுபிடியாளாக தமிழ்த்தேசியர்களை போய் நிறுத்திவிடும் என்று எண்ண வைக்கிறது.


இந்துத்துவா பாசிசம், ராஜீவை அழிதத்தன் மூலம் காங்கிரஸை அழித்தது. பார்ப்பனீயம் இப்போது பாஜகவாக ஆட்சியில் அமரந்துவிட்டது. அடுத்து அது தமிழ்நாட்டில் ஆட்சி பெற முதலில் அங்கே இருக்கும் பிரதேச அரசியல் போக்கை காலி செய்ய வேண்டும். அதற்கு  எதிரெதிரான இரு குழுக்களை எடுத்து, அதில் ஒன்றை மறைமுகமாக ஆதரித்து இன்னொன்றை வீழ்த்துவது. இருவரில் ஒருவர் வீழ்ந்த பின், அந்த இன்னொருவரை அதிகார பலம் கொண்டு எளிதில் வீழ்த்துவது.


இத்தகைய அரசியலை வடமாநிலங்கள் பலவற்றிலும் பாஜக பின்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மேவங்கத்தில் மம்தா பானர்ஜீ கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டு கம்யூனிஸ்ட்டுகள் அழிக்கப்பட்டார்கள். இனிமேல் மம்தாவை அழிப்பது பாஜகவுக்கு பெரிய காரியமல்ல. ஜெகன்மோகன், கேஜ்ரிவால், பஞ்சாப் ாண் ஆத்மி என்று இன்னும் வரிசையாக பாஜகவின் புதிய பி டீம்களை அடுக்கலாம்.


அதில் தமிழ்நாட்டில் இருந்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பது நாதகவோ என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. ஏனெனில் புதிய தமிழ்த்தேசியர்களின் போக்கு ஆரியத்தை விட திராவிடம் தான் முக்கிய எதிரி, அதாவது துரோகி என்பதாக வழிகாட்டுகிறது. ஆரியத்தை விட திராவிடம் தீது என்கிற இடத்தில் தான் பாஜகவின் போர்த் தந்திரத்திற்கு தமிழ்த் தேசியர்கள் பலியாகி விட்டதாகக் கருத வேண்டியிருக்கிறது.


வரலாற்றுப் பார்வையில் மிக முற்போக்கான சீர்திருத்தக் கொள்கைகள் கொண்ட திராவிடம் வழக்கொழிந்து அழியப் போகும் நிலையில் அதன் அடுத்த கால் தடமாக தமிழ்த்தேசியம் உருவாகியுள்ளது என்று முன்வைக்கும் போது தான் தமிழ்த்தேசியத்திற்கான வரலாற்றுத் தொடர்ச்சி முழுமை பெறும்.


இது தான் நான் நாதக அறிவு ஜீவி தம்பிகளுக்கு சொல்ல விரும்புவது. நன்றி.

Sunday, March 6, 2022

அப்பாவின் கனவில் அம்மா.


 

போன மாதம் ஒரு நாள் 

அப்பா திடீரென்று சொன்னார்.

அம்மாவை எரித்திருக்கக் கூடாதுடா என்று.


ஏன்ப்பா என்று கேட்டேன்.


என் கனவில் 

அவ வரவே மாட்டேன் என்கிறாள் 

என்றார்.


அப்பா சொன்னது உண்மையாக இருக்கலாம்.


என் கனவிலும் அம்மா

வரவேயில்லை.

------------------

Sunday, August 1, 2021

சென்னை பயணிகள் செல்லும் மின்சார ரயில்களை வேண்டுமென்றே காவு கொடுக்கும் திமுக அரசு



சென்னையில்  ஒரு நாளைக்கு 10 லட்சம் ஏழை, நடுத்தர மக்கள் போகிற எலெக்ட்ரிக் ட்ரெய்ன்கள்ல, வேணும்னே ஆண்கள் இந்தந்த டைம்ல போகமுடியாது என்று சொல்லி கண்டிஷன் மேல் கண்டிஷனா போட்டு, எலெக்ட்ரிக் ட்ரெய்ன்ல போற மக்கள் வயிற்றில் அடிக்கிறாங்க திமுக அரசு. 

மின்சார ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் டிக்கெட். போகவர 10 ரூபாய் தான் ஆகும். இப்போது அப்படி முடியாது. ரிட்டர்ன் டிக்கெட் தர மாட்டார்கள். ரிட்டர்ன் வரும்.நேரம் ஆண்கள் அனுமதிக்கப்படும் நேரமாக இருந்தாலே மட்டுமே டிக்கெட் கிடைக்கும். வழக்கம் போல  பெண்கள் மட்டும் போகலாம்னு சொல்வாங்க. அப்போ ஆண்களும் பெண்களுமாக குடும்பமாகப் போனால் அவ்வளவு தான் தொலைஞ்சீங்க.

கேட்டா கொரோனாவாம். காரணம் சொல்றாங்க.

இதே நேரத்தில்தான், மெட்ரோ ட்ரெய்ன்களில் நல்லா புல்லா ஏசி போட்டுட்டு நாள் பூரா எல்லாரும் தாராளமா போகலாமாம். அங்கே மட்டும் கொரோனா வரவே வராதாம். மெட்ரோவில் குறைந்த பட்ச ஒன்வே டிக்கட் மட்டுமே 30 ரூபாய். போய வரனும்னா 60.ரூபாய். 

படிச்ச மிடில் க்ளாஸ் மக்கள், படு கூட்டமாக நிரம்பி வழிந்து செல்லும் பஸ்களில் போக முடியாத நிலையில், இந்த மெட்ரோ ரயில்களில், வேற வழி இல்லாமல் போறாங்க. தினசரி ரெகுலராக போகும் செலவு அதிகம்.
5 ரூபாய் கொடுத்து எலெக்ட்ரிக் ரயில்களில் போன மக்கள் இனி 20-30 ரூபாய் கொடுத்து போகனும் ஒவ்வொரு தடவையும்.

சென்னையில், ஒரு நாளைக்கு 2-3 லட்சம் பேர் தான் அதிக பட்சம் மெட்ரோவுல போறாங்க. ஆனால், எலெக்ட்ரிக் ரயிலில் போறவங்க ஒரு நாளைக்கு பத்து லட்சம் பேர்.

இப்படி ஏன்யா ஏழை மக்கள் போற ட்ரெய்ன்களை கவர்மென்ட் பஸ் மாதிரி அழுக்கா அசிங்கமாக வெச்சுருக்கீங்கன்னு யார் கேக்குறது ?

புதுசா தரைக்கடியில் தோண்டி பாதைகள் போடுறாங்க. பெரும் செலவு. ஏற்கனவே இருக்கிற மின்சார ரயில்கள் இருக்கும் போது  எதுக்கு வெட்டிச் செலவு பண்றீங்கன்னு யாரும் கேக்கறதில்லை. மெட்ரோ ட்ரெய்ன்களுக்கு வருஷா வருஷம் நானூறு கோடி பட்ஜெட்டில் ஒதுக்கி செலவு புதுசா செய்றாங்க. 

ஆனால் பாமரர்கள் செல்லும் மின்சார ரயில்களுக்கு ? பட்ஜெட்டில் பேச்சே இல்லை. எலெக்ட்ரிக் ட்ரெய்ன்களையும் ஏழைகள் மாதிரி அழுக்காவே ஓட்டுறானுங்க.

எடப்பாடி ஆட்சில தான் இப்படின்னு பாத்தா, விடியல் தரும் ஸ்டாலின் ஆட்சியும் அதே கதை தான்.

நாங்க தான் மெட்ரோ இங்கே கொண்டு வந்தோம்னு பெருமை வேற பேசுவாங்க திமுககாரங்க.



இதில் ஒரு வினோதம் என்னன்னா மின்சார ரயில்கள் போகும் அதே பீச்-தாம்பரம் வழித்தடத்தில் , அதே சென்ட்ரல்-எண்ணூர் வழித்தடத்தில் தான் மெட்ரோ ரயில்களின் வழித்தடமும் இருக்குது..இதற்கு என்ன பொருள் ? கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் ரயில்களை காலி செய்து மக்களை மெட்ரோவை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்க முன்கூட்டியே ப்ளான் போடப்பட்டது போலவே இருக்கிறது.

ஸ்டாலினிடம் இதையெல்லாம் கேட்டால்  மின்சார ரயில் ஒன்றிய அரசின் கீழ் வருதுன்னு சொல்லி ஈசியா தப்பிப்பாரு. மெட்ரோவுக்கு மாநில அரசும் ஒன்றிய அரசும் சேர்ந்து தான் பட்ஜெட் திட்டம் போடுறாங்க.

மெட்ரோ ரயில்களை படிப்படியாக தனியார் மயமாக்கும் வேலையும் நடந்து வருகிறது. ரயில்வேயையே தனியாருக்கு விக்கிறவங்க இதை மட்டும் விட்டுடுவாங்களா ? திமுக  அரசும் இதில் உடந்தை. ஜிஆர்டி, முத்தூட் என்று பெரிய போர்டுகள் வைத்து விளம்பரமா , இல்லை ரயில் நிலையத்தின் பெயரே இதுதானா என்று புரியாத அளவிற்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒவ்வொரு தனியார் நிறுவனப் பெயரை தாங்கி நிற்கின்றன. எல்லாம் தனியார் மயம். 

இதுதான் திமுக ஆளும் லட்சணம். கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக செயல்படாமல் திமுகவோ , ஸ்டாலினோ மாநில.ஆட்சியில் நீடிக்கவே முடியாது. கூர்ந்து  பார்த்தால் இந்த உண்மை தெரியவரும்.

