Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, April 9, 2014

கண்ணில்லாத குயில்கள் பாடும் 'குக்கூ'


தமிழில் ராஜபார்வை தொடங்கி காசி வரை எப்போதாவது வரும் பார்வையற்றவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட படங்கள் தோல்வியையே தழுவும் என்கிற மூடநம்பிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. தனது குக்கூ படத்தின் மூலம் அதை பொய்யாக்குவேன் என்று கிளம்பிய எழுத்தாளர் ராஜூ முருகன் ஓரளவிற்கு வெற்றி கண்டிருக்கிறார் என்று சொல்லலாம். தமிழில் படங்கள் நல்ல தரமாக இருந்தால் அதைப் பாராட்டும் நல்ல மீடியாக்கள் இருப்பதும், ரசிகர்கள் தியேட்டரில் போய் காசு கொடுத்து ஓடவைக்காவிட்டாலும் நல்ல படங்களை நல்ல படங்கள் என்பதால் அவற்றுக்குத் தரும் மதிப்பும் தமிழ் சினிமாவை நல்ல சினிமாக்கள் நிரம்பியதாக ஆக்கிவருகிறது ஒரு நல்ல அறிகுறியே.
இயக்குனர் ராஜூமுருகன் தான் விகடனில் நிரூபராக எழுதிவந்த காலத்தில் சந்தித்த பார்வையற்றவர்களான தமிழ்-சுதந்திரக்கொடியின் காதலை பற்றி கூறுவதாக கதை ஆரம்பிக்கிறது. தமிழ் (அட்டகத்தி தினேஷ் ) மின்சார ரயில்களில் பொருட்கள் விற்றும் மற்றும் பாட்டுக்கச்சேரிகளில் இளையராஜாவின் குரலில் பாடியும் வருபவர். அவர் மற்றொரு பார்வையற்றவரான சுதந்திரக்கொடியை (மாளவிகா நாயர்) சந்திக்கிறார். கொடி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தானே முயற்சி எடுத்து ஆசிரியை படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். அண்ணன்-அண்ணி இருந்தும் சுயநலமிக்க அவர்களுடன் வசிக்காமல் தனியாக சிஸ்டர்ஸ் ஹாஸ்டலில் வசிக்கிறார்.
இவர்களிருவரும் சந்தித்து, அது மோதலாகி, பின் காதலாக மலர்ந்து, வளர்ந்து, உறவினர்களின் சூழ்ந்திருப்பவர்களின் சூழ்ச்சிகளால் எவ்வாறு கலைக்கப்பட்டது? பின் கடைசியில் கண்ணுள்ளவர்களின் உலகில், இரக்கமுள்ளவர்களின் கைதூக்கல்களில், கண்ணில்லாத கொடியும் தமிழும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் கதைச் சுருக்கம். சுருக்கமாகச் சொன்னால் ஒரு எளிமையான காதல் கதை.
இது பார்வையற்ற இருவரின் காதல் கதை என்பதால் தான் இந்தக் கதை கவனிப்பு பெறுகிறது. அதற்கேற்றபடி பார்வையற்றோரின் உலகை ஓரளவிற்கு காட்சிப்படுத்த முயல்கிறார் இயக்குனர். பிங்க் நிறம் எப்படியிருக்கும். மார்க் போட்டதால் கோபப்படும் கொடியின் மீதான காதலை இன்னதென்று வரிகளில் விளக்கும் தினேஷ், கொடியின் காலடித் தடத்தையும், வாசனையையும் தூரத்திலிருந்தே  தினேஷ் உணர்வதான புனைவு, 'நீ எப்படி இருக்கேன்னு பாத்துக்கறேன்'என்று தொடு உணர்வுகளில் நபர்களை உணரும் அவர்களின் உலகம், காதலை எதிர்பார்த்துச் செல்லும் கொடிக்கு கிடைக்கும் அயர்ன்-செய்யப்பட்ட-ட்ரெஸ்கள் இரக்கம், இசை - இளையராஜா, மின்சார ரயில்களில் பார்வையற்றோர், திருநங்கை, பிச்சைக்காரர்களின் வாழ்க்கை, பார்வையற்றோரின் குசும்புகள், பேசும் வார்த்தைகள் என்று அவர்களின் உலகினுள் நம்மை எட்டிப் பார்க்க வைக்கிறார்.
யதார்த்தமான காட்சியமைப்புகளும், நாடகத்தன்மையற்ற நடிப்பும், பளிச்சென்ற வசனங்களும், எளிமையான காதலும் படத்தைவிட்டு ரசிகர்கள் விலகாமல் பார்த்துக் கொள்கின்றன. அட்டகத்தி தினேஷூம், புதுமுக நாயகியான கேரளாவைச் சேர்ந்த மாளவிகாவும் நடிப்பில் பிரமாதப் படுத்திவிடுகின்றனர். தினேஷின் அந்த முழியும், வசனங்களைப் பேசும்போது பார்வையற்றவர்கள் போலவே பேசுபவரை நோக்கிப் பேசாமல் காதைச் சாய்த்தபடி பேசுவது என்று சின்ன விஷயங்களிலிருந்து விரல் நுனியில் உணர்வுகளைப் பரிமாறுவது வரை அருமையாகச் செய்திருக்கிறார்கள். இளையராஜா வெறியர், நாடகக் குழு உறுப்பினர்கள், தினேஷின் நண்பன், கொடியின் நண்பிகள், அண்ணன், உதவி செய்பவர்கள் என்று எல்லோரும் சரியாகவே நடித்திருக்கிறார்கள். இயக்குனருக்கும் இவர்களை நடிக்க வைத்ததில் பெரும்பங்குண்டு.
படம் யதார்த்த படங்களின் சாயலைக் கொண்டிருப்பது படத்தின் கதைக் களத்திற்கு அவசியமானதென்பதால் யதார்த்த ஒளியமைப்பு கொண்ட ஒளிப்பதிவு படத்திற்கு பலமாய் நிற்கிறது. ஒளிப்பதிவு ஷர்மா. இயக்குனரோடு இணைந்து அவருடைய உணர்வுகளை சரியாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார். அடுத்த பலம் சந்தோஷ் நாராயணின் இசை. பாடல்களும் அவற்றை படமாக்கிய விதமும் தமிழ்-கொடியின் காதலை ரசிகர்கள் மனத்தில் அச்சேற்ற உதவுகின்றன. பிண்ணணி இசையில் இசைஞானி ராஜாவுக்கும் சேர்த்து டைட்டில் கார்டு போடலாம் என்கிற அளவுக்கு படம் முழுக்க இளையராஜாவின் பாடல்கள் வியாபிக்கின்றன. தமிழ் இளையராஜாவின் குரலில் பாடுபவர் என்று வைத்திருப்பதும் பார்வையற்றோருக்கும் - இசைக்கும் - இளையராஜாவுக்குமிடையேயான உறவை பதியவைக்கும் நோக்கத்தில் கையாளப்பட்ட ஒரு உத்தியே. இந்த உத்தி படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.
படம் நன்றாக இருக்கிறது என்பதைத் தாண்டி ஒரு க்ளாசிக்காக மாறுவதற்கான வாய்ப்பை தவறவிட்டுவிட்டது என்பதை நாம் கூறித்தான் ஆகவேண்டும். பிற்பாதியில் சொல்லப்பட்ட கதை வலிந்து சொல்லப்பட்ட புனைவாக, வலுவில்லாததாகத் தென்படுகிறதேயன்றி அழுத்தமானதாக இல்லை(விக்ரம் நடித்த காசியில் கதையின் முடிவில் அப்படியொரு அழுத்தம் இருக்கும்). முற்பாதியில் கதையில் இருந்த தெளிவும் முதிர்ச்சியும் பிற்பாதியில் இல்லை. பார்வையற்றவர்களின் உலகின் காதல் உணர்வுகளுக்குள் தானும் பயணித்த இயக்குனர் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குள் ஊடுருவிப் பயணிக்காமல் போனதால் இது ஏற்பட்டிருக்கலாம். அது போல க்ளைமாக்ஸ், ஆன்ட்டி க்ளைமாக்ஸ் என்று திரும்பித் திரும்பி எங்கோ அலைய வேண்டிய தேவை சுவையானதொரு திரைக்கதை அமைந்திருந்தால் ஏற்பட்டிருக்காது. படம் முடிவு தெரிந்துவிட்ட பின் காதலர்கள் படும் துன்பத்தை மூன்றாம் பிறை ஸ்டைலில் சொல்ல முனைந்ததும் படத்துக்கு தொய்வையே தருகின்றன. படம் முடியும்போது அப்பாடா நல்லவேளை சொதப்பிவிடவில்லை என்று நாம் ஆறுதலடைகிறோம். ஆனாலும் ராஜூமுருகன் நி்ச்சயம் அடுத்த படத்தில் நம்மை நெகிழ்த்திவிடுவார் என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறார்.
மொத்தத்தில் இந்தக் கண்ணில்லாத குயில்களின் காதல் ராகம் எப்போதும் நெஞ்சுக்குள்ளேயே நிற்கும் தெய்வீக ராகமாக இல்லாமல், அமைதியான ஒரு காலை வேளையில் எழுந்தவுடன் கேட்கும் இனிமையான குயில்களின் ராகமாக ஆனதோடு மட்டுமே நின்றுவிட்டது. அதனாலென்ன ? குயில்களின் ராகமும் இனிமையானதுதானே !

Tuesday, August 27, 2013

தலைவா.. தலைவலியே வா!

இந்தா வர்றேன். அந்தா வர்றேன் என்று 15 நாட்களாய் இழுத்தடித்த தலைவா தியேட்டருக்கு ஒரு வழியாய் வந்தே விட்டது. இதே கேப்பில் இது தியேட்டரை விட்டு ஓடவும் கூடும் என்கிற சந்தேகம் வரத்தான் செய்கிறது. பாரிவேந்தர் கல்லூரி மாணவர்கள் இயக்கம் விடுத்த வெடிகுண்டு மிரட்டல்(? அதெப்படிங்க எந்த தீவிரவாதிகள் குண்டு வைக்கிறோம்னு சொன்னாலும் அவங்களையே போய் விரட்டிப் பிடிச்சுடுற காவல்துறைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவங்களை மட்டும் கண்டுபிடிக்கவே முடியலையாம்..). உடனே தியேட்டர் அதிபர்கள் கதிகலங்கி படத்தை போடமாட்டோம்னு மிரட்டல். உடனே அம்மாவிடம் விரட்டல். அம்மா கொடநாட்டில் அலட்டல். விஜய் அன் கோ உண்ணாவிரத அரட்டல்.  என்று பத்திரிக்கைகள் பூராவும் சந்தி சிரித்துப் போனது விஜய்யின் தலைவா பட விவகாரம். அது உங்களுக்கு நன்றாகத் தெரியுமென்பதால் விமர்சனத்துக்குப் போவோம்.

தலைவா விஜய் ப்ளாஷ்பேக்கில் சிறு குழந்தையாய் பம்பாய் தாராவி பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஓட்டப்பட்டவர். கமல் ப்ளாஷ்பேக் இல்லாமல் தூத்துக்குடியிலிருந்து பம்பாய்க்கு ஓடிவந்தவர். விஜய்யின் அப்பா சத்யராஜ் வெள்ளைச் சால்வையை போர்த்தியபடி தாராவி மக்களுக்கு நல்லதெல்லாம் செய்து தீய ரவுடிகளிடமிருந்து அம்மக்களைக் காப்பாற்றுகிறார். விஜய்யோ நாசரின் பாதுகாப்பில் வாட்டர் கேன் சப்ளை செய்யும் கம்பெனி நடத்தியபடி சைடில் நடனமாடிக் களிக்கிறார். அமலாபாலுடன் ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறும் சுரேஷ் ஹோட்டல் ஆரம்பிக்க அங்கே விஜய் வாட்டர் சப்ளை செய்யப் போக காதல் சப்ளையாகி விட அமலா பால் விஜய்யுடன் காதல் நடனமாட ஆரம்பிக்கிறார்.

இந்தியாவுக்கே வந்திராத விஜய் காதல் விஷயமாக அப்பாவை திடீரென்று பார்க்க கிளம்பி பம்பாய் வந்திறங்க அப்பா நாயகன் வேலுநாயக்கனின் பார்ட் 2வாக நிற்பதைப் பார்த்து ஆடிப்போகிறார். வேலுநாயக்கனுக்கு ஒரு செல்வா போல 'அண்ணா' (திராவிட இயக்கங்களின் தலைவர் பெயரை ஒரு ரவுடி தாதாவுக்கு வைக்க ரொம்பத்தான் தில் வேணுங்கோ டைரக்டர் விஜய் சார்)வுக்கு ஒரு ரங்கா நம் பொன்வண்ணன். அண்ணாவுக்கு ஒரு எதிரி. பழைய பகையின் மகன். அண்ணாவை அவன் போட்டுத் தள்ள. அவ்விடத்திற்கு தேவர் மகனாக வந்து விடுகிறார் விஜய். தாராவி மக்களெல்லாம் இனி அடுத்த பெரிய தேவர் இனி நீ தான் நம் தலைவா என்று உடனே கொண்டாடி விடுகிறார்கள். 'அந்தி மழை மேகம்' டைப் பாட்டு.. டான்ஸ்..நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவுமே தப்பில்லை டயலாக் மாதிரி.. 'கத்தியெடுத்தா அது உன்னை காக்கும் மற்றும் கொல்லும் ஆனா கீழ போடமுடியாது' என்று டயலாக்  கூட உண்டு. அப்புறம் தளபதி விஜய் தலைவா விஜய்யாக மாறி ஸ்டைலாக நாலு பேர் பின்புறம் கூட நடக்க நடந்து வந்து வில்லனை எப்படிச் சாய்க்கிறார் என்பது மீதிக் கழுதை.. சாரி கதை.
 
