Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Sunday, October 25, 2015

ஒரே வாரத்தில் 75 ஆயிரம் டன் பருப்புகள் பறிமுதல் ! யார்கிட்டே கதை விட்றீங்க.?

பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு போன வாரம் வந்தது. உடனே மத்திய அரசு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 2 லட்சம் டன் பருப்பை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தது. உலக சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கும் பருப்பை தனியார் இறக்குமதியாளர்கள் வாங்கி அரசிடம் 130 ரூபாய்க்கு விற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த அரசு இயந்திரம் திடீரென் விழித்துக் கொண்டது போல ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகள் நடத்திய சோதனையில் 75 ஆயிரம் டன் பதுக்கல் பருப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் பரப்பரப்பாக வெளிவருகின்றன. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.

இந்தியா முழுவதும், 13 மாநிலங்களில், 6077 இடங்களில் அரசுகள் சோதனை செய்தன. அதில் மஹாராஷ்ட்ராவில் மட்டும் 46 ஆயிரம் டன்னும், கர்நாடகத்தில் 8755 டன்னும், பீகாரில் 4933 டன்னும், சத்தீஸ்கரில் 4500, தெலங்கானாவில் 2546, மத்தியப் பிரதேசத்தில் 2295, ராஜஸ்தானில் 2222 டன் என்று ஆயிரக்கணக்கில் பருப்பு வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அரசு வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதுக்கல் கைப்பற்றல் செய்திகளின் பின்னால் வேறு எதுவும் இருக்கிறதா என்று 'தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ரவி சொல்வது போல நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. சேம்பிளுக்கு சில கேள்விகள்.

ஒரே வாரத்தில் பரபரப்பாக செயல்பட்ட அரசு இயந்திரம் 75 ஆயிரம் டன் பருப்பு வகைகளை பிடித்துள்ளது. அப்போ இவ்வளவு நாள் அரசு செயல்படாமலேயே இருந்ததா ? அல்லது பதுக்கல்களை கண்டுகொள்ளாமல் இருந்ததா ?

பதுக்கல் சோதனைகளில் ஏன் பருப்பு தவிர, அரிசி, கோதுமை போன்ற எந்தப் பொருட்களும் பிடிபடவில்லை ? பருப்பு பதுக்கல்காரர்களை மட்டும் குறிவைத்து சோதனை நடத்தினார்களா ? பதுக்குபவர்களில் பருப்பு மட்டும் கடத்துபவர், வேறு எதையும் கடத்தவே மாட்டாரா ?

6 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் எத்தனை பேர் பிடிபட்டனர். ஏன் ஒருவரது புகைப்படம் கூட செய்தித் தாளிலோ அல்லது சேனல்களிலோ காட்டப்படவில்லை? ஒருவேளை இந்தப் பதுக்கல் பிடிப்புக் கணக்கு மக்களுக்கு காட்டப்படும் பொய்க்கணக்கா ? ஒரு சாதாரண பைக் திருடனை, செயின் திருடனை பத்திரிக்கையில் போட்டோ போட்டு, சேனல்களில் சுற்றிச் சுற்றிக் காட்டும் மீடியாக்களுக்கு மக்களின் வாழ்வாதாரத்தையே அசைக்கும் இந்தக் கேடிகளில் ஒருத்தருடைய போட்டோ கூடவா கிடைக்கவில்லை ?

பதுக்கியவர்கள் எல்லோரும் தனிப்பட்ட ஆட்களா ? நிறுவனங்களே இல்லையா ? சில பல டன்களை தனியாக ஒரு ஆள் கடத்தி விட முடியுமா ? தனியார் நிறுவனங்கள் தான் கடத்தலில் ஈடுபட்டிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் உணவுப் பதுக்கலில் ஈடுபட்டால் அது குற்றமாக கருதப்படாதா ? அல்லது ஏன் பதுக்கலில் ஈடுபட்டது என்று ஒரு நிறுவனத்தின் பெயரையும் பேப்பரில் போடவில்லை அரசு ?

இது பற்றி ஏன் ஒரு மாநில அரசு கூட வாய் திறக்கவில்லை ? 45 ஆயிரம் டன் பதுக்கலை கண்டு பிடித்த மஹாராஷ்டிரா முதல்வர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை. மோடி வாய் திறக்கவில்லை. ஆனால் அரசு பிடித்தது என்று செய்தி மட்டும் வருகிறது. அப்போ உண்மையிலேயே இதெல்லாம் பதுக்கல் கைப்பற்றல் கணக்கா ? இல்லை, நாங்களும் செயல்படுகிறோம் பாருங்கள் என்று மக்களுக்குக் காட்ட அரசு சும்மா வெளிவிடும் செய்தியா ?

யாருக்காவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்.

Thursday, October 8, 2015

சிகரெட்டை ஒழி.. மக்களுக்கு 'தண்ணி' காட்டு !- அரசின் புதிய கொள்(ளை)கை.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிகரெட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைய  ஆரம்பித்துள்ளது. காரணம் அரசுகள் சிகரெட்டுக்கு எதிராக முடுக்கி விடும் கடுமையான பிரச்சாரங்கள் ஆகும்.

குடிப்பழக்கம் சிகரெட்டை விட பன்மடங்கு தீமையானது. சிகரெட் குடிப்பதால் மட்டுமல்லை, குடித்தாலும் கூட கேன்சர் வரும். ஆனாலும் குடிப்பழக்கம் எல்லா நாடுகளிலும் சகஜமாக கருதவைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசே இதை நடத்துகிறது. தமிழக அரசு சிகரெட் கம்பெனி நடத்தி இத்தனை ஆயிரம் கோடிகள் வருடத்துக்கு சம்பாதிக்க முடியுமா ?   குடிப்பவர்களால் கிடைக்கும் வருமானம் சிகரெட் குடிப்பவர்களை விட பலமடங்கு அதிகம் என்கிற வியாபராக் கணக்கே குடியை விடுத்து சிகெரட்டை மட்டும் அரசுகள் குறிவைப்பதன் காரணம்.  குடிக்கு அடிமையானவர்கள் மூளையும் வேலை செய்வதில்லை. அவர்கள் பாதி அடிமைகள் என்பதால் இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது. 

அதன் வெளிப்பாடாக  உத்தரப் பிரதேசத்தில், சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாநில முதன்மை செயலர் (சுகாதாரம்) அர்விந்த் குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

"உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் சில்லறையில் சிகரெட் விற்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.

சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கும் அவசர சட்டம் கொண்டுவர அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்தச் சட்டத்துக்கு ஆளுநர் ராம் நாயக்கும் அனுமதி வழங்கி விட்டார்.

புதிய சட்டத்தின்படி சில்லறையில் சிகரெட் விற்பது கண்டறியப்பட்டால், முதல் முறையாக ரூ.1000 அபராதம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மறுபடியும் குற்றம் செய்தால் ரூ.3000 அபராதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சில்லறையில் சிகரெட் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம், 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்." இவ்வாறு அர்விந்த் குமார் கூறியுள்ளார்.

இது சில்லறை வர்த்தகம் எனப்படும் பெட்டிக் கடைக்காரர்களின் வயிற்றில் அடித்து அந்தத் தொழிலை இல்லாமல் செய்வதற்கே. அமெரிக்கா போன்ற நாடுகளில் தெருமுனைப் பெட்டிக் கடைகள் எல்லாம் சுத்தமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. காரணம் சிகரெட்டை கூட வால்மார்ட்டில் தான் வாங்கவேண்டும் என்று கார்ப்பரேட் கம்பெனிகள் நினைப்பதால்.

இதே போன்றதொரு கடுமையான தடையை மதுபாட்டில் விற்பவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும் ஏன் ஐயா கொண்டு வரவில்லை ? வருமானம் போயிடுமே ஐயா. அதுதான் அவங்க கவலை. மக்கள் மேல் அக்கறையும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. புரிஞ்சுக்கோங்க.

Tuesday, December 23, 2014

சீவசுத்தமும் போஸ்ட் மார்டனிஸமும். :குளச்சல் மு. யூசுப்


பின்நவீனத்துவத் தை உயர்த்திப் பிடித்த, பொதுவுடைமை அமைப்பு சார்ந்த ஒரு இலக்கிய பிரிவின் கருத்தரங்கில் 12 ஆண்டுகளுக்கு முன் (குளச்சல் மு. யூசுப்)வாசித்த ஒரு கட்டுரை.
-------------------------------

பின்நவீனத்துவம் , பின்னைக் காலனியம், கீழைத்தேசியவாதம ் போன்ற பல் வேறு மாற்று சிந்தனை மரபுகள் இன்று, பின்தங்கிய நாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்சார்பு சிந்தனைகளாக - அதாவது நமக்காக - மேலைநாட்டு அரசியல் ஆலோசகர்களின் பல் கலைக்கழக வராந்தாக்களில் உருவாகி இன்று, கீழைத்தேசப் பல்கலைக் கழகங்களின் தேனீர் விடுதிகளில் அபூர்வமாக விவாதிக்கப்பட்ட ு வருகின்றன.

மாற்று சிந்தனைகள், வெகுஜன நன்மைகளைக் கவனத்தில் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள்சார்புடைய தாக, நெகிழ்வுத் தன்மையுடன் கூடியதாக, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளுடன் இணைத்துப் பார்த்து, விலக்கியும் சேர்த்தும் விவாதிக்கப்படு வதுதான் சரியான விவாத முறையிலாக இருக்க முடியும். ஆனால், இந்தியச் சூழலில் குறிப்பாக, தமிழ்ச்சூழலில் இவை முன்வைக்கப்படுக ிற முறையியல் அபத்தங்களின் மொத்தத் தொகுப்பாக இருக்கின்றன.

அதிலொன்று குடி கலாசாரம் பற்றிய பின்நவீனத்துவப் பார்வை. குடியைப்பற்றி பின் நவீனத்துவம் தனக்கான ஒரு பார்வையைக்கொண் டிருக்கிறது. மேற்கத்திய மரபு; தட்ப வெட்ப நிலைகள்; அவர்களது பொருளாதார சூழல்களில் இந்தப் பார்வையில் ஒருவேளை தவறெதுவும் இல்லாமலிருக்கலா ம். ஆனால், தமிழ்நாட்டில், ஒரு தொழிலாளி அவனது மிகக் குறைந்த வருமானத்தில் பேட்டரிபோன்ற பல்வேறு விஷப்பொருட்கள் கலந்த மதுவை மண்டையைப் பிளக்கும் இந்த வெப்பமண்டல வெயிலில் குடிப்பான் என்றால், அவனது குடும்பம் நிச்சயமாக பின் நவீனத்துவம் வலியுறுத்தும் ‘சிதைவு’க்குள்ள ாகிவிடும்.

பின்நவீனத்துவ அறிவுஜீவிகள்? தொடர்ந்து முன்வைக்கும் ஒரு கருத்து: உலகில் இன்று அனைத்து வகையான கோட்பாடுகளும் காலாவதியாகிவிட்டன. அவர்களது மொழியில் சொல்வதானால் ‘நீர்த்துப்போய விட்டன.’ ஆகவே, உலகோரே இனி மனிதனின் மோட்ச பிராப்திக்கென எஞ்சியிருப்பது பின்நவீனத்துவம் ஒன்றேதான்.

பின்நவீனத்துவம் , பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்டோர் நலன் சார்ந்து எந்த விதமான ஆலோசனைகளை முன்வைக்கிறது என்று ஒரு எளிமையான, அதேசமயம் மிக முக்கியமான கேள்வியொன்றை நீங்கள் கேட்டால், “ஆலோசனை சொல்வது மாற்று மரபுகளின் வேலை கிடையாது. மட்டுமல்ல, நீங்கள் குறிப்பிடும் எளிமை, முக்கியம் என்பதெல்லாம் வெகுசனச் சொல்லாடல்கள். எது எளிமை, எது முக்கியமென்பதை உங்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியாத பட்சத்தில் ஒற்றை எளிமை; ஒற்றை முக்கிய மெனும் சிதைவுகளை மறுக்கும் சொல்லாடல்களை பின் நவீனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. "எனும் பதிலில் உங்களுடைய கேள்வி, நீங்கள் கேட்க நினைத்த பல கேள்விகளுடன் முடங்கிப்போய் விடலாம்.

உண்மையிலேயே தெரிந்துகொள்ளு ம் ஆர்வம் மிகுந்து இவர்களிடம் பேசுவது கதைக்கு உதவாது என்று முடிவு செய்து தமிழில் இது தொடர்பாக வெளிவந்திருக்கும் தரவுகளைத் திரட்டிப் பார்த்தோம் என்றால் அதில் மாயாவாதத்திற்கு , புராணீக மரபு களுக்கு, குத்தகை முதலாளிகளுக்கு, சர்வதேசத் தரகர்களுக்கு, அரசு மற்றும் அதிகார இயந்திரங்களுக்கு ஆயில் போடுகிற வேலையை இந்த நவீனத்துவ தர்க்க சாஸ்திரிகள் செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.

அவ்வளவு சுலபமாகக் காணலாம் என்று சொல்லி விடவும் இயலாது. முதலில் பின்நவீன வாசிப்புக்குட்ப டுத்த வேண்டும். பிறகு, நிர் - நிர்மாணம் (ஞிமீ நீஷீஸீstக்ஷீuநீ tவீஷீஸீ) செய்து பார்க்க வேண்டும். இதுவொரு நீண்ட பிராசஸ்.

‘ஈராக்கில் அமெரிக்கா அத்துமீறியது என்பது ஊடகங்கள் கட்டமைத்த புனைவு. இதில் எதுவுமே உண்மையில்லை.’ - இது ஒரு மாற்று சிந்தனை - இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய நீதிபோதனை: ‘பாவம் அமெரிக்கா’ என்பதுதான்.

காரண காரியங்களை, யதார்த்த சிந்தனைகளை மாயாவாதம் மறுக்கிறது. பின் நவீனத்துவம் மறுக்கவொன்றுமில்லை. ஆனால், ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வளவுதான். மக்கள் ஒன்றிணைவாக இருப்பதை அரசுகளும் மதவாதமும் நிறுவன விருப்பங்களும் ஒரு போதுமே அனுமதித்ததில்லை . கூடவே, இப்போது தமிழக பின்நவீனத்துவமும் கை கோர்த்துள்ளது. ஒற்றுமை, ஒன்றிணைவுகள் எல்லாம் ஜனநாயமற்றவை; ஒவ்வொரு மனிதனும் முதலில் அவனுக்குள்ளாவது ஒற்றுமையை நிலைநாட்டிக் காட்டட்டும் என்று பின் நவீனத்துவம் மார்தட்டுகிறது. ‘அவனே அனைத்தும்; அகம்பிரம்மாஸ்மி ’ என்று சீவசுத்தி வாதம் அடக்கவொடுக்கமாகச் சொல்லிக்கொள்கிறது. மக்கள் தெளிவுடனிருப்பதை எந்தவொரு நிறுவனமும் அனுமதித்ததாக வரலாறே கிடையாது. ஆனால், சீவசுத்தமும் பின் நவீனத்துவமும் மனிதனின் இருப்பையே ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.