 MRTS என்று பீச் முதல் வேளச்சேரி வரை ஓடும் பழைய மெட்ரோ ரயில்களின், ரயில் நிலையங்களின் நிலை காயலான் கடைபோலத்தான்.

இனி, ஏற்கனவே 10 ஆயிரம் பிச்சைச் சம்பளம் வாங்குகிற உழைக்கும் மக்கள்  அதில் கால்வாசியை மெட்ரோவில் வேலைக்கு போய் வர பாஸ் , டிக்கெட்டுக்கு கட்டி அழவேண்டும்.

சென்னை எலெக்ட்ரிக் ரயில்கள் மெது மெதுவாக விரைவில் அழிக்கப்படும். டில்லி மின்சார ரயில்களுக்குக் கூட இதே நிலைமைதான் என்று கேள்வி.

இன்றைக்கு எலெக்ட்ரிக் ட்ரெய்னில போய்விட்டு வந்து தான் இதை எழுதுகிறேன்.

தொழில் தொடங்குவோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் தமிழ்நாடு வல்லரசாகிவிடும் என்று நினைக்கும் முதல்வர் எப்படி தனியாரை பகைத்து மின்சார ரயிலையே நம்பி போகும் சாமான்ய மக்களுக்கு நல்லது செய்வார் ? 

அதிமுக சொல்ல வேண்டாம் , அது.பாஜக அடிமை. ஆனால் திமுகவும் கண்டிப்பாக மின்சார ரயிலுக்கு உயிர் தர மாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.

ஏனென்றால் ஏழைகள் மின்சரா ரயில்களில் போனால் என்ன போகாவிட்டால் யாருக்கு என்ன ? அவர்களால் இந்த அரசுக்கு ஒரு புண்ணியமும் இல்லையல்லவா ?

31-7-2021
அம்பேதன்.

Thursday, March 4, 2021

சகாயம் ஐஏஎஸ்..!! பாஜகவின் மற்றுமொரு பகடைக்காய்.



இவ்வளவு வருடங்கள் அரசியல் வேண்டாமென்றிருந்த சகாயம் ஐஏஎஸ் திடீரென்று கொடி பிடித்து அரசியலுக்கு ஏன் வருகிறார் ?
அவருக்கு பின்புலமும் பணமும் திடீரென்று ஒரே நாளில் எப்படி கிடைத்தது ?

கமல்ஹாசனின் மநீமவுக்கு எப்படி திடீரென பணம் கிடைத்ததோ அப்படித்தான்.

சகாயத்தின் பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்தால், அவரது புதிய கட்சி அறிவிப்பு பேச்சு உட்பட, அவர் ஊழல் மட்டுமே தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை போல பேசுவதை கவனிக்கலாம். மற்றபடி நேர்மை , எளிமை , கருமை தான் அவருக்குத் தெரிந்த வார்த்தைகள்.

நீட் , விவசாய சட்டங்கள் , டீமானடைசேஷன் , பெட்ரோல் விலை உயர்வு, மதவெறி பாஜக, உழவர்கள் போராட்டம், இவையெல்லாம் சகாயம் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை ? கவனித்துப் பாருங்கள். இனியும் அவர் கண்ணுக்கு இவை தெரியாது. சகாயம் ஐஏஎஸ் பதவியில் இருந்த 6 வருடமும் ஊழல் மிகுந்த அதிமுகவாலும் , பாஜகவாலும் ஓட ஓட விரட்டப்பட்டவர். தூக்கியடிக்கப்பட்டவர். ஆனால் இன்று அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னும் அவர் தன்னை துன்புறுத்திய இந்தக் கட்சிகள் பற்றி வாயே திறக்கவில்லை. ஏன் ? பயமா ? எஜமான விசுவாசமா ? மோடிக்கோ, பாஜகவுக்கோ எதிராக இன்றுவரை சகாயம் ஒரு வார்த்தை பேசவில்லை.

வடக்கில் அன்னா ஹாசாரே என்கிற காந்தியவாதி காங்கிரஸ் ஊழல் மட்டுமே இந்தியாவின் பெரும் பிரச்சினை என்று பேசினாரே நியாபகம் வருகிறதா ? அதில் பாஜக ஆதாயம் அடைந்ததே. இப்போது அதே அன்னா ஹாசாரே ஏன் பேசவில்லை ? மோடி ஆட்சியில் ஊழலே இல்லையா என்ன ? எக்கச்சக்கமாய் இருக்கிறது. நம் சகாயம் இன்னொரு ஹசாரே முகம்.

சகாயமும் , கமலஹாசனும் , அண்ணாமலை ஐபிஎஸ்ஸும் பாஜகவின் 'போலியான நேர்மை முகம்' காட்டும் பகடைக்காய்கள்.

தேர்தல் நேரத்தில் EVMல் குளறுபடிகள் செய்ய பாஜகவுக்கு மேலும் சில புதிய குட்டிக் கட்சிகள் தேவை.

ரஜினி , கமல் , சகாயம், சரத்குமார் என்று பலரும் களமிறக்கப்படுவார்கள். எதற்கு ? இவர்களால் ஓட்டுக்கள் பிரிந்துவிட்டன என மக்களை நம்பவைப்பதற்கு மட்டுமே. தேர்தல் முடிவுகளில், ஒரு தொகுதியில் ஜெயிக்கவேண்டிய நபர் பாஜக கூட்டணியாக இல்லாவிட்டால் அங்கே EVM குளறுபடிகள் ஆரம்பமாகும்.

EVMல் பித்தலாட்டங்கள் செய்து, ஜெயிக்கும் நபரின் ஓட்டுக்கள் இந்த புதிய நேர்மையாளர்களுக்கு, அதாவது 'நல்லவர்'களுக்கு பிரித்து போடப்படும். பாஜக சார்பு வேட்பாளருக்கு இவர்கள் எல்லாரையும் விட கொஞ்சமே கொஞ்சம் அதிகமாக ஓட்டுக்கள் விழும்படி போடப்படும்.

இன்று புதிதாய் அரசியலுக்கு வந்த சகாயமும், கமலும் 40 ஆயிரம் ஓட்டுக்கள் ஒரு தொகுதியில் திடீரென வாங்கினால் நீங்கள் சந்தேகப்படுவீர்களா ? மாட்டீர்கள் தானே ?

ஆம். நேர்மையாளர் சகாயம் 40 ஆயிரம் ஓட்டு வாங்குகிறார் என்பது நம்பி விடக்கூடிய ஒரு விஷயம் தான். அந்த நம்பகத்தன்மைதான் EVM மோசடி செய்ய தேவையான விஷயம்.

இப்படி இந்த நேர்மையாளர்களோடு சேர்ந்து பாஜகவின் முதல்வர் வேட்பாளர், ஆட்டுக்குட்டி மேய்ப்பாளர் அண்ணாமலைக்கு 40 ஆயிரத்து ஐநூறு ஓட்டுக்கள் விழுகின்றன என்று கொள்ளுவோம். 500 ஓட்டுக்கள் தானே அதிகம்? இதுவும் நம்பக்கூடியதாக மாறிவிடும் இல்லையா ? ஐபிஎஸ் அதிகாரி , ஊழலை ஒழிப்பவர் etc etc .

இவர்கள் எல்லோரும் சேர்ந்து அத்தொகுதியில் பல வருடங்களாக சேவை செய்து வரும் , வெற்றி பெறும் வாய்ப்புள்ள, பெரிய , மாநில (ஊழல்?) கட்சியின் வேட்பாளரின் ஓட்டுக்களை ஆளுக்கு 40 ஆயிரம் பிரித்துவிட்டார்கள் என்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் (EVM) சொல்லும். இப்படி ஓட்டுக்கள் பிரிந்த நிலையில் ஜெயிக்கப்போகும் மாநிலக் கட்சியின் வேட்பாளரை விட வெறும் 501 ஓட்டுக்கள் மட்டுமே கூடுதலாகப் பெற்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற்று விடுவார்.

இதுதான் மக்கள் நம்பவைக்கப்படும் தேர்தல் முடிவு.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், EVM மூலம் தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற்றாலும் , மக்கள் அதை நம்பும்படியாக செய்யவேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய நோக்கம்.

ஏனெனில் EVM ஐ, அதாவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை, மக்கள் நம்பவில்லை என்றால் சகாயமோ , கமலோ , ரஜினியோ அரசியலுக்கு வந்து பாஜகவுக்கு பிரயோசனமே இல்லை. ஏனெனில் கடந்த காலங்களில் , இப்படித் தோன்றும் திடீர்த் தலைவர்கள் யாரும் மக்கள் நம்பிக்கையை உடனே ஓட்டுக்களோ , வெற்றியோ பெற்றதேயில்லை.

எனவே தேர்தல் நேரத்தில் தோன்றியிருக்கும் இந்தப் புதிய மின்மினிகள் நீங்கள் நினைப்பது போல விண்மீன்களல்ல. இவர்கள் ஆளும் பாஜக நடத்தப் போகும் EVM தில்லுமுல்லுகளை தேர்தல் முடிவுகளில், ஓட்டுக்களை பிரித்துப் போட்டு விளையாடப்படும் விளையாட்டை மறைத்து, தேர்தல் நேர்மையாக நடந்ததாக நம்பவைக்க பலியிடப்படும் 'நேர்மையான' வெள்ளாடுகள்.

இந்த வெள்ளாடுகள் தேர்தல் முடிந்தவுடன், அன்னா ஹாசாரே போல, காற்றில் கரைந்து மறைந்து போவார்கள்.

