Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Thursday, July 26, 2012

‘ஸ்த்ரிய்னா காமசூத்ரா’ - கே.ஆர். இந்திராவின் பெண் காமசூத்ரா புத்தகம்


எழுத்தாளர் கே.ஆர். இந்திரா

வாத்சயாயனா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ள காம சூத்ரா என்றழைக்கப்படும் காம சாஸ்த்திரம் என்கிற நூலைப் பற்றி தெரியாத ஆளில்லை.

வாத்சயாயனா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ள காம சூத்ரா என்றழைக்கப்படும் காம சாஸ்த்திரம் என்கிற நூலைப் பற்றி தெரியாத ஆளில்லை.

அதன் 64 உடலுறவு நிலைகள் (positions) இந்தியாவின் பன்மையான காமம் பற்றிய அறிவு என்கிற வகையில் உலகப் பிரசித்தி பெற்றது. காமசூத்ரா என்கிற பெயரிலேயே தீபா மேத்தா என்கிற பெண் இயக்குநர் செக்ஸ் படம் எடுத்து பெயரும், துட்டும் சம்பாதித்துடன் சரித்திரமும் படைத்தார்.
 இப்போது பெண்ணியம்பொங்கிப் பெருகும் உலகளாவிய காலகட்டம். எங்கும், எதிலும் பெண்ணியம்.. அதாங்க Feminism.
ஆட்டோ ஓட்டுவதிலிருந்து, ராக்கெட்டில் விண்வெளிக்குப் போவதுவரை பெண்ணியம் பெண்களுக்கு உலகில் அவர்கள் இதுவரை காலடி வைத்திராத இடங்களில் தடம் பதிக்க உதவியிருக்கிறது. கூடவே பார்களிலும் காலடித் தடம் பதிக்கிறார்கள் பெண்கள் இன்று.
அப்படி அஸ்ஸாமில் கடந்த வாரம் பாரில் தனது தோழியுடன் சென்று பிறந்த நாள் பார்ட்டியில் சரக்கடித்துவிட்டு, க்ரெடிட் கார்டு தொலைந்து போனதால் பில் கட்ட வழியில்லாமல் பார் ஊழியர்களால் பாருக்கு வெளியே தள்ளப்பட்ட பேஷன் டிசைன் படிக்கும் மாணவி, கூட வந்த தன் ஆண் நண்பர்களைக் குற்றம் சொல்லி சண்டையிட, போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாற, அப்போது சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த வேறு ஆண்கள் கும்பலொன்று இதைப் பயன்படுத்தி சண்டையின் உள்ளே நுழைந்து அந்தப் பெண்ணை தொடுவது, கட்டிப் பிடிப்பது, உடையைக் கழற்றுவது என்று அத்து மீற ஆரம்பிக்க, இந்தப் பெண்ணுடன் வந்த தோழர்கள் எஸ்கேப் ஆகிவிட, இரவு 10 மணிக்கு மேல் நடுரோட்டில் நடைபெறும் இந்த அத்து மீறலை யாரும் கண்டிக்கவில்லை. கடைசியில் வழியில் சென்ற ஒரு போலீஸ்காரர்தான் அந்தப் பெண்ணை அந்த ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றினார். மறுநாள் முதல் வழக்கம் போல பத்திரிக்கைகள், மாதர் சங்கங்கள், என்ஜிஓக்கள், சுதந்திர விரும்பிகள்(குடிப்பது என் உரிமை?!) எல்லோரும் கண்டனம் தெரிவிக்க போலீஸ் அந்த ரவுடி ஆண்களை வேட்டையாடியது. அஸ்ஸாம் முதல்வர் நடவடிக்கை எடுக்க ஆணை பிறத்திருக்கிறார்.
நீங்கள் பெண்ணியம் பேசலாம்; உலகில் பெண்தான் மேலாக இருந்தாள்.. ஆதிக் குடும்பத்தில் தாயாதிக்கம்.. இங்கே ஆணாதிக்கம்.. என்று பேசலாம்.. ஆனால் மதுவின் உட்சபட்சத்தில் உங்கள் மூளையில் (அடிப்படையில்)மிருகத்தனமான  ஆறாம் அறிவுக்கு கட்டுப்படாத வன்முறையும், வெறியும் மட்டுமே மிஞ்சும். அதை எந்தப் படிப்பும், நாகரிகமும் கட்டுப்படுத்தி விட இயலாது என்பதை மதுவின் பிடியிலிருந்து விடுபட்ட அடுத்த நாள் உணர்வீர்கள். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கக் கூடும்.
மதுவும் ஆணென்றும் பெண்ணென்றும் பாராது சரி நிகர் சமமாக மனிதர்களை மிருகங்களாக்கும். அப்போது செய்யும் பாவங்களில் ஆண் பெண் வித்தியாசமே இருப்பதில்லை.