இயக்குனர் விஜய் பல படங்களைக் காப்பியடிப்பதில் வித்தகர் என்பது அவரது மதராஸப் பட்டினம், தெய்வத் திருமகள் போன்ற படங்களிலிருந்து குவார்ட்டரடித்தால் ஏறும் மப்புபோல தெளிவானது. அதே வித்தையை இங்கேயும் செய்திருக்கிறார் அவர். ஆனால் 50 கோடி செலவு செய்து நாயகனையும், தேவர் மகனையும் சேர்த்து சாண்ட்விச் செய்து காட்டினால் யாருக்குங்கோ பிடிக்கும்னு அவர் கொஞ்சமாச்சும் யோசிச்சிருக்கலாம். ஒரு வேளை அந்தப் படமெல்லாம் வந்து ரொம்ப வருஷமாச்சேன்னு நெனச்சிட்டாரோ என்னமோ. போகட்டும் அப்படியே செய்திருந்தாலும் அதை இப்படி ஓவராக பில்டப் கொடுத்து 'தலைவா' என்று பெயர் வைத்திருக்கலாமா? போக்கிரி - பார்ட் 2 என்று பெயர் வைத்திருந்தால் கூட  விஜய்யின் வாங்கன்னா வணக்கம்னா பாட்டு, முற்பாதியில் ஒரு ஆட்டம், ஒரு டூயட், நாலு பைட் சீக்வன்ஸ் என்று படம் ஏதோ ஒரு வழக்கமான விஜய் பட வரம்புக்குள் நின்றிருக்கும்.

படத்தின் டயலாக்குகளும், காட்சிகளும் அபத்தமோ அபத்தம். பத்துப் பேரை வெட்டிச் சாய்க்கும் ஒரு நாளில் விஜய் தலைவாவாகிறார். தலைவனாக வேண்டுமென்றால் பத்துப் பேரை வெட்டிச் சாய் என்று அர்த்தம் போலும்? அவர் சட்டத்தை மதிப்பதில்லை, அறவழியில் போராடுவதில்லை. பழிக்குப் பழி தீர்க்கிறார். கட்சி ஆரம்பிக்கவில்லை. கொள்கைகள் என்று எதுவுமில்லை. சமூகத்தை என்ன செய்து திருத்துவது என்று ஒரு இழவு கூட யோசித்ததில்லை. இப்போதிருக்கும் நாட்டுப் பிரச்சனைகள் எதைப் பற்றியும் மறந்து கூட கருத்துச் சொல்வதில்லை. ஆனால் 'தலைவா'வாக ஆகவேண்டும் என்று ஆசை மட்டும் இருக்கிறது விஜய்க்கு.

சந்தானம் பாவம் என்ன செய்வார். அவர் கடமையை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் சிரிப்புத் தான் வரவில்லை தலைவா. ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என்று எதுவுமே எடுபட மறுக்கிறது. இசை ஜீ.வி.பிரகாஷ்குமார். இரண்டு பாட்டுக்களை தேற்றுகிறார். தளபதி தளபதி என்கிற பாடல் படத்தின் அபத்தத்தின் உச்சகட்ட வெளிப்பாடு.

விஜய்யை வளர்த்துவிட்டவர் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்பார்கள். விஜய்யின் எதிர்காலத்தை இருட்டாக்கப் போகிறவரும் அவராகவே இருக்கலாம். தேவையில்லாமல் கட்சி, காங்கிரஸ், திமுக என்று சுற்றி, ரசிகர்களை ஆதரவாளர்கள் என கற்பனை செய்யவைத்து, 'நாங்க சப்போர்ட் பண்ணி தான் போன தடவை எலெக்ஷன்ல இந்தம்மா ஜெயிச்சாங்கன்னு' ஏடாகூடமா உளறி என்று ஏகத்துக்கு பண்ணியிருக்கிறார். ஜாக்கிரதைங்கண்ணா. 
Actor Vijay Politics Jayalalitha Admk
தலைவலியே வா என்று வருந்தி அழைத்துக் கொண்டதுதான் தலைவா என இப்போது நன்கு புரிந்திருக்கும் விஜய்க்கு. தலைவாவா தலைவியா என்கிற இந்தப் போட்டியில் தலைவி அம்மா இப்படி ஒரு சுமாரான படத்தையே போட்டு இப்படி வறுத்தெடுத்து தன்னுடைய பவரை காட்டிக் கொள்ளவேண்டிய அளவுக்கு சிறுபிள்ளைத் தனமாகத் தான் இருக்கிறார் என்பது அவரால் ஆளப்படும் மக்களாகிய நாம் வருத்துத்துடன் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம்.

சராசரி விஜய் ரசிகர்களாய்ச் செல்பவர்களுக்கும், இந்த தலைவா பாலிடிக்ஸ் எதுவும் தெரியாமலே அப்பாவியாய்ப் படம் பார்க்கச் செல்லும் குடும்பஸ்தர்களுக்கும், குடும்பஸ்த்ரீக்களுக்கும் இந்தப் படம் வழக்கமான ஒரு விஜய்யின் மாசாலாப் படம் தான். ஆனால் மற்ற யாருக்கும் தலைவாவைப் பிடிக்கக் காரணம் பெரிதாய் எதுவுமில்லை. எனவே தலைவாவின் கெத்து எடுபடுமா ?  சந்தேகம் தான்.

Saturday, May 11, 2013

விமர்சனம் : அயர்ன் மேன் 3. அமெரிக்காவின் இரும்பு மனிதன்.


சமீபத்தில் உலகெங்கும் வெளியிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது மார்வல் ஸ்டூடியோஸின் அயர்ன் மேன் 3. சூப்பர் ஹீரோ அயர்ன் மேனாக ராபர்ட் டௌனி ஜூனியர் (Robert Downey Jr) கலக்கியிருக்கும் 3ஆவது படம் இது. அயர்ன் மேன் என்பது மார்வல் காமிக்ஸ் புத்தகத்தின் ஒரு கற்பனை சூப்பர் ஹீரோ கதாபாத்திரம். கதைப்படி ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸ் என்கிற அமெரிக்க ஆயுதம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் முதலாளி மற்றும் ஆராய்ச்சியாளர் டோனி ஸ்டார்க்.

அயர்ன் மேனின் முதலாவது மற்றும் இரண்டாவது பாகங்களில் ஸ்டார்க் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அங்கிருக்கும் அமெரிக்கப் படைகளில் தனது நண்பரான கமாண்டெர் ஒருவருக்கு ஜைக்கோ ஏவுகணைகளைப் பற்றி விளக்கம் தரச் சென்றிருக்கும் போது ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அவர்களின் பிடியில் அவர்களுக்கு ஏவுகணை செய்து தரும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறான். ஆனால் அவன் ரகசியமாக ஒரு தப்பிக்கும் இரும்புக் கவசத்தை செய்ய முற்படுகிறான் ஸ்டார்க். அதுதான் அயர்ன் மேன். அதீத சக்திகளடங்கிய அந்தக் கவசத்தை அணிந்து விண்ணில் பறந்து பல சாகசங்கள் புரிந்து எதிரிகளை வீழ்த்துவான் ஸ்டார்க். யார் இந்த அயர்ன் மேன் என்று உலகமே வியக்கும் போது அது தானே என்று வெளிப்படுத்துவான் ஸ்டார்க்.

இந்த மூன்றாவது பாகத்தில் அமெரிக்காவினுள் புதியதொரு வெப்ப உயிரியல் ஆயுதம் கொண்டு வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடுக்கும் மண்டாரின் எனப்படும் இஸ்லாமியத் தீவிரவாதியின் தொல்லைக்கு பதிலடி கொடுக்க விளைகிறான் ஸ்டார்க். ஆனால் அவனுடைய மொத்த ஆராய்ச்சிக் கூடத்தையும் அவனது அயர்ன் மேனையும் அழிக்கும் எதிரிகள் அவனையும் துரத்துகின்றனர்.  ஜனாதிபதியையே கடத்திவிடுகின்றனர். கடைசியில் அவனுக்கும் இன்னொரு உயிரியல் தொழில்நுட்ப கம்பெனியின் முதலாளிக்குமிடையே நடக்கும் போட்டியில் ஸ்டார் புதிய எதிரிகளை அயர்ன் மேனின் துணை கொண்டு வீழ்த்தினானா என்பது தான் கதை.

படம் முழுவதும் நகைச்சுவை இழையோடுகிறது. ராபர்ட் டௌனி ஜூனியர் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். அவரது காதலியாக வருகிறார் ஜின்னத் பால்ட்ரோ(Gwyneth Paltrow). காமெடி வில்லனாக பென் கிங்ஸ்லீயும், சீரியஸ் வில்லனாக கய் பியர்ஸூம் நடித்துள்ளனர். திரைக்கதை மூவருடன் சேர்ந்து எழுதி இயக்கியிருக்கிறார் ஷேன் ப்ளாக்(Shane Black).. படம் முழுவதும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

தியேட்டரில் இதைப் பார்த்தபோது அயர்ன் மேன் உடையின் பாகங்கள் பறந்து வந்து ஸ்டார்க்கின் உடலில் ஒட்டிக்கொள்ளும் காட்சிகளில் ஆடியன்ஸின் கைதட்டல் காதைப் பிளக்கிறது. ஸ்பெஷல் எபக்ட்கள் படத்தின் மிகப் பெரும் பலம். அயர்ன் மேன் நிஜமாகவே இருப்பதைப் போலவே நம்மை நம்பவைத்து விடுகிறார்கள். ஸ்பைடர் மேன் போலல்லாது மக்களுடன் சர்வ சாதாரணமாக நெருங்கிப் பழகுகிறான். ஆட்டோகிராப் போடுகிறான் இந்த அயர்ன் மேன். நடுவில் அயர்ன் மேனா ? அதற்குள்ளிருக்கும் ஸ்டார்க்கா ? யார் முக்கியம் என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அயர்ன் மேனாய் இல்லாமல் போக நேரிடும் நாட்களில் அதன் விடையை கண்டடைகிறான் ஸ்டார்க். ஸ்டார்க்குக்கு உதவி செய்யும் சிறுவனுக்கும் அவனுக்குமான உரையாடல்கள் சுவராசியமானவை. மொத்தத்தில் இந்த 3-டி அயர்ன் மேன் 3 நிச்சயமான வெற்றிப் படம். கண்டிப்பாகப் பாருங்கள்.

இனி சாதாரண ஒரு ஆக்ஷன் படமாகக் களமிறங்கியிருக்கும் அயர்ன் மேனின் உள்ளே பொதித்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் விதைகளைப் பார்க்கலாம்.

அயர்ன் மேனின் கதாநாயகன் வைத்திருக்கும் தனியார் நிறுவனம், அமெரிக்காவுக்கு ஆயுதம் செய்து தரும் நிறுவனம். எனவே அதன் முதலாளியான ஸ்டார்க்; நல்லவர், வல்லவர், நாட்டின் மேல் பற்று கொண்டவர் மற்றும் அறிவாளி. ஒரு நாட்டின் ஆயுதங்கள் தேசிய பாதுகாப்பு ரகசியமானவை. அந்நாட்டின் தன்மானத்தை எதிரி நாட்டுக்கு உணர்த்த பயன்படுபவை. அதைத் தயாரிப்பது ஒரு தனியார் நிறுவனம்(?). தனியார் நிறுவனம் நாட்டின் ரகசியத்தைப் பாதுகாக்கிறது. எப்புடீ?

இது ஏற்கனவே அமெரிக்கா நடைமுறைப் படுத்தியிருக்கும் விஷயம். அமெரிக்காவின் ஆயுதத் தயாரிப்புக்களில் பெரும்பாலானவை லாக்ஹீட் மார்ட்டின் போன்ற தனியார் கம்பெனிகளின் வசமே விடப்படுகின்றன. அதாவது தனியார் கம்பெனி சொல்லும் விலையில் மக்கள் வரிப்பணத்தில் ஆயுதங்கள் அரசால் கொள்முதல் செய்யப்படும். அது நாட்டின் பாதுகாப்புச் செலவில் சேர்க்கப்படும். பல பில்லியன் டாலர்கள் வருமானம் ஆயுதக் கம்பெனிக்கு; செலவுக் கணக்கோ நாட்டுக்கு. அமெரிக்காவில் மட்டுமல்ல நம்ம இந்தியாவிலும் இந்த தனியார் ராணுவ பிஸ்னெஸ் கொடிகட்டிப் பறக்கிறது.

ஈராக்கின் மீது என்ன எளவுக்கென்று தெரியாமலேயே தொடுக்கப்பட்ட போரில் அமெரிக்காவின் படைகள் உபயோகப்படுத்திய ஆயுதங்கள், போட்ட குண்டுகள், எறிந்த ஏவுகணைகளின் வழிச் செலவுக் கணக்கு 100 பில்லியன் டாலர்கள். அது அமெரிக்க மக்களின் வரிப் பணம்(பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா என்கிற கூட்டாளிகள் வேறு). ஆயுதங்கள் தயார் செய்தது ஜனாதிபதி மற்றும் பெரும் முதலாளிகளின் சார்பான தனியார் ஆயுதக் கம்பெனிகள். ஆயுதங்களை விற்ற வகையில் அவர்களுக்கு சுமார் 100 பில்லியன் டாலர்கள் லாபம். ஈராக்கில் 3 லட்சம் குடும்பங்கள் நாசமாய்ப் போக அங்கிருந்த எண்ணெய் வயல்களை அமெரிக்க தனியார் எண்ணெய் கம்பெனிகள் வளைத்துப் போட்டதில் இன்னும் பல நூறு பில்லியன் டாலர்கள் அவர்களுக்கு லாபம்.