பாஜக நடத்தும் இந்த தேர்தல் ஆட்டத்தில் சகாயம் போன்ற நல்லவர்களுடன், இந்த நல்லவர்கள் மேல் நன்மதிப்பு கொண்ட பல லட்சம் அப்பாவி இளைஞர்களும், பாஜகவின் கருவேப்பிலையாக உபயோகப்பட்டு வீணாகப் போவார்கள். அடுத்த 5 வருடங்கள் பாஜகவின் கையில் சிக்குண்டு தமிழகம் சின்னாபின்னமாகும்.

இந்த தேர்தல் சதுரங்க வேட்டையை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஒருவேளை சீமான்,சகாயம் , கமல் , ரஜினி போனறோர் அடுத்த ஐந்தாண்டுகள் ஊழலை எதிர்த்து , பாஜகவையும் எதிர்த்து போராடி நிற்பார்கள் எனில் அப்போது போய் சகாயத்துடன் இணைந்து நில்லுங்கள்.

இப்போது தமிழகத்தின் மாநிலக் கட்சிகள் பெரும்பான்மை சீட்டுக்கள் வெற்றி பெறுவதைத் தடுக்கும் நோக்குடன், தேர்தல் வர இருக்கும் இந்த ஒரு வருடத்திற்குள் தோன்றியிருக்கும் இந்த திடீர் புரட்சியாளர்களை நம்பாதீர்கள். ஓட்டுப் போடாதீர்கள்.

அப்போதுதான் இவர்களை முன்னிறுத்தி செய்யப்படப் போகும் பாஜகவின் EVM மோசடிகளை நாம் தோற்கடிக்க முடியும்.

இன்றைய தேர்தல் தேவை பாஜகவை உள்ளே நுழையவிடாத ஒரு மாநில எதிர்க்கட்சியின் கையில் அதிகாரம் செல்வதே.

--- அம்பேதன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Friday, January 1, 2021

கொரோனாவுடன் என் நாட்கள்..



இந்தியாவே கொரோனா பற்றி அவ்வளவு அலட்டிக் கொள்ளாமல் போக ஆரம்பித்த இந்த 2020 ன் கடைசி மாதமான டிசம்பரில் தான் கொரோனா  என்னைத் தாக்கியது.

முதல் 2 நாட்களுக்கு அது சாதாரணக் காய்ச்சல் போலத் தான் தெரிந்தது. பகல் நேரங்களில் காய்ச்சல் அடிப்பது போலவே தெரியவில்லை. குளிர்காலம் என்பதால் இரவு நேரங்களில் காய்ச்சல் அடிப்பது நன்கு தெரிந்தது. மூன்றாம் நாள் முதல் மூச்சு விடுவதில் சிரமம் எற்பட ஆரம்பித்தது. அருகிலிருக்கும் க்ளினிக்கிற்கு சென்று மருத்துவரைப் பார்த்தேன். மருத்துவர் அலட்டிக் கொள்ளவேயில்லை. தொட்டுப் பார்க்கக் கூட இல்லை. அவருடைய நோக்கம் நேரடியாக அவருக்குத் தெரிந்த ஒரு லேப்பில் 'சீப்பாக' எனக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வைப்பதாகவே இருந்தது.  நான் அதை ஏற்கவில்லை. இரவு மட்டுமே காய்ச்சல் அடிப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்ததால் கொரோனாவாக இருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்பிவிட்டேன்.  மேலும் வாரம் ஒரு முறை கபசுரக் குடிநீர் வேறு குடித்து வந்ததால் தொற்று வராது என்று உறுதியாக இருந்தேன்.

கொரோனா நோய் நுரையீரலைத் தாக்கும் ஒரு வைரஸ் கிருமி.  அது தொற்றிய 3-4 வது நாளில் அதன் அறிகுறிகள் தெரியும். காய்ச்சலின் தீவிரம் தெரிய பலருக்கு 10 நாட்களுக்கு மேல் வரை ஆகலாம். அதனால் தான் மருத்துவர்கள் 14 நாட்கள் என்று தனிமைப்படுத்தல் விதியை வைத்திருக்கிறார்கள்.  தொடர்ந்த காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், உடலுக்கு தேவையான ஆக்சிசன் கிடைக்காமல் போவதால் ஏற்படும் மயக்க நிலை, அசதி, சுவையுணர்வு தெரியாமல் போகுதல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். கொரோனாவுக்கு நான் நீ என்று போட்டி போட்டு தடுப்பு மருந்து கண்டு பிடித்த எந்த நாட்டுக் கம்பெனிகளும் , கொரோனா வந்தவரைக் குணப்படுத்த ஒரு மருந்தை ஏன் இதுவரை கண்டுபிடிக்க முயலவேயில்லை என்பது விடை தெரியாத ஒரு கேள்வி.

மலேரியா, டைபாய்டு, டி.பி போன்ற பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் காய்ச்சல் மட்டுமே இரவு நேரங்களில் வரும். எனவே இவற்றில் ஏதோ ஒன்று தான் என்னைத் தாக்கியுள்ளது என்று நினைத்திருந்தேன்.  மூன்று நாட்களுக்குப் பிறகு நான் தொலைபேசியில் ஆலோசனை கேட்ட ஒரு ஹோமியோபதி மருத்துவரும் இதே கருத்தைச் சொன்னதும் என் மனம் அதை உறுதி செய்தது. நிமோனியா காய்ச்சல் கூட இது போன்ற கொரோனா அறிகுறிகள் கொண்டது தான்.  ஹோமியோபதி மருத்துவர் ஆர்சனிகம் ஆல்பிகம் நோய் எதிர்ப்பு சக்திக்கும் , காய்ச்சலுக்கும், மூச்சுத் திணறலுக்கும் ஆர்சனிக் அயோடா 200, ஸ்பான்ஜியா 200, ப்ரையோனியா 30 போன்ற மருந்துகளை வாங்கி சாப்பிடும்படி சொன்னார்.  உடல் நிலை சீராகவில்லை என்றால் கொரோனா பரிசோதனையும் செய்து பார்த்துவிடும்படி அறிவுறுத்தினார். 

ஹோமியோபதி மருந்துகளை வாங்கி இரண்டு நாள்கள் உட்கொண்டேன். காய்ச்சல் மட்டுப்பட்டது. மூச்சுத் திணறல் குறைந்தது. ஆனால் எனது உடல் நிலை மிகவும் பலவீனமானது. தலை சுற்றல், தலை வலி, வயிற்றுப் போக்கு, கடுமையான உடல் வலி, அசதி என்று மேலும் மோசமானது. வயிற்றுப் போக்கினால் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க நீர் அதிகம் உள்ள உணவுகளான கஞ்சி, சூப் வகைகள் மற்றும் ஓ.ஆர்.எஸ் சொல்யூஷன் எனப்படும் ஊட்டச்சத்து பானம் ஆகியவற்றை வாங்கிப் பருகி வரவேண்டும். வயிற்றுப் போக்கினால் ஏற்படும் நீரிழப்பை முறையாக கவனிக்கத் தவறினாலும் உடல் நிலை மிகவும் மோசமாக நேரிடும். என்னுடைய உடல் நிலை மோசமானதற்கு நீரிழப்பை ஈடு செய்ய முடியாததும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.

ஹோமியோபதி மருத்துவர் வெளியூர் என்பதால் நேரில் சென்று பார்க்கவும் முடியாத நிலை.  பின்னால் தெரிந்தது இதே மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டே பலர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர் என்று.  ஆர்சனிக் ஆல்பிகம் மருந்தை கேரளா, நம் தமிழ்நாடு போனற மாநிலங்களில் நோய்த் தடுப்பு சக்தியை அதிகப்படுத்த அரசுகளே வீடு வீடாக இலவசமாக வழங்கினார்கள். ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடும் போது நிறைய உணவுகளை, இஞ்சி, மிளகு, பூண்டு, போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அதுவும் எனக்கு சிரமமாக இருந்தது. 



வேறு வழியின்றி,  வேறொரு ஆங்கில மருத்துவரை சென்று பார்த்த போது பகலில் காய்ச்சல் இல்லை என்று நான் சொன்னதை வைத்து அவரும் மலேரியாவாக இருக்கலாம் என்று சொன்னார். மருந்துகள் எழுதி 3 நாட்கள் சாப்பிட்டுவிட்டு வரச் சொன்னார். இருந்தாலும் டெஸ்ட்டுகள் எழதிக் கொடுத்தார். டெஸ்ட்டுகளை செய்து விட்டு ரிப்போர்ட்டுடன் போனால் மலேரியா, டைபாய்டு, டி.பி அறிகுறிகள் இல்லை, நெகட்டிவ் என்று ரிப்போரட்டில் வந்துவிட்டது. ஆனாலும் காய்ச்சல் விடவில்லை. ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு உடனே மருத்துவர் சொன்னது கொரோனா பிசிஆர் டெஸ்ட் மற்றும் நெஞ்சு சி.டி. ஸ்கேன் எடுத்துவிடுங்கள் என்று.  எனக்கு காய்ச்சல் வந்து 8-9 நாட்கள் கழித்து பிசிஆர் டெஸ்ட்டும், சி.டி. ஸ்கேனும் எடுத்துக் கொண்டேன். 