தமிழ்ச் சூழலில், தொழில் அடிப்படையிலும், பொருளாதாரம் சார்ந்தும் பிரிந்து கிடக்கும் முஸ்லிம்களுக்கு வர்ணம்பூசி, பொருளாதாரப் பிரிவை வர்ணாஸ்ரமப் பிரிவு களாக்கும் முயற்சியை பின்நவீனத்துவம் மேற்கொள்ளுகிறது. முஸ்லிம்களினிடையிலும் மனு, புனர் - நிர்மாணம் ஆகிறான். பொருளாதார முரண் தகர்ந்து போனாலும் வர்ணம் தகர்ந்து விடாமலிருப்பதில பின்நவீனம் கரிசனம் கொண்டிருக்கிறது.

பஞ்சமர்கள் என்று ஐந்தாவது வர்ணம்பூசப்பட்ட தலித்துகளுக்குளளும் பின் நவீனத்துவம் புகுந்து அவர்களை மேலும் கூறுகூறுகளாகக் காட்டும் வேலையைத் தொடர்ந்து மேற்கொள்ளுகிறது. பின்நவீனத்துவம் புகுந்து கூறுகளாக்க முயற்சி செய்யாத ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கவே முடியாதென்பதுதான் இப்போதைய நிலை.

பின்நவீனத்துவம் வெறுமொரு பண்பாடு சார்ந்த கருத்தியல் அணுகுமுறை. இது சிறு அளவில்கூட மக்களைச் சென்றடைய முடியாது என்றெல்லாம் நாம் ஆறுதல் பட்டுக் கொள்ள முடியாது. பார்த்தீனியம் செடியை வெறும் தாவரமாக மட்டுமே பார்த்த அனுபவங்களும் நமக்கு இருக்கின்றன. அறிவு ஜீவிகளின் சுயபோகம் வழியாகப் பரவுகிற இந்த பின்நவீனத்துவக் கோட்பாடு, தான் வலியுறுத்தும் கருத்துக்களை சமூகத்தின் அடி மட்டத்திலிருந்தே கொண்டு போக வேண்டுமென்று எச்சரித்திருக்கிறது. சோவியத் ரஷியாவில் இதை மேலேயிருந்து கொண்டு போக வேண்டிய தேவை மேலை நாடுகளுக்கிருந்தது. நிர் - நிர்மாணம் நடந்தது. மூன்றாம் உலகநாடுகளில் இதை கீழேயிருந்து கொண்டு வர வேண்டுமாம்.

அதாவது, அமெரிக்கா நிர்வாக இயக்குனராக இருக்கும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் நிறுவனங்களில் செயல்படும் தொழிற்சங்கங்கள் முதலில் பன்முகப்படுத்தப்பட வேண்டும். (காலனிய ஆட்சியின் பிரித்தாளும் கொள்கை, இன்றைய நவீன காலனிய ஆட்சியில் பன்முகத் தன்மையாகப் பதப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது, ஒடுக்கப்பட்டோர்களது கூட்டுறவு உடைபட வேண்டும்.) தொழிற்சங்கவாதி களின் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். சாதியம், புனருத் தாரணம் செய்யப்படவேண்டு ம். மூடநம்பிக்கைகளைத் தொன்மம் என்று அறிவிக்க வேண்டும். நரமாமிசம் தின்பவர்களை பண்பாட்டுப் போராளிகள் என்று பெருமைப்படுத்த வேண்டும். இப்படியாக, வர்த்தகக் காலனியத்திற்கு இந்திய சமூகம் முழுவசதியையும் செய்துகொடுக்க வேண்டும். இதுவரைக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இவற்றை பின் நவீனத்துவ கோட்பாடு சார்ந்த விஷயங்களாக நாம் புரிந்துகொள்வதில் தவறெதுவுமில்லை.

பின்நவீனத்துவத்தின் மிக முக்கியச் செயல்பாட்டுக்களமாக இருப்பது - அதா வது இவர்களால் விருப்பம்போல் குளறுபடி செய்ய இயல்கிற ஒரே துறை - இலக்கியம் தான். இதற்காக இவர்களை யாருமே கேள்வி கேட்க முடியாது. எழுதுபவனுக்கு இருக்கும் உரிமைகள் குறித்து இவர்களுக்கு அதீதமானப் புரிதல்களிருக்கின்றன. பாவம்! இது மட்டுமல்ல, ஒன்றரை மணிநேரம் கட்டுரை வாசித்தும் எதையுமே சொல்ல முடியாமல் விடும் இவர்களது திறமையும் தமிழ் பின்நவீனம் சார்ந்தது தான். இவர்கள் பெரும் தேடுதல் வேட்கையாளர்கள். இவர்களில் பெரும்பான்மையினரும் ஆன்மிகத்தில் களவொழுக்கம் பேணுபவர்களாக இருப்பதால் இதனை அகமன வேட்கை என்றும் சொல்லிவிட முடியாது. விதிக்கோட்பாடுகளை இவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ‘பிளே’ என்றுதான் சொல்லவேண்டும். தெரிதாவோ யாரோ அப்படித்தான் சொல்லியிருக் கிறார்களாம்.

குறிப்பாக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை எடுத்துக் கொண்டால் அண்மைக் காலங்களில் இப்பரிசுகள் பெரும்பாலும் பின் நவீனப் படைப்புகளுக்கு அல்லது இந்தக் கூறுகளை அதிகமாகக் கொண்ட படைப்புகளுக்கே கிடைத்து வருகின் றன. இதனுள்ளிருக்கும் பிரதான அரசியல் அம்சம், நோபல் விருதுக்கென தேர்ந்தெடுக்கப்படுகிற பின்நவீன மனிதர்கள் மேற்குலகம் சாராதவர்களாகவும் தமது நாடுகளின் மேற்கத்திய எதிர் மனோபாவங்களை பின் நவீனப் பகடிக்கு உட்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். இலக்கியவாதியும் மனிதர்கள்தானே? அமெரிக்காவின் பச்சை அடையாள அட்டையையும் நோபல் விருதும் என்றால் சும்மாவா?

சரி, ஒரு இலக்கியப் படைப்பில் பின் நவீனத்துவம் எப்படி செயல்படுகிறது என்று பார்த்தால் அறிவியல் முன்னேற்றம் மற்றும் புதிய பொருளாதாரப் பாய்ச்சலின் காரணமாக இளமையின் துவக்கத்திலேயே வெறுமையும் எரிச்சலும் தானுட்பட எல்லாவற்றின் மீதான வெறுப்பும் முளைவிடுகின்றன. காட்சிப் படிமங்கள் எதுவும் மூளைக்குத் தட்டுப்பட மறுக்கின்றன. இதன் ஒரு பகுதியாக மூளைக்குத் தொடர்பேற்படுத்தாத பின் நவீன மொழியமைப்பு இவர்களுக்கு ஆறுதல் தருகிறது. இதனை அனுபவித்த பின் நவீனத்துவ படைப்பாளிகள் அப்படியே வெளிப்படுத்தவும் செய்கின்றனர். மூளையை ஸ்பரிசிக்காத மொழியமைப்பு சாத்தியம்தானா என்றால் சாத்தியம்தான்! உதாரணமாக, கூட்டாஞ்சோறு என்பதை ‘சிதைவுகளின் ஒழுங்கமைவுச் சோறு’ என்று சொல்லிப் பாருங்கள். பெரிய அளவிலொன்றும் பொருள் வேறுபாடும் இருக்காது; ஆளைத் தொந்தரவும் செய்யாது.

பின்நவீனம்,பெண்ணியம் குறித்தும் திட்டவட்டமானப் பார்வைகளை வைத்திருக்கிறது. பாலினம் சார்ந்த பலவீனங்கள், மாதாந்திர சிரமங்கள், மறு உற்பத்திபோன்ற அனைத்துமே ஆணாதிக்க மனங்களின் வெளிப்பாடு. விலங்குகளிலும் பால் வேறுபாடு சார்ந்த உருவ வேற்றுமைகள் இருப்பது, உயிரினங்களின் ஆண்-பெண் கர்ப்பகால வேறுபாடு போன்ற அனைத்தையுமே பின்நவீனம் பாலின மனோபாவக் கோளாறாகவே பார்க்கிறது. பின் நவீனத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடான உண்மை என்பது ஒன்றல்ல என்பதை இங்கே பொருத்திப் பார்த்து சலித்துக்கொள்வது சரியாக இருக்கும்.
தலித்துகள், சிறுபான்மையினர் , ஒடுக்கப்பட்டோர மற்றும் அடித்தட்டு மக்களின் எளிய நியாயங்களுக்கும, மெக்காலேயின் உற்பத்திக் கூடங்களில் வளர்ந்தவர்கள், அரசு மற்றும் நிறுவனங்களின் புரியாத பதிலுக்குமான இடைவெளிகள் இந்த நிமிடம்வரை குறைவதாகத் தெரியவில்லை.

நன்றி - குளச்சல் மு. யூசுப்.

Saturday, July 6, 2013

ஓநாய்களும் இரு ஆட்டுக்குட்டிகளும்...சாதிகள் ஒழிவதில்லை.

பா.ம.க கட்சியின் நிறுவனரான ராமதாஸ் 80களில் செய்த சாதி அரசியல் அப்போது மிகப் பிரபலமானது. தனது வன்னியசாதி இனமக்களுக்கு அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தில் வன்னிய இன மக்கள் பெரும்வாரியாக சேர்ந்து குதித்து நடுரோட்டில் பெரிய மரங்களை வெட்டிப் போட்டு தமிழ்நாட்டையே சில வாரங்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். அப்படி தமிழகத்தையே உலுக்கியதில் அந்தச் சாதியினருக்கு கர்வம் கூட இருந்தது (நாங்க யாரு தெரயும்ல..).

அப்போது சாதியவெறி பற்றிய விழிப்புணர்வும் அது தவறு என்கிற மனப்பான்மையும் பெரிதும் மக்களிடம் வளர்ந்துவிடவில்லைதான். ஏனெனில் அது ஊடகங்கள் வளர்ந்திராத காலம். அன்று மக்களின் உணர்வுகளை மாற்றும் வலிய ஊடகம், அதுவும் ஒன்றே ஒன்றுதான். அது தூர்தர்ஷன் மட்டுமே.

ஆனால் 30 வருடங்களுக்குப் பின் இன்றைய நவீன செல்போன்கள் மற்றும் தொலைதொடர்பு யுகத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 200 டி.வி. சேனல்கள் இருக்கின்றன. குடும்பத் தொலைக்காட்சிகள், கட்சி தொலைக்காட்சிகள், மதத் தொலைக்காட்சிகள் என்று விஷயங்கள் 200 மடங்கு அதிகமாக மக்களைச் சென்று அடைகின்றன.

மக்கள் மாறியிருக்கிறார்களா? ஆம் மாறியிருக்கிறார்கள். சாதியின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கிறது. பொருளாதார ஏற்றம் சாதியை மழுங்கடிக்கச் செய்யும் சக்தியை பெற்றிருப்பதால் சாதியை பொருட்படுத்தாமலிருக்க பழகியிருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றங்களோடு சேர்ந்து சாதிய வெறித்தனமும் அதன் வடிவத்தைக் கூர்மையாக்கியிருக்கிறது.

தர்மபுரியில் அது அடையாளமாக வெடித்துக் கிளம்பி இன்று பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. கடைசியாக காவு வாங்கப்பட்டது இளவரசன். நத்தம் காலனிப் பகுதியில் வன்னியசாதியைச் சேர்ந்த திவ்யாவும் தலித்சாதியைச் சேர்ந்த இளவரசனும் காதலித்து ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். திவ்யாவின் தந்தை போலீசில் பெண்ணை மீட்டுத் தரும்படி புகார் செய்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து பா.ம.க கட்சி அரசியல் நிலையில் பலமிழந்து போனதாலும், கட்சி வன்னியருக்கு என்ன செய்து கிழித்துவிட்டது என்று பெரும்பாலான வன்னியர்கள் எண்ணிப் பார்த்து 'போங்கடா போய் புள்ளக் குட்டிகள படிக்க வைங்கடா.. வெட்டியா இவனுங்க பின்னாடி சுத்திக்கிட்டு அலையாம' என்று போய்விட்டதாலும் கட்சிக்கு வரும்படி குறைந்து விட்டது. தனது பலத்தை மீண்டும் நிலைநிறுத்த தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்தார் பா.ம.க ராமதாஸ்.

'ஜீன்ஸ் பேன்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு எங்கள் பெண்களை மயக்கி காதல் திருமணம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடம் புகட்டுவோம்' என்பது போன்ற புரட்சி வசனங்களை ராமதாஸூம் அவரது அடிபொடி 'குரு'க்களும் சேர்த்துப் பேச ஆரம்பித்தனர். கீழே உள்ளது மருத்துவர் ஐயாவின் பொழிப்புரையிலிருந்து ஒரு சேம்பிள்..

இந்நிலையில்தான் இளவரசனும்-திவ்யாவும் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். இதில் இளவரசன் 17 வயதேயான மைனர். திவ்யா இளவரசனை விட மூத்த பெண். அவரது குடும்பம் நடுத்தர சராசரிக் குடும்பம். இளவரசனின் குடும்பமோ கொஞ்சம் வசதியானது. அதற்காக பெரும்பணக்காரர்கள் இல்லை. அவனது அப்பா அரசு பிணமருத்துவக் கிடங்கில் அறைக் காப்பாளராக வேலை செய்கிறார். அரசு வேலை.

இப்போது தர்மபுரியில் இருக்கும் சாதீயப் பெருந்தலைகளுக்கு நம் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு தலித் பையன் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டானே என்கிற வெறி. நேரே திவ்யாவின் அப்பாவைக் கூப்பிட்டு நாலு காய்ச்சு காய்ச்சி நீயெல்லாம் சாதிகெட்டவன் என்கிற ரீதியில் அவரை மிரட்டி, திட்டித் தீர்க்க அவர் வீட்டில் வந்து தூக்கில் தொங்கிவிட்டார்.

இதைச் சொல்லி வன்னிய சமூக மக்களிடையே வெறுப்பை ஊதியதில் தர்மபுரியில் நத்தம் காலனியில் 200 தலீத்துகளின் வீடுகள் தீக்கிரையாயின. இதையெல்லாம் தாண்டி திவ்யாவும் இளவரசனும் தங்களது திருமணத்தில் உறுதியாக நின்றார்கள்.

இந்தக் கலவரங்களுக்குக் காரணமாய் நம் மருத்துவர் ஐயா சொன்ன முத்துக்களில் சில கீழே..