இப்படி லாபங்களை தனியார் கம்பெனிகள் அடித்துக் கொள்ளவும் நஷ்டங்களையும், குண்டுகளையும் மக்கள் தலையில் போடவும் செய்யப்படும் ஏற்பாடு தான் இந்தத் தனியார் ஆயுதக் கம்பெனிகள். இதை நியாயப்படுத்தவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறார் நம் டோனி ஸ்டார்க்.  இவர் ஆயுதம் தயாரிப்பதோ அமெரிக்காவில் அதைப் போய் போடுவதோ ஆப்கானிஸ்தானில். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்னய்யா முடிச்சென்று தியேட்டரில் கைதட்டிய யாருக்கும் உறைக்கவேயில்லை.

இதில் காமெடி வில்லனாக காட்டப்படும் பென்கிங்ஸ்லியின் தோற்றமும், அமைப்பும் நடவடிக்கைகளும் அப்படியே ஓசாமா பின்லேடனை ஞாபகப்படுத்துகின்றன. இது மறைமுகமாக அமெரிக்காவின் தயாரிப்புதான் ஒசாமா பின்லேடன் என்று ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம். படம் அதை நகைச்சுவையாகச் செய்கிறது. அதாவது ஒசாமா சீரியஸ் அல்ல. காமெடி பீஸ்.

இதில் அமெரிக்காவின் கனவு ராணுவ வீரன் கதையும் இருக்கிறது. அமெரிக்கா இப்படி வேற்று நாடுகளில் போய் அடாவடித்தனம் பண்ண வேண்டுமென்றால் அதற்கு அமெரிக்காவில் வாழும் ஒரு சாதாரண மனிதனை எப்படி போர்வீரனாக அனுப்புவது? அவனுக்குள் எழும் கேள்விகள்?  குழப்பங்கள். நாட்டுக்காக போர்புரிந்தால் சரி. ஏதோ ஒரு நாட்டில் நின்று யாரையோ எதிரியாக்கி, யாரையோ பாதுகாப்பது ஏன் என்கிற கேள்விகள் அவர்களில் பலருக்கு எழுகிறது. “தாய்நாட்டைக் காக்க எழு ! !” என்கிற கனல் கக்கும் வசனங்கள் எடுபடுவதில்லை. ஈராக்கில் போர்புரிய போர்முடிந்து இத்தனை வருடங்களாகவும் இன்னும் உள்ளே சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவத்தினரில் பலர் மனநிலை பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது அமெரிக்க ராணுவம். இவர்களில் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அமெரிக்க ராணுவத்தில் 2012ல் மட்டும் 348 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஈராக் சென்று திரும்பும் போர்வீரர்கள் பலருக்கு பிடிஎஸ்டி(PTSD) எனப்படும் அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்த நோய் ஏற்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வு தான் அயர்ன் மேன். அயர்ன் மேன் ஒரு வெறும் இரும்புக் கவசம் அவன் அமெரிக்காவில் இருந்து வீடியோ கேம் மாதிரி ஒரு வீரனால் கண்ட்ரோல் செய்யப்படுவான். அவன் தீவிரவாதிகளை தேடிப் போவான். மெஷின் கன்னால் எதிரிகளைத் துளைப்பான். ஏவுகணைகளை கையாலேயே ஏவுவான். பயங்கரவாதிகளைப் பந்தாடுவான். அபலைகளை காப்பான். (என்ன ஒரு சிறு பிரச்சனை என்றால் அவனால் ஜாலியாக ‘ரேப்’ செய்யமுடியாது). அயர்ன் மேன் செய்யும் சாகசங்கள் நாளைய அமெரிக்காவின் தொழில்நுட்பம் நிரம்பிய சர்வதேசப் போர்வீரன் பற்றிய கனவுகளேயன்றி வேறில்லை. நம்மைப் போன்ற மூன்றாம் உலகநாட்டு அப்பாவி ரசிகர்களோ அதைப் பார்த்து கை தட்டுபவர்களேயன்றி வேறில்லை.

அமெரிக்காவின் பொழுதுபோக்கைக் கூட நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியிருப்பதை இப்படம் உறுதி செய்கிறது. மற்றபடி இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் படம் பார்க்க விரும்பினால் சத்யம் தியேட்டரில் சென்று பாருங்கள். ஏ.சி. நன்கு குளுகுளுவென இருக்கும். 40 ரூபாய்க்கு ஆறிப்போன பாப்கார்ன் இத்தினியூண்டு கிடைக்கும். என்ஜாய் பண்ணலாம்.

Friday, March 15, 2013

அமெரிக்காவை அடிவருட கமல் எடுத்திருக்கும் 'விஸ்வரூபம்'



டைட்டில்ஸ்:
விஸ்வரூபம் படம் பல சர்ச்சைகளுக்குப் பின் கடந்த பிப்.7 அன்று தமிழ்நாட்டிலும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கமல் இருந்த வீட்டை விட்டுவிட்டு நடுத்தெருவிற்கு வரப்போகிறேன் என்று ரீல் விட்டது போய் அவர் இருக்கும் ஏரியாவையே வாங்கும் அளவுக்கு அவருக்கு துட்டு சம்பாதித்துத் தந்துவிட்டிருக்கிறது இந்தப் படம். இவ்வளவு பெரும் பணத்தை நோக்கிய பாய்ச்சலில் உண்மையில் அவர் ‘கலைஞனாக’ மட்டுமே இந்தப் படத்தில் தெரிகிறாரா? இது ஹாலிவுட் படங்களை தூக்கிச் சாப்பிடும் மேக்கிங் கொண்ட படமா ?  இப்படம்

பேசும் அரசியல் என்ன ? இது முஸ்லீம்களுக்கு எதிரான படமா? இல்லையா? நம் தமிழ் இனமே 2009ல் லட்சக்கணக்கில்  அழிக்கப்பட்டபோதும், மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் ‘கம்’முனு கமுக்கமாக இருந்த கமல் எங்கோ இருக்கும், ஆப்கானிஸ்தான் பிரச்சனையை கையில் தேடி எடுத்தது ஏன் ? திரையில் அவர் காட்டும் நாத்திகவாதம் போன்ற முகமூடிகள் எதுவரை ? என்பது போன்ற கேள்விகளுக்கு விரிவாக பதில் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

விஸ்வரூபம் – உருவான கதை..
சில வருடங்களுக்கு முன்பு...
கமலின் மன்மதன் அம்பு படம் தோல்வியடைந்த நிலையில் அடுத்ததாக அவர் பெரிய பட்ஜெட்டில் தமிழ்க் ‘கலைச் சேவை’ செய்ய எந்தத் தயாரிப்பாளரும் குனிய வராத நிலை. செல்வராகவன் முதல் மனைவியான சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்பு கீதாஞ்சலி என்கிற பணக்காரப் பெண்ணை காதலித்துக் கொண்டிருந்த நேரம், செல்வராகவனின் முந்தைய ஆயிரத்தில் ஒருவன் தோல்வியடைந்த நிலையில் கீதாஞ்சலியின் உறவினர்களான பி.வி.பி என்கிற பெரும் கோடீசுவரத் தயாரிப்பாளர்கள், கீதாஞ்சலியின் தயவில் செல்வராகவனின். அடுத்த படமான ‘இரண்டாம் உலகத்தில்’ கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க செல்வராகவன் இயக்க என்று பிரமாண்டமாக தயாரிக்க ஒப்புக் கொண்டார்கள். ஆரம்பத்தில் இதற்கு பெரிய தொகைகள் அட்வான்ஸாக வழங்கப்பட்டு ஸ்டோரி டிஸ்கஷன்கள் நடைபெற்றபோது கமலின் சிறுமூளை எக்ஸ்ட்ராவாக வேலை செய்ய, அவருக்கும் செல்வராகவனுக்குமிடைய மனஸ்தாபங்கள் படம் ஆரம்பிக்கும் முன்பே முளை விட, ஒரு கட்டத்தில் கமல் எதிர்பார்த்தபடி செல்வராகவன் கோபித்துக் கொண்டு போய்விட்டார். கமலை அணுகிய பி.வி.பி காரர்களைப் பார்த்து “கவலையே படாதீர்கள் அவர் போய்விட்டால் என்ன ? என் கால்ஷீட் உங்களுக்குத் தான். நானே ஒரு கதை வைத்திருக்கிறேன். அதை வைத்து விஸ்வரூபம் எடுப்போம்..” என்று சொல்ல அவர்கள் தமிழ்த் திரையின் ஜாம்பவானே சொல்லும்போது ‘சரி’ என்று ஒத்துக்கொண்டார்கள். செல்வராகவனுக்கு கீதாஞ்சலி மீண்டும் ரெகமண்ட் செய்து அதே தயாரிப்பாளர்களுக்கு இரண்டாம் உலகத்தை கமல் இல்லாமல் இயக்கிக் கொடுக்க சம்மதிக்க அதன் வேலைகளும் ஆரம்பித்து விட்டன.

விஸ்வரூபம் படத்தை கமல் எடுக்க எடுக்க சுமார் 50 கோடிகள் ஆனபின்பு பி.வி.பி “படம் எப்ப சார் முடியும்?” என்று கேட்க, கமலோ சர்வசாதாரணமாக “இப்பத்தான் இண்டர்வெல்லே முடிஞ்சிருக்கு” என்று சொல்ல கமலின் இந்தப் புது அவதாரத்தைப் பார்த்த அவர்களும் கடுப்பாகி பஞ்சாயத்துக்குப் போய்விட்டார்கள். உண்மையில் கமல் ஒரு படத்து பட்ஜெட்டிலேயே இரண்டாவது பாகத்தையும் சேர்த்து எடுத்து விட்டார் என்கிறார்கள். பிவிபிகாரர்களுக்கு செட்டில் செய்ய எடுக்கப்பட்ட படத்தை போட்டுக்காட்டி வேறு சில தயாரிப்பாளர்களை குனியவைத்து பணம் ரெடிசெய்து பிவிபியையும் கழட்டி விட்டுவிட்டு ராஜ்கமலின் ஏகபோக தயாரிப்பாக உருமாறி விஸ்வரூபம் வெளிவந்திருக்கிறது. ஒரு மாதத்தில் ஆன கலெக்ஷன் 200 கோடியாம். படம் எடுக்க ஆன செலவு 40 கோடி போக கமலுக்கு கிடைக்கும் லாபம் மட்டுமே 160 கோடி.. இதில் ரசிகமகா ஜனங்களே நீங்கள் கவனிக்க வேண்டியது கமல் எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பதல்ல. மாறாக இப்படம் ஒரு கலைச் சேவை என்று காட்டப்படும் பிம்பம் எவ்வளவு தவறானது என்பதே.

விஸ்வரூபம் – கதை..
விஸ்வா என்கிற பெண்மை நிரம்பிய நடனக் கலைஞனாக நியூயார்க்கில் நடனம் கற்றுத் தரும் ஆசிரியர் கமல். தன்னை விட வயதான கமலை அமெரிக்கா வருவதற்காகவே திருமணம் செய்துகொண்ட நிருபமா அமெரிக்கா வந்த பின் தன்னுடன் ஆபிசில் வேலை செய்யும் பாஸூடன் கள்ளக் காதலாகி, அதன் ஈர்ப்பில் கமலிடமிருந்து விவாகரத்து வாங்க ஏதாவது காரணம் கண்டுபிடிப்பதற்காக அவருடைய நடவடிக்கைகளை கவனிக்க ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடுகிறார். அப்போது தான் தெரிகிறது அவர் அல்கொய்தாவால் தேடப்படும் இந்திய சீக்ரட் ஏஜண்ட் என்று.

அந்த நேரத்தில் தோன்றும் ப்ளாஷ்பேக்கில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து தப்பிய காஷ்மீரியாகச் வேஷமிட்டுச் செல்லும் (காஷ்மீரி தெரியாத) கமல்ஹாசனை “ஓமர்” என்கிற (தமிழ் நன்றாகப் பேசும்) அல்கொய்தா தளபதி சந்திக்கிறான். அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி தரும் நம் கமல் அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடனையும் பார்க்கிறார். அல்கொய்தாவால் கடத்தப்பட்ட வெள்ளை இன தூதரக உறுப்பினர்களை ஒரு கிராமத்தில் ஆப்கானிஸ்தான் மக்களிடையே அங்கே பதுக்கி வைக்க கமல் கொடுக்கும் ரகசிய சிக்னல் மூலம் உறுப்பினர்களை மீட்க வரும் நேட்டோ படையால் அந்தக் கிராமமே சின்னாபின்னமாக, கடைசியில் உண்மையில் கமல் யார் என்று பார்ப்பவர்களுக்குத் தெரியவருகிறது. அவர் இந்திய உளவுத்துறை ‘ரா’ வின் ஸ்பெஷல் அதிகாரி. காஷ்மீரியாக வேடமிட்டு ஒசாமையே நெருங்கிவிட்ட சூராதி சூரர்; பிற்பாடு அமெரிக்காவில் மீண்டும் தொடரும் அல்கொய்தா கதையில் தங்களின் எதிரியான அமெரிக்காவை டர்ட்டி பாம்ப் எனப்படும் சீசியம் அணுகுண்டினால் நியூயார்க் நகரையே அழித்துவிட நினைக்கும் அதே தீவிரவாதிகளின் செயலை கமல் எப்படி திறமையாக முறியடித்து ‘ஜெய்ஹிந்த்’(ஜெய்அமெரிக்கா?) என்கிறார் என்பது மீதிக் கதை. ஹாலிவுட்டில் வருடத்துக்கு ஒரு படமாவது ‘நியூயார்க்-குறிவைக்கும் எதிரி-ஹீரோ-நகரையே-காப்பாற்றுவது’ என்கிற இந்த கதையமைப்போடு வருவது சகஜம் தான். ஆனால் இந்தியாவிலிருந்து கொண்டு அமெரிக்காவுக்கு சலாம் போடும் நம் கமலின் ‘கலைத் தாகம்’ தான் காணச் சகிக்கவில்லை. கமலின் ‘வெற்றி விழா’ படம் பார்த்திருக்கிறீர்களா... அது விஸ்வரூபத்தின் ஆதிகாலத்திய 0.01வது வெர்ஷன் என்று சொல்லலாம்.