கொரோனாவை உறுதி செய்ய எடுக்கப்படும் பிசிஆர் டெஸ்ட் நெகட்டிவ்வாக வர நிறைய (30 சதவீதம் வரை) வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் பிசிஆர் டெஸ்ட் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டிய பரிசோதனை. சாம்பிள் எடுக்கும் போது செய்யும் சிறு தவறுகளில் ரிசல்ட் நெகட்டிவ்வாக காட்டும். எனவே குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் இரண்டு மூன்று முறை பிசிஆர் டெஸ்ட் எடுக்கச் சொல்வார்கள். சி.டி ஸ்கேன் மூலம் கொரோனாவை உறுதி செய்வது 89 சதவீதம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மருத்துவர்கள் பிசிஆர் மற்றும் நெஞ்சக சி.டி.ஸ்கேன் என இரண்டையும் சேர்த்தே கொரோனா பாதிப்பை  உறுதிப்படுத்துகிறார்கள். எனது பி.சி.ஆர் டெஸ்ட் நெகட்டிவ் என வந்து இருந்தாலும், சி.டி.ஸ்கேனைப் பார்த்து கொரோனாவை உறுதி செய்தார் மருத்துவர். 

கொரோனா எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை சி.டி. ஸ்கேனில் மருத்துவ ரீதியாக அளவிட 0-25 வரை ஒரு அளவுக் குறியீடு வைத்துள்ளனர்.  0 - 8 வரை குறியீட்டு எண் இருந்தால் கொரோனாவா என்பது சந்தேகமே. 10- 14 வரை குறியீட்டு எண் இருந்தால் கொரோனா ஆரம்ப நிலை என்று அர்த்தம்.  14 - 18  கொஞ்சம் நடுத்தரமான பாதிப்பு நிலை. 18 - 25ம் 25க்கு மேலும் தீவிரமான கொரோனா பாதிப்பு நிலை என்று அர்த்தம். தீவிர நிலையில் கண்டிப்பாக மருத்துவ மனையில் கண்காணிப்பு, ஆக்சிசன் சிலிண்டர்கள் தேவைப்படும். ஆரம்ப நிலை, நடுத்தர நிலைக்காரர்களைத் தான் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் மொத்தமாக வைத்து கபசுரக் குடிநீர் கொடுத்து பத்து பதினைந்து நாள் வைத்திருந்து அனுப்பி விடுகிறார்கள். 



நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் 4 -5 நாட்களில் கொரோனாவிலிருந்து சரியாகி நார்மலாகி விடுகிறார்கள். 7 நாட்களுக்குப் பின் அவர்களிடமிருந்து கொரோனா மற்றவருக்குப் பரவும் வாய்ப்பே இல்லை. எனக்கு வந்த தொற்று என் மனைவிக்கும் பரவி, மூன்று நாட்கள் அவளுக்கும் காய்ச்சல் இருந்தது. ஆனால் நோயெதிப்பு சக்தி அதிகம் அவளுக்கு இருந்ததால் அதன் பின்னர் உடனேயே சரியாகி விட்டது. காய்ச்சலோடும், காய்ச்சல் அவளுக்கு சரியான பின்பும் 15 நாட்கள் எனக்கு உணவு முதல் அனைத்து பணிவிடைகளையும் செய்தாள் என்றால் பாருங்கள். இப்படித்தான் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் பலருக்கும் கொரோனா ஒரு சாதாரண காய்ச்சலாக வந்து மூன்றே நாட்களில் சரியாகி விடுகிறது. எங்களுக்கு வேறு யாரும் ,கூட உதவிக்கும் இல்லை.  உறவினர்களை உதவிக்கு வரச் சொல்லி அவர்களுக்கும் நோயைப் பரப்பி விடவும் விருப்பமில்லை. அக்கம் பக்கம் பிறரிடம் சொல்லி பீதியை உண்டாக்காமல் நாங்களே  எங்களை தனிமைப் படுத்திக் கொண்டு இருந்தோம்.

கொரோனா வந்தால் மிகவும் எச்சரிக்கையாயிருக்க வேண்டியவர்கள் யார் என்றால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு ஏற்கனவே உள்ளவர்கள், கிட்னி, இதயம், கல்லீரல் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் வேறு ஏதாவது நாள்ப்பட்ட தீவிர நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்கள். நோயெதிர்ப்பு குறைந்து போன வயதானவர்களும், கொரோனா ஒரு நிமோனியா காய்ச்சல் போல நுரையீரலைப் பாதிக்கிறது. அதனால் உடலுக்கு கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்து ஏற்கனவே பாதிப்பில் உள்ளவர்கள் மேலும் பல சிக்கல்களுக்கு உள்ளாகி மரணமடைய நேர்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO ) கணிப்புப்படி (Dec 2020), கொரோனா வந்தாலே ஆளைக் கொல்லும் ஒரு வியாதியல்ல. சார்ஸ், மெர்ஸ், எய்ட்ஸ், கேன்ஸர் போன்ற கொடிய நோய்கள் லிஸ்ட்டில் இதைச் சேர்க்கவில்லை WHO. கீழேயுள்ள இணைப்பில் கொரோனா பற்றி உலக சுகாதார நிறுவனம் கொடுத்துள்ள குறிப்புக்கள் ஆங்கிலத்தில் கீழே.

Among those who develop symptoms, most (about 80%) recover from the disease without needing hospital treatment. About 15% become seriously ill and require oxygen and 5% become critically ill and need intensive care.
Complications leading to death may include respiratory failure, acute respiratory distress syndrome (ARDS), sepsis and septic shock, thromboembolism, and/or multiorgan failure, including injury of the heart, liver or kidneys.
In rare situations, children can develop a severe inflammatory syndrome a few weeks after infection. 
https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/question-and-answers-hub/q-a-detail/coronavirus-disease-covid-19

எனக்கு கொரோனாவை உறுதி செய்த அலோபதி மருத்துவர் மருந்து எதுவும் எழுதித் தரவில்லை. அரசு மருத்துவமனையில் சேர்வதற்கான கடிதம் ஒன்று தந்தார். நான் ஏற்கனவே அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளின் மோசமான சூழல் பற்றி கேள்விப் பட்டிருந்ததாலும், எனக்கு ஆரம்ப நிலை தான் என்பதாலும் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்கிறேன் என்று விட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களுடன் பேசவில்லை. வெளியே எங்கும் செல்லவில்லை மருத்துவரைப் பார்க்கப் போவதைத் தவிர.  முகக்கவசம் மூக்கை மூடி நன்றாக அணிந்து முடிந்த அளவு யாரையும் நெருங்காமல் பயணித்தேன். நெருங்கிய நண்பர்கள் தனியார் மருத்துவமனைகளில் சேரச் சொல்லி அறிவுறுத்தினர். தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை கூசாமல் வசூலிக்கிறார்கள் என்பதை பல நண்பர்கள் விஷயங்களில் கடந்த 6 மாதங்களில் பார்த்திருந்ததால் அதையும் தவிர்த்தேன். இத்தனைக்கும் அலோபதியில் கொரோனாவை தீர்க்க மருந்து இல்லை. ரெமிடெஸ்வீர் போன்ற வேறு சில நுரையீரல் தொற்றுக்களுக்கான மருந்தை பல மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவை திட்டமான மருந்துகள் அல்ல.

அலோபதி மருத்துவர் மலேரியா இல்லை , கொரோனா பரிசோதனை செய்யுங்கள் என்று சொன்ன அன்றிலிருந்தே உஷாராகி நான் காலையும் மாலையும் கபசுரக் குடிநீர் குடிக்க ஆரம்பித்துவிட்டேன்.  அத்துடன் என் நண்பர் நுரையீரல் பாதிப்பைப் போக்க ஆவி பிடிக்கச் சொன்னதையும் தினமும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன். 

ஆவி பிடிக்கும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது வூஹானில் முதன் முதலில் கொரோனா பரவிய போது சீன மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. ஆவி பிடிக்கும் போது டர்பன்டைன் ஆயில் வென்னீரில் சேர்ப்பதுடன், ஒரு ஸ்பூன் கெமிக்கல் கலக்கப்படாத தூய மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கொண்டேன்.  காய்ச்சல் தொடர்ந்து கட்டுப்பட ஆரம்பித்தது. மூச்சுத் திணறலும் குறைய ஆரம்பித்தது. மஞ்சள் வைரஸ் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. நுரையீரலின் உள்ளே ஆவியாகச் செல்வதன் மூலம் நுரையீரல் காற்று அறைகளில் தங்கியிருக்கும் வைரஸையும் அது கொன்றுவிடும். எனவே பொதுமக்கள் கூடும் இடங்களுக்கோ,  நோய்த் தொற்று எளிதில் பரவும் வாய்ப்புள்ள இடங்களுக்கோ போய் விட்டு வந்தால் முன்னெச்சரிக்கையாக இப்படி ஆவி பிடித்துக் கொள்வது நுரையீரல், தொண்டை, மூக்கு போன்ற கொரோனா தங்கிப் பரவும் இடங்களை தூய்மைப்படுத்தும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நீங்களும் வெளியே மக்கள் கூட்டமுள்ள இடங்களுக்குப் போய்விட்டு வந்தால் கடைபிடியுங்கள். 

அலோபதியில் தான் இன்னும் கொரோனாவிற்கு மருந்து இல்லை. வேறு நோய்களுக்குத் தரப்படும் சில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கொடுத்து, வைட்டமின், சத்து மாத்திரைகள் சாப்பிட்டு, தேவைப்பட்டால் ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற முதலுதவிகளுடன், மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தால் 10 நாட்களில் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நோயுடன் போராடி கொரோனா குணமாகி விடும். தனியார் மருத்துவமனைகளில் இதற்கான செலவும் ஒரு லட்சத்தில்  ஆரம்பித்து 6 லட்சம் வரை ஆகிவிடக்கூடும். வேறு சில நாட்பட்ட, பலவருடங்களாக இருக்கும் சர்க்கரை வியாதி, இதயக் கோளாறு, கிட்னி கோளாரு நோய்கள் ஏதாவது உங்களுக்கு ஏற்கனவே இருந்திருந்தால் மருத்துவமனையை நாடவேண்டிய நிலை கண்டிப்பாக ஏற்படும். எனவே கவனம். 