ஜூனியர் விகடனில் சஞ்சீவ் குமார் என்பவர் தற்போது எழுதி வரும் மயக்கம் என்னமயக்கம் என்ன.. தொடர். படியுங்கள்; நிதானத்தில் இருக்கும் போது படியுங்கள். குடியை நீங்கள் நிறுத்த நிறைய வாய்ப்பு உள்ளது. குடித்தால் பெர்பார்மன்ஸ்கூடும் என்பது மூட நம்பிக்கையே மாறாக காமசூத்ராவுக்கு பிற்காலத்தில் வரையப்பட்ட படங்கள்உணர்ச்சி மரத்துப் போகும் என்பதே உண்மை.
சரி. காமசூத்ராவுக்கும் இதுக்கும் என்னைய்யா சம்பந்தம் என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஸாரி..சம உரிமை பற்றி பேச நேரும் போது இப்படி திசை திரும்பிவிட்டது.
வாத்சயாயனர் எழுதிய காமசூத்ரா ஆண்களுக்கானது மட்டுமே. அது ஆண்களின் நோக்கிலே எழுதப்பட்டது. பெண்களுக்கு அதில் தகவல்கள் இல்லை. அது ஆணாதிக்கம் இருந்த உலகில் ஆணால் ஆண்களுக்காக பெண்களை வெல்வது எப்படி என்று எழுதப்பட்ட புத்தகம். இப்போது பெண்களின் பார்வையில் காமசூத்ராவை நான் எழுதியிருக்கிறேன்.” – இப்படிச் சொல்பவர் கேரளாவைச் சேர்ந்த ஐம்பது வயது பெண் எழுத்தாளர் கே.ஆர். இந்திரா என்னும் அம்மணி.
கேரளாவின் திரிச்சூரைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகம் தான் ஸ்த்ரீய்னா காமசூத்ரா’ – பெண்களுக்கான காமசூத்திர அறிவுரைகள்.
இதில் இவர் வாத்சயாயனரின் 64 பொசிசன்களில் நான்கு மட்டுமே பெண்களுக்கு நன்மையானது என்கிறார். ஆண் மேலே, பெண் மேலே, பெண் ஆணின் மடிமேலே மற்றும் ஆணும் பெண்ணும் நேராக ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்பது என்பவையே அவை.
பெண்களுக்கு இவர் சொல்லும் அறிவுரைகளில் சில..
-    பெண் தன்னை விட இளமையான ஆணை உறவுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.
-    பெண்ணுக்கு சில சந்தர்ப்பங்களில் திருமணமான ஆணுடன் உறவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவை எதிரிகளை வீழ்த்த, சொத்துக்களைப் பெற, ரகசியங்களைப் பெற அல்லது மறைக்க, காரியம் சாதிக்க மற்றும் துரோகம் செய்யும் கணவனை பழிக்குப் பழி வாங்க.(இவை எல்லாமே நாம் சமூகத்தில் கண்கூடாக பார்த்து வரும் காரணங்கள்).
-    பெண் ஆசைப் படத் தகுதியான ஆண் தகுதியானவனாக, அறிவு சார்நதவனாகவும், அசிங்கமாயில்லாமல், ஏழையாகவோ நோயாளியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும்.
வாத்சயாயனரின் தவறுகளாக இவர் கூறுவது என்னவெனில்..
-    ஆண்களின் உடலுறவு வயது 16 முதல் 70 வரை என்று கூறும் வாத்சயாயனர் பெண்களின் வயது பற்றி ஏன் கூறவில்லை ?
-    வாத்சயாயனர் பெண்கள் உச்சகட்டத்தை அடையும் தன்மையற்றவர்கள் என்று தவறாக நம்பினார்.
தன்னுடையை ஆராய்ச்சிப் படிப்புக்காக பெண்கள் பற்றிய சர்வே எடுத்த இவர் அதிலிருந்து கேரளப் பெண்களைப் பற்றி பின்வரும் முடிவுகளை கூறுகிறார்.
-    சர்வேயில் பெரும்பாலான பெண்கள் 'ஆண் மேலே' என்கிற உடலுறவு நிலையையே விரும்புவதாகக் கூறியுள்ளனர். ஆணாதிக்கத்திற்கு இதற்கு மேல் என்ன உதாரணம் வேண்டும்? என்று கேட்கிறார்.
-    மிகவும் நல்ல நிலையில் வசதியாகவும், வாய்ப்பும் உள்ள மலையாளப் பெண்கள் கூட தங்களது காம ஆசைகளை விரும்பியபடி நிறைவேற்றிக் கொள்ள தயக்கம் காட்டுபவர்களாகவே உள்ளனர் (??!!).