விஸ்வரூபம் – ஒரு கலைப்படைப்பாக..
விஸ்வரூபத்தை கமலே இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மட்டுமே அவரது முந்தைய படங்கள் போல வேறு ஒரு இயக்குனரின் பெயரை டம்மியாகப் போட்டுவிட்டு இவரே ஸ்டார்ட் கட் சொல்லி பின் அந்த டைரக்டர் கடுப்பாகி கிளம்பிவிட பிறகு தவிர்க்க இயலாமல் இவர் ‘இயக்குனர்’ என்று பெயர் போடும் அசம்பாவிதம் (உ.ம். சாஷி 2000, விருமாண்டி, ஹேராம்) நடைபெறவில்லை. நேரடியாகவே தானே டைரக்டர் என்று போட்டுக்கொண்டார். அடுத்த ஹாலிவுட் படம் அவருக்குத் தானே கிடைக்கவேண்டியிருக்கிறது.

திரைக்கதையமைப்பில் பெரிய சுவாரசியம் கமல் பெண் தன்மையுள்ள அப்பாவி டேன்ஸர் அல்ல மாறாக பத்துப் பேரை ஒரே நேரத்தில் கொன்றுவிட முடிந்த உளவுத்துறை ஹீரோ என்று காட்டப்படுவது வரை இருக்கிறது. அதற்குப் பின் அவர் காஷ்மீரி என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஆப்கானிஸ்தானில் போய் நிற்பது ஜேம்ஸ்பாண்ட் சம்பந்தமேயில்லாத ஏதோவொரு மூன்றாவது உலக நாட்டில் வில்லனை துப்பறியச் செல்வது போல நமது உணர்வுக்கும் வாழ்வுக்கும் சம்பந்தமில்லாத ஏதோ துப்பறியும் பட விவகாரமாகவே இந்திய, தமிழ் பார்வையாளருக்குத் தோன்றும். ஆகவே படம் துவங்கி அரைமணி நேரத்திற்குப் பின் பார்வையாளர்கள் ஆயாசமடைந்து விடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் பார்வையாளர்கள் படத்தில் தொடரமுடிகிற பரிச்சயமான ஒரே நபர் கமல்ஹாசன் மட்டுமே. மற்ற எல்லோரும் வில்லன்களாகவும், அல்லது அவனுடன் தொடர்புள்ள யாரோவாகவுமே புரிந்துகொள்ளப்படுவார்கள். அதிலும் கமல்ஹாசன் அங்கு போய் செய்யும் துப்பறியும் ‘குருதிப்புனல்’ வகை துரோக வேலைகள் வீரசாகசமாகவோ அல்லது கொடும் நம்பிக்கைத் துரோகமாகவோ மனதில் பதிவதில்லை. கதை நகர்த்தல் தெளிவாக இல்லாமல், கமல் நல்லவரா கெட்டவரா என்று நம்மை முடிவுக்கு வரவிடாமல் குழப்புவது போலவே குழப்பமாக இருக்கிறது. இதில் இரண்டாம் பாகம் ஒன்று வேண்டுமென அவர் முன்பே முடிவு செய்துவிட்டதால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் இந்தக் கதை பாதியிலேயே அம்போவென விடப்பட்டு மீண்டும் அமெரிக்காவிற்கு கதை போகிறது. ஆப்கானிஸ்தானில் ஒமராகவும் அவரது துணையாளாகவும் வருபவர்களே பின்பு அமெரிக்காவிலும் அவரைத் துரத்துகிறார்கள். அவர்களே இவர்கள் என்று எளிதில் தெரியாதபடி இருக்க ராகுல் போஸின் குரலை மாற்றியது, ஜெய்தீப்பின் முடிவெட்டு, தாடியை எடுத்தது என்று மெனக்கெட்டிருக்கிறார் கமல். ஒரே நேரத்தில் பத்து மேக்கப் போட்டு மெனக்கெட்டவராயிற்றே!

இதில் சீசியம் அணு எண், அணு எடை, கதிரியக்கம், பாரடே ஷீல்ட், டர்ட்டி பாம்ப் என்று டெக்னிக்கல் விஷயங்களிலும் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் இதற்கே எப்.பி.ஐ காரன் வாயைப் பிளப்பது போல் காட்டியதுதான் காமெடி. அதிலும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் சிலவற்றில் ஜேம்ஸ்பாண்டிடம் யாராவது ஒரு இளம்பெண் அவரது அழகிலும், சாகசத்திலும் மதிமயங்கி “யார் நீங்கள்” என்று வியந்து கேட்க, அவர் பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் என்று ஸ்டைலாகக் கூறுவது போலவே கமலையும் இந்தப் படத்தில் ஒரு எப்.பி.ஐ. ஆபீசர் ஆச்சரியப்பட்டு கேட்கிறார். இன்னொரு எப்.பி.ஐ. ஆபிசர் ‘உங்க கடவுளுக்கு நாலு கை இருந்தால் அவரை எப்படி சிலுவையில் அறைவீர்கள்’ என்று சம்பந்தமேயில்லாமல் கேள்வி கேட்கிறார். எப்.பி.ஐ மேல் என்ன கடுப்போ கமலுக்கு தெரியவில்லை.

படத்தின் ஆரம்பத்திலேயே வரும் ஷாட்டில் ஒரு மாடியிலிருந்து புறாவை கமல் கீழே பறக்க விட அது கீழ்நோக்கிய ஷாட்டில் அமெரிக்க கொடியைத் தாண்டி பறந்து விழ. அடுத்த ஷாட்டில் அதே புறா வால்ஸ்ட்ரிட்டின் எருமையின் காலிலிருந்து மேலே எழும்பி பறந்து போகிற மேல் நோக்கிய ஷாட்டில் திரும்பவும் அமெரிக்க கொடி பறக்கிறது. அதாவது புறாக்களால் கீழே விழ இருந்த அமெரிக்க அரசின் மானத்தை அம்பி கமல் காப்பாற்றி மேலேற்றிவிட்டார் என்கிற அர்த்தத்தில்.

படத்தின் ஒலிப்பதிவை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொறுப்பேற்க க்ரிஸ் எம். ஜேகோப்சன் என்கிற வெளிநாட்டவர் சவுண்ட் எடிட்டராக செய்திருக்கிறார்.  படத்தில் ஹாலிவுட் அளவுக்கு ஒலியின் தரம் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள். நன்றாகவே இருக்கிறது தரம்.

இசையமைத்திருப்பவர்கள் ஷங்கர்-லாய்-இஷான் என்கிற மூவர். கமல் ஆடும் முதல் பரதநாட்டியப் பாடல் நன்றாக இருக்கிறது. மற்ற மூன்று பாடல்களும் மோசமில்லை. படத்துக்கு பலமே சேர்க்கின்றன. ஆனால் பிண்ணனி இசை தான் சொதப்பல். காரணம் கமலுக்கே தமிழ்நாட்டில் இருந்து போன ஒரு சிபிஐ ஆள், ஆப்கானிஸ்தானில் யாரோ ஒரு இளைஞன், யாரோ ஒரு டாக்டர் போன்றவர்களின் மரணங்களுக்காக என்ன எக்ஸ்ப்ரஷன் காட்டுவான் என்று சிறிது குழம்பி நின்று வரும்போது இசையமைப்பாளர்களும் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். கடைசியில் கமலும், அவர்களும் சேர்ந்து தீவிரவாத-பயங்கரவாத இசையில் போய் நின்று கொள்கிறார்கள். ஆடியன்ஸும் மனிதாபிமானம் என்ற அளவிலோடு பார்க்க முடிகிறதே தவிர அந்தக் காட்சிகள் மனதை ஒன்றும் செய்துவிடுவதில்லை.

காட்சிகள் மனதைப் பாதிக்கும், பயமுறுத்தும் இடங்களும் உண்டு. தூதரக அதிகாரி கழுத்து அறுபடும் இடம், தூக்கிலிடப்படும் இடம் என்று சில இடங்களில் முஸ்லீம்களின் மனத்தில் குற்ற உணர்வையும், முஸ்லீம் அல்லாதவர்களின் மனத்தில் முஸ்லீம்களின் மேல் பய உணர்வையும்,  ஆழ்மனத்தில் வெறுப்புணர்வையும் படம் தோற்றுவிக்கிறது. இது கமலின் ஆழ்ந்த அமெரிக்க மனநிலையை காட்டுகிறது.

படத்தின் ஒளிப்பதிவு சானு ஜான் வர்கீஸ் (மலையாளி போல் தெரிகிறது) இவர் தான் டேவிட் படத்திற்கும் ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவில் நம்மவர்களின் தரம் உலகப் படங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு வளர்ந்து ரொம்ப நாளாகிவிட்டது. வர்கீஸின் ஒளிப்பதிவும் கச்சிதம். ஆனால் அவர் கமலைத் தாண்டி எந்த புது முயற்சியும் செய்துவிடவில்லை.

எடிட்டர் மகேஷ் நாராயணனைச் சொல்லி குற்றமில்லை. கமல் சொன்ன பகுதிகளை இரண்டாம் பாகத்திற்கு விட்டது போக மற்ற பகுதிகளை ஏதோ தன்னால் முடிந்த அளவு ஜம்ப் இல்லாமல் எடிட் செய்திருக்கிறார். செய்த வரை அவருக்கு சபாஷ்தான்.

ஆர்ட் டைரக்ஷனை இளையராஜா என்பவரும் நான்ஸி டெர்ரின் என்பவரும் கவனித்திருக்கிறார்கள். நியூயார்க்கில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு உள்ளூரில் நான்ஸி அம்மணியையும் இந்தியாவில் மற்றும் ஆப்கானிஸ்தான் போல் சென்னை ஈசிஆர் ரோட்டில் செட் போட்டு எடுத்த காட்சிகளுக்கும் இளையராஜா ஆர்ட் டைரக்டர் போல் தெரிகிறது. இளையராஜாவின் திறமை பளிச்சிடுகிறது. ஆப்கானிஸ்தானின் ஹெலிகாப்டர்கள் தாக்குதல்கள் லாஜிக்கலாக கவனித்தால் படுசுமார். நியூயார்க் நகரில் நடக்கும் திராபையான கார் துரத்தல் காட்சி சோபிக்கவில்லை. அதே போல எப்.பி.ஐ சம்பந்தமான காட்சிகளும், வசனங்களும் வலுவாக இல்லை. ஒன்று எப்.பி.ஐயை மட்டம் தட்டும் நோக்கில் காட்சி வைக்கப்படுகிறது. இல்லையென்றால் எப்.பி.ஐக் காரன் கமலையோ, நிருபமாவையோ புகழ்வதாக காட்சி வைக்கப்படுகின்றது.

கிராபிக்ஸூக்கும் பெரிய டீம் வேலை செய்திருக்கிறது. நாசரின் மகனை கிரேனில் தூக்கிலிடும் காட்சியில் பத்து பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதை நூறு பேர் போல காட்டியது கிராபிக்ஸ் வேலையே. படத்தை மெருகேற்ற இவையெல்லாம் உதவியிருக்கின்றன. வில்லனாக நடித்த ராகுல் போஸின் டபுள் மேக்கப் கன கச்சிதம். ராகுல் போஸின் நடிப்பும் கூட அருமை. ஹிந்தி சினிமாவில் பெரிய ஆளாக இருக்கும் ராகுல் போஸ் தமிழிலும் நுழைந்திருக்கிறார். இவரை வைத்து தமிழில் யாராவது நல்ல படங்கள் எடுக்க முயற்சி செய்யலாம்.(விஸ்வரூபம் நல்ல படமா ?)

மொத்தத்தில் தொழில்நுட்ப ரீதியாக இது தமிழில் ஒரு வலுவான படமே. கமலுக்கு இதில் வெற்றியே கிடைத்திருக்கிறது பெரும் பொருட்செலவில். ஆனாலும் இப்படம் ஒரு டெக்னிக்கல் மாஸ்டர் பீஸ் அல்ல. உதாரணமாக ஆப்கானிஸ்தான் என்றதும் நமக்கு மலைக்குகைகளை மட்டும் காட்டிவிட்டார்கள். ஆப்கானிஸ்தான் மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, அதில் போர் செய்திருக்கும் கோலம், சீரழிந்த அவர்களது வாழ்க்கை முறை என்று எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதையெல்லாம் நுட்பமாகப் பதிவு செய்வதும் கமலின் நோக்கமல்ல. அவரது நோக்கமெல்லாம் இந்தியாவில் இருக்கும் ஒருவருக்கு ஆப்கானிஸ்தான் என்றால் ஞாபகம் வரும் வறண்ட மணல் பகுதி, நிறைய குகைகள் இருக்கும் மலைகள், ஒசாமா பின்லேடன், பர்தா அணிந்த பெண்கள், அபின் செடிகள், காலி துப்பாக்கி ரவைகளை எடைக்கு எடை வாங்கும் கடை(எதுக்கு?) என்பவற்றை காட்டினாலே போதும் என்று நினைத்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் என்ன அல்ஜீரியா என்றாலும் நாம் நம்பித்தானே ஆவோம்.

கமல் என்கிற கலைஞன் தனது 55 வயதிலும் இளைஞனாக வேடமிட்டு இவ்வளவு திறமையாக ஒரு படம் எடுத்திருப்பதை நிச்சயம் நாம் பாராட்டுகிறோம். ஆனால் ஒரு சராசரி ரசிகராக அவர் ஒரு ‘சகலகலா வல்லவன்’ தான்.. ‘உலக நாயகன்’ தான் என்று பெருமையடித்துக் கொள்வதை செய்வதற்கு மனது ஒப்பவில்லை.