மாற்று மருத்துவத்தில் நிறைய மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு வெற்றிகரமாக நோயைக் குணப்படுத்தவும் செய்திருக்கின்றன. எனவே, ஆங்கில மருத்துவ முறையில் நோயைக் கண்டறிந்த பின், மேற்சொன்ன கைவைத்திய சித்த மருந்துகளுடன் நின்றுவிடாமல் சித்த மருத்துவரை(யும்) அனுகினேன்.  நகரின் பிரபலமான சித்த மருத்துவர்களில் ஒருவரான அவர் எனது அனைத்து டெஸ்ட் ரிப்போர்ட்டுகளையும் படித்துவிட்டு, நான்கைந்து நாட்களாக கபசுரக் குடிநீர் சாப்பிட்டு ஆவி பிடிப்பதையும், காய்ச்சல் குறைந்திருப்பதையும் சொன்னதும், கொரோனா காய்ச்சல் கிட்டத்தட்ட இப்போது சரியாகி விட்டிருக்கும் என்று சொன்னார். கொரோனா காய்ச்சல் நின்று விட்டாலும் பலருக்கும் அதன் பின்விளைவுகள் இரண்டு மாதங்களுக்குள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி் நான் கேட்டதும், அவர் கொரோனாவிற்கான சில சித்த மருந்துகளைப் பரிந்துரைத்து, 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிடும்படி அறிவுறுத்தினார். இந்த சித்த மருந்துகளை இதுவரை ஒரு ஆயிரம் பேருக்காவது பரிந்துரை செய்திருப்பதாகவும், மிக நன்றாக நோயைக் குணப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். என் மனைவிக்கு நிலவேம்பு + கபசுரக் குடிநீரும், பிரம்மானந்த பைரவ மாத்திரையும் மட்டும் தொடர்ந்து பதினைந்து நாள் சாப்பிடும்படி அறிவுறுத்தினார்.

சித்த மருத்துவர் பரிந்துரைத்த ஆயுர்வேத மருந்துகள் இவை. பிரம்மானந்த பைரவ மாத்திரை. காலை 2. மாலை 2. மாத்திரைகளைப் பொடி செய்து, அமுக்கரா சூரணம் ஒரு ஸ்பூன், தேவையான அளவு தேன் கலந்து குழப்பி சாப்பிட வேண்டும். அடுத்தாக வசந்தக் குசுமாரக சூரண மாத்திரை. காலை 2. மாலை 2. வெற்றிலையில் மாத்திரைகளை வைத்து, உடன் 2 மிளகு, 2 கிராம்பு சேர்த்து வெற்றிலையை சவைத்து உண்டு விட வேண்டும். இந்த இரண்டு மாத்திரைகளும் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். இது போக நிலவேம்புக் குடிநீர் பொடி 2 ஸ்பூன், கபசுரக் குடிநீர் பொடி 1 ஸ்பூன் கலந்து வெந்நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி கஷாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும்.  இவை தான் நோய்க்கான மருந்துகள். இந்த மருந்துகள் தவிர நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்ற தூதுவளை லேகியமும், நுரையீரல் புண்ணாகி இருப்பதால் அதைப் பலப்படுத்த ஆடாதோடை மணப்பாகும் தினமும் இருவேளை சாப்பிட்டு வரச் சொன்னார்.

கொரோனாவில் பெரும்பாலோர் கவனிக்கத் தவறிய ஒரு விஷயம் அது பாதிப்பவருக்கு மனோரீதியான பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் என்பது.  இது எதனால் என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஒரு வேளை சுற்றுப்புறத்தில் அனைவரும் ஒதுக்கி வைப்பார்கள் என்பதாலோ,  தீட்டுபோல கருதி இழிவாக பார்ப்பார்களோ அல்லது மிரண்டு போய்  தனக்கும் தொற்றிவிடும் என்ற பயத்தில் நம்மை ஏதாவது கடுமையாக நடத்திவிடுவார்களோ என்கிற எண்ணத்திலோ அல்லது உலகம் முழுவதும் பலரை கொன்ற ஆட்கொல்லி நம்மையும் கொன்று விடுமோ என்கிற அச்சத்திலோ இருக்கலாம்.  அல்லது நோயின் பாதிப்பால் உடல் பலமிழக்கும் போது ஏற்படும் மனப்பாதிப்பாக இருக்கலாம்.

அப்படி மனம்  குழம்பிய ஒரு மனோநிலையை கொரோனா பாதித்த முதல் பத்து நாட்களில் என்னால் உணரமுடிந்தது.  மரணம் பற்றிய சிந்தனை தொடர்ந்து உண்டாகியது. சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மனம்  சஞ்சலமடைந்தது. கொரோனா நோயாளிகளுக்கு ஆதரவாக, இதமாக ஒருவரேனும் கூடவே உடன் இருப்பது அவசியமானது என்றே தோன்றுகிறது.  கடந்த ஏப்ரல் மாதத்தில் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா கடையின் உரிமையாளர் கொரோனா பாதிக்கப்பட்டு கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது சொந்தங்கள் யாருமே அவரைப் பார்க்க வராததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் வந்தது. அப்போது கொரோனா பற்றி மக்களிடையே பரவியிருந்த பீதியான சூழலையும் சேர்த்து வைத்துப் பார்த்தால் அவருடைய கடுமையான மன நெருக்கடியை நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். எனவே, கொரோனா பாதிப்படைபவர்கள் இத்தகைய மன உளைச்சல்களைப் பற்றியும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

தொடர்ந்த சித்த மருந்துகளாலும், ஆவிபிடித்தல், கபசுரக் குடிநீர் போன்றவற்றாலும் மெது மெதுவாக நோயிலிருந்தும் , நுரையீரல் பலமிழந்து நெஞ்சில் பாரம்போல இருந்த நிலையும், மூச்சை இழுத்து நெஞ்சில் தேக்கி வைப்பது சிரமமாக இருந்த நிலையும் சரியாகி, சளி இருமல் இல்லாமல் போய் உடல் தேறி வர ஆரம்பித்துவிட்டது.  கொரோனா பாதித்த காலத்தில் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான சிக்கன், நிலக்கடலை, கொண்டக் கடலை சாப்பிட்டு உடல் பலம் பெற முடிந்தது.

கொரோனாவின் உருமாறிய வகைத் தொற்று தற்போது மீண்டும் வேகமாகப் பரவி வரும் சூழலில் எனது இந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது பலருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் பயன்படும் என்று நம்புகிறேன்.  அனைவருக்கும் மருத்துவ சேவை குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பது சிரமமாகி வரும் சூழலில் நாமும் நோயை எதிர்த்த இந்தப் போராட்டத்தில் நம்மை ஓரளவிற்கு தெளிவு படுத்தி வைத்துக் கொள்வோம். 

கொரோனாவை வெல்வோம்.

https://www.cochrane.org/CD013639/INFECTN_how-accurate-chest-imaging-diagnosing-covid-19

https://www.ziotamil.in/hot-water-steam-for-corona-virus-remedies/

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/home-remedies/homeopathy-for-coronavirus-treatment-does-it-work/photostory/76176772.cms?picid=76176808

Sunday, November 17, 2019

தேசிய பாதுகாப்பும், இராணுவ மேலாண்மையும் , இன ஒடுக்குமுறையும்.

17/11/2019
தேசிய பாதுகாப்பும், இராணுவ மேலாண்மையும் ,  இன ஒடுக்குமுறையும்.

மு . திருநாவுக்கரசு.


தேசிய பாதுகாப்பு என்பதன் மறுபக்கம் இராணுவ மேலாண்மை.    இலங்கையில் தேசிய பாதுகாப்பு ,  இராணுவ மேலான்மை என்பதன் உள்ளடக்கம் இன ஒடுக்குமுறை.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின்  பேசுபொருள் தேசிய பாதுகாப்பு என்பதே தவிர இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அல்ல.   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் இனப்பிரச்சினைக்கான தீர்வு  பற்றியதல்ல   ஒருவகை சப்பைக்கட்டு அரசியல்தான்.

இவ்வாண்டு இலங்கையில் நடந்தேறிய தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என்பது செயற்கையாக நடந்தேறிய ஒரு விவகாரமாகும்.    இராணுவ மேலாண்மையை உருவாக்குவதற்கும் இன ஒடுக்குமுறையை மேற்கொள்வதற்குமேற்ற  ஒரு  கருவியாக இந்த குண்டுவெடிப்புச் சம்பவம்   அரங்கேற்றப்பட்டது.  இக்குண்டு வெடிப்பின் உடலாய்   சஹ்ரான் குழு  காணப்பட்ட  போதிலும் இதன் மூளைமாய் பௌத்த இனவாத அரசியல் தலைவர்களும் இராணுவ  சக்திகளும்  செயற்பட்டனவென்று  தெரிகிறது.

இலங்கை ஒரு தீவு.  இலங்கையில் முஸ்லிம்கள் ஒருபோதும் ஓர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஈழத் தமிழர்களின்   ஆயுதப் போராட்டத்திற்கு   தமிழகத்தின் பின்புலம் ஓர் அடிப்படை  பலமாய் அமைந்தது.  தமிழகம்    புகலிடமாய் இருக்கவல்ல பின்னணியைக் கொண்டு இருந்தது. ஒரு சிறு கடலை தாண்டி தமிழகத்தில் ஆயுதப் போராளிகள்  புகலிடம் கொள்வது இலகுவாக இருந்தது.  இத்தகைய பின்னணி முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு கிடையாது. அவர்கள் பெருங்கடலைத் தாண்டி செல்ல வேண்டும்.  அது  அவர்களுக்கு சாத்தியமான   விடயமல்ல.
 

உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட  வெடி  பொருட்களெல்லாம்     சாஹ்ரான் குழுவிற்கு எங்கிருந்து கிடைத்ததன  என்ற கேள்விக்கான விடை முக்கியமானது.   இவை   இலங்கை இராணுவத்தின்   வாயிலாக    பெறப்பட்டவை என்ற   யூகம் பலமாக உண்டு . 

இலங்கைபில்   உள்ள முஸ்லிம்   தீவிரவாதிகளைப் பொறுத்தவரையில்  அவர்களுக்கு உதவக்கூடிய  அண்டை நாடுகள் தொலைவிலுள்ளன. அதாவது பாகிஸ்தான்,  பங்களாதேஷ்   ஆகிய முஸ்லிம் நாடுகள்  தொலைவில்  காணப்படுகின்றன.  இந்தியாவில் கேரளாவில் முஸ்லிம் குடியிருப்புக்கள் கடலோரத்தை  அண்டி  இருந்தாலும்  மொழிரீதியாக   இலங்கை முஸ்லிம்கள் இலகுவில்  பிரித்து அடையாளம் காணப்பட கூடியவர்களாவர். ஆதலால்   இலங்கை முஸ்லிம்கள்  கேரளாவை பின்புலமாகக் கொள்வதற்கான  வாய்ப்பும் மிகவும் அரிதானது.

இப்பின்னணியில்  இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பது என்பது  மிகவும் கடினமானது.   எனவே இலங்கையில் இராணுவ மேலாதிக்கத்தை மேம்படுத்துவதற்காகவும் இன ஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்காக வும்   சாஹ்ரான் குழுவிற்கு பின்னால் சிங்கள பௌத்த தீவிரவாத அரசியல் சக்திகளும் இராணுவ சக்திகளும் ஒளிந்து உள்ளனர்  என்ற சந்தேகம் கவனத்துக்குரியது.

முள்ளிவாய்க்காலும் அதற்கு முற்பட்டதுமான  யுத்த காலத்தில்  தமிழருக்கு எதிராக சாஹ்ரான்  குழுப்  போன்ற முஸ்லிம் தீவிரவாத குழுக்களை  சிங்கள ஆட்சியாளர்களும் இராணுவமும் பயன்படுத்தியது போல  தமக்கு பழக்கப்பட்டுப்போன அதே  முஸ்லிம் தீவிரவாதிகளை  பயன்படுத்தி  இலங்கையில்  முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அரசியலை முன்னெடுப்பதற்கான களமாகவும் உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புகள்  வடிவமைக்கப்பட்டனவெனத்  தெரிகிறது.  அத்துடன் கூடவே   இதே  முஸ்லிம் தீவிரவாதிகளைப் பயன்படுத்தி  இந்தியாவிலும் குண்டுவெடிப்புகளை மேற்கொள்வதற்கான சதியையும் இத்துடன் பின்னிப்பிணைத்து  வடிவமைத்துள்ளனரெனத்  தெரிகிறது. சாஹ்ரான் குழுவிற்கு சென்னையிலுள்ள மண்ணடி  மற்றும் கோவை  , கேரளா போன்ற இடங்களில் உள்ள தீவிரவாத தொடர்புகள் இதனை நிரூபிக்கின்றன.

2001 செப்டம்பரில் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது பின்லேடன் நடத்திய விமானத் தாக்குதலை  உடனடுத்து  அம்மாதமே   ஐநா பாதுகாப்பு சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட  ""சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு  சட்டமே "" இன்று உலகளாவிய அனைத்து சட்டங்களிற்கும் தாயாக விளங்குகிறது.  பின்லேடனின் தாக்குதல்   முழு  உலகளாவிய அளவில்  ஒவ்வொரு நாட்டையும் உள்நாட்டு ரீதியாகவும்  சர்வதேச ரீதியாகவும்  "" தேசியப் பாதுகாப்பு ""என்ற கொள்கைக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் நிலையை உருவாக்கியது .  அது உலகளாவிய ரீதியில் நிகழ்ந்துவந்த அனைத்து  ஆயுத போராட்டங்களுக்கும் தடைபோடும் சட்டமாகவும் அமைந்தது.  அது  உலகளாவிய  அனைத்து மனிதர்களையும்  இராணுவ - பொலீஸ் - புலனாய்வு அழுங்குப் பிடிகளுக்குள்  இறுக்கிப் பிடிக்க வைத்தது.

இதனைப் புரிந்துகொண்டால்  உயிர்த்த ஞாயிறு கதாநாயகனாகிய   சாஹ்ரான்  இலங்கைக்கான ஒரு   பின்லேடனாய்  காட்சியளிக்கிறார்.    இதன் பின்னணியில்   மக்களின் பூரண ஆதரவுடன்   இராணுவத்தை   பலப்படுத்தவும்   இன ஒடுக்குமுறையை  முன்னெடுக்கவும்  தேவையான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இலங்கையில் சிங்கள பௌத்த இராணுவமானது  வெளிநாடுகளுடன்  யுத்தம் புரிவதற்காக வடிவமைக்கப்பட்டதல்ல.   அது தமிழ் இனத்திற்கு எதிராக வடிவமைக்கப்பட்ட     பௌத்த சிங்கள  இனவாத இராணுவ கட்டமைப்பாகும். ஆதலால் அவர்கள் களத்தில் செயற்படும்போது    இயல்பாகவே தமிழின எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் இன எதிர்ப்புத்தன்மையுடன்   செயல்படுவர்.

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த  போர்க்குற்றங்களுக்கான  சர்வதேச விசாரணைகளை  முன்னெடுக்க வேண்டுமென்று தமிழ் மக்களும் மனித உரிமை அமைப்புக்களும்   குரல் கொடுத்துவரும் நிலையில்  ,   இதில்  ஒரு முக்கிய போர் குற்றவாளியாக  தளபதி சவேந்திர சில்வாவை   மனித உரிமை அமைப்புக்களும் , தமிழ் மக்களும்  பெயர் குறித்து  கைகாட்டி பேசும் போது  அவரை இலங்கையின் இராணுவத் தலைமைத் தளபதியாக அரசு நியமித்திருக்கிறதானது   சிங்கள   பௌத்த பேரினவாதம் எதிர் புரட்சிகர வளர்ச்சி அடைந்திருப்பதற்கு  மேலும் ஒரு சிறந்த  உதாரணமாகும்.

  ஓய்வுபெற்ற முன்னாள் படை அதிகாரியும் ,   முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில்  பெயர்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டு வருபவருமான கோத்தபாய  ராஜபக்ச  பிரதான ஜனாதிபதி வேட்பாளராக  காணப்படுவதும் ,  மேலும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ்  சேனநாயக்க  ஒரு ஜனாதிபதி வேட்பாளராக காணப்படுவதும்  ,  முன்னாள்  படைத் துறையினர்  வெளிநாட்டு தூதர்களாக நியமிக்கப்படுவதும்   இலங்கை அரசியலில் இராணுவம் மேலாண்மை பெற்று வருவதை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.  மேலும்  கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகுமிடத்து  முன்னாள் இராணுவ தலைமை தளபதி கமல் குணரட்ன பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்ற செய்தி  ஒன்று வெளியாகியுள்ளமையும் கவனிக்கத்தக்கது.


கடத்திச் செல்லப்பட்ட தமிழர்கள் 300 பேரை முதலைகளுக்கு   கோத்தபாய   ராஜபக்ச  இரையாக்கினார்  என்ற தகவலை  அதில் நேரடியாக ஈடுபட்ட  வாகன சாரதி ஒருவர்  சிரேஷ்ட அமைச்சர் ஒருவர்  முன்னிலையில்  அண்மையில் நிகழ்ந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் பகிரங்கமாக தெரிவித்தார். இது இருபத்தோராம் நூற்றாண்டில்  நடந்துள்ள,   மனிதகுல நாகரிகம் தலைகுனியதக்க   ஓர் அரசியல் விவகாரமாக   தமிழருக்கு எதிராக  இலங்கையில்  அரங்கேறியுள்ளதைக்  காட்டுகிறது.

   இவ்வாறு   இதற்கு கட்டளையிட்டு தலைமை தாங்கிய ஒருவரே   ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன  சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார் .  இப்பின்னணியில்  பௌத்த சிங்கள   இனவாதம் மேலும் மேலும்  எதிர் புரட்சிகர வளர்ச்சியை அடைந்து செல்லப் போகிறது.


ஏற்கனவே முள்ளிவாய்க்கால்  யுத்தத்தோடு  இலங்கையில் எதிர்ப்புரட்சி புரட்சிகர வளர்ச்சி அடைந்துவிட்ட   நிலையில்  அது மேலும் புதிய பரிமாணங்களை எடுத்துவருவதைக் காணலாம்.