"நம் வீட்டுப் பெண் பிள்ளைகளை 14 வயது பெண் குழந்தைகளை காதல் நாடகமாடி கடத்திச் சென்று கர்ப்பமாக்கி கை விட்டு விடுகிறார்கள். தருமபுரியில் நடந்தது அது தான். தருமபுரி கலவரத்தில் ஒரு உயிருக்கு சேதம் ஏற்பட்டதா? ஒரு பன்றிக் குட்டியைக் கூட கொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோட அப்பன் செத்துப் போனான். இழப்பு எங்களுக்குத்தான். காதல்-கலப்புத் திருமணம் இதையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முசுலீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் பிரச்சனையில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது. உரிமை இல்லை என்று சொல்றான். பெற்றோர் தலையிடாமல் பின் யார் தலையிடுவது? காதலுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. எங்கள் சாதி பெண்களிடம் அதை வைத்துக் கொள்ளக் கூடாது"  - மருத்துவர் ஐயா மேதகு ராமதாசு அவர்கள்.

திவ்யாவின் அம்மாவின் மூலம் போலீசுக்குப் போன பாமக தரப்பு திவ்யாவை அம்மாவிடம் திரும்பித் தர கோரியது. கோர்ட்டிற்கு அழைத்துவரப்பட்ட திவ்யா தான் விருப்பத்துடனேயே இளவரசனுடன் திருமணம் செய்து வாழ வந்ததாகக் கூறிவிட்டார். சாதிவெறியினர் முகத்தில் கரியைப் பூசிய அவரை விட்டுவிட்டு திவ்யாவின் அம்மாவை குறிவைத்தனர். திவ்யாவின் அம்மாவை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததில் கதறிக் கொண்டு திவ்யா ஓடிவந்தார்.

அம்மா செத்துப் போவாரோ என்று பயந்து போன திவ்யா இளவரசனை விட்டுவிட்டு அம்மாவிடம் திரும்பினார். இப்போது திவ்யாவுக்கு இளவரசனுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன விளைவுகள் வரும் என்று விளக்கிச் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னதில் அவர் இளவரசனுடன் இனிச் சேர்ந்து வாழமாட்டேன். அவரைப் பார்த்தால் இறந்துபோன என் தந்தை ஞாபகம் வருகிறது. என்று இருநாட்கள் முன்பு பத்திரிக்கைகளைக் கூட்டி விரிவான அறிக்கை கொடுத்துவிட்டார்.

அதைப் பத்திரிக்கையில் படித்த இளவரசன் தனது மாமாவிடம் இப்படி பத்திரிக்கையில் சொல்லியிருக்கிறாளே அவள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டுவிட்டு, தான் போலீஸ் வேலையில் சேர்வதற்கான பயிற்சிகளை எடுக்கப்போவதாயும், போலீஸ் வேலை வாங்கிய பின் திவ்யா மனம் மாறி மீண்டும் வந்துவிடுவாள், தான் அவளை வைத்துக் காப்பாற்றுவேன் என்றும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறான். பின்பு தனது தந்தையிடம் அவரது பைக்கை வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளியுள்ள ஊரிலிருக்கும் தனது நண்பன் ஒருவனைப் பார்க்கச் செல்கிறேன் என்று கிளம்பியிருக்கிறான் இளவரசன். காலையில் தருமபுரி ரயில் நிலையத்தருகே நின்று கொண்டிருந்த அவனது பைக்கைத் தொடர்ந்து சென்று பார்த்ததில் ரயில்வே பாதையோரம் மூளை சிதைந்து இறந்து கிடந்திருக்கிறான் இளவரசன்.

ரயிலில் அடிபட்டு இறந்தானா அல்லது ரயிலில் தள்ளப்பட்டு இறந்தானா அல்லது கொல்லப்பட்டு தள்ளப்ப்ட்டானா ? இளவரசன் இறந்து கிடந்ததை காலை அத்தனை நேரம் வரை அப்பகுதியைக் கடந்து சென்ற எந்த ரயில்களின் டிரைவர்களும் பார்த்து ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுக்கவில்லை. இது ஏன் என்பது ஒரு கேள்வி.

இளவரசன் இறந்ததைக் கேள்விப்பட்ட தர்மபுரி பாமக கட்சியினர் பலர் ஊர்ஊராகச் சென்று அந்தச் செய்தியை வேட்டுக்கள் வெடித்து மகிழ்ச்சி பொங்க அறிவித்தபடியே சென்றார்களாம்.

இளவரசனும் அவரது அப்பாவும் கடைசியாக இன்று மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். இம்முறை அப்பா வேலை செய்யும் பிணக்கிடங்கிலேயே பிணமாக வந்து கிடக்கிறான் மகன் இளவரசன்.

இந்தச் சாதீயப் பிரச்சனையில் தலித்துக்களுக்காக நின்று போராடும் சக்தி திருமாவளவனுக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. 15 வருடங்களுக்கு முன்பிருந்த திருமாவளவனாயிருந்தால் இந்நேரம் இளவரசனுடன் துணையாக நின்று அவனுக்குத் தோள் கொடுத்திருப்பார் திருமா. இப்போதோ கலைஞர் தாத்தாவின் செல்லப் பேரனாக அவர் தரும் பணத்தின் நிழலில் வாழ்ந்து பழகிவிட்டதால் வெறும் அறிக்கைகளோடே நின்றுவிட்டார். மற்ற கட்சிகள் இடதுசாரிகள் உட்பட இப்பிரச்சனையின் ஆழம் புரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டனர். ஜெ. அம்மாவிடம் கேட்டால் இவன் யார் மேல்சாதிப் பெண்ணை திருமணம் செய்ய ? இவனுக்கு இது வேண்டியதுதான் என்று சொன்னாலும் சொல்வார். அவருடைய எல்லைகள் பாமகவை இந்தப் பிரச்சனையை வைத்து ரவுண்ட் கட்டிவிடுவதோடு நின்றுவிடுகிறது.  இப்படி எல்லாரும் கைவிரித்து விட்ட நிலையில் அவன் கொல்லப்படுவதை தடுக்க ஆளேயில்லாமல் போய்விட்டது. இப்போது அது தற்கொலை என்று பிரச்சனையை மூடிவிடப் பார்க்கிறதாம் போலீசு.

சாதிகள் இல்லையடி பாப்பா - பாரதியார். குழந்தைகள் முதலே இந்த எண்ணம் வரவேண்டும் என்று நினைத்த அவர் ஒரு தீர்க்கதரிசி தான்.

Friday, June 7, 2013

ஸ்ரீசாந்த் அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார்?

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சமீபத்தில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா என்கிற மூன்று ராஜஸ்தான் ராயல் அணியின் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் செய்த ஸ்பாட் பிக்சிங் என்பது என்ன? இவ்வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட சில ஓவர்களில் வேண்டுமென்றே லூஸ் பால்கள் போட்டு ரன்களை எதிரணியினருக்கு அதிகப்படுத்திக் கொடுப்பார்கள். இதில் இவர்களுக்கு என்ன லாபம்?

இவர்கள் அணியினருக்கு லாபம் இல்லை. ஆனால் சூதாட்டம் நடத்தும் புக்கிகளுக்கும் அதனால் இவர்களுக்கும் லாபம். உதாரணமாக ஸ்ரீசாந்த்தின் நெருங்கிய நண்பனான ஜிஜூ ஜனார்தனன் என்பவர் 'புக்கி'(bookie) எனப்படும் சூதாட்டத் தரகராக இருந்துள்ளார். 

இவர் போட்டி நடக்கும் போது நிமிடங்களில் பல கோடிகள் பெட் வைக்கப்படும் சூதாட்டத்தை போன் மூலமே நடத்துவார். பெரும் பெரும் தலைகள் கம்பெனி முதலாளிகள் கலந்துகொள்வார்கள். உதாரணமாக ஜனார்தனன் அடுத்த ஓவரில் எதிரணியின் ஆட்டக்காரர் 14 ரன்களுக்கு மேல் எடுக்கப்போகிறார் என்று நிறைய பணம் பந்தயம் கட்டுவார். அதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கோடிகள் பெட் வைக்கப்படும்.  ஆனால் ஜிஜூவுக்கும், ஸ்ரீசாந்துக்கும் மட்டுமே தெரியும் ஸ்ரீசாந்த் வீசப்போகும் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே எளிதான பந்துகளைப் போட்டு எதிரணிக்கு 14 ரன்களுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்று.

ஸ்ரீசாந்த் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே சொதப்பலான பால்கள் போட்டு 14 ரன்னுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்பது ஜிஜூவுக்கு எப்படித் தெரியும் ? ஓன்றுமில்லை. அது ஒரு கோட் வேர்ட். ஸ்ரீசாந்த் தனது இடுப்பில் வெள்ளை நிற டவலை சொருகியிருந்தால் அந்த ஓவரில் 14 ரன்களுக்கு மேல் கொடுப்பார் என்பது ஜிஜூவுக்குத் தெரியும். எனவே அதை வைத்து அவர் உறுதியாக பெட் கட்டுவார். பல கோடிகள் லாபம் சம்பாதிப்பார்.

அந்த லாபத்தில் ஒரு பங்கு ஸ்ரீசாந்துக்கு அதாவது சுமார் 40 லட்சங்கள் ஒரு ஓவருக்கு கிடைக்கும்.

இவ்வளவு அருமையான ஒரு டெக்னிக்கை கையாண்டு பல்லாயிரம் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களான ஸ்ரீசாந்த்தும், அங்கீத் சவானும் சில கோடிகள் சம்பாதிப்பதில் என்ன பெரிதாய் தவறு நேர்ந்திருக்கிறது ? ஒன்றுமில்லை ராஜஸ்தான் ராயல்ஸூக்குப் பதில் கொல்கத்தா டேர்டெவில்ஸ் ஜெயிப்பார்கள். ரசிகர்களுக்கு அதிலென்ன பிரச்சனை? அவர்களுக்குத் தேவையான த்ரில்லான அந்த நான்கு மணி நேரம் அவர்களுக்குப் பொழுது நன்றாகப் போய்விடுகிறது. யார் தோற்றால் என்ன ? ஜெயித்தால் என்ன ?

உலக நாடுகளில் ஏற்கனவே கிளப் விளையாட்டுக்கள் என்கிற பெயரில் பெரும்பணம் சம்பாதிக்கும் விளையாட்டு நிறுவனங்களின் செயலை கமர்ஷியலாக லலித் மோடி கிரிக்கெட்டில் 50 ஓவர்களை20 ஓவர்களாக சுருக்கி ஐ.பி.எல் 20-20 என்று அறிமுகப்படுத்தினார்.

9 அணிகள் ஒரு வருடத்திற்கு 90 கிரிக்கெட் மேட்ச்சுகள். இவற்றால் விளையும் வருமானம் சில ஆயிரம் கோடிகள். இந்த லாபம், வருமானம் யாருக்குப் போகிறது ? ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்துக்கு. அதன் ஓனர்கள் அல்லது உறுப்பினர்கள் யார் ? அம்பானி, மல்லையா என்கிற வெளிப்படையான முதலாளிகள் முதல் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா போன்ற பினாமி முதலாளிகள் தான் ஐ.பி.எல்லின் உரிமையாளர்கள்.

இவர்களுடைய நோக்கம் நீதி, நேர்மை வழுவாது கிரிக்கெட் என்னும் விளையாட்டின் உன்னத தருணங்களை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கொண்டு சேர்ப்பதல்ல. மாறாக எல்லோருக்கும் ஒரு நான்கு மணி நேர முடிவு தெரிய டென்ஷனாகும் ஒரு பரபரப்பான த்ரில் சினிமாவைக் காட்டுவது. அதை சினிமாவாக இல்லாமல் லைவ்வாக கிரிக்கெட்டாக காட்டுகிறார்கள்.

நீங்களே சொல்லுங்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க ஒரு சாதாரண ரசிகருக்கு இருக்கத் தேவையான தகுதி என்ன? போர், சிக்ஸ், சிங்கிள்ஸ், அவுட், ரன் அவுட், டக் அவுட் அவ்வளவுதான். அதைத் தாண்டி கிரிக்கெட் என்கிற விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி எந்த அறிவும் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஐ.பி.எல்லில் கடைசி ஐந்து அல்லது ஆறு ஓவர்களின் முன்னேயே விளையாட்டின் முடிவு தெரிந்துவிடும்படியான போட்டிகள் எத்தனை? குறைவு. மாறாக கடைசி ஓவரில், கடைசி பாலில், கடைசி ரன்னில் பார்வையாளரின் பி.பி.யை எகிறவைக்கும் க்ளைமாக்ஸ் கொண்ட ஆட்டங்களே அதிகம். ஏன்? இது வேண்டுமென்றே செய்யப்பட்டு வருகிறது என்று ஏன் ஒருத்தரும் சி.பி.ஐயிடம் போய்க் கேட்கவில்லை?

அதனால் தான் இன்று இல்லத்தரசிகள் முதல், இரும்புப் பட்டறை வைத்திருப்பவர் வரை எல்லோரும் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸின் ஸ்கோர் கேட்கிறார்கள். 'பட்டைய கிளப்பிட்டான்' என்று சந்தோஷப்படுகிறார்கள். அல்லது 'சே..சொதப்பிட்டான் ' என்று சலித்துக் கொள்கிறார்கள். இதன் ஒரே காரணம் அந்த அணியின் பெயரில் சென்னை என்று ஒரு வார்த்தை வருவதால். அதைத் தவிர அவர்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை.

இப்படி சென்னைக்கு சம்பந்தமேயில்லாதவர்கள் நடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸூக்காக பேஸ்புக் முதல், ட்விட்டர் வரை வாய் கிழிய மார்தட்டிப் பேசுபவர்கள் பல்லாயிரம் பேர். இதே போல் தான் மற்ற அணியினருக்கும் அந்தந்த மாநிலத்தின் ரசிகர்கள் தான் ஓனர்கள் போல் நினைப்பு. ஸ்ரீசாந்த் முதல் யாரோ பெயர் தெரியாத புக்கிகளை ஏதோ கொலைக் கேஸில் பிடித்தவர்களைப் போல முக்காடு போட்டு கூட்டிச் சென்ற இதே சிபிஐ மெய்யப்பன் மற்றும் அவருடைய மாமனார் சீனிவாசனின் வீட்டு வாசலில் பவ்யத்தோடு நிற்கிறது வாலாட்டியபடியே. இதைப் பற்றியெல்லாம் நம் மக்களுக்கு என்ன கவலை?

அவர்களுக்குத் தேவை நான்கு மணி நேர பரபரப்புச் சினிமா. அடுத்த நாளில் அதைப் பற்றி ரசித்துப் பேச கிடைக்க ஓரு டாபிக். இதில் ஹஸ்ஸி, சேவாக் என்று விளாசும் ஸ்டார்களின் மீதான ரசனைகள் தனி. இன்று ஊழல் வந்த போதும் அதை ஒரு டாபிக்காக மட்டும் பேச ஒரு ஆள் வேண்டும். அது ஸ்ரீசாந்த் மற்றும் அவரது உடந்தையாளர்கள். ஸ்ரீசாந்த் பெண்கள் கூட சல்லாபம் செய்யும் பேர்வழி என்று கோரமான வில்லனாக ஸ்ரீசாந்த் ஆக்க்படுகிறார். ஏனென்றால் ஏமாற்றப்பட்டதாக உணரும் ரசிகர்களின் கோபத்துக்கு ஒரு வடிகால் வேண்டுமே அதற்காகத்தான். மாறாக நீதி கிடைக்கவேண்டுமென்று அல்ல.

2008ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல்லில் ஐந்நூறு கோடி முதல் ஆயிரம் கோடிவரை ஊழல் புரிந்தார், மேட்ச் பிக்சிங்குகள் செய்தார் லலித் மோடி என்று 2010ல் புகார் கிளம்பியது. சிபிஐ கிளம்பியது. லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவ்வளவு தான் கேஸ் போட்டு அது...நடந்..து கொண்டே இருக்கிறுது. இருக்கும் ஜெ அம்மையாரின் வழக்குகள் போல. சி.பி.ஐக்காரர்கள் அப்போது கிளம்பியவர்கள் இன்னும் வந்து சேரவில்லை போல அதற்குள் அடுத்த ஊழல் பிரச்சனை ஸ்பாட் பிக்சிங். இந்த முறை சீனிவாசன் தைரியமாக அறிவிக்கிறார் தான் பதவி விலக முடியாதென்று. யாருக்கு வரும் இந்த தில்லு? உங்களுக்கோ எனக்கோ வருமா ?

இன்று 2013. இன்று வரை அந்த ஊழல் புகார்கள் என்ன ஆனது ? இந்தப் போட்டிகளை எப்படி நிஜமான விளையாட்டுக்கள் என்று நம்புவது என்பது பற்றி எந்த முட்டாள் ரசிகனுக்கும் கவலை இல்லை. அவனது சொந்தப் பணமான 500 ரூபாயை செலவழித்து டிக்கெட் வாங்கி இந்த மோசடி மேட்ச்களை பார்க்கிறோமே என்று யாருக்கும் வருத்தமும் இல்லை. இந்த ஸ்பாட் பிக்சிங்கில் இதுவரை 17 புக்கிகளை கைது செய்துள்ளதாம் போலீஸ். புக்கிகள் என்பவர்கள் தரகர்கள் மட்டுமே. பச்சையாகச் சொன்னால் புரோக்கர். கமிஷனுக்காக வேலைகள் செய்பவர். ஆனால் உண்மையில் சூதாட்டம் ஆடுபவர்கள் பலநூறு கோடிகளை சில்லறையாக எறிபவர்களே. அவர்களில் ஒருவர் கூட சி.பி.ஐயின் காமாலைக் கண்ணில் இதுவரை பிடிபடவில்லை. இனியும் பிடிபட மாட்டார்கள் என்பதுவே நிஜம்.

இதில் பல லட்சம் பேர் நம்ம வீட்டு டி.வியில் சாயங்காலம் வீட்டுக்குப் போனால் நைட் தூங்கறவரைக்கும் விறுவிறுப்பான என்டர்டெய்ன்மன்ட். அது எப்படி இருந்தா எனக்கென்ன? என்று நினைக்கும் மனப்பாங்குள்ள எளிமையான ரசிகர்கள். அவர்களுக்கும் டாஸ்மாக்கின் வாசலில் காலை ஏழு மணிக்கே வந்து நின்று கை நடுங்க சரக்கடிக்கும் குடிகாரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. டாஸ்மாக்கோ, கடாமார்க்கோ, கள்ளச் சாராயமோ எனக்கு அந்த நேரத்துக்கு கிடைச்சாப் போதும். அவ்வளவுதான்.

இப்படி தவறுகள் ஐ.பி.எல்லை ஆரம்பித்த லலித் மோடியிலிருந்து அதன் தற்போதைய உரிமையாளர்கள், கறுப்புப் பணமுதலைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வரை எல்லோரிடமும் கொட்டிக் கிடக்கும் போது, சில பல லட்சங்களுக்காக ஸ்ரீசாந்த் மற்றும் ஒரு மூவரை மட்டும் கட்டம் கட்டி இவர்கள் தான் கிரிக்கெட்டுக்கு களங்கம் கற்பிப்பவர்கள், இவர்களை ஒழித்தால் போதும் ஐ.பி.எல் தூய்மையான கங்கை நதியாக மாறிவிடும் என்று படம் காட்டும் ஊடகங்களும் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

அது ஸ்ரீசாந்த் வெறும் ஒரு பலியாடு மட்டுமே என்பதை.
ஆனால் ஓநாய்களோ...

Friday, November 23, 2012

தெய்வநாயகம் என்கிற மனிதநேய மருத்துவர்

பிரபல நெஞ்சு நோய் நிபுணரும், அமைதி இயக்கம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தவருமான டாக்டர் சி.என். தெய்வ நாயகம் அவர்கள் கடந்த திங்களன்று காலமானார். அவருக்கு வயது 70.

தெய்வநாயகம் அவர்களை சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு தண்டுவடத்தில் டி.பி. நோய் தாக்கி நடக்க இயலாமல் போனபோது,

அவருக்காக சரியான மருத்துவர்களைத் தேடியலைந்த போது தான் முதன்முதலாய் சந்தித்தேன்.

மிகப் பெரிய மருத்துவ பதவிகளை வகித்த அவர் வெறும் 50 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு தனது சேவை அமைப்பின் க்ளினிக்கில் அம்பாசடர் பல்லவா ஹோட்டல் அருகில் இருந்த கட்டிடத்தில் இலவசமாக மருத்துவம் செய்து கொண்டிருந்தார்.

அவர் நினைத்தால் அவருக்கு லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க பெரிய பணக்கார நோயாளிகள் கூட்டம் இருக்கிறது. ஆனாலும் அவர் சேவை செய்வதையே விரும்பினார். பணக்காரர்களும் கார் போட்டுக் கொண்டு, விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து அங்கு வந்து காத்து நிற்பார்கள். அவர்களுக்கும் அதே 50 ரூபாய் தான்.

இந்த 50 ரூபாயும் வெறும் பதிவுக் கட்டணமே. அதற்குப் பின்னர் எத்தனை முறை நீங்கள் சென்றாலும் இலவசமாகத் தான் பார்ப்பார்.

1942, நவம்பர் 15ல் பிறந்த தெய்வநாயகம், சென்னை மருத்துவக் கல்லூரியில் 1965ல் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் 18 மாதங்கள் பயிற்சி பெற்றார். FRCS பட்டமும் பெற்றார். அவர் உலக அளவில் புகழ் பெற்ற எடின்பர்க்கில் உள்ள ராயல் ஸ்கூல் ஆப் பிசிசியன்ஸ் (Royal School of physicians)ல் உறுப்பினராவார். பிரிட்டனின் மருத்துவ ஆய்வுக் கவுன்சிலில் ஆய்வு அதிகாரியாகவும் இருந்தார்.

1970 முதல் 2000 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சு நோய்த் துறையின் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இந்திய நெஞ்சு நோய் கழகம் என்கிற அமைப்பையும் லங் இந்தியா என்கிற இதழையும் நடத்தி வந்தார்.

சென்னை மருத்துவமனையில் கடுமையான எதிர்ப்பை மீறி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் பிரிவை உண்டாக்கினார்.
மருத்துவத்தில் அவருடைய முக்கிய பங்கு அல்லோபதி மருத்துவத்துடன் நமது நாட்டின் பாரம்பரிய சித்த மருத்துவத்தையும் கலந்து வெற்றிகரமாகப் பயன்படுத்தியதாகும். இதற்காக எம்.பி.பி.எஸ் மருத்துவரான அவர் சித்த மருத்துவப் படிப்பையும் படித்துத் தேர்ந்தார்.

சென்னை சானேட்டோரியத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சித்த மருந்து ஆய்வு ஒன்றைச் செய்தார். அதில் சுமார் 80 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சித்த மருந்தான ரஸகந்தி மெழுகு எவ்வாறு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ந்ததில் 90 சதவீத நோயாளிகள் நோயின் கடுமையிலிருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பினர். அவர்கள் எல்லோரும் வாழ்நாள் முழுதும் அந்த மருந்தை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். மற்றபடி சாதாரணமாக வாழ ஆரம்பிக்கலாம். நோய் அவர்களை கொல்வதிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.

தனது கண்டுபிடிப்புக்களை ஐ.நாவில் இருக்கும் மருத்துவ அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் சென்று சமர்ப்பித்தார். எல்லோரும் சித்தமருத்துவத்தை வியந்து பார்க்க வைத்தார். வழக்கம் போல நமது அரசின் தொடர் உதவிகள் இல்லாததில் அந்த முயற்சியை மேலும் பரவலாக்கி நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியாமல் போனது.

அவரது சித்த மருத்துவ சேவையினால் அவர் தேசிய சித்த மருத்துவக் கவுன்சிலின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகக் கண்டிப்பாகவும், கறாராகவும் பேசக் கூடியவர். எளிமையாக வேட்டி, சட்டை அல்லது குர்த்தா அணிந்திருப்பார். செயின் இணைக்கப்பட்ட கண்ணாடி அணிந்திருப்பார்.

நடக்க இயலாமல் போன எனது நண்பரை ஆட்டோவில் வைத்துக் கூட்டிப் போய் அவரை அலேக்காகத் தூக்கிச் சென்று அவரது க்ளினிக்கில் பெஞ்ச்சில் படுக்க வைத்திருந்தோம். நண்பரின் முறை வந்ததும் மிக சகஜமாகப் பேசி அவரது ஸ்கேன் மற்றும் அனைத்து ரிப்போர்ட்களையும் ஒரு முறை பார்த்தார்.

பின்பு தனது பரிசோதனையின் மூலம் கால் செயலிலழந்து போனதை பரிசோதித்தார். பரிசோதித்து விட்டு சர்வ சாதாரணமாகச் சொன்னார். 'டி.பி. கட்டி ஸ்பைனல் கார்டுல இருந்து போகிற நரம்புகளை அழுத்திட்டு சில எலும்புகளை அரிச்சுட்டு இருக்கு. சரிபண்ணிடலாம்.'

நடக்கவே இயலாது எனக் கைவிடப்பட்ட எனது நண்பர் அவரது அல்லோபதி மற்றும் சித்த மருத்துவ முறையால் ஒரு வருடத்தில் திரும்பவும் எழுந்து நடந்தார். அதற்குப் பின் நிறைய பேரை அவரிடம் போய்ப் பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறேன்.

மக்கள் டி.வியில் தினமும் மக்களின் மருத்துவ கேள்விகளுக்கு பதில் சொல்லும் தொடரை நடத்தி வந்தார். இயற்கை உணவு மற்றும் மருந்துகளையும், பக்க விளைவுகளில்லாத சித்த மருந்துகள் பற்றியும் விரிவாக சாதாரண மக்களுக்கும் புரியும்படி விளக்குவார்.

அவர் வாழ்க்கையில் நடந்ததாக பின்வரும் நிகழ்வைச் சொல்வார்கள். அவர் மிகச்சிறந்த மருத்துவ நிபுணராக அறியப்பட்ட காலம் அது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் வெங்கட்ராமன்.

ஒரு நாள் காலை தெய்வநாயகம் அவர்களின் க்ளினிக்கிற்கு அரசு மாளிகைக் கார் வந்து நிற்கிறது. க்ளினிக்கில் சில பேஷண்ட்டுகள் இருக்கிறார்கள்.

அவசரமாக காரில் வந்த அதிகாரி ஒருவர் வெங்கட்ராமன் அவர்களுக்கு உடல் நிலை சிறிது சரியில்லை எனவும் உடனே மருத்துவரை அழைத்து வர கார் அனுப்பினார்கள் என்றும் சொன்னார்.

அதற்குப் பதிலளித்த தெய்வநாயகம், தனது பேஷண்ட்டுகளை சிறிது நேரத்தில் பார்த்து முடித்துவிட்டு உடனே வருவதாகக் கூறினார். அதிகாரியோ குடியரசுத் தலைவர் விஷயம் நீங்கள் எல்லாவற்றையும் போட்டுவிட்டு உடனே வந்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்.

"ஐயா, உங்களது குடியரசுத் தலைவருக்கு உடல் நலமில்லை என்றாலும் தலை போகும் அவசரமில்லை. இதோ எனது பேஷண்ட் வயிற்று வலி என்று துடித்துக் கொண்டிருக்கிறார். இவரை கவனித்து விட்டுத் தான் என்னால் வரமுடியும்" என்று உறுதியாகக் கூறி தனது பேஷண்ட்களை கவனித்து அனுப்பி விட்டே வெங்கட்ராமனைச் சென்று கவனித்தார்.

டாக்டர் தெய்வநாயகம் போன்ற மனித நேயம் நிரம்பிய மனிதர்கள் மருத்துவர்களாய் இருந்த காலம் போய் மணிக்கு ஒரு ஆப்பரேஷன் என்று கல்லா கட்டும் மருத்துவர்களே பெருகியிருக்கிறார்கள்.

சித்த மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் கலந்து செய்ததன் மூலம் சித்த மருத்துவத்துக்கும் அங்கீகாரம் பெற்றுத் தந்த அந்த நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மூன்று மகள்களுக்கும் மற்றும் குடும்பத்தினர், அமைதி இயக்கத்தினர் எல்லோருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, February 14, 2012

காதலர் தினம்… ? கழுதைகள் தினம்… ?


காதலர் தினம்… ? கழுதைகள் தினம்?

பிப்ரவரி 14. காதலர் தினம். கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் போர்க்காலத்தில் அரசனால் திருமணத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மீறி நிறைய காதலர்களுக்கு திருமணம் செய்து வாழவைத்து அரசனால் பிப்ரவரி 14 ஆம் தேதி கொல்லப்பட்ட வேலண்டைன் என்கிற பாதிரியார் தான் இன்றைய காதலர் தினத்தின் வரலாற்று மூலமாக கொள்ளப்படுகிறார்.

நம்ம ஊரில் நகை வியாபாரத்தைப் பெருக்க நகைக் கம்பெனிகள் அட்சய திரிதியில் நகை வாங்கினால் வருடம் பூராவும் செல்வம் கொழிக்கும்என்று திரித்து விட ஆரம்பித்து இன்று அட்சய திரிதியை நாளன்று ஆலூக்காஸ்கள் முதல் லலிதா வரை எல்லா நகைக் கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. இன்று அந்த முட்டாள்த் தனத்தை நினைத்து யாருக்கும் வருத்தமில்லை. மாறாக அன்று சீப்பாக நகை கிடைக்கிறதே என்று நகை வாங்கப் போகுபவர்களே அதிகம்.

இதே வேலை தான் காதலர் தினத்தைப் பரப்புவதிலும் நடந்திருக்கிறது 1990 களிலிருந்து. டைம்ஸ் ஆப் குண்டியாவிலிருந்து, தி குந்து நாளிதழ் வரை எல்லோரும் காதலர் தினத்துக்கு ஸ்பெஷல் எடிஷன் போடுகிறார்கள். அப்படி என்னய்யா காதல் மேல் உனக்கு வெறுப்பு என்று என்னுடன் சண்டைக்கு வராதீர்கள். காதலிப்பது தனி மனித உரிமை. அதை ஒரு நாளில் கொண்டாடுவது என்பது சகஜம் தானே என்று நீங்கள் கேட்பீர்கள்.

உங்கள் காதலை ஒரு கச்சாப் பொருளாக ஆக்குவதன் மூலம் காதலர் தினத்தன்று ஹோட்டலில் சிறப்பு பார்ட்டி, சிறப்பு வேலண்டைன் கார்டுகள், சிறப்பு சினிமாக் காட்சிகள், சிறப்பு பிங்க் கலர் ஜட்டிகள், பல்வேறு கம்பெனிகள் ஸ்பான்ஸர் செய்து நடத்தும் கலகல புரொக்ராம்கள் என்று பலவிதங்களாக கல்லா கட்டுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் கார்ப்பரேட்டுகளும், முதலாளிகளும் விளையாடும் இந்த விளையாட்டு உங்கள் வாழ்வையும் விளையாட்டாக்கிவிடும்.

காதல் என்பதே அலுத்துப் போகும் வரை அனுபவிப்பது வரைஎன்று புது விதமாக வரையறை செய்யப்பட்டிருக்கும் காலம் இது. சாரு நிவேதிதா சொல்லும் செக்ஸ் வறட்சி நிறைந்த தேசம் இது என்பதை நம்புவதே கடினம். சட்டசபையிலேயே மினிஸ்டர்கள் செல்போனில் ப்ளு பிலிம் பார்க்கும்படி முன்னேறிவிட்ட இன்று காதல், காமம் இவை இரண்டுக்கும் உள்ள மெல்லிய கோடு அழிக்கப்பட்டு விட்டது. இது நாள் வரை காதல் களியாட்டங்களாக இருந்த காதல் உறவு காமக் களியாட்டமாக உச்ச பட்ச வடிவெடுக்க இந்த நாள் தற்போது வழி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குப் பிறகு என்றும் காம தினம் தான்.  

மனிதனுடைய அடிப்படை உணர்வு(Instinct) அனுபவித்தலை எப்போதும் நாடும் குணமுடையது. மூன்று வயதுக் குழந்தை தனது குஞ்சைப் பிடித்து இன்பம் காணுவது இயல்பானது, மனிதன் மிருகமாயிருந்த காலத்திலிருந்து நம்மைத் தொடர்வது இந்த சுகஉணர்வு அனுபவித்தல் குணம். இதை மனிதனால் கட்டுப்படுத்த முடிவது கடினம். இது போன்ற களியாட்ட மனோபாவத்திலிருந்து சமூகத்தை சமூகநல விஷயங்களை நோக்கித் திருப்புவதற்கு நமது சமூக அமைப்பு மற்றும் அது விதிக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பு முறைகள் உதவி செய்கின்றன. உதாரணமாக குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்குள்ளேயே உடலுறவு கொள்வதை தவிர்க்க உண்டாக்கப்பட்ட சமூக அமைப்பு தான் தாய், தந்தை, மகள், சகோதரன் போன்ற உறவு முறைகள். இப்படித்தான் நாம் நமது மிருகத்தனமான இஷ்டப்படி வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து சமூக வயமாகியிருக்கிறோம்.

போஸ்ட் மாடர்னிசம் என்ற நவீன கோட்பாடு கோட்பாடு சிதைத்தலை’(deconstruction) அடிப்படையாகக் கொண்டது.
அது அதிகாரத்தைச் சிதைத்தல் என்ற பார்வையில் சமூக அமைப்பின் முதுகெலும்பான விஷயங்களையும் சிதைத்தது. போஸ்ட் மாடர்னிசம் இதயத்தைச் சிதைத்தலுக்கு சமமாக சுண்டு விரலின் காயத்தை வைத்தது. போஸ்ட்மாடர்னிசத்தின் விளிம்பு நிலைகளின் மேலான கவன ஈர்ப்பு, அதிகாரத்தின் ஒரு பக்கச் சார்பான பார்வையை ஓரளவு சமனப்படுத்தினாலும் மறுபுறம் அமைப்பை கலைத்துப் போட்டுவிட்டது.


இன்று, நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளன் என்று உரத்துச் சொல்வது அங்கீகாரம் வேண்டி என்பது போய் பேஷன் என்பதாக மாறியிருக்கிறது. காதல் வாழ்க்கைத் துணைத் தேடலுக்கு என்பது மாறிப் போய் நேரத்தை இன்பமாகக் கழிக்க’(time pass companion) என்பதாக மாறி நிற்கிறது. உடை என்பது எந்நேரமும் கிளர்ந்து விடும் காமத்திலிருந்து விடுபட உடலை எதிர்பாலிடமிருந்து மறைக்கஎன்பது மாறிப் போய் எதிராளியை காமம் கொள்ள வைக்கஎன்பதாக மாறி நிற்கிறது. குடித்தல் என்பது சந்தோஷம் கொள்ளும் சந்தர்ப்பங்களில் என்பது மாறிப் போய் சந்தோஷம் கொள்வதற்காகவே குடிப்பது என்பதாக மாறி நிற்கிறது. காமம் என்பது நம்மைப் பீடித்துக் கொள்ளும் விஷயம் எனவே அதை கட்டுக்குள், வரைமுறைக்குள் வைக்கவேண்டும் என்கிற எண்ணம் போய் கட்டுக்கடங்காமல், வரைமுறையற்ற காமம் அனுபவிக்க வேண்டும் என்று நிற்கிறது.

இவை எல்லாம் நிகழ முக்கிய காரணம் கட்டுப்பாடின்மையை நோக்கிச் செல்லும் கலாச்சாரம். நிறுவனக் கட்டுப்பாடும் இல்லாமல் சுய கட்டுப்பாடும் இல்லாமல் வாழ நம்மைத் தள்ளும் நுகர்வுக் கலாச்சாரம். சுய கட்டுப்பாடின்றி நுகர்வு வெறிக் குட்பட்ட சமூகத்தில் வாழும் ஒரு மனிதன் அதன் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் நிறுவனத்திடம் (அரசு, கார்ப்பரேட் etc) தனது வயிற்றுப் பிழைப்புக்கு அண்டி நிற்கும் பிச்சைக் காரத்தனத்தையும், வெளியில் சுயவாழ்க்கையில் அதன் இன்பக் கலாச்சாரங்களைத் தாண்டி யோசிக்க இயலாத மனோபாவத்தையும் கொடுத்துள்ளது. காதலர் தினத்தை எதிர்த்துப் பேசியதற்காக ஒரு அரசியல்வாதிக்கு பிங்க் கலர் ஜட்டி அனுப்பிய எத்தனை பேர் பெட்ரோல் விலை உயர்வுக்காக நடந்த ஸ்ட்ரைக் அன்று தன் எதிர்ப்பைக் காட்டி அலுவலகத்துக்குப் போகாமல் இருந்திருப்பார்கள்?

இது போன்ற மேற்கத்திய கலாச்சாரத்தின் ஊடுருவலை எதிர்த்து நிற்கவேண்டிய தேவையும் இந்திய (அல்லது அந்தந்த மாநிலத்திய) கலாச்சாரத்தின் தேவையாயிருக்கிறது. ஆனால் இங்கிருக்கும் பெரும்பாலான சிந்தனாவாதிகள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்களும் உட்பட பலருக்கு நமது கலாச்சாரத்தை இழிவான, மூடநம்பிக்கைகள் நிறைந்த, பிற்போக்குத் தனமான கலாச்சாரமாக மட்டுமே பார்க்க முடிகிறது. இவர்கள் எங்கே மேற்கத்திய கலாச்சாரத்துக்கு எதிரான நம் கலாச்சாரத்தை முன் நிறுத்தப்போகிறார்கள் ? அதனால் தான் பிஜேபி, சிவசேனா, போன்ற அடிப்படைவாதிகளும், பயங்கரவாதிகளும் கலாச்சாரத்தைக் காக்கவென்று சொல்லிக் கொண்டு காதலர் தின எதிர்ப்பு வன்முறைகளில் ஈடுபட்டு ஆதாயம் தேடுகிறார்கள். அதே சமயத்தில் உலகளாவிய (Globalisation) கலாச்சாரத்தை முன்னிறுத்தும் கார்ப்பரேட் அரசாங்கம் மற்றும் மேற்கத்திய சிந்தனையே உயர்ந்தது என்று துதி பாடும் சிந்தனையாளர்கள் காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்ப்போரை பிற்போக்குவாதிகள் என்று எளிதில் பிராண்ட் செய்யவும், காதலர் தினத்தை புரோமோட் செய்யவும் முடிகிறது.

எனவே, என்னதான் செய்யலாம்ங்கறே ?’ என்று நீங்கள் கேட்பீர்களேயானால், முதலில் காதலர் தினத்தை ஆர்ப்பாட்டமாக, கேளிக்கையாகக் கொண்டாடாதீர்கள். அப்படியே கொண்டாடினாலும் அதை பார்களிலும், பப்களிலும், ஹோட்டல் பெட்ரூம்களிலும் கொண்டாடாதீர்கள். உங்கள் காதலரை குடும்பத்தினருக்கு நண்பராக அறிமுகப் படுத்துதல், நண்பர்களுக்கு அறிமுகப் படுத்துதல், முக்கியமானவர்களுக்கு உங்கள் காதலைத் தெரிவித்தல் போன்ற காதலை உறுதிப்படுத்தும் விஷயங்களைச் செய்யுங்கள். காதல் என்பது நமது எதிர்கால வாழ்க்கையில் கூடவே வரப்போகும் ஒரு துணையைத் தேடும் முக்கியமான விஷயம், எனவே இது மாதிரி ஆட்டம் பாட்டம் என்பது தான் காதல் என்ற பார்வையைத் தவிருங்கள். 

முக்கியமாக காதல் என்றதும் தடவிக் கொள்ளுதல், பீச்சில் உடம்பு ஒட்டிக் கிடத்தல், தியேட்டரில் உறுப்புகளைத் தொட்டு இன்பங் கொள்ளுதல், பார்க்கில், பஸ்ஸில், தெருவில், ரயிலில், பொது இடங்களில் காம முன் விளையாட்டுக்கள் செய்தல், பாரில் இரண்டு பேரும் குடித்து விட்டு உடைகளை அவிழ்த்துப் போட்டு ஆடுதல், ஹோட்டல் அறைகளில் காதல் என்ற பெயரில் உடலுறவின் உச்சங்களை தேடல் என்பது போன்ற கேவலமான மேற்கத்திய பாணி விஷயங்களை நிறுத்துங்கள். உங்கள் காதலை பகிரங்கப் படுத்துங்கள். பொது இடங்களில் உங்கள் காமத்தை பகிரங்கப் படுத்தாதீர்கள்.

உங்கள் காதல் காமம் என்ற நிலையையும் இப்போதே சேர்த்துப் பயணிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தால் அதை அடிக்கடி செய்யாதீர்கள். அப்படிச் செய்ய ஆரம்பித்தால் அது இனிமேலும் காதல் இல்லை. அது இணைந்து வாழ்தலின் ஆரம்பம் என்பதை உணருங்கள். அதன் உடனடி நிகழ்வாக. திருமணம் போன்ற ஒப்பந்த முறை மணவாழ்க்கையாக மாற்ற விரைவாக முயலுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் விரைவில் உங்கள் காதலுடன் காமம் இணைந்த வாழ்க்கையானது வெறும் காமம் நிறைந்த வாழ்க்கையாக நாளடைவில்(நாட்கள், மாதங்கள், வருடங்கள்..) சிறுத்து பின் முடிவில் உடைந்து போகும்; அடுத்த காதலைத் தேடிப் போகும். அது தான் மனித மனத்தின் இயற்கை.

இறுதியாக ஒன்று. காமம் என்பது எத்தனை விதமான பெண்களுடன் / ஆண்களுடன் எத்தனை விதமாகப் புணர்ந்தாலும் தீர்ந்து விடாது. ஏனென்றால் அது ஒரு அன்றாடத் தேவை. அப்படிப் புணர்ந்து திரிந்தால் உங்கள் வாழ்க்கை காமத்தை வெல்வதிலேயே கழிந்து போகும். லட்சியங்களும், உன்னதங்களும், அறிவியலும், மெய்ஞானமும் உங்கள் கண்களில் தென்படாமலே வாழ்க்கை முடிந்து போகும். காதல் என்பது காமத்தின் முன்னோடி. காமத்தின் உயர்ந்த வடிவம். எனவே காதல் செய்யும் காலம் நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதி வரை உங்களைத் தொடரும் இணையை இன்று தேர்ந்தெடுக்கும் காலம் மட்டுமே என்று உறுதியாக எண்ணுங்கள்.


நாளை நம் சமூகம் ஒரு ஆரோக்கியமான காதல் கொள்ளும் சமூகமாக வளர இன்றைய காதலர்களான நீங்களே அதன் மாற்றத்தின் முதல் கல்லாக இருங்கள்.

நேர்மை நிரம்பிய, வாழ்வை உறுதியாக எதிர்கொள்ளும் இளைஞர்களாகவும், யுவதிகளாகவும் மாறப்போகும் உங்களுக்கு என் சார்பாக தமிழ்க் காதலர் தின வாழ்த்துக்கள்.

இதெல்லாம் சரிதான்.. ஆனாலும் எதிர் பாலின் தொடர்ந்த தூண்டுதல்களினாலும், சுற்றுப்புற சூழல்களாலும் என் மனம் ஆசைகளில் அலைபாய்கிறதே, கட்டுப் படுத்தவே முடியவில்லையே என்று சொல்ல நினைப்பவர்களுக்கு என் பதில்... 'ஒன்றும் செய்ய முடியாது.. விட்டு விடுங்கள்.. மேற்கத்திய பாணியில் என்ஜாய் பண்ணுங்கள்..'. ரொம்பவும் குற்ற உணர்ச்சி அடைவதும் நம்மை பாதிக்கவே செய்யும். அதனால் மேலே நான் சொன்ன அத்தனையையும் மறந்து விடுங்கள். என்ஜாய் பண்ணுங்கள் வாழ்க்கையை. மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு கிராமங்கள் வரை பழகும் உலக மயமாதல் வாழ்க்கையில் தனித மனிதனாக நானும் நீங்களும் எதுவும் கிழித்துவிடமுடியாது.

Saturday, December 24, 2011

குடி: கெளடில்யன் முதல் டாஸ்மாக் வரை

குடி: கெளடில்யன் முதல் டாஸ்மாக் வரை
06-டிசம்-2011
”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”
கேட்க ரொம்பப் புரட்சியாய் தெரியும் இந்த வாசகம் எதற்குத் தெரியுமா ? மஹாராஷ்ட்ராவும் டில்லியும் தங்கள் மாநிலத்தில் குடிப்பவர்களின் வயது 25 என்று ஆக்கிவிட்டதை எதிர்த்துத்தான் இந்தப் புரட்சி வாசகம். வாசகத்தை வழங்கியது நம்ப டைம்ஸ் ஆப் இண்டியா(அமெரிக்கா?)’. இது தான் கார்ப்பரேட்கள் இன்றைய இளைஞர்களுக்கு வழங்கும் சுதந்திரப் பார்வை. தண்ணியடிக்கிறது ஏன் இஷ்டம். நீ (கவர்மெண்ட் தான்) யார் அதைக் கேக்குறது ?’
குடித்துவிட்டு மன்மோகனை மானாவாரியாகத் திட்டினாலும் மெளனமாகக் கடந்து செல்லும் அதே காவல்துறை, நான்கு பேர் சேர்ந்து குடிக்காமல் ஸ்டெடியாக ரோட்டில் நின்று வால்மார்ட்டுக்கு வால்பிடிக்கும் மன்மோகன் என்றால் நம்மைப் பிடித்து ஒரு பத்து நாள் உள்ளே வைப்பார்கள். ஏன் இந்த வித்தியாசம் ?
குடித்திருப்பவன் பலமற்றவன். தனது இயலாமையை மறக்க அவன் குடிக்கிறான். இயலாமையை மறைக்க அவன் ப.சி முதல் பக்கத்துவீட்டு பால்காரன் வரை திட்டுகிறான். அதனால் ப.சிக்கும் பங்கமில்லை, பால்காரனுக்கும் உபத்திரவம் இல்லை.
மக்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாக இருப்பது அரசுக்கு நல்லது. அப்போது தான் அதை நீங்கள் எதிர்த்துக் கேள்வி எழுப்ப மாட்டீர்கள்; போராட விரும்ப மாட்டீர்கள். பெட்ரோல் விலையை என்ன பெட்ரோமாக்ஸ் விலை பத்தாயிரம் ரூபாய் என்றாலும் பேசாமல் வாங்கிப் போவீர்களா இல்லையா ? குவார்ட்டர் கிடைத்தால் பத்தாதா ? வேறென்ன வேண்டும் ?
விடுதலை டவுசர், அறிவுக் கொழுந்து, பகுத்தறிவுப் புலி, சுதந்திரமான சுப்பாண்டி என்கிற பெயர்களாலும் படித்த, அறிவுள்ள ஆண்களும், பெண்களும் குடிக்கின்றனர். என்னிக்காவது குடிச்சால் பரவாயில்லை. என்னிக்குமே குடிப்பவர்களாக இருந்தா என்ன பண்றது. செத்த அன்னிக்கு பீர் ஊத்த வேண்டியதுதான்.
அரசே ஏற்று நடத்தி மக்களை நாசமாவும் ஆக்கி காசும் பார்க்கும் இந்தக் குடி அடிமை டெக்னிக் ஒன்றும் புதியதல்ல. சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் தான் இவர்களுக்கு கைடு(Guide).
அதிகமாக குடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்கசுராதயக் ஷாஎன ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் அதயாக் ஷாஎனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்க வேண்டும் என்கிறான். மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என மது வணிகத்தை அரசுடைமையாக்கினான். அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி, மேலே சொன்ன குழுவுக்கு உரியது. இக்குழு சமுகமெங்கும் கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைக்க வேண்டும். மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டியுள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். குறிப்பிட்ட விழாக்காலங்களில் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விதிக்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் வீடுகளில் குடிக்கலாம்…” – இது அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட குடி நெறிமுறைகள்.
சோழர்கள் காலத்தில் குடிப்பவர்களிடமிருந்து பூச்சி வரி வசூலிக்கப்பட்டது.
1793-94 ல் தஞ்சை மாவட்டத்தில் ஆங்கிலேய அதிகாரிகளால் வசூலிக்கப்பட்ட கள் வரி 1088 ரூபாய்(700 சக்கமா).
1859ல் பூனாவின் பெரிய சாராய தாதாவான துபாஷ் ஆங்கிலேய அரசு நம் மக்களிடம் விற்பதற்காக 10 ஆயிரம் பேரை வைத்து சாராயம் காய்ச்ச ஆரம்பித்தான்.
1898ல் ஸ்காட்லாண்டைச் சேர்ந்த மெக்டொவல்ஸ் தென்னிந்தியாவில் சரக்கு தயாரிக்க ஆலையை நிறுவியது.
1902-03 ல் அதே தஞ்சை மாவட்டத்தில் கள் வரியாக கிடைத்தது 9,28,000 ரூபாய்.
2010-11 களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் குடியால் வந்த வருமானம் 14,965 கோடி ரூபாய்.
2011 – 12-ல் 2 ஆயிரம் இலட்சம் பீர் பெட்டிகளும், 1,100 இலட்சம் விஸ்கி பெட்டிகளும், 540 இலட்சம் ரம் பெட்டிகளும், 280 இலட்சம் பிராந்தி பெட்டிகளும், 20 இலட்சம் வோட்கா பெட்டிகளும், 60 இலட்சம் ஜின் பெட்டிகளும் இந்தியாவில் விற்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் 48 ‘குவார்ட்டர்அல்லது 24 ‘ஆஃப்அல்லது 12 ‘ஃபுல்இருக்கலாம்.
இந்தியாவில் இப்போது 35 கோடிப் பேர் குடிகாரர்கள்.
நாம ஸ்..ஷ்..டெடியாத் தான் போய்க்கிட்டு இருக்கோம்.
மேலும் தெளிய படியுங்கள்... http://www.vinavu.com/2011/11/19/drunk/

Saturday, November 12, 2011

உங்களுக்கு 250 பேஸ்புக் நண்பர்கள் இருக்கலாம்... ஆனால் 2பேர் மட்டுமே நெருங்கிய நண்பர்கள்.

உங்களுக்கு 250 பேஸ்புக் நண்பர்கள் இருக்கலாம்... ஆனால் 2பேர் மட்டுமே நெருங்கிய நண்பர்கள். 
- வென்ஸி லூங்க்(Wency Leung)


உங்களுக்கு கணக்கிலடங்கா பேஸ்புக்(facebook) நண்பர்களும், டிவிட்டர் பின்தொடர்பவர்களும் (twitter followers) இருக்கலாம்.
ஆனால் அவர்களில் எவ்வளவு பேர் உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் ?

சமீபத்தில் அமெரிக்காவில் 2000 பேருக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பெற்ற ஒரு ஆய்வின்படி ஒவ்வொருவருக்கும் சராசரியாக 2.03 நெருங்கிய நண்பர்களே உள்ளனர்.

இந்த ஆய்வை நடத்திய கார்னல் பல்கலைக்கழகத்தைச்(Cornell University) சேர்ந்த டாக்டர் மாத்யூ ப்ராஷ்ஹியர்ஸ் இன் (Mathew Brashears) கூற்றுப்படி,இந்த 2.03 பேர் தான்( 2 பேர் தான்) நீங்கள் ஆத்மார்த்தமான நண்பராகக் கருதும் நபர்கள்; உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும் போது நீங்கள் நாடும் முதல் நபர் இவரே. இந்த நெருங்கிய நண்பர்களின் எண்ணிக்கை 1985ல் மூன்றாக இருந்தது. இப்போது 2 ஆகக் குறைந்திருக்கிறது

ஒரு இணையதள ஓட்டெடுப்பில், டாக்டர் ப்ராஷ்ஹியர்ஸ் கடந்த ஆறுமாதங்களில் ஒருவர் தனது முக்கியமான விஷயங்களை பறிமாறிக்கொண்ட நபர்களைப் பட்டியலிடும்படி கேட்டுக்கொண்டார். பதிலளித்தவர்களில் 48 சதவீதம் பேருக்கு ஒரே ஒரு நெருங்கிய நண்பரே இருந்தார். 18 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்கள் 2பேர் இருந்தனர். 29 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்கள் எண்ணிக்கை 2பேருக்கு மேல் இருந்தது. 4 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்களே இல்லை.

இம்முடிவுகளிலிருந்து மனிதனது சமூக வட்டங்கள் குறுகுகின்றன என்று நினைக்கவேண்டியதில்லை. மாறாக நாம் நமது நண்பர்களையும், அறிமுகமானவர்களையும் வெவ்வேறாக வகைப்படுத்துகிறோம் என்று பொருள் கொள்ளலாம். சமூக தொடர்புத் தளங்கள் நம்மை மிக அதிகமான நபர்களுடன் தொடர்புகொள்ள வாய்ப்பளித்திருந்தாலும், மிக நெருக்கமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள நாம் மிகச் சிலரையே தேர்ந்தெடுக்கிறோம்.

இதன் பொருள் நாம் சமூகத் தனிமை அடைகிறோம் என்பதல்ல. பதிலாக நம் நண்பர்கள் நமக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள்; நமக்கு அறிமுகமானவர்களோ அறிவுரைகள்(மட்டும்) வழங்குகிறார்கள்.

ஒரு விஞ்ஞானியின் கருத்துப்படி நமது மூளையின் செயல்பாட்டுத்திறன் நமது நட்புத்தொடர்புகளின் எண்ணிக்கையை பாதிக்கிறது. 2010 ல் வெளிவந்த ஒரு மனிதருக்கு எவ்வளவு நண்பர்கள் தேவை?(How many friends does one person need ?) என்கிற புத்தகத்தில், அதன் ஆசிரியரும் பரிணாம உயிரியல்(Evolutionary Biologist) ஆராய்ச்சியாளருமான ராபின் டன்பர் (Robin Dunbar) சொல்லியிருப்பதன் படி, நமது மூளையால் ஒரே நேரத்தில் அதிக பட்சம் 150 உறவுத்தொடர்புகளை(relationships) மட்டுமே நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு மேல், எவ்வளவு அதிக நண்பர்கள் நமக்கு உண்டோ அவ்வளவு குறைவாகத் தான் நமக்கு அவர்களைப் பற்றித் தெரிந்திருக்கமுடியும். இந்த 150-நண்பர்கள் என்கிற வரையறையானது ஒரு அலைவரிசையில் அமைக்கப்படும் நமது உறவுத் தொகுப்புகளை கணக்கில் கொண்டு சொல்லப்படுகிறது. இக்கற்றையின் ஒரு புறத்தில் 5 பேர் வரைகொண்ட நம் நெருங்கிய நண்பர்கள் வருவார்கள்; இவர்களிடம் வாரத்தில் ஒரு முறையாவது நாம் பேசிவிடுகிறோம். இன்னொரு முனையில் ஒரு நூறு பேர் வரை கொண்ட அறிமுகமானவர்கள்; இந்த 100 பேரிடம் நாம் வருடத்தில் ஒரு முறைதான் பேசுகிறோம். அல்லது அடிக்கடி நமக்கு தேவையேயில்லாத / சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி மட்டுமே  பேசுகிறோம்.

மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உங்கள் வாழ்க்கையின் நண்பர்களைப் பற்றி சரியாக பிரதிபலிக்கிறதா ?
---------------------
இக்கட்டுரை பின்வரும் இணையதளப் பத்திரிக்கைக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. 
http://www.theglobeandmail.com/life/the-hot-button/you-may-have-250-facebook-friends-but-only-two-are-close-pals-says-study/article2230818/

- தமிழில் அம்பேதன்.
 

Friday, December 31, 2010

சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் – பி.சாய்நாத்

சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் – பி.சாய்நாத்

மெர்சிடீஸ் பென்ஸ் என்ற சொகுசு கார்களின் வரவால் மராத்வாடா மாநிலத்தில்ஊரக மறு மீட்சி என ஊடகங்கள் கொண்டாடும் அதே நேரத்தில் மறு மீட்சி ஆண்டில் விவசாயிகள் 17,368 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது
பிற்படுத்தப்பட்ட மராத்வாடா மண்டலத்திலுள்ள அவுரங்காபாத்தில் அக்டோபர்  மாதத்தில் மட்டும் 150 மெர்சிடீஸ் பென்ஸ் சொகுசு கார்கள் ரூ 65 கோடி அளவிற்கு வாங்கப்பட்டதால் ஊடகங்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்தது.  பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சுமார் 40 கோடி அளவிற்கு கார் வாங்குவதற்கு கடனுதவி செய்துள்ளது.  அவுரங்காபாத்  மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் திரு டேவிதாஸ் துல்சாபுர்கர் இதை தெரிவித்ததோடு வட்டி விகிதம் 7 சதவீதம் என்றார்.
பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில் “இந்த வியாபாரத்தில் பங்கு வகித்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இனிவரும் நாட்களிலும் இதுபோன்றவற்றிற்கு சேவை செய்ய காத்திருக்கிறோம் “என்றார்.

விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில், பென்சு காருக்கு கடன் வழங்க போட்டி!
இந்த மெர்சிடீஸ் சொகுசு கார் பரிவர்த்தனை என்பது ஏறக்குறைய மராத்வாடா மாவட்டத்திலுள்ள பத்தாயிரக்கணக்கிலான வீடுகளின் வருட வருவாய்க்கு ஈடானது.  எண்ணிலடங்காத பல விவசாயிகள் தங்கள் விவசாயத் தொழிலுக்கு கடன் பெற இயலாமல் போராடி வருகின்றனர். இந்திய விவசாயிகள் 7 சதவீத வட்டியில் கடன் பெறுவதற்கு ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பதுடன், பத்தாயிரக் கணக்கில் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளது.  பெரும்பாலும் விவசாயிகளுக்கு கடன் என்பது எழுத்தில் மட்டுமே உள்ளது.
2005க்கு முன்பாக யார் வங்கிக் கடன் பெற்றாலும் வட்டி விகிதம் என்பது 9 முதல் 12 சதவீதமாக இருந்தது.  பெரும்பாலானவர்கள் விவசாயம் சாராத கடனாக கூடுதல் வட்டியில் பெற நிர்பந்திக்கப்பட்டனர்.  ஒரு சொகுசுக் காரை வாங்க 7 சதவீத வட்டியும், விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை வாங்கு 12 சதவீத வட்டியும் என்பது அங்கே யதாரத்தமாக இருந்தது.  இதனால் புற்றீசல் போல் தோன்றிய சிறு சிறு நிதி நிறுவனங்கள் 24 முதல் 36 சதவீத வட்டி மற்றும் அதற்கும் கூடுதலாக வட்டி பெற்றுக் கொண்டு கடன்கள் வழங்கின.
கடன் தொல்லையினால் பட்டினிக்கு ஆளான விவசாயிகள் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை நோக்கி திரும்ப ஆரம்பித்தனர்.  1991இலிருந்து 10 ஆண்டு காலத்தில் இந்திய விவசாயிகள் தங்கள் நிலங்களை, பண்ணைகளை அடகு வைப்பது என்பது 26 சதவீதத்திலிருந்து இரட்டிப்பாகி 48.6 சதவீதமாகியது.  இது கூட குறைத்து மதிப்பிடப்பட்ட அலுவல் ரீதியான எண்ணிக்கைதான்.  அதே நேரத்தில் அரசின் கொள்கை சார்ந்த பயங்கர தாக்குதல்களையும் விவசாயிகள் சந்திக்க நேர்ந்தது.
ஒரு புறம் விவசாய விளைபொருளுக்கான உற்பத்தி செலவு என்பது சந்தை சார்ந்த விலை என அதிகமாகவும், மறுபுறம் விளைந்தவற்றை விற்க செல்லும் போது வணிக ரீதியாக விலைகுறைந்தும், வலிமைமிக்க தரகு முதலாளிகளால் குறைக்கப்பட்டும் விலைபோயின.  எனவே விவசாயத்தில் முதலீடு என்பது முற்றிலும் சரிந்தது.  வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தருவதிலிருந்து மாறி நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை முறையை உயர்த்திக் கொள்வதற்கு கடன் வழங்க துவங்கியதால், விவசாயிகள் கடன் தொல்லையால் பிழிந்தெடுக்கப்பட்டனர்.  கடந்த 13 ஆண்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் கடன் தொல்லையினால் இறந்தவர்களே மிக அதிகம் (அத்தகைய நசுக்கும் நடவடிக்கையில் சிறு சிறு நிதி நிறுவனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன)
விவசாயக் கடன்கள் பல கடத்தப்பட்டுவிட்டன.  ஆகஸ்ட்டு 13 இந்து நாளிதழில் வெளியான விபரம் அந்த அதிர்ச்சி தரும் தகவலை நமக்கு காண்பிக்கிறது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் 2008இல் வழங்கப்பட்ட விவசாயக் கடனில் பாதி ஊரக வங்கியினால் வழங்கப்படாமல் நகர மற்றும் மாநகரக் கிளைகளினால் வழங்கப்பட்டுள்ளது.  சுமார் 42 சதவீதக் கடன் மும்பையில் வழங்கப்பட்டுள்ளது.  அதுவும் சிறு விவசாயிகளுக்கு கிடைக்காமல், வலிமையின் அடிப்படையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.
தேசிய குற்றப் பதிவு குழுமத்தின் பதிவுகள் பல ஊடகங்களுக்கு வந்த போதிலும் சொகுசுக் கார் விற்பனையை மிகவும் பெரியதாகவும் ஊரக மறு மீட்சி போலவும் ஊடகங்களினால் கொண்டாடப்பட்டது. ஊரக மறுமீட்சி என்று சொல்லப்பட்ட 2009இல் அதீதமாக அதிகரித்து ஏறக்குறைய 17,368 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.  அவை 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகம் என்பதுடன், 2004இலிருந்து பார்க்கையில் மிகவும் மோசமானதாகவும், உள்ளது.  இவற்றோடு சேர்த்தால் 1997 முதல் 2009 வரை விவசாய தற்கொலை சாவுகள் 2,16,500 ஆகிறது.  இந்த தற்கொலைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ள போதிலும், விளை பொருளுக்கு விலைகிடைக்காமல் கடனில் வாழ்வை முடித்துக் கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை எச்சரிக்கத்தக்க வகையில் மிக அதிகமாக உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான தேசிய குற்றப் பதிவு குழுமம் விவசாயிகள் தற்கொலை சம்பந்தமான பதிவுகளை 1995 முதல் சேகரித்துள்ளது.  ஆனால் ஆராய்ச்சியாளர்கள் 1997 முதல் உள்ள பதிவுகளையே கவனத்தில் கொள்கின்றனர்.  ஏனெனில் 1995 மற்றும் 1996ஆம் ஆண்டு பதிவுகள் முற்றுப் பெறாமல் அரைகுறையாக இருக்கின்றனவாம். 1995இல் இந்த கணக்கெடுப்பு எடுக்கும் முறை புதியது என்பதால் இரண்டு பெரிய மாநிலங்களில் அதாவது தமிழ்நாடும், ராஜஸ்தானும் அந்த வருடத்தில் தங்கள் மாநிலத்தில் தற்கொலையே இல்லை என தெரிவித்திருந்தன.  ஆனால் 2009ல் பார்க்கும் போது அந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் 1900 விவசாய தற்கொலைகள் பதிவாகியுள்ளது.  1997 லிருந்து எல்லா மாநிலங்களும் பதிவுகளை முழுமையாக கொடுத்துள்ளன.
தேசிய குற்றவியல் பதிவு குழுமத்தின் 2009ஆம் ஆண்டு பதிவுகள் தற்போது முற்றுப் பெற்றுள்ளது.  ஆனால் 2010ல் 16,000 விவசாயிகள் தற்கொலை இருக்கலாம் என நாம் அனுமானிக்க முடிகிறது. கடந்த 6 ஆண்டு சராசரியைப் பார்க்கிற போது ஆண்டிற்கு 17,104 உயிரிழப்புக்கள் நேரிடுகிறது.  இந்த 16,000 ஐயும் 2,16,500 உடன் சேர்த்துக் கொண்டு, 1995/96ஆம் ஆண்டுகளுக்கு நிறைவடையாத பதிவுகளாக உள்ள 24,449 தற்கொலைகளையும் சேர்த்தால் 1995 முதல் 2010ற்குள் 2,56,949 உயிரிழப்புக்கள் வருகின்றது.  ஒரு கணம் இந்த எண்ணிக்கையை நினைத்துப் பார்ப்போம்.
அதாவது 1995இலிருந்து கால் கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.  அதாவது இந்த நாட்டில் கடந்த 16 ஆண்டு கால மனிதகுல வரலாற்றில் மிக அதிகமான தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதாவது இந்த தற்கொலைகளினால் ஏறக்குறைய ஒன்றரை கோடி குடும்ப உறுப்பினர்கள் மன வேதனைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.  கோடிக்கும் அதிகமானோர் தற்கொலையை நோக்கி துரத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான கிராமத்தினர் தங்கள் அருகிலேயே இத்தகைய சோகமான முடிவுக்கு தள்ளப்படுவதை அன்றாடம் கண்ணுறுகின்றனர்.  அரசின் கொள்கைகள் மாறாததால் இத்தகைய முடிவைத் தேடிக் கொள்வது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  முதன்மையானதாக கருதப்படும் இந்தியர்களில் எங்களை தனித்து விடுவித்து விடுங்கள் என்ற இந்த இதயமற்ற போக்கினை கற்பனை செய்து பார்க்க இயலாததாக உள்ளது.
சொல்லப்போனால் இந்த பதிவுகளும் குறைத்து மதிப்பிடப்பட்டவைகளின் துவக்கம்தான்.  பல பெரிய விவசாய குழுக்களெல்லாம் இந்த உள்ளூர் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதில்லை.  குறிப்பாக சமூகத்தில் ஒரு பெண் விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அது சாதாரண தற்கொலையாகத்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது.  ஏனெனில் நிலங்கள் பெண்கள் பெயரில் இருப்பது மிகக் குறைவே.
இந்த வஞ்சனையான, பொய்யான கணக்கை பல அரசுகள் மேற்கொள்கின்றது.  மகாராஷ்டிரா அதற்கு குறிப்பிடத்த்க உதாரணம்.  ஒரே வாரத்திற்குள் மூன்று முறை வெவ்வேறான பொய்யான எண்ணிக்கையை சொல்லியுள்ளது.  இந்த ஆண்டு மே மாதத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட விதர்பா மாவட்டத்தில் விவசாயத் தற்கொலை 5500 சதவீதம் மாறுபட்டது.  நான்கு மாதத்தில் மிகக் குறைவான 6 என சொல்லப்பட்டது.  (பார்க்க தற்கொலக்கு தகுதியாவது எப்படி? தி இந்து 13 மே 2010 நாளிதழ்)
தேசிய குற்றவியல் பதிவு குழுமம் பதிவுகளின்படி மகாராஷ்டிராவில் 2009இல் 2872 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்தாண்டுகளில் இதுதான் விவசாய தற்கொலையின் மிக மோசமான எண்ணிக்கை.  அது தற்போது 930இற்கு குறைந்துள்ளது உண்மையானால் மகிழ்ச்சிக்குரியதே.  ஆனால் உண்மை நிலையை பொய்யாக்க எந்த மாநிலமும் கடுமையாக முயற்சித்ததாக தெரியவில்லை.

விடிவே இல்லாத விவசாயிகள் வாழ்க்கை!
ஆனால் 13 வருடங்களில் மகாராஷ்டிர மாநிலம் நம்பமுடியாத தற்கொலை எண்ணிக்கை உயர்வையே கண்டிருக்கிறது.  திடீரென 2008இல் 430ம்- 2009இல் 930ம் குறைந்ததாக பதிவு செய்துள்ளது எவ்வாறு?  கடந்த 4 ஆண்டுகளில் சிரமம் அதிகமுள்ள விதர்பா மாவட்டத்தில் செயல்பட்ட அரசு அதிகாரி குழுக்கள் பல தற்கொலைகளை விவசாயம் சார்ந்த காரணமல்ல என தள்ளுபடி செயவதிலேயே கவனம் செலுத்தின. மகாராஷ்டிர அரசு இறப்பு எண்ணிக்கையை கணக்கெடுப்பதை விட பிரச்சனைகளை கணக்கெடுப்பதில் கவனம் செலுத்தியது.
இன்னும் பிரச்சனைகள்தான் அதிகரித்துள்ளது.  மகாராஷ்டிராவின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் மேற்கு வங்கத்தை ஒப்பிடலாம்.  சில கோடி மக்கள் குறைவாக இருப்பினும் அங்கு விவசாயிகள் எண்ணிக்கை அதிகம். இரண்டு மாநிலங்களும் 1995இலிருந்து 15 ஆண்டுகளுக்கான பதிவுகள் வைத்துள்ளன.  அந்த மாநிலத்தின் விவசாய தற்கொலைகள் 3 ஐந்தாண்டுகளாக பிரித்துப் பார்த்தால் வர,வர கணிசமாக குறைந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 1999 உடன் முடிவடைந்த ஐந்தாண்டில் 1963 என்ற எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டில் (2004) 3647 எனவும், பின்னர் 2009இல் 3858 எனவும் உயர்ந்துள்ளது.  மேற்கு வங்கத்தின் ஆண்டு தற்கொலை இறப்பு சதவீதத்தில் கணிசமான குறைவு உள்ளது.  1999இல் 1454, 2004இல் 1200 எனவும், 2009இல் 1014 எனவும் குறைந்துள்ளது.  அங்கு விவசாயிகள் அதிகம் பேர் இருந்த போதிலும் மகாராஷ்டிரா மாநில இறப்பு எண்ணிக்கையில் 3இல் ஒரு பங்குதான் இங்கு நிகழ்ந்துள்ளது.  பிந்தைய மாநிலத்தின் எண்ணிக்கை 1999 லிருந்து தற்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
தற்கொலை நிகழும் 5 முக்கிய மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா- மத்திய பிரதேசம் மற்றும் சதீஸ்கரில் 3இல் 2 பங்கு தற்கொலைகள் விவசாயி தற்கொலையாகவே உள்ளது.  28 மாநிலங்களில் ஏறக்குறைய 18இல் 2009ல் விவசாய தற்கொலை அதிகரித்துள்ளது.  சிலவற்றில் எண்ணிக்கை உயர்வு புறந்தள்ளும் வகையிலும், மற்றவற்றில் அவ்வாறில்லாமலும் உள்ளது.  மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் 2008இல் 512 ஆக இருந்தது, 2009ல் 1060 என மிக அதிகமாக உயா்ந்துள்ளது.  மேலும் எண்ணிக்கை உயர்வில் 3ஆவதுபெரிய மாநிலமாக ஆந்திரா 309 அதிகரித்து 2009ல் பதிவு செய்துள்ளது.
கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இத்தகைய உயிரிழப்பு எண்ணிக்கை சராசரி கடந்த 6 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.  2004 முதல் 2009 வரை பார்க்கையில் கடந்த 7 ஆண்டுகளை விட சராசரியாக 350 குறைந்துள்ளது.
தற்போதுள்ள விவசாயக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படவில்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகும்.  சொல்லப் போனால் கடந்த 13 ஆண்டுகளில் தற்கொலை எண்ணிக்கையை குறைத்த மாநிலங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.  உதாரணத்திற்கு கேரளாவை எடுத்துக் கொண்டால் ஆண்டு சராசரி விவசாய தற்கொலை 1371 இறப்புகள் என 1997 முதல் 2003 வரை இருந்தது.  2004 முதல் 2009 ல் சராசரி 1016 என 355 குறையத் துவங்கியது.  இருப்பினும் கேரளா வரும் ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.  உலகமயமாக்கலினால் அனைத்து மாநிலத்திற்குமான பொருளாதார பாதிப்பு இது. இங்கு பெரும்பாலான பயிர்கள் பணப்பயிர்கள் ஆகும்.
காப்பி, ஏலம், தேயிலை, வெனிலா, மிளகு, அல்லது ரப்பர் போன்றவற்றின் உலக அளவிலான விலை மாற்றங்கள் இந்த மாநிலத்தையும் பாதிக்கும்.  சில பெருமுதலாளி கார்ப்பரேட் நிறுவனங்களால் உலக அளவில் இவற்றின் விலைகள் கையாளப்படுகின்றது.  தெற்கு ஆசிய சுலப வணிக உடன்பாட்டினால் ஏற்கனவே கடுமையான தாக்குதலுக்குள்ளான கேரளா தற்போது நாம் பாதிக்கப்பட்டுள்ள ஏசியன் என்பதாலும் பாதிக்கப்படப் போகிறது.  ஐரோப்பிய நாடுகளுடனான சுலப வணிக ஒப்பந்தமொன்றும் காத்திருக்கிறது.  கேரளா அதற்கான விலை கொடுக்கப் போகிறது.  2004க்கு முன்பாக இலங்கை மிளகை வாங்கிக் குவித்ததினால்(பெரும்பாலும் பல நாடுகளிலிருந்து மிளகு இலங்கை வழியாகவே வந்தது) கேரள மாநிலம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியது.
தற்போது அத்தகைய குவிப்பிற்கு வரையரைகளை நாம் வகுத்துள்ளோம்.  இந்தியாவில் விவசாய தற்கொலைகள் என்ற ஆய்வுக் கட்டுரையின் எழுத்தாளரான பொருளாதார பேராசிரியர் திரு கே.நாகராஜ் இவ்வாறு கூறுகிறார்.  “சமீபத்திய விவரங்களிலிருந்து விவசாய இன்னல் என்பது குறைந்தபாடில்லை, முடிவுக்கும் வரவில்லை, மாறாக அரசின் கொள்கைகள் அவற்றை துரத்துவதும் குறையவில்லை, முடிவிற்கும் வரவில்லை என்கிறார்.  மேலும் அவரது ஆய்வில் ஒருபுறம் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகையில் அவர்களின் தற்கொலை இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதிலிருந்து விவசாயம் சார் இன்னல் இன்னும் எரிந்து கொண்டுதான் உள்ளது” என்கிறார்.
________________________________________________________________________
- திரு பி.சாய்நாத், நன்றி – தி இந்து 28/12/2010
தமிழில் – சித்ரகுப்தன்
வினவு இணையதளத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை.

 

 

Friday, August 28, 2009

சமூகமும் ஓரினச்சேர்க்கையும்...

http://uraiyurkaran.blogspot.com/2009/07/blog-post.html
என்கிற வலைப்பதிவின் கட்டுரையைப் படித்ததும் எனக்குத் தோன்றியது இது..

incest ஒரு காலத்தில் இருந்திருந்து பிற்காலத்தில் கைவிடப்பட்டது. தற்போதைய ஆணாதிக்க சமுதாயம் தோன்றிய பின் incest முற்றிலும் மறைந்துபோனது. ஆனால் இன்னும் சரோஜாதேவி கதைகளில் இவற்றைப் பார்க்கலாம். சமூகத்தின் வளர்ச்சியில் தற்போது தாயின் நிலை வேறாக உள்ளது. Freud சொல்லியது போல தாயின் மீதான குழந்தையின் 'காதல்' அமுக்கப்பட்டு மனதில் அதனது identity உருவாவதற்கு அடிப்படையான காரணமாக உள்ளது. தாயின் மீதான பெண்குழந்தை கொள்ளும் காதல் ஒருவகை ஓரினக் கவர்ச்சியாகும். இப்போது incest சமூகத்தில் இல்லை என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் அது உள்ளவர்கள் யாரும் வெளியில் வந்து பகிரங்கமாக எங்களை அங்கீகரியுங்கள் என்று ‘சமூக’ அடையாளத்துக்காக போராடுவதில்லை. அதற்கான தேவையும், அவசியமுமில்லை.

தற்போது ஒரினச் சேர்க்கையின் நிலையும் அப்படித்தான். ஓரினச் சேர்க்கை எல்லாக் காலங்களிலும் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் தண்டனைக்குரியதாக அமுக்கப்பட்டது. ஆனால் எல்லா சமூகங்களிலும் மறைமுகமாகப் படர்ந்திருந்துள்ளது. தற்போதைய சமூகத்தில் ஓரினச் சேர்க்கை சமூகத்தின் போக்கை, கலாச்சார ரீதியாக பெரிதும் பாதித்துவிடாது என்ற புரிதல் அறிவியலாளர்களால் முன்னிறுத்தப்படுகிறது.

இப்போது incest, homosexuality இவ்விரண்டு நிலைகளின் சமூக நிலைகளையும் கருதுவோம். Incest க்கு நேரடியான சமூக அங்கீகாரம் கிடையாது. ஆனால் அது தாயின் மீதான பாசப் பிணைப்பாக மறுவியிருக்கிறது. அதற்கான சமூக அங்கீகாரம் அளவுகடந்தது. தந்தையின் மீது முரட்டுத்தனமான பாசம் கொண்ட பெண் குழந்தைகளையும் பார்க்கிறோம். தந்தை-மகள் incest பெரும்பாலும் தந்தையின் வன்முறையாகவே வெளிப்படுகிறது. இவை சமூகத்தில் நிலவும் விதிவிலக்குகள். அதுபோல ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் சமூகத்தின் அடிப்படைத் தேவையான, இனப்பெருக்கத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. சமூகத்தில் அது மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெண்ணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவு தெரிந்தும் தெரியாததுபோல இருப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தான் ஆண்களுக்கிடையேயான பாலியல் உறவும்.

சட்டத்தில் தற்போது ஓரினச்சேர்க்கையை ‘தண்டனைக்குள்ளாக்கும் குற்றமல்ல’ என்று சொன்னது வரவேற்கத்தக்கது. அது சமூகத்தின் யதார்த்தத்தை சட்டம் உணர்ந்துள்ளதைக் குறிக்கிறது. சட்டம் தனிமனிதர்களின் படுக்கையறைக்குள் எட்டிப்பார்க்கும் வகையான இத்தகைய சட்டங்களை கைவிடுதல் நல்லதுதான். குறிப்பிட்ட அளவிற்குமேல் சட்டம் தனிமனித விருப்பங்களை கட்டுப்படுத்தல் இயலாது. உதாரணமாக சட்டத்தில் 'குறி சுவைத்தல்' அனுமதிக்கப்பட்டதல்ல. ஆனால் இச்செயல் இன்பம் துய்ப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது. இது சமூகம் தரும் மறைமுக அங்கீகாரம் ஆகும்.

சமூகத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கிற்கு ஓரினச்சேர்க்கை பங்களிப்பு செய்வதில்லை என்றாலும் அதன் இருப்பை சமூகம் மறைமுகமாவது அங்கீகாரம் செய்கிறது.
ஆனாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் ‘தனிமனிதரீதியான’ கோட்பாட்டு சிந்தனை சமூகத்தின் எல்லா கூறுகளையும் பிய்த்து எறிய விரும்பும் போக்கைக் கொண்டுள்ளது. அது தனிமனித விடுதலை என்கிற போக்கில் சமூகமாய் வாழ்வதில் செய்யப்பட்டுள்ள சமரசங்களை உடைக்கிறது. ஆணகளையும், பெண்களையும் சமூக அளவில் தனித்தனியாக்க விரும்புகிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களின் தனிமனித விருப்பங்களை சத்தமாக வெளியிடச் செய்வதன் மூலம் இது சமூகத்தின் ‘குடும்பம்’ என்ற அமைப்பின் மேல் இன்னொரு தாக்குதல் தொடுக்கிறது. குடும்பம் என்ற அமைப்பு கட்டமைக்கப்பட்ட ஒன்று. அந்த ஒரு காரணத்துக்காகவே அது அழிக்கப்படவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அப்படிப் பார்த்தால் ஓரினச் சேர்க்கையின் ‘இயற்கைத்’ தன்மையும் கட்டமைக்கப்படுவதுதான். எல்லா ஓரினச் சேர்க்கையாளர்களும் இயற்கை உந்துதலால் ஓரினச்சேர்க்கையாளர்களானவர்களல்ல. சிறைகளில் நடைபெறும் ஓரினச்சேர்க்கை பாலியல் வன்முறைகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். இவ்வகையில் பார்க்கும் போது ஓரினச்சேர்க்கை எதிர்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஒரு மனப்போக்கை முன்னிறுத்துகிறது. இது ஓரினச்சேர்க்கையாளர் X எதிர்பால் சேர்க்கையாளர் என்ற இரு எதிர்போக்குகளாக உருவாக்கம் பெறுவதில் போய் முடிகிறது. இவ்வுருவாக்கம் இவற்றுக்கான அரசியலை சமூகத்தளத்தில் உண்டாக்குகிறது. இவ்விரண்டும் ஒன்றையொன்று மறுதலிப்பவைகளாக, எதிரிகளாக அடையாளம் காண்கின்றன. இது அரசியலாக்குவதின் ஒரு விளைவாகும். இந்த அரசியலில் இவ்விரண்டுக்குமிடையேயான சமரசப் பார்வைகளை முன்வைக்காமல் அடித்துக் கொண்டு சண்டையிடும் மனப்பான்மையை இரு பக்க ஆதரவாள அறிவுஜீவிகளும் போட்டிபோட்டுக் கொண்டு முன்வைப்பது தான் பிரச்சனை.

ஒரு ஆண் ஒரு பெண்ணை அடையாளம் காண்பதும், பெண் ஒரு ஆணை அடையாளம் காண்பதும் மிக வெளிப்படையான குறீயீடுகளான ஆடை போன்ற எளிய விஷயங்களாக உள்ளது. இதுபோல ஒரினச் சேர்க்கையாளர்களுக்கும் வெளிப்படையான குறியீடுகள் தோன்றலாம். அவற்றின் மூலம் ஒரு வகைச் சேர்க்கையாளர் இன்னொருவரின் சுயத் தேர்வில் குறுக்கிடாத தன்மை நிலவும் சூழல் ஏற்படலாம். அவ்வாறு குறுக்கீடற்ற நிலைமைகள் தோன்றும்போது இவ்விதமான ஓரினச்சேர்க்கைக்கு எதிரான கடுமையான மனநிலை இல்லாமல் போகும். மேற்கத்திய முறையிலான பிரித்தாளும் 'தனிமனித சுதந்திரம்' என்ற பார்வையை நான் அப்படியே ஆரோக்கியமானதாகக் கருதவில்லை. மனிதன் சமூகமாக வாழ்கிறோம் என்ற பிரக்ஞையுடன் வாழ, சிந்திக்க வேண்டும். தனிமனிதனுக்கும், சமூகத்திற்குமான தொடர்பு நெகிழ்வுத்தன்மையோடு இருக்கவேண்டும்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா முன்பு ஒருமுறை அவரது கோணல் பக்கங்களில் எழுதியதாக ஞாபகம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்திலும் அதைச் சொல்லியிருந்தார். அந்நிகழ்ச்சி இதுதான்: அவரும் அவர் நண்பரும் (இவர் நண்பருடன் பயணித்தாரா என்பது சரியாக ஞாபகமில்லை) ஐரோப்பிய நாடொன்றில் சுற்றுப்பயணம் செய்தபோது காரில் போய்க்கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு காட்சி. சாலையோரத்தில் (பார்க்கில்?) வெளிநாட்டுத் தம்பதியினர் இரண்டுபேர் கொஞ்சிக் கொண்டிருந்திருக்கின்றனர். கொஞ்சல் முற்றிப் போய் கலவிக் கட்டத்திற்குப் போக ஆரம்பித்துவிட.. காரில் போன நண்பர் வாகனத்தை நிறுத்தி அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டார். கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு அவர் காரைக் கிளப்பிக்கொண்டு போக பாதிவழியில் போலீசு துரத்திப் பிடித்தது அவரை. அந்த வெளிநாட்டுத் தம்பதியினர் போலீசுக்கு "ஒருத்தன் எங்களை உத்துப் பார்க்குறான்" என்கிற ரீதியில் புகார் செய்ய போலீஸ் வந்து நண்பரைத் துரத்திப் பிடித்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியை அவர் குறிப்பிட்டு அங்கிருக்கும் பாலியல் சுதந்திரத்தையும், நாகரிகத்தையும்(?) நமது ஆசாமிகள் உற்றுப் பார்க்கும் செக்ஸ் வறட்சியையும்(?) ஒப்பிடுவார். இக்காட்சியை அவருடைய நண்பருக்குப் பதில் ஒரு ஐந்து வயதுக் குழந்தை பார்த்தால் என்ன ஆகும் ? ஐந்து வயதுக் குழந்தைக்கு உடலுறவு என்பது இயற்கையானது என்றாலும் மனரீதியாக பாதிப்பை உண்டாக்கவே செய்யும். அதனால் தான் 'எல்லாம் வளர்ந்த' மேலை நாடுகளில் கூட பொது இடங்களில் உடலுறவு கொள்வது மாதிரியான விஷயங்கள் தவறாகப் பார்க்கப்படுகின்றன. செக்ஸ் கல்வி என்ற விஷயத்திற்கு நான் எதிரி இல்லை. ஆனால் இந்தமாதிரி செக்ஸ் சுதந்திரங்கள் பற்றிப் பேசுவது, 'சமூகம் என்கிற கட்டமைப்பில் வாழ்கிறோம்' என்பதை மறந்துவிட்டு அல்லது சமூகம் என்பது ஒரு கட்டுமானம், அதை உடைக்கவே வேண்டும் என்கிற எண்ணங்களின் அடிப்படையில் எழும் வாதங்களாகும். நாம் வாழும் வாழ்க்கையில் சமூகம் உள்ளிட்ட நிறைய கட்டுமானங்கள் உள்ளன. அவற்றை 'சமூக அளவில்' நாம் அங்கீகரித்தே வாழ்கிறோம். தனிப்பட்ட மனித அளவில் நாம் அதை நிராகரிக்கலாம்; அதை சமூகம் ஒன்றும் சொல்வதில்லை. சமூகம் என்கிற போர்வையில் சில வலுக்கட்டாயமான, வன்முறையான விஷயங்கள் அதைக் கட்டமைக்கும் ஆதிக்க வர்க்கத்தால் திணிக்கப்படும்போது சமூகத்தை எதிர்த்து கிளர்ந்தெழுதல் என்பதும் நடைபெறும். நடைபெறுகிறது. இங்கு சமூகத்திற்கும், தனிமனித உரிமைக்குமான சமரசங்களும் இருபுறங்களிலும் நடைபெறல் வேண்டும் என்பது நான் வலியுறுத்த விரும்பிய விஷயமாகும். சமரசங்களும் சாத்தியமில்லாமல் போகும்போது தவிர்க்க இயலாமல் விலகல்கள் நிகழும். அப்போது அதை நாம் நினைத்தாலும் தடுத்து நிறுத்த இயலாது.

'எல்லாமே உடைதல் தான். உடைத்தல் தான் வாழ்க்கை' என்பது மட்டுமே இயங்கியல் அல்ல. ஒன்றையொன்று ஈர்த்தல், உள்வாங்குதல், முரண்படுதல், சமரசம் செய்தல், விலகிப்போதல், வெடித்தல் போன்ற எல்லாமும் நிகழ்வதுதான் சமூகம். மற்ற விஷயங்களைப் பார்க்காமல் உடைத்தல், வெடித்தல் இரண்டில் மட்டுமே விஷயங்களை கொண்டுபோய் நிறுத்துவது சரியான பார்வையாகாது. ஓரினச் சேர்க்கையாளர்களின் இயல்பான சமூக வாழ்க்கைக்கு சமூகத்தில் செய்யவேண்டிய விஷயங்களை விடுத்து அதன் அரசியலை எதிர்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிரானதாகத் தோன்றவைக்கும் அரசியல்கள் தவறாக நம் சமூகத்தை வழிநடத்தும்.