தொழில் நுட்பத்திலும், இயக்கத்திலும் கமல் இன்னும் கொஞ்சம் 10 சதவீதம் சிரமப்பட்டால் உலகப்படங்களின் நேர்த்தியை, தரத்தை அடைந்துவிட முடியும் தான். ஆனாலும் அவர் ஒரு இன்ஞ்ச் கீழேயே இருப்பதன் காரணம் ஹாலிவுட் உலகத்தை அப்படியே காப்பியடிக்க அவரும், மணிரத்னமும் சதா முயன்று கொண்டேயிருப்பது. சமீபத்தில் பாலா இயக்கிய பரதேசி படம் கேன்னஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பெரிய பாராட்டுதல்களைப் பெற்றது என்கிறார்கள். பாலாவிடம் இது போன்ற ஹாலிவுட் பின்தொடர்தல் என்பது இல்லை. அவர் உலக சினிமாக்கள் பார்ப்பவரே என்றாலும் உலகச் சினிமாவை, அதன் உயரத்தை, நம் தமிழ் கலாச்சாரத்தின் வழியாகவே தொட முயல்கிறார். அதிலேதான் அவர் வெற்றியும் பெறுகிறார்.

கமலின் இன்னொரு பலவீனம் இவ்வளவு சாதித்த பின்னும் இன்னும் ஒவ்வொரு படத்திலும் தான் ஒரு ‘சகலகலாவல்லவன்’ என்று காண்பிக்க முயல்வது. அதற்காக டி.ராஜேந்தர் போல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நெறியாள்கை அப்புறம் இவற்றுடன் சேர்த்து ஹீரோவாக நடிப்பு, இன்னும் 4 ரோல், பத்து வகை மேக்கப் என்று தேவையில்லாமல் தனது ஆற்றலை சிதறவிடுகிறார். திரைக்கதையில் இயக்குனர் கமலின் தலையீடு எப்போதும் இருப்பதால் அவரின் படங்கள் பெரும்பாலும் திரைக்கதையில் நடிகர் கமலையே தொடர்வதாக இருக்கும். தொடர்ந்து எல்லா சீனிலும் அவர் நடித்துக் கொண்டே இருப்பார் என்னும் விதமாக கதை அமைக்கப்படும் போது அது கதைக்கான படமாக இல்லாது கதாபாத்திரமான ஹீரோ கமலைத் தொடரும் படமாகவே ஆகிவிடும் (உதா. மஹாநதி, விருமாண்டி, அன்பே சிவம், அவ்வை சண்முகி..). இதில் விதிவிலக்காக அன்பே சிவம் போன்ற படங்களின் கதையமைப்பே இயல்பில் ஹீரோவையும் அவருடனான துணை கதாபாத்திரமான மாதவனையும் பின் தொடர்ந்து போவதாக இருந்ததால் கமலின் மிக நேர்த்தியான படங்களில் ஒன்றாக அன்பே சிவம் ஆனது.

விஸ்வரூபம் – ஒரு நுணுக்கமான அரசியல் தந்திரமாக..
விஸ்வரூபத்தின் நுணுக்கமான சாணக்கியத்தனமான அரசியலை புரிந்து கொள்ள நிறைய கவனம் வேண்டும். படத்தில் நிறைய நாத்திகவாத வரிகள் வருகின்றன. கடவுள் கிட்ட கேக்கணும்னு ரூபா சொல்லும்போது ‘எந்தக் கடவுள்’ அப்படின்னு பேசறதுலருந்து, அய்யராத்துப் பொண்ணே நீ கறியை டேஸ்ட் பண்ணு என்று சொல்லுமிடத்திலிருந்து ஆங்காங்கே நாத்திகவாத வரிகள் வந்து கமல் ஐயர்களையே திட்டத்தான் செய்கிறார் பாருங்கள் என்கிற வாதத்திற்கு உபயோகமாக இருக்கிறது. ஆனால் கமலை வெறுக்கும் பிராமணர்கள் எவ்வளவு பேர்? மிகக் குறைவு. காரணம் அவருடைய பிராமண நாத்திகவாதம் ஒரு விதத்தில் பிராமண மக்கள் ரசிக்கும்படியே தான் இருக்கிறது என்பதால் தான்.

ஒரு காட்சியில் கமல், ஆண்ட்ரியா போன்றோர் டி.வி பார்த்துக் கொண்டிருக்க டி.வியில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை ஒபாமா அறிவிக்க எல்லோரும் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். கமல் கேட்பார் ஏன் ஒருத்தரைக் கொன்னதைப் போய் கொண்டாடுறாங்க ? இது தப்பில்லையா ? அதுக்கு ஆண்ட்ரியா சொல்வார் அசுரனை கிருஷ்ணன் வதம் பண்ணினா சந்தோஷம்னு சொல்வாரே அது போலத்தான் என்பார் (அசுரன்=ஒசாமா=தீவிரவாதி, கிருஷ்ணன்=ஒபாமா=தேவர்). அப்போது கமலின் மாமா சொல்வார் “சந்தோஷமா என்று தீவிரவாதியின் மகன்-மகள் புள்ளைகளைக் கேளுங்கள். அவர்களுக்கு அவன் நல்ல தகப்பன் இல்லையா என்று”.

ரொம்ப லாஜிக்காக தத்துவம் கலந்து எழுதப்பட்டது போல் தோன்றும் இந்த விவாதத்தில் ஒசாமா நல்லவனா கெட்டவனா என்பது ஏற்கனவே முடிவாகிப் போய்விட்டது(அசுரன்). அதன்படி தீவிரவாதி கெட்டவன். கேள்வியை அவன் நல்லவனா கெட்டவனா என்று கேட்பதில் நிறுத்தாமல் அவன் கொலை செய்யப்பட்டது சரியா தவறா என்கிற விவாதத்தில் போய் நிறுத்திவிட்டதன் மூலம் அவன் கெட்டவன் தான் என்பதை மறைமுகமாக அழுத்துகிறார் கமல். பகத்சிங் அன்றைய ஆங்கிலேயரால் தீவிரவாதி என்று தூக்கிலிடப்பட்டவன். இன்று நமக்கு அவன் யார் ? ஒசமா பின்லேடன் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் மக்களிடத்தில் எவ்வாறாக அறியப்படுகிறான்? சந்தேகமேயில்லாமல் அவர்களுக்கு அவன் ஒரு பகத்சிங். கமல் தீவிரவாதம் சம்பந்தமான விவாதங்களை சாமர்த்தியமாக தவிர்க்கிறார். தீவிரவாதம் = படுமோசமான கொலைகாரர்கள் என்று மட்டுமே அடையாளப்படுத்துகிறார்.

காஷ்மீரி என்கிற தீவிரவாதியாக அவர் ஆப்கானிஸ்தானில் நுழைவதன் பிண்ணனியை பார்ப்போம். கமலின் அப்பா காஷ்மீரி என்கிற ஆப்கானிஸ்தான் வரை புகழ்பெற்ற ஒரு தீவிரவாதி அதாவது போராளி. அவர் பெயரைச் சொன்னதுமே தீவிரவாதிகளின் தலைவரான ஓமரே ஆச்சரியப்படுகிறார். அப்படிப்பட்ட பெரிய போராளி காஷ்மீரி தன் மனைவியை கர்ப்பிணியாக்கி அம்போவென விட்டுவிட்டுப் போனவராக சித்தரிக்கப்படுகிறார். ‘அப்பன் இல்லாதவன்’ என்று ஆக்கப்பட்ட அவருடைய மகனான கமல் தானே தன் அம்மாவின் மானத்தைக் காக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இப்படி வலிந்து சொல்லப்படும் ஒரு கதை ஏன் முன் வைக்கப்படுகிறது ?  நீங்கள் நினைப்பது போல் பொழுது போக்குக்காகவா ?

தீவிரவாதிகள் அனைவரும் கூட்டாக, தனியாக தொழும் காட்சிகள் படம் முழுக்க. குண்டு வைத்து அத்தோடு சேர்ந்து சாகப் போகும் தீவிரவாதி அதன் பக்கத்திலேயே பாய்விரித்து தொழுகிறான். சீசியம் என்கிற கதிரியக்கத் தனிமத்தை வெறும் கையாலேயே எடுத்தால் ஆறேழு மாதங்களில் சாவு நிச்சயம் என்று தெரிந்தும் பங்க்கர்களில் வாழ்ந்து கொண்டு உயிரையும் விடத் தயாராயிருக்கும் முஸ்லீம் ஜிகாதி. இடத்தையே வெடிவைத்துத் தகர்க்க சுற்றிலும் குண்டு வைத்துக் கொண்டு தொழுது கொண்டிருக்கும் முஸ்லீமைச் சுற்றி வளைத்து எஃப்பிஐ நின்றவுடன் பாய்ந்து சென்று ரிமோட் கண்ட்ரோலை எடுத்து, அவனைத் துளைத்த துப்பாக்கிக் குண்டுகளையும் தாண்டி சிரித்தபடியே பட்டனை அமுக்கி தானும் தன்னைச் சுற்றியுள்ள அனைவரும் வெடித்துச் சிதறும்படி செய்து மாண்டுபோகிறான். மனித வெடிகுண்டு முஸ்லீம் இளைஞன். கழுத்தை அறுக்கும் முஸ்லீம். தூக்கில் இடும் முஸ்லீம். பேசிக் கொண்டிருக்கும் போதே திருப்பி நிறுத்தி பின்மண்டையில் சுட்டுக் கொல்லும் முஸ்லீம். கழுத்தில் கயிற்றை இறுக்கிக் கொல்லும் முஸ்லீம். இப்படி படம் முழுவதும் முஸ்லீம்கள் மிகக் கொடும்பாதகமான செயல்களைச் செய்கிறார்கள்.

இவர்களை இப்படி மானாவாரியாகக் காட்டிவிட்டு இஸ்லாம் சகோதரர்கள் பிரியாணி கிண்டிப் போடவேண்டும் என்று கமல் எதிர்பார்ப்பது அவர்களை எல்லாம் எவ்வளவு முட்டாள்கள் என்று அவர் நினைத்திருப்பார் என்பதைக் காட்டுகிறது. “ஏன்யா ஒரு படத்துல கதைப்படி முஸ்லீம்கள் இப்படி செய்யிற மாதிரி வந்தா என்ன தப்பு?” என்று சுதந்திரம் பற்றி பேச நீங்கள் விரும்பினால் இதற்கு பதில் சொல்லுங்கள்; அந்த முஸ்லீம்கள் எல்லோரும் செய்யும் செயல்களுக்கு முன்போ பின்போ தொழுவதையும் ஏன் காட்டுகிறார் கமல்?

இவ்வளவு விரிவாக தலீபான் தீவிரவாதம் பற்றிப் பேச விரும்பும் கமல். தலீபானின் தோற்றம் என்ன ? அதன் வளர்ச்சி என்ன? அது அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எவ்வாறு போராடியது என்று எந்த வரலாறும் பேச விரும்பவில்லை. மாறாக பின்லேடனைத் தேடும் அமெரிக்கனுக்குத் தெரியும் தலீபானாகவே நமக்கும் காட்டுகிறார். சரி காட்டிவிட்டுப் போகட்டும். ரொம்பத் தைரியம் தான். அப்படிப்பட்ட தைரியசாலி ரொம்ப வருஷமில்லை ரெண்டே வருஷம், அதாவது 2009ல் நம்ப தமிழ்நாட்டிலிருந்து 10 கி.மீ தொலைவில் இலங்கையில் நடந்த பயங்கரவாதத்துக்கு எதிரான  போர் என்கிற பெயரில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானோரைப் பற்றி ஏன் படம் எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை. தமிழ்நாட்டைப் பற்றி யோசித்தால் கற்பனை வறண்டுவிடுமோ ? காஷ்மீரிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் தமிழ் பேசும் காஷ்மீரி என்று கற்பனை பண்ண முடிந்த அவருக்கு தமிழ் பேசும் கமல் தமிழ்நாட்டிலிருந்து பத்து கி.மீ கடலுக்குள் போனான் என்று கதை யோசிப்பதில் கடும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதன் காரணம் எனக்கு விளங்குகிறது.

காரணம் கமல் மட்டுமல்ல. இந்திய அரசும் ஒரு காரணம். ஏன் அமெரிக்க அரசும் ஒரு காரணம். என்னவென்றால், குற்றப் பத்திரிக்கை என்ற பெயரில் ராஜீவ் காந்தி கொலையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்தார் ஆர்.கே.செல்வமணி. அப்படம் சென்சாரிலேயே கிழித்தெறியப்பட்டது. ஆர்.கே.செல்வமணி அதற்குப் பின் படமே எடுக்கவில்லை. கமல் உணர்ச்சி வசப்பட்டு ஈழத் தமிழனாக உருமாறி ‘புலி’ரூபம் இலங்கையில் எடுத்திருந்தாரென்றால் (ராகுல் போஸ் கேரக்டரை அவர் செய்வார் இதில்) அப்படமும் சென்சார் போர்டு தூண்டிலில் சிக்கி  திணறிக் கொண்டிருக்கும் இன்னேரம். கமல் ரசிகர்கள் அப்போது  போராட வருவார்களா?  சந்தேகமே. மேலும் அவருமே சிங்களன் ராஜபக்சே போல ‘இவனுங்க எதுக்கு அவன் நாட்டுல போய்கிட்டு தனி நாடு கேட்குறானுங்க’ன்னுட்டு கூட நினைத்திருக்கக் கூடும். அப்படிப் போனவுக 1800ல போன மலையகத் தமிழருங்க மட்டுமே அய்யா. அவுகளைத் தவிரவும் சுமார் 20 லட்சம் தமிழங்க, தமிழ் மூதாதையருங்க,  மூவாயிரம் வருஷத்துக்கும் முன்னால இருந்தே இலங்கைல வாழறாங்கய்யான்னு நாம் சொன்னாலும் யாருக்குப் புரியுது. அட விடுங்கய்யா நேத்து கூட நாலு பேரைச் சுட்டான் இலங்கைக் கடற்படைக் காரன். அதை விடவா உங்களுக்கு பரபரப்பான கதைக் களம் வேணும்? (இந்த மீனவர்கள் கதைக் களத்தை வைத்து எடுத்த ‘கடல்’ படத்துல அவுங்க மீனவங்களுக்கு வெச்ச ஆப்பை பாத்தீங்களா? இவுக ராஜபக்சேக்கு ஆதரவா கதையெழுதுறாக.. வில்லன் பாதிரியார் ஒரு மீனவனை கொன்னுட்டு அந்த டெட்பாடியை நடுக்கடல்ல கொண்டு போய் போட்டுட்டு வந்து இலங்கைக் கடற்படை சுட்டான்னு சொல்றாங்களாம்... என்னா கதை.. என்னா கதை..).