காலம் சென்ற பௌத்த பிக்கு ஒருவரின்   உடலத்தை அண்மையில் பௌத்த மகா சங்கத்தினர் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில்   தகனம் செய்ய முற்பட்டபோது ,  அதற்கெதிராக  முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  ஆனால் அந்தத் தீர்ப்பை முற்றிலும் புறந்தள்ளி  பொலிஸாரின் அனுசரணையுடன்  இந்துமத விதிமுறைகளுக்கு  மாறாக   பௌத்த மகா சங்கத்தினர் இந்து ஆலய வளாகத்தில்  அந்த உடலை தகனம் செய்தனர்.   இது அரசியல் அமைபைப்பையும் ,  சட்டம்-ஒழுங்கு விவகாரங்களையும் முற்றிலும்     மீறுகின்ற ஒரு விடயமாகும்.  இதனை அனைத்து சிங்கள கட்சிகளும்,   இரு  பிரதான   சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களும்,  சிங்கள ஊடகங்களும்  நாடாளுமன்றத்திற்கு   உள்ளேயும் வெளியேயும் ஆதரித்தன.  சிங்கள மக்கள் மத்தியில்  காணப்படும்   மகாவம்ச மனப்பாங்கின் பின்னணியில்  இது   பரந்த சிங்கள மக்கள்  மத்தியில்  ஏற்றுக் கொள்ளப்பட்ட  நீதியாகவும் தர்மமாகவும் காட்சியளிக்கின்றது . பௌத்த சிங்களப் பேரினவாதம் எதிர்ப்புரட்சிகர வளர்ச்சி அடைந்திருந்திருக்கின்றமைக்கு  இது ஒரு தெளிவான இலகுவான சான்றாகும் .

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச   வெற்றி  ஈட்டுவதற்கான அதிக வாய்ப்புகள்   உள்ளன என்று  ""ராய்ட்டர் "" செய்தி  நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு  கூறுகிறது.       களநிலைமைகளை பார்க்குமிடத்து கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு போல் தெரிகிறது.

  அவ்வாறு கோத்தபாய  வெற்றி பெறுமிடத்து  17 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மகிந்த  ராஜபக்ச பக்கம் நோக்கி கட்சி மாறினால்  நாடாளுமன்றத்தைக் கலைக்காமலே மகிந்ந  ராஜபக்ச பிரதமராக முடியும். ஜனாதிபதியும் பிரதமரும் நாடாளுமன்றமும்  ஒரே கட்சியைச்  சேர்ந்தவர்களாக    அமையுமிடத்து  அரசியலமைப்பு சர்வாதிகாரம் ஒன்றை இலகுவாகவே அரங்கேற்ற முடியும்.  ஜனாதிபதி நாற்காலியில் ஒரு கட்சியும் நாடாளுமன்ற அதிகாரத்தில் இன்னொரு கட்சியும் மேலாண்மை பெற்றிருக்கும் போதுதான் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு பயன்பாடு உண்டு.  அவ்வாறு அல்லாதவிடத்து  இரண்டிலும் ஒரு ஒரே கட்சியே ஆதிக்கம் செலுத்தும் போது  அரசியல் யாப்பு சர்வாதிகாரம் இலகுவாக செயற்பட முடியும்.
சிங்கள பௌத்த பேரினவாதம் எதிர் புரட்சிகர வளர்ச்சி அடங்கியிருக்கும் பின்னணியில் திட்டவட்டமாக இலங்கை  ஓர் அரசியல் யாப்பு சர்வாதிகாரத்திற்கு தயாராகி விட்டதென்றே கூறலாம்.  யார் ஜனாதிபதியாக வந்தாலென்ன நாடாளுமன்றமும் ஜனாதிபதியும்  ஒரே கட்சியைச் சேர்ந்தவராக அமையும் போது அரசியல் யாப்பு சர்வாதிகாரத்திற்கேற்ற  வகையிலான  முன்நிபந்தனைகள்   இனப்பிரச்சினையின் பெயரால்  இலங்கையில்   ஸ்தாபிதம் அடைந்துவிட்டன.

  திட்டவட்டமாக இலங்கையின் எதிர்காலம் அரசியல் யாப்புச் சர்வாதிகாரத்துக்கு உரியதாகவே  அமையும்.  அதாவது  தமிழருக்கு  எதிரான  எந்த அநியாயத்தையும்   அரசியல் யாப்பின் பெயராலேயே  நிறைவேற்ற முடியும் என்பதே இதன் பொருளாகும் .  இந்த அரசியல் யாப்பு சர்வாதிகாரம் தமிழரின் முதுகில்  குதிரை ஓடுவதன் மூலமே அதற்கான களத்தை அமைத்துக் கொள்ளும் . ""நாய்க்கு எங்கு அடித்தாலும் அது காலைத் தூக்குவது "" போல  இலங்கை அரசியலில் ஏற்படக்கூடிய அரசியல் - பொருளாதார- சமூகரீதியிலான வீக்கதூக்கங்கள் எதுவாக இருந்தாலும்  அது தமிழரின் மீது திசை திருப்பப்பட்டு முன்னெடுக்கப்படும்.

கடந்த ஆண்டின் இறுதியிலும் இவ்வாண்டின் முற்பகுதியிலுமாக இரண்டு மாதங்கள் இடம்பெற்ற   இரு பெரும் சிங்கள  கட்சிகளுக்கு இடையேயான ஆட்சிமாற்றப்  பிரச்சனையின் போது  இறுதியில் இருபெரும் சிங்களக் கட்சிகளும் தப்பித்துக் கொண்டனவாயினும் அதில் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி    பறிபோனதைக் காணலாம் . அதாவது தமிழரான சம்பந்தரின் தலை அதில் உருண்டது. இதில்  '"ஆப்பிழுத்த குரங்கின் நிலைகக்கு"" தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சம்பந்தனும் ஆளாகினர்  என்பது ஒரு வினோதமான காட்சியாய் அமைந்தது.

ஆதலால் மொத்தத்தில்   தற்போது காணப்படும் அரசியல் அமைப்பின் பிரகாரம்  ஜனாதிபதி பதவியிலும் ,பிரதமர் பதவியிலும் , நாடாளுமன்றத்திலும் ஒரே கட்சியே   கோலோச்சும் போது அது தமிழின அழிப்பை முதன்மையானதாகவும்,  களமாகவும்  கொண்ட வகையிலான  அரசியல் யாப்பு சர்வாதிகாரம்  மேலோங்கும்

""இரண்டு  யானைகள் புணர்ந்தாலும் புல்லுக்குத்தான்  சேதம்;  அவை  இரண்டும்  சண்டையிட்டாலும் புல்லுக்குத்தான்  சேதம்.""  என்பதற்கிணங்க  இரு பெரும் சிங்களக் கட்சிகளும்  கூடிக்குலவினாலும் அவை  தமிழின அழிப்பைத்தான்   அரங்கேற்றும்;  அவை  இரண்டுக்குமிடையே  சண்டை ஏற்பட்டாலும்  அவை    தமிழின அழிப்பைத்தான்  அரங்கேற்றும்.

Wednesday, November 6, 2019

டிராகனின் தலையில் தாமரை மொட்டு - மு .திருநாவுக்கரசு.

6/11/2019
(சிங்கள) டிராகனின் தலையில் தாமரை மொட்டு
--- மு .திருநாவுக்கரசு


""  இறைமை,  சிங்கள நாடு""  இதுவே தாமரை மொட்டின் கொள்கையும், கோட்பாடும் தேர்தல் கோசமுமாகும்.


இலங்கையின்  தேர்தல்    அரங்கில் தூணேறிய சிங்கம் -  டிராகன் - கழுகு   என்பன களமாடுகின்றன. 


நெருப்பை சுவாசிக்கும் டிராகன் இலங்கையின் அரசியல் தடாகத்திலுள்ள தாமரை மொட்டைச்  சூட  விரும்புகிறது.


அதனைத் தடுத்து நிறுத்த தூணேறிய சிங்கமும், கழுகும் அன்னத்தின் பின்னால் நிலை எடுக்கின்றன. இது ஒன்றும் பஞ்சதந்திரக் கதையல்ல; இலங்கை அரசியலின்  உண்மையான நிலை இதுதான்.


கார்த்திகைப் பூவை வாளேந்திய சிங்கம் வெட்டி வீழ்த்திய பின்பு அந்த சிங்கத்தின்   எஜமான்கள்  தற்போது  தாமரை மொட்டைக்  கையிலெடுத்து நெருப்பை சுவாசிக்கும்  டிராகனின் தலையிற்  சூடி   இலங்கை அரசியல் அரங்கில் சாகசம் புரிய முயற்சிக்கின்றார்கள்.


கார்த்திகைப் பூவை  வாளேந்தி  வெட்டி  வீழ்த்தியவர்கள்  இப்போது தாமரைப்  பூவேந்தி   அரசியற்  சாகசம் புரியப்  புறப்பட்டுள்ளார்கள்.


தாமரை  மொட்டை அன்னப்பறவையால் கொத்தி விழுங்க முடியுமென தமிழரசுக் கட்சி நம்புகிறது.


 அதேவேளை தாமரைப் மொட்டைப் புடைசூழ்ந்து பௌத்த  மகா சங்கமும், இராணுவமும் , நெருப்பை சுவாசிக்கும்  டிராகனும்    பலமாக நிலையெடுத்துள்ளன  என்பதும் கவனத்துக்குரியது.


தற்போதய   தேர்தல்  இடாப்பின்படி   ஒரு கோடியே 60 லட்சம் வாக்காளர்கள்  பதிவாகியுள்ளனர்.


 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்   81% இற்கு மேல் வாக்களிக்கப்பட்டதனால் அதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் சுமாராக 82 % வாக்காளர்கள் வாக்களிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  இத்தேர்தலில் சுமாராக  ஒரு கோடியே 31  லட்சம் வாக்காளர்கள்  வாக்களிக்கக் கூடும் என கணிக்கலாம்.


 அப்படியாயின் 65 இலட்சத்திற்கும்   66 லட்சத்துக்கும் இடைப்பட்ட  வாக்குகளைப் பெறக்கூடிய ஒரு வேட்பாளர்  ஜனாதிபதியாகத் தெரிவாக முடியும்.