ஒருவயது கைக் குழந்தையாக இருந்த மகனோடு கணவனை விட்டு விலகி வந்து கணவனை வேண்டாம் என்று விவாகரத்து செய்த இந்திராவின் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். இவர் பின்னர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒரு பெண் எப்போது ஆணுடன் உடலுறுவு கொள்ள சம்மதிக்க வேண்டும் ? அதற்கு இவர் கூறுவது..
ஒன்று. அந்த ஆணின் மீது காதலுற்றிருக்கும் போது. ஆனால் கண்மூடித்தனமான காதலால் ஏமாந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு. பணம், பொருள் போன்ற லாபங்களுக்காக. ஆனால் முக்கியமாக அவனிடமிருந்து பெண் வேண்டிய பொருளை பெற்ற பின்னரே அவனுடன் உடலுறுவு கொள்ள வேண்டும்.
அதே போல ஆண்களுக்குச் சாதகமாக வாத்சயாயனர் சொல்லும் வயது குறைவான பெண்ணை மணமுடித்தல், ஒரே சாதியில் மணம், வரதட்சிணை வாங்குதல், திருமணத்திற்குப் பெண் பெண்ணை ஆண் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லுதல் இவை எல்லாம் தலை கீழாக, அதாவது பெண்ணுக்குச் சார்பாக நடக்க வேண்டும் என்கிறார் இவர் (சபாஷ்! சரியான போட்டி!!). உதாரணமாக திருமணத்திற்குப் பின் பெண்ணுடைய வீட்டில் வந்து ஆண் வந்து தங்கவேண்டும்.
இவை எல்லாவற்றையும் நவயுக புரட்சிப் பெண்ணாகக் கூறிய இந்திரா அவர்கள் கட்டுக்கடங்கா செக்ஸ்(free sex – ப்ரீ செக்ஸ்) மற்றும் சேர்ந்து வாழ்தல் போன்ற விஷயங்களை எதிர்க்கிறார்.
ஆணுக்குத் தேவை பெண்ணுடன் எப்படியாவது உடலுறுவு கொள்வது. அதற்கு வசதியாக இப்படிப்பட்ட கருத்துக்களை ஆண்கள் ஆதரிக்கிறார்கள் என்கிறார்.
மாறாக ப்ரீ செக்ஸ் நடவடிக்கைகளில் குழந்தை பிறப்பு போன்றவை தவறுதலாக நடந்து விட்டால் அது பெண்ணுக்கு பெருமளவு பாதகமாக அமைகிறது என்கிறார் இவர் (பேசாம பெண்கள் இனிமேல் எப்பவுமே குழந்தையே பெறாமல் இருக்க ஒரு வழி கண்டு புடுச்சீங்கன்னா ஒரு நூறு வருசத்துல பூமி பூரா வெறும் புல் பூண்டு மட்டுமே மொளைச்சி நிக்கிறமாதிரி பண்ணிப் புட்டு எல்லாம் மேல போயிடலாம்.. இல்லாட்டி குழந்தை பெத்துக்கறதுக்கும் மிஷின் கண்டுபிடிச்சிட்டா என்ன..? செம ஐடியா!!)
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள வாத்சயாயனரின் காமசூத்ரா அக்காலத்திய சமூகத்தின் ஜாதிய, வருணாசிரமப் படிநிலைகளை தக்கவைத்துக் கொள்ள என்ன சொல்லியிருக்கிறது என்பது பற்றி இவர் ஆராய்ந்தாரா என்று தெரியவில்லை. அது அதன் வருணாசிரம மேலாதிக்க அரசியல்.
வாத்சயாயனர் 'பெண்கள் ஆண்களைப் போல் உச்சநிலை அடையும் தன்மையுடையவர்களல்லர்' என்று கூறியுள்ளார்.  'ஆண்கள் உச்சம் அடையும் விதம் உச்சகட்டத்தை அடைந்து உடனே முடிந்து விடும். பெண்களின் உச்சம் அடையும் விதம் தொடர்ச்சியானது. ஆணுக்கு உச்சம் அடையும் கட்டத்தில் விந்து வெளிவரும். பெண்களுக்கோ உடலுறவில் இன்பம் வர ஆரம்பித்த கணத்திலிருந்தே நீர் சுரக்க ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் அது தீர்ந்து போய் நிற்க ஆரம்பித்த பின் பெண் உடலுறவு போதும் என்ற முடிவுக்கு வருவாள். இது ஆண்கள் அடையும் இன்பத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது' - இது வாத்சயாயனரின் கூற்று. இதற்கு இந்திரா கூறும் விளக்கம் வெறும் பெண்ணியப் பார்வை சார்ந்ததா? தெரியவில்லை.