கமல் இந்த மாதிரியெல்லாம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவே இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜி-7 நாடுகள் என்ற பெயரில் அநியாயங்கள் பல புரியும் நாடுகளின் கூட்டமைப்புக்கு ஆமாம் சாமி போடும் படம் தான் எடுக்க விரும்பினார். அப்படி அவர் எடுத்த விஸ்வரூபம் அமெரிக்காவில் நூறு நாளை நோக்கி வெற்றி நடை போடுகிறது. அமெரிக்காவின் அடிபொடி இந்தியாவும் தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து படத்தை ஓட்டுகிறது. அமெரிக்கா-இந்தியாவின் நோக்கம் தலீபான்கள், பொதுவாக முஸ்லீம்கள் பயங்கரவாதிகள். அவர்களை ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டும் என்கிற உணர்வை ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊட்டவேண்டும். ஊட்டிவிட்டார்கள்.

இஸ்லாம் மதத்துடன் அமெரிக்கா கூறும் தீவிரவாதம் இணைந்து காணப்படுவது தற்செயலானது அல்ல. அமெரிக்கா இதற்கு முன்பு ஏப்பம் விட்ட நாடுகளையும் இப்போது ஏப்பம் விட மிரட்டிக் கொண்டிருக்கும் நாடுகளையும் பாருங்கள். ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், எகிப்து, லிபியா, சிரியா, ஏமன், சௌதி அரேபியா, பாகிஸ்தான்... எல்லாமே இஸ்லாமிய நாடுகள். எல்லாமே எண்ணெய் வளம் கொண்ட நாடுகள். அமெரிக்காவின் ஹிட்லிஸ்ட்டில் இவை தவிர மற்ற நாடுகளும் உண்டு.

இறையாண்மை, இறையாண்மை என்று கூக்குரலிடும் மோகன்கள், சோனிக்கள் அமெரிக்காவின் இந்த மாதிரியான இறையாண்மையை பார்க்க மறுத்து அவர்களோடு ஈஷிக்கொண்டு ஏன் நிற்கிறார்கள்? கழுத்தை அறுக்கும் தீவிரவாதி மோசமானவன் என்றால் பட்டினி போட்டே நாளைக்கு நூறுபேரைக் கொல்லும், 3 ஆண்டுகளில் 3 லட்சம் பேரை ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் கொன்ற இந்த அமெரிக்க அரசும் அதன் நயவஞ்சக அரசியலும் எவ்வளவு மோசமானது? கொடூரமானது?  தீவிரவாதிகளின் கொடூரச் செயல்கள் தீமையை எதிர்க்க இயலாமல் நிற்கும் அவர்களின் கையறு நிலையைக் காட்டுகிறதேயன்றி அவர்களின் வெறித்தனத்தை அல்ல. தீவிரவாதிகள் தங்களின் இழிந்த வாழ்வு நிலையை உணராத, உணர இயலாத மக்களாலேயே அத்தகைய கையறு நிலைக்கு ஆளாகிறார்கள்.

இது போல தலீபான்கள் ஆங்கிலம் பேசுவதை எதிர்ப்பது, பெண்கள் உடலின் பாகங்களை மூட வேண்டும் என்று பேசுவது, அன்னிய கலாச்சாரம் தங்களுள் ஊடுருவாமல் தடுப்பது என்று தங்களின் அமெரிக்க எதிர்ப்பின் அடையாளமாகச் செய்திருக்கும் செயல்களை வெறுமனே அடிப்படைவாதம் என்று பார்க்க விரும்பும் கமலின் செயல் சரியானது அல்ல. இன்றைய காலகட்டத்தில் மிகவும் கலாச்சார மற்றும் மதத் தாக்குதலுக்குள்ளாகும் மதம் இஸ்லாமிய மதமாகும். எனினும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றிணைய அவர்களுடைய ஆழமான மத நம்பிக்கையாலும் முடியவில்லை என்பது இஸ்லாமியர்கள் அனைவரும் ஆய்ந்து தெளியவேண்டிய விஷயமாகும்.

நைஜீரியர்கள் என்றால் தீவிரவாதிகளா?

கடைசி காட்சியில் நியூயார்க்கில் குண்டு வைப்பவன் தற்போது வெளிவரும் பல ஹாலிவுட் படங்களைப் போலவே ஒரு நைஜீரியன். அவனுக்கும் இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும், கமலுக்கும் என்ன சம்பந்தம் ?

நைஜீரியா ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு ஏழை நாடு. நாடென்னவோ ஏழை நாடு ஆனால் அதன் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு வளங்கள் அதிகம். அமெரிக்காவுக்கு தன்னுடைய நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி (44 சதவீதம்) யைத் தருகிறது நைஜீரியா.
வழக்கம் போல முதலில் அந்நாட்டு மக்களின் நோய்களைப் போக்க மருத்துவத்தை ப்ரீயாகத் தந்து உள்ளே நுழைந்தது அமெரிக்கா; கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆக்கிரமிப்பை செய்தது. அந்நாட்டில் உட் புரட்சிகளை ரெடி செய்து நடத்தி தங்களுக்குத் தேவையான ஆளை 1999ல் அங்கு பதவியமர்த்தியது. அதன் பின் இப்போது 2009ல் உள்நாட்டு புரட்சிக்காரர்களை அடக்க பாதுகாப்பு(??) படையை அனுப்ப ஹிலாரியம்மா ஏற்பாடு பண்ணினார்.(மேலும் விவரம் வேணும்னா இதைப் படிங்க http://concernedafricascholars.org/african-security-research-project/?p=83) இப்படி நைஜிரியாவுக்குள் ஒட்டகம் கூடாரத்துக்குள் ஒதுங்க இடம் கேட்ட கதையாய் அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்ய கடைசியில் அங்கிருந்து போராடும் அமைப்புகளுக்கு உள்நாட்டில் கூட போராடமுடியாத நிலை. அரசு ராணுவமே அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து தான் செயல்படுகிறது. எனவே தான் ஒரு நைஜீரியாக்காரன் அமெரிக்காவில் வந்து அமெரிக்காவுக்கு குண்டு வைக்க நினைக்கிறான். இவ்வளவு பெரிய விஷயத்தை கமல் எப்படி ஹாலிவுட் படங்களைப் போலவே மறைத்து, கூலாக பாட்டுக் கேட்டுக் கொண்டு பாம் வெடிக்கும் ஒரு ‘பயங்கர’மான தீவிரவாதியை மட்டும் நமக்குக் காட்டுகிறார் ?

இத்தனைக்குப் பின்பும் சப்பைக் கட்டு காட்சிகளுக்கு குறைவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் செய்யும் காமெடியை கவனியுங்கள். நைஜீரியன், தற்கொலைப் படை குண்டு வைப்பவனாக, அணு குண்டை ரெடி செய்துவிட்டு அது வெடிக்கும் முன் அதனருகே உட்கார்ந்து தொழுகை செய்வான். அதே நேரத்தில் அவன் வீட்டுக்கு வெளியிலேயே வாசலில் எஃப்.பி.ஐயுடன் அவனைப் பிடிக்க வழிபார்த்து காத்துக் கொண்டிருக்கும் கமல் என்கிற காஷ்மீரியும் தொழுகை செய்வார். அவர் தவறாத இஸ்லாமியர் என்று இஸ்லாமியரைப் பெருமைப் படுத்துகிறாராம்.

இப்படி அரசியல் என்கிற தளத்தில் படம் முழுவதும் வண்டி வண்டியாய் விஷத்தை அள்ளித் தெளித்திருக்கும் கமலின் விஸ்வரூபத்தின் முன் டெக்னிக் விஷயங்களில் விஸ்வரூபம் பெற்ற பாராட்டு ஒன்றுமேயில்லை. இவ்வளவு விஷங்களையும் விதைத்த கமலின் படம் தடை செய்யப்பட்டது என்ன காரணத்தாலென்றாலும் அது வரவேற்கப்பட்டிருக்க வேண்டியதே. அல்லது வெளியிடப்பட்டாலும் அதன் ரகசிய நச்சுக் கொடுக்கை நாம் இனம் கண்டு மக்களுக்கு வெளிப்படுத்தி பின்னர் அவர்கள் இப்படத்தைப் பார்த்தால் யதார்த்தத்தை எவ்வளவு தூரம் திரிக்க முடியும் என்பதை கண்டுகொள்வார்கள். படம் நிறுத்தப்பட்ட போது இதற்கு ஆதரவு தெரிவித்து இணையத்திலும், பேஸ்புக்கிலும் மிக உணர்ச்சி வசப்பட்டு அமெரிக்காவில் இருந்து பணம் அனுப்பிய அமெரிக்கோ-இந்தியர்கள் அதிகம். அவர்கள் இவ்வளவு விளக்கங்களையும் படித்து விட்டு இனியும் கமலுக்கு பணம் அனுப்புவார்களா?

இப்போது நீங்கள் சொல்லுங்கள் விஸ்வரூபம், விஷமான ரூபமா ? இல்லையா?


Sunday, September 16, 2012

முகம்மது நபியை இழிவுபடுத்தும் ஹாலிவுட் திரைப்படம்

கடந்த ஜூலை மாதம் இணையத்தில் யூ ட்யூபில் தி இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்’(The Innocence of Muslims)  ‘சாம் பெஸில்ஸ் தி முகமத் மூவி’ (Sam Bacile’s The Muhammed Movie) என்கிற பெயர்களில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் படம் தான் புதிதாக சர்ச்சையைக் கிளப்பியுள்ள சினிமா.

14 நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் (ஒரிஜினல் படத்திலிருந்து கட் செய்யப்பட்ட ட்ரெய்லர் வெர்ஷன் இது என்கிறார்கள்) முன்னெப்போதும் இல்லாததை விட மிக வெளிப்படையாக படத்தின் ஹீரோவாக முகமது என்கிற பெயரிலேயே பாத்திரம் இருப்பதுடன், குரானை இழிவுபடுத்தியும் வசனங்கள் பேசப்படுகின்றன.

முகமது நபியை கள்ள உறவினால் பிறந்தவராகவும், பெண் பித்தராகவும், குழந்தைகளுடன் உறவு கொள்பவராகவும், ஓரினச் சேர்க்கையாளராகவும், செல்வத்துக்காக கொலைகள் செய்யும் கொள்ளைக்காரராகவும் இன்னும் என்ன என்ன விதமாக கேவலமாகச் சித்தரிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாகச் சித்தரித்திரிக்கும் படம் இது.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு போலீஸ்காரன் சொல்வது போல ஆரம்ப வரிகளில் ‘முகம்மது நபி 61 மனைவிகள் வைத்திருந்தார். நானும் என் ஆஸ்பத்திரியில் இருக்கும் என் மனைவி இறந்துவிட்டால் உடனே இன்னொரு இளம் பெண்ணை நாளையே கல்யாணம் செய்து கொள்வேன்’ என்கிறான்.

குரானை பைபிளின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து முகமதின் மனைவி பகுதிகளை எடுத்து தொகுத்தார் என்று ஒரு காட்சியில் வருகிறது. முதல் முஸ்லீம் ஒரு கழுதை என்று காட்டுகிறார்கள். அந்தக் கழுதையுடன் முகமது பேசுகிறார். இதையெல்லாம் விடக் கேவலமாக படுக்கையறைக் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத எல்லோரும் என் எதிரிகள் என்று எல்லோரையும் முகமது நபி கொன்றொழிக்கிறார். இஸ்லாமியர்களின் ஆழ்ந்த மத நம்பிக்கைகளையும், அவர்களது சகோதரத்துவத்தையும், முகமது நபியையும் மிகவும் இழிவுபடுத்துகிறது இந்தப் படம். அத்தோடில்லாமல் ‘மேன் + எக்ஸ் = இஸ்லாமிக் டெர்ரரிஸம்’ என்று அமெரிக்கா உலகெங்கும் கூறும் இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற வாதத்தையும் அப்படியே இம்மி கூட மாற்றாமல் கூறுகிறது.

இப் படம் இணையத்தில் வெளியிடப்பட்டவுடன் மிக வேகமாகப் பரவி இஸ்லாமிய நாடுகளை மிகக் கொதிப்புக்குள்ளாக்கியது.மருத்துவமனையை எரிக்கப் போகும் எகிப்தியர்கள் செப்டம்பர் 8ம் தேதி இதன் சில துணுக்குகள் 2 நிமிடநேரத்திற்கு எகிப்து நாட்டில் ஒரு இஸ்லாமிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. எகிப்து நாடு முழுதும் இந்த சினிமா மற்றும் அதை வெளியிட்ட அமெரிக்கா மீது கடும் கோபம் எழுந்தது. .

எகிப்து அமெரிக்கத் தூதரகத்தின் முன் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். செப்டம்பர் 11 அன்று எகிப்தின் கெய்ரோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஒரு தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸும் இன்னும் மூன்று அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர்.