2018 ஆம் ஆண்டு நாடு தழுவிய ரீதியில் நிகழ்ந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு   40.47 % வாக்குகள்  கிடைத்தன.


 அதேவேளை தற்போது தாமரை மொட்டுடன் தோழமை பூண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அப்போது 12.10%  வாக்குகள்  கிடைத்தன.


இதன்படி  தற்போது  52.57% வாக்குகளைப் பெறலாம்  என்பதற்கான முதலாவது ஏதுநிலை  உண்டு.


அதேவேளை இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் 10 திகதி நிகழ்ந்த  எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலின்  போது மொட்டு சின்னத்தின் கீழான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 57 %  வாக்குகள் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 12%  வாக்குகள் கிடைத்துள்ளன.


இதன்படி தனிச்சிங்கள   வாக்குகளில்  மொத்தம் 69% வீதமான வாக்குகளை மேற்படி இரு கட்சிகளாலும் இணைந்து   பெறமுடிந்துள்ளது.


 இதனை நாடுதழுவிய மொத்த வாக்குகளினோடு பொருத்திப் பார்க்கையில்  இது 52 % வீதத்திற்கு மேலான வாக்குகளை   காட்டுகிறது.


இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்கள மக்கள் சுமாராக 75%  ஆவார். எனவே அளிக்கப்படக்கூடிய மொத்த வாக்குகளில் 98 லட்சத்துக்கு மேல் சிங்கள மக்களின் வாக்குகள்   மட்டும்  அமைய முடியும்.


 இதன்படி சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் 52%   வாக்குகளை மேற்படி கணக்கின்படி  தாமரை  மொட்டால் நிலைநாட்ட முடிந்தால்  அவர்களால் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மட்டும் 68 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற முடியும்.


இதன்படி ஜனாதிபதியாகுவதற்கு தேவையான மொத்த வாக்குகளின் தொகையில்  சுமாராக இரண்டரை  லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர்களால் பெறமுடியும்  என்பதும் ஒரு கணிப்பு.


அளிக்கப்படக்கூடிய ஈழத் தமிழர்களின் மொத்த வாக்குகள் சுமாராக 14 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல்.


அவ்வாறே அளிக்கப்படக்கூடிய முஸ்லீம் மக்களின் மொத்த வாக்குகள்  சுமாராக 12 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் .


அதேபோல் அளிக்கப்படக்கூடிய மலையக மக்களின் மொத்த வாக்குகள் சுமாராக 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல்.


இங்கு முஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் தென்  இலங்கையிலும்  சுமார் 6 லட்சம் வரை  கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும்  உள்ளன.


தென் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிங்கள மக்கள் தொகையுடன் கலந்து பின்னிப்பிணைந்தும், அவர்களில் தங்கியும் வாழ்பவர்கள்.


அவர்களின் வர்த்தகமும், வியாபாரமும் பெரிதும் சிங்கள மக்கள் தொகையின் மீதே தங்கியுள்ளது.  இவ்வாண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களின்  பின்னணியில் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் வெடித்திருந்தன.


 இந்நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லிம் மக்களின்  வாக்குகள் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அளிக்கப்பட்டது போல் இம்முறை அமைவது கடினம்.


தமது சொந்த பாதுகாப்பை கருதி இருபெரும்  கட்சிகளில் ஒன்றை மட்டும் சாராது இரு கட்சிகளுக்கும் சரிக்கு சரி வாக்களிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் முஸ்லீம் மக்களுக்கு உண்டு.


எனவே தென்பகுதியில் வாழும் முஸ்லிம்களிடமிருந்து  சுமாராக  மூன்று லட்சம் வாக்குகளாவது கோட்டாபயவுக்கு கிடைக்க வாய்ப்புண்டு.


கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு உண்டு. ஆதலால் கிழக்கில் நிலை வேறு.  எப்படியோ கிழக்கிலும்  முஸ்லிம்கள் மத்தியில் இருந்து ராஜபக்சக்களுக்கு ஒரு குறைந்தபட்ச  வாக்குகளாவது நிச்சயம் கிடைக்கும்.


குத்துமதிப்பாக கூறுமிடத்து முஸ்லிம் மக்களின் 12 லட்சத்து  50 ஆயிரம் வாக்குகளில் இருந்து மூன்றில் ஒரு பங்கு வாக்குகளாவது  ராஜபக்சக்களுக்கு கிடைக்க முடியும் என்று கணித்தால் நான்கு லட்சம் வரையிலான வாக்குகளை ராஜபக்சக்கள் பெறமுடியும்.


தென்னிலங்கை தவிர்ந்த வடக்கு கிழக்கிலுள்ள ஈழத்தமிழர்களின் வாக்குகளில் ஒரு இலட்சத்திற்கும்,  ஒன்றரை லட்சத்திற்கும் இடையிலான வாக்குகளை ராஜபக்சக்கள் பெறக்கூடிய  ஏதுநிலை  உண்டு.


அதேவேளை மலையக  மக்கள் மத்தியில் இருந்தது  சுமாராக  1  லட்சம் வாக்குகளையாவது ராஜபக்சக்களால் பெறமுடியும் என்று கூறப்படுகிறது.


இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது  சுமாராக 74 லட்சத்திற்கும்  குறையாதளவு  வாக்குகளை (56.5%) ராஜபக்சக்களால் பெறமுடியும் என்ற அபாயகரமான புள்ளிவிவரம் கண்முன் தோன்றுகிறது.


பொதுவாக ஜே.வி.பி கட்சியானது  சிங்களமக்கள் மத்தியிலுள்ள ""கரவா""  சாதிச்  சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற கணிப்புண்டு.


 நாட்டின் மொத்த சனத்தொகையில் சிங்கள ""கரவா ""சமூகத்தின் மக்கள் தொகை   10%.   இதற்கிணங்க அளிக்கப் படக்கூடிய  ""கரவா"" சமூகத்தின்   மொத்த வாக்குகள்

13 இலட்சத்திற்கு மேல்.


 ஆனால் இதில் கத்தோலிக்க"" கரவா""சமூகத்தினரின் தொகை 5 லட்சம் வரை என்று கூறப்படுவதால் அவர்கள் அனேகமாக   ஐதேகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற கணிப்பு உண்டு.


இதன்படி மிச்சமுள்ள    பௌத்த சிங்கள  கரவா சமூகத்தின் எட்டு லட்சம் வாக்குகளில்  பெருமளவு  வாக்குகள் ஜேவிபியை சென்றடையும்  என்று கருதப்படுகிறது.


அத்துடன் கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில்  ஜேவிபி   சுமாராக 7 லட்சத்து 11 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது .


அதன்படி சிங்கள மக்கள் மத்தியில் உள்ள புதுமை விரும்பும் இளைஞர்கள் மத்தியில் சாதி கடந்து வாக்களிக்க கூடிய ஒரு லட்சத்துக்கு குறையாத இளைஞர்களின் வாக்குகள் ஜேவிபிக்கு  கிடைக்க வாய்ப்புண்டு   என்பதும் இங்கு  கவனத்துக்குரியது.


 எது எப்படியோ சுமாராக  ஏழரை லட்சத்திற்கு   குறையாத வாக்குகளைப்  பெறக்கூடியதற்கான  அடிப்படை வாக்கு வங்கி  ஜேவிபிக்கு  உண்டு.


இங்கு ஜேவிபியுடைய  இரண்டாவது விருப்பத் தேர்வு  வாக்குகள் அளிக்கப்படுமா இல்லையா என்ற வாதம் ஒருபுறமிருக்க., மக்கள் விரும்பினால் இரண்டாவது வாக்கை தாம்  விரும்பும் வேட்பாளருக்கு அளிக்கலாம் என்று  ஜேவிபி கூறுவதாக இன்னொரு செய்தியும்   வெளியாகியுள்ள நிலையில் இந்த இரண்டாவது வாக்கு  யாருக்கு  அளிக்கப்படும் என்பதிலேயே   இதன் தாக்கம் பற்றிய அளவு தங்கியுள்ளது.


அத்துடன் ராஜபக்சக்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள  சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால்  சுதந்திரக் கட்சியிலிருந்து எவ்வளவு வாக்கை பிரித்து  சஜித் பிரேமதாசவின்  வாக்குப் பெட்டிக்குள் சேர்க்க முடியும் என்பதும்   கணித்திடக்  கடினமான இன்னொரு பிரச்சினையாகும்.


மேலும் சஜித் பிரேமதாஸவிற்கு  தமிழரசுக்  கட்சி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளதை  ஆதாரமாகக் கொண்டு    தெற்கில்  தீவிர பௌத்த சிங்களப் பேரலையை  ராஜபக்சக்கள்  தட்டியெழுப்பத் தொடங்கியுள்ளனர் .


 இப்பின்னணியில்   சஜித் பிரேமதாசாவுக் கான தமிழரசு கட்சியின் ஆதரவு "வரமா,சாபமா" என்ற கேள்வி பெரிதாக உண்டு.


 எது எப்படியோ ஒட்டுமொத்த  பௌத்த சிங்கள  மகாவம்ச   மனோநிலையின் பின்னணியில்   பௌத்த  மகா சங்கம்,  இராணுவம்,  டிராகன்   என்பனவற்றால்  புடைசூழப்பட்ட   சூழலில்  தாமரை மொட்டுக்கு  அண்மைக்காலங்களில் கிடைத்திருக்கக்கூடிய தேர்தல் புள்ளிவிபரங்களும் இணைந்து  தாமரை மொட்டை தூக்கலாக வைத்துள்ளன என்பது மட்டும் தெரிகிறது.