இதெல்லாம் சும்மா மேலாப்புல நூல் அறிமுகம் தான். இன்னும் விளக்கமாக படிக்கனும்னா டி.சி. புக்ஸ் வெளியிட்டிருக்கிற 'ஸ்த்ரீய்னா காமசூத்ரா' என்கிற இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்க.

Friday, December 4, 2009

குழந்தைப் போராளி (Child Soldier) : -சைனா கெய்டெட்சி (China Keitetsi) - நூல் மதிப்புரை

குழந்தைப் போராளி (Child Soldier) : எனது வாழ்க்கைக்கான போராட்டம்
-சைனா கெய்டெட்சி (China Keitetsi)

டச்சு மொழியிலிருந்து (2004) தமிழாக்கம் (2007) : தேவா.
286 பக்கங்கள்.
வெளியீடு : கருப்புப் பிரதிகள், சென்னை.

உகாண்டா:
தென்னாப்பிரிக்க கண்டத்தில் வடக்கில் எத்தியோப்பியாவும், சூடானும், கிழக்கே கென்யாவும், மேற்கே காங்கோவும், தெற்கே ருவாண்டாவும், டான்சானியாவும் சூழ இருக்கும் சிறிய நாடுதான் உகாண்டா. மக்கள் தொகை மூன்று கோடி (2009 கணக்கெடுப்பு). 1888ல் ஆங்கிலேயரின் வசமான உகாண்டா 1962ல் விடுதலை கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து 1990கள் வரை நிலையற்ற அரசியல் தன்மையும் உள்நாட்டுக் குழப்பங்களும் உகாண்டாவில் மிகுந்து காணப்பட்டன. உகாண்டாவில் மக்கள் காங்கிரஸ் கட்சி (Uganda People’s Congress), உகாண்டா ஜனநாயகக் கட்சி(Democratic Party) என்ற இரு பெரும் கட்சிகள் அரசியலில் முக்கியப் பங்காற்றின. சுதந்திரத்திற்குப் பின் மன்னராக இருந்தவரை மில்டன் ஒபாட்டே பதவியிறக்கம் செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஒபாடேவை சோவியத் யூனியன் ஆதரித்தது. உகாண்டாவின் பக்கத்திலிருந்த டான்சானியாவை தனது கைக்குள் வைத்திருந்த சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்க சோவியத் யூனியன் உகாண