எகிப்து, சூடான், துனீசியா, பாகிஸ்தான், யேமன், நைஜீரியா, லெபனான், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மக்கள் கொதித்தெழுந்து அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தியாவில் காஷ்மீரிலும், வட இந்திய மாநிலங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் அமெரிக்க தூதரகத்தின் எதிரே இஸ்லாமிய மற்றும் மனித நல்லிணக்க இயக்கங்கள் சேர்ந்து அமெரிக்க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின.
இப்படத்தை இணையத்தில் எகிப்திலும், லிபியாவிலும் தடைசெய்திருக்கிறது கூகுள் நிறுவனம். ஆனால் இந்தியாவில் இன்னும் இப்படத்தைப் பார்க்கலாம்.

இது பற்றி அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலர் ஹில்லாரி கிளின்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார். “இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறுவறுக்கத்தக்க வீடியோவினால் அமெரிக்க வெளியுறவுத் தூதகரங்கள் தாக்கப்படுகின்றன” என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டார்.

எகிப்தில் இறந்து போன தூதர் மற்றும் மூன்று அமெரிக்கர்களுக்கான நினைவுக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க தூதரகங்களின் மீதான தாக்குதல்களை அமெரிக்கா உறுதியுடன் எதிர்க்கும் என்று கூறியுள்ளார். இவர்கள் இருவருமே பட்டும் படாமலும் பதில் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

படத்தை தயாரித்தது யார்?
இப்படத்தின் தயாரிப்பு மற்றும் தயாரிப்பாளர் சம்பந்தமான செய்திகள் இப்படம் தயாரிக்கப்பட்டதன் நோக்கம் பற்றி மேலும் சந்தேகத்தை எழுப்புகின்றன.

தலைமறைவாகிவிட்ட இப்படத்தின் தயாரிப்பாளர்-மற்றும் இயக்குநரான நக்கௌலா பாசில்லி நக்கௌலா(Nakoula Basseley Nakoula) என்பவரை அமெரிக்காவின் எப்.பி.ஐ(FBI) இனம் கண்டிருக்கிறது. 55 வயதாகும் நக்கௌலா எகிப்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். அமெரிக்கக் குடியரசு உரிமை பெற்றுள்ளார். அவரைப் பேட்டி கண்ட எப்.பி.ஐயிடம் அவர் சொன்ன தத்துவ முத்து “இஸ்லாம் உலகைப் பற்றிக் கொண்ட கேன்சர்”. (கவனியுங்கள் இவ்வளவு கலவரங்களுக்கும், மரணங்களுக்கும் காரணமான அவரை எப்.பி.ஐ கைது செய்யவில்லை. மாறாக பேட்டி காண்கிறது.)

கலிபோர்னியாவில் பெட்ரோல் பங்க் நடத்திக்கொண்டிருந்த நக்கௌலா வரி ஏய்ப்பினால் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஒரு முறை போதைப் பொருள் வைத்திருந்ததற்காகவும் அவர் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். சிறையில் இருந்த அவர் மஞ்சள் கடுதாசி கொடுத்ததால் கடந்த ஜூன் 2011 ல் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

சிறையில் இவர் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியதாகவும், இப்படத்தைத் தயாரிக்க இவருக்கு யாரோ பெயர் தெரியாத ஒரு இஸ்ரேலிய பணக்காரர் 5 மில்லியன் டாலர்கள் பணம் கொடுத்ததாகவும் கூறுகிறார். 5 வருடங்களுக்கு இன்டெர்நெட் மற்றும் ரத்தச் சகதியில் இஸ்லாமியரின் ஹீரோகம்ப்யூட்டர்கள் உபயோகிக்கக் கூடாது என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்து வெளிவந்த இவர் வெளிவந்த உடனே இப்படத்தை எடுத்திருக்கிறார். கலிபோர்னியாவிலிருந்த தனது வீட்டிலேயே செட் போட்டு கம்ப்யூட்டர் முறையில் பேக்ரவுண்டு வைத்து (நம் டி.விக்களில் காம்பியரிங் பண்ணுபவர்கள் பின்னால் கிராபிக்ஸாக தூண்கள், சிற்பங்கள், படங்கள், கடல் வானம் என்று தெரியுமே!!.. அதே டெக்னிக் தான்).

இப்படத்தில் நடித்த 80 நடிகர் நடிகையர்களிடம் தொடர்பு கொண்டு இப்படத்தில் எவ்வாறு இப்படி நடித்தீர்கள் என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் தாங்கள் நடித்த திரைக்கதை இது அல்ல என்று உறுதியாக மறுக்கின்றனர். தங்களுக்கு சொல்லப்பட்ட கதையில் இஸ்லாமியப் பெயர் எதுவுமே இல்லை என்கின்றனர். படம் எடுக்கும் போது கதாநாயகனின் பெயர் ‘மாஸ்டர் ஜார்ஜ்’ என்று கூறப்பட்டு டப்பிங்கில் ‘முகமது’ என்று மாற்றப்பட்டுள்ளது. இது போல மற்ற எல்லாமே மாற்றப்பட்டுள்ளன.

முகமதுவின் மனைவியாகப் போகும் பெண்ணின் தாயாக நடித்த கார்ஸியா (Garcia) என்பவர் கூறுகையில் ‘இப்படத்தைப் பற்றி இயக்குனராக ஷூட்டிங் ஸ்பாட்டில் அறியப்பட்ட பெஸில் எங்களிடம் இது 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்ட எகிப்து பற்றிய படம் என்று கூறினார்’ என்கிறார்.

இப்படம் ஒரே ஒரு முறை கடந்த ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள ஒரு தியேட்டரில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. சுமார் பத்து பேரே அந்தக் காட்சியில் அப்படத்தை பார்த்திருக்கின்றனர். அப்போது இத்திரைப்படத்தின் டைட்டில் தி இன்னொஸன்ஸ் ஆப் ஒசாமா பின்லேடன் ‘The Innocence of Osama Bin Laden’ என்று இருந்திருக்கிறது. அந்தத் திரைப்படத்தை பார்த்த ஒருவர் கூறுகையில் “படம் தொழில்நுட்ப ரீதியாகவும், நடிப்பு மற்றும் எல்லா அம்சங்களிலும் மிக மோசமான படமாக இருந்தது. ஆனால் முகமது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. படம் மிக மோசமாக இருந்ததால் நான் பாதியில் எழுந்து வந்து விட்டேன்”.

பின்னர் இதே படம் தலைப்பு மாற்றப்பட்டு, டப்பிங் செய்யப்பட்டு உரையாடல்கள் இஸ்லாமை இழிவு படுத்தும் வாசகங்களாக மாற்றப்பட்டு அரேபிய மற்றும் ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சில இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள் இப்படத்தை வரவேற்றுள்ளன. ப்ளோரிடாவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ்(Terry Jones) என்கிற கிறித்தவப் பாதிரியார் இப்படத்தை தனது சர்ச்சில் திரையிடப்போவதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2010ல் இருநூறு குர்ரான் புத்தகங்களை தனது சர்ச் வளாகத்தில் வைத்து தீயிட்டுக் கொளுத்தி உலகெங்கும் பிரச்சனையைக் கிளப்பியவர்.

காரணம் என்ன?
இவ்வாறு அடிக்கடி மதத் துவேஷ பிரச்சனைகளை கையில் எடுப்பதில் ஆளும் வர்க்கங்கள் சளைப்பதேயில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் பிரான்சில் ஒரு பத்திரிக்கையாளர் முகமதுவைக் கார்ட்டூனாக வரைந்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய போது பிரான்சில் இன்னொரு பத்திரிக்கை அதே படங்களை வேண்டுமென்றே மீண்டும் வெளியிட்டது. பத்திரிக்கைச் சுதந்திரத்தை யாருக்காகவும் நாங்கள் விட்டுவிடமாட்டோம் என்று மார்தட்டியது அந்தப் பத்திரிக்கை. (ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட இரண்டு லட்சம் ஈராக்கியர்களைப் பற்றி வாயே திறக்காதிருந்த அந்தப் பத்திரிக்கையின் சுதந்திரத்தை என்னவென்பது? ஈராக்கிற்கு அனுப்பும் நேட்டோ படைகளில் பிரான்சின் படைவீரர்களும் உண்டு).

மற்ற மதங்களுக்கும் இஸ்லாமிய மதத்திற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. அது இஸ்லாமிய மதம் உருவ வழிபாட்டை கண்டிப்பாக மறுக்கிறது. கடவுளின் ஒரே தூதர் எனப்படும் முகம்மது நபிக்குக் கூட உருவ வழிபாடு கிடையாது என்பது அம்மதத்தின் முக்கியமான ஒரு கோட்பாடாகும். கிறித்துவ மதத்தின் இயேசுவோ அல்லது மற்ற எந்தக் கடவுளோ இவ்வளவு அழுத்தமாக உருவ வழிபாட்டுக்கு எதிராகச் சொல்லாததால் இயேசுவை கதாபாத்திரமாகக் கொண்ட கிறித்துவ ஆதரவு மற்றும் எதிர்க்கருத்துப் படங்கள் நிறைய வந்துள்ளன. இயேசு குழந்தை ஏசுவிலிருந்து சிலுவையில் சுமந்து சாவது வரை பல வடிவங்களில் வரையப்பட்டுள்ளார், செதுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இங்கு நபிக்கு உருவம் கொடுப்பதே மதத்திற்கு அதன் அடிப்படைக்கு மாற்றானது என்னும் போது இதில் தலையிட எந்த பத்திரிக்கை அல்லது ஊடகமானாலும் அதற்கு உரிமையில்லை.

அதற்காக இஸ்லாம் மற்றும் இஸ்லாமியருக்கு எதிரான எவையுமே அனுமதிக்கப்படவில்லையா என்ன?  முகமது மற்றும் குரானைப் பற்றி அவதூறாகப் பேசாத எல்லா வகையான விடுதலைக் கருத்துக்கள் மற்றும் இஸ்லாமின் மீதான எதிர் விமர்சனங்களை, தாக்குதல்களை சரியோ தவறோ இஸ்லாம் மக்கள் எதிர்கொள்கின்றனர். பதில் தருகின்றனர்.

உருவம் இல்லாத பொருளை மனிதனால் புரிந்து கொள்வதோ அதன் மீது கருத்துக்கள் ஏற்றுவதோ கடினமான காரியமாகும். கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் என்றாலும் அதற்கும் ஒரு குறியீடு வைத்துத் தான் அதை நாம் விளங்கிக் கொள்கிறோம். இந்த நிலையில் தான் கண்ணுக்குத் தெரியாத உருவமில்லாத இறைவன் மற்றும் அவரது தூதர் நபிகளை உருவம் கொடுத்து தங்கள் சுதந்திர ‘தாகத்தை’ தீர்த்துக் கொள்கின்றனர் இந்த விடுதலை டவுசர்கள்.

நோக்கம் என்ன?

சரி அமெரிக்காவும் இப்படி மதத்துவேஷத்தைக் (குறிப்பாக இஸ்லாமிய மதத்துவேஷத்தை)கிளறி விட்டு குளிர் காய்வதன் நோக்கம் என்ன?
உலகப் பொருளாதார நெருக்கடி.
அமெரிக்கப் பொருளாதாரம் உலகப் பொருளாதார நெருக்கடியால் மேலும் சிதைவுண்டு போயிருக்கிறது. அமெரிக்காவில் உலகின் பெரும் பணக்காரர்களில் முன்னிலை ஆட்கள் பலர் இருந்தாலும் அவர்கள் தங்களது பணத்தால் அதன் பொருளாதாரத்தை காப்பாற்றும் மூடில் இல்லை. அங்கு சாதாரண மக்கள் மேலும் நசுக்கப்பட்டு பிழியப்பட்டு பணமின்றி வாழ வாழ்வின் எல்லைகளை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர். அந்த நெருக்கடிக்குக் காரணம் இந்த அரசும் அதை பின்னிருந்து ஆட்டுவிக்கும் இந்த மெகா கார்ப்பரேட்டுகளும் என்பதை மக்கள் உணர ஆரம்பித்தால் என்ன ஆகும் ?  ஒபாமா நாட்டை விட்டே ஒட வேண்டிய நிலை வரும்.  எனவே நான் திருடன் என்பதை மறைக்க வேறொரு ஆளை கைகாட்ட வேண்டும்.

பாங்க் வாசலில் பத்து ரூபாய்த் தாளை கீழே போட்டுவிட்டு ‘சார் பத்து ரூபாயை கீழே விட்டுட்டீங்க சார்’ என்றதும், அவர் குனிந்து அதை எடுக்கையில் அவர் கைப்பையில் வைத்திருந்த லட்ச ரூபாய் திருடப்படும்.

அதே டெக்னிக்தான் இது. மக்களை தம் சொந்தப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப.. திருடனை தப்ப விட.. அப்பப்போ இப்படி படங்களும், திமிர்ப் பேச்சுக்களும் வருகின்றன. வரும். அதைத் தொடர்ந்து கலவரங்கள் வரும். தலைகள் உருளும். உயிர்கள் பலியாகும். முடிவில் “இஸ்லாம் மதமே தீவிரவாதம். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள்” என்ற கருத்தாக்கத்தில் முடியும். அதுவே அவர்கள் விரும்புவது. அதுவே நடக்கிறது.

மேலும் அமெரிக்கா இனி போர் தொடுத்து ஆக்கிரமிக்கப் போகும் எண்ணெய் வளம்மிக்க அடுத்த இஸ்லாமிய இலக்கு(target) நாடு எதுவோ அதன் மீது போர்த் தொடுக்கும் முன் அந்நாடும் அதன் மக்களும் கொஞ்சம் கூட சகிப்புணர்வு இல்லாத காட்டுமிராண்டிகள், அமெரிக்கக் கொடியை எரித்துப் போராட்டம்(இஸ்லாமியத்) தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று உலக மக்களை உளவியல் ரீதியாகத் தயார்ப்படுத்தும் வேலையை இது போன்ற பிரச்சனைகள் செய்யும்.
ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக் போன்ற நாடுகளின் மீதான அமெரிக்காவின் போரும், அதன் வெற்றியும் அவற்றின் எண்ணைக் கிணறுகள் அமெரிக்காவின் வாய்க்குள் போனதும் ஆகிய எல்லாமும் நியாயப்படுத்தப்படும்.

இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. நவம்பரில் நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல். அதில் ஒபாமா செய்த தவறுகள். கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய சலுகைகள். மக்களிடமிருந்து பறித்த உரிமைகள் எல்லாம் மறக்கப்படும். இஸ்லாமிய நாடுகளின், இஸ்லாமிய தீவிரவாதத்தின் ‘அச்சுறுத்தலும்’ முன்னிறுத்தப்படும். எகிப்து அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கு முன்பே தெரிந்திருந்தும் அதை வேண்டுமென்றே செப்டம்பர் 11 ஆம் தேதி நடக்கவிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அதில் இறந்து போன அமெரிக்கத் தூதரும் மற்ற அமெரிக்கர்களும் ஒசாமா பின்லேடனின் செப்டம்பர் 11 கதையை தொடர்ந்து நீட்டிக்க அமெரிக்கா உருவாக்கிக் கொண்ட ஒரு நல்ல வாய்ப்பு.

ஆனால் மறைமுகமாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் கை இருப்பதாக சந்தேகிக்கக் கூடிய இந்தச் சினிமாவின் வெளியீடும் அதையொட்டி நடக்கும் விஷயங்களும் இஸ்லாமிய நாடுகளனைத்தையும் இன்றில்லாவிடில் மற்றொருநாள் சகோதரர்களாக ஒன்றிணைத்துவிடும் என்பதும் அன்று அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற கார்ப்பரேட் வல்லரசுகளின் கூட்டுக்கு வலுவான ஒரு எதிரணியாக உலக அரங்கில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டு அமைந்துவிடும் என்பதும் ஒரு சாத்தியமே.

இவ்வளவு சமூக விரோதமான இந்தப் படத்தை இங்கு காணும்படி இணைக்க நான் விரும்பவில்லை. எனவே இந்த இணைப்பில் (link) யூட்யூப்பில் சென்று இந்தத் திரைப்படத்தை காணவிரும்பினால் காணுங்கள்.

Sunday, May 27, 2012

எ செப்பரேஷன் (A Separation) - விமர்சனம் (ஈரானியத் திரைப்படம்)



2011ம் வருடத்தில் வந்த பிறமொழிப் படங்களுக்கான படங்கள் போட்டியில் சிறந்த பிறமொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதை கடந்த பிப்ரவரி மாதம் பெற்றது இந்த பெர்சிய மொழித் திரைப்படம். இது தவிர சுமார் 53 விருதுகளை உலகெங்கும் சென்று இந்த ஈரானியப் படம் வென்றுள்ளது.

ஈரான். அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் வேளையில், இன்னும் 4 மாதங்களில் ஈரான் நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கப் போகும் அமெரிக்க நாட்டின் ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகளில் இப்போது தான் ஆஸ்கார் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஈரானிய நாட்டுத் திரைப்படம் ஆஸ்கர் விருது பெறுகிறது.


இது மிகத் தற்செயல் போலத் தோன்றினாலும் அமெரிக்காவின் இத்தகைய அரசியல் பிண்ணணி காரணங்களுக்காக (அந்த நாட்டை நாங்கள் குண்டு வீசி அழித்தாலும் நாங்கள் அவர்களின் கலைகளை மதிக்கும் மாமனிதர்கள் என்கிற பிராண்ட் விளம்பரத்திற்கு) இப்படம் விருது பெற்றிருக்குமா என்பது நாம் தனியே யோசித்துப் பார்க்க வேண்டிய விடயம்.

இந்த அரசியல் காரணம் தவிர்த்து இப்படத்தை பார்த்தாலும் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படமாகவே இதைக் கருதலாம் தான்.

பேமிலி ட்ராமா எனப்படும் குடும்பச் சித்திரம்வகை சார்ந்த படம் இது. இத்துடன் ஒரு த்ரில்லர் போன்ற பரபரப்பில் திரைக்கதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஸ்கர் பர்ஹாடி(Asghar Farhadi).

தன்னுடைய கணவனான ;’நாடேர்ரிடம் (பெய்மன் மோடி - Peyman Moadi) இருந்து விவாகரத்து கோரும்சிமின்’ (லைலா ஹடாமி - Laila Hatami) கோர்ட்டில் நீதிபதியிடம் பேசுவதாக ஆரம்பிக்கிறது படம். ஈரானில் இப்போது வாழும் சூழல் சரியில்லை என்றும் எனவே தன்னுடைய ஒரே மகளின் எதிர்காலம் சிறந்ததாக அமைய வெளிநாடு சென்று தன் 11 வயதுப் பெண் குழந்தை டெர்மேவை வளர்க்க விரும்பும் சிமின் தன்னுடன் வர மறுக்கும் தனது கணவன் நாடேரிடம் இருந்து விவாகரத்து கோருகிறார். நாடேரோ அல்ஜீமர் என்கிற மூளைச் செல்கள் இறப்பு நோயால் அவதிப்படும் அவனது தந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிறான். நாடேரைத் தனது பிள்ளையென்று கூட அறிந்து கொள்ளாத நிலையில் இருக்கும் தந்தையை ஏதாவது மனநல காப்பகத்தில் விடவேண்டியது தானே என்கிறாள் சிமின்.

அவருக்கு நான் தான் அவர் பையனென்று அடையாளம் காணத்தெரியாது.. ஆனால் எனக்கு அவர் தான் அப்பா என்று தெரியுமில்லையா?’. அவரை எப்படி நான் விட்டுச் செல்லமுடியும் என்கிறான் நாடேர்.

நீதிபதியோ விவாகரத்து கோர கணவர் குடிகாரர், பெண்ணை அடிப்பவர் என்பது போன்ற தீவிர காரணங்கள் வேண்டும் என்கிறார். சிமின் அதை மறுத்து தன் கணவர் மிக நல்லவர் என்கிறாள். குழந்தையை தன்னுடன் அனுப்பி விடும்படி கோருகிறாள். இருவருமே தங்களது குழந்தை டெர்மேவின் மேல் மிகுந்த பாசம் கொண்டுள்ளனர். நீதிபதியோ அதற்கு குழந்தையிடமும் கருத்து கேட்கப்படவேண்டும் என்கிறார். எனினும் விவாகரத்து பெற கொஞ்ச நாட்கள் கழித்து வரும்படி நீதிபதி கூறுகிறார். சிமின் தற்காலிகமாக தனது தாய் வீட்டிற்குச் செல்கிறார்.

நாடேர்-சிமின்-டெர்மே குடும்பம் ஒரு உயர்-மத்திய-தர வர்க்க (Upper-middle class) ஈரானியக் குடும்பம். பாங்க் ஒன்றில் க்ளார்க்காக வேலை செய்யும் நாடேர் தனியே தன் குழந்தையையும், தந்தையையும் பார்த்துக் கொள்ள விழைகிறார். தனது கணவர் சிரமப்படக் கூடாதென்று சிமின் ஒரு கஷ்டப்படும் குடும்பத்தைச் சேரந்த பெண்ணான ரஸீயாவை (சாரா பயாட் - Sareh Bayat) வீட்டு வேலைக்காக சிபாரிசு செய்கிறாள். கர்ப்பிணியான ரஸீயா தனது கணவனுக்குத் தெரியாமல் (இஸ்லாமிய முறைப்படி இது சட்ட விரோதம்) நாடேர், அவனது தந்தை மற்றும் டெர்மே இம்மூவரும் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிற்கு வந்து வீட்டு வேலை செய்கிறாள்.  வயதான, அல்ஜீமர் நோயால் யாரையும் அடையாளம் காணக்கூட இயலாத நாடேரின் தந்தையையும் கவனித்துக் கொள்கிறாள்.. ஒரு நாள் சுய நிதானமில்லாத நாடேரின் தந்தை திறந்திருந்த வாசல் வழியே வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். அவரைத் தேடி ஓடுகிறாள் நஸீயா. அதைத் தொடர்ந்து நடக்கும் சங்கிலித் தொடர் நிகழ்வுகளே இத் திரைப்படம்.

ஒரு நல்ல திரைக்கதையின் நல்ல அம்சங்களில் ஒன்று அது கதையின் போக்கில் பார்வையாளனை சில கணங்களாவது படத்தின் பழைய காட்சிகளில் ஏதாவது ஒன்றை திரும்ப எண்ணிப் பார்க்க வைத்து விடுவது. இப்படத்தில் பிற்பாதியில் பல இடங்களில் முற்பாதியில் அவர் என்ன சொன்னார் ? என்ன நடந்தது ? என்று பார்வையாளர் தனக்குள் குழம்பி படத்துக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வைக்கிறது.

நடிகர்கள் எல்லோரும் கனகச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். மிக இயல்பான நடிப்பு. அவற்றை நடிப்பு என்றே நாம் உணர இயலாத அளவுக்கு மிகையில்லாத நடிப்பு. படத்தை இரண்டாவது முறையாக நீங்கள் பார்க்க நேர்ந்தால் ஆரம்பக் காட்சிகளில் படத்தின் பாத்திரங்கள் ஒவ்வொருவருடைய பார்வை, சிறு முகக் குறிப்புகள் போன்ற ஷாட்கள் கூட அப்பாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்த இயக்குனர் செய்திருக்கும் நுணுக்கமான வேலை என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

படத்தின் ஒளிப்பதிவு மஹ்மூத் கலாரி (Mahmoud Kalari). படம் முழுவதும் க்ளோசப் ஷாட்கள் நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் பார்வையாளர் நடிகரை பின்தொடர்ந்து சென்று வேவு பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துவதன் மூலம் அக்காட்சி பிற்பாதியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். படம் பார்ப்பவர்களை நீதிபதியின் ஸ்தானத்தில் நாடேர் மற்றும் சிமினின் வழக்கை புலன் விசாரணை செய்யும் எண்ணத்தோடு பார்க்க வைப்பதில் இயக்குனர் வெற்றிபெற்று விடுகிறார். எனவே படத்தின் முடிவையும் கூட நம்மிடமே விட்டுவிடுகிறார்.

யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை அப்படியே காட்சியமைப்பதிலும் இயக்குனர் மிளிர்கிறார். குழந்தை தாயின் வயிற்றில் காதை வைத்து கரு சிசு நகர்வதைக் கேட்பது, பெட்ரோல் பல்க்கில் டெர்மே டிப்ஸை திரும்பக் கேட்பது, மாடிப்படியில் தள்ளிவிட்ட காட்சியை மகளுக்கு விவரிக்கும் நாடேர் தான் குற்றமற்றவன் என்பதை விளக்குவது என்று பல இடங்கள்.

படத்தின் மிக நுணுக்கமான மற்றும் அழுத்தமான விஷயம் கதை, திரைக்கதை. இயக்குனரே கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

கதையில் வரும் மாந்தர்கள் எல்லோரும் நல்லவர்களே. ஆனால் வெவ்வேறு தருணங்களில் தனது குறைபாடுகளை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். நேர்மையாக வாழ்வதை தனது மகளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கும் நாடேர் வழக்கிலிருந்து தப்பிக்க பொய் சொல்வது, மாமனார், மகள் மற்றும் கணவன் மீது மிகுந்த மதிப்பு, பாசம் வைத்துள்ள சிமின் அவர்களை விட்டுவிட்டுச் செல்ல விரும்புவது, அம்மா தன்னை விட்டு எப்போதும் சென்று விடமாட்டாள் என்பதை நன்கு உணர்ந்த டெர்மேஅதனாலேயே இருவரையும் இணைக்க அப்பாவுடனேயே இருப்பது, தந்தைக்காகப் பொய் சொல்வது, ரஸீயா மத உணர்வு மிக்கவளாக இருப்பது அதே சமயத்தில் கணவனுக்குத் தெரியாமல் வேலைக்கு வருதல், மனிதாபிமான அடிப்படையில் நாடேரின் தந்தைக்குப் பணிவிடை செய்வது என்று இருந்தாலும் தவிர்க்க இயலாமல் குழந்தை விஷயத்தில் பொய் சொல்வது.. என்று கதையின் போக்கை பார்வையாளர்கள் ஊகிக்கவே முடியாதபடி படம் முழுவதும் நிகழ்வுகள் நகர்வதால் ஒரு த்ரில்லர் பார்த்த உணர்வு பார்வையாளனுக்கு ஏற்படுகிறது.

இதில் சரி எது, தவறு எது என்று தீர்மானித்து முடிவு தரவேண்டிய பொறுப்பும் பார்வையாளரிடம் வரும் போது படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட நெடுநேரமாகிறது.

படம் மேல் தட்டு மற்றும் கீழ்த்தட்டு குடும்பத்தினரிடையேயான சிக்கலான ஊடாடலை பதிவு செய்கிறது. படத்தின் முடிச்சு நாடேர்-சிமினின் விவாகரத்து விஷயம். ஏன் அது நிகழ்கிறது என்று நமக்குள் கேட்டுக் கொண்டால் அதற்கு விடை, பெரிய காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே. பெரிய காரணங்களில்லாத மேல்தட்டு சிக்கல்களில், கடைசியில் இழப்பு நேர்வது கீழ்த்தட்டு மாந்தர்களுக்கே என்கிற யதார்த்த உண்மையும் படத்தில் பதிவாகிறது.

இறுதிக் காட்சியில் மீண்டும் அவர்களது விவாகரத்து வழக்கு வருகிறது. அதில் மூவரும் கறுப்பு உடை அணிந்திருப்பதன் மூலம் குடும்பத்தில் யாரோ காலமானது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. டெர்மேயின் முடிவை கேட்கிறார் நீதிபதி.

டெர்மே என்ன பதில் சொல்லியிருப்பாள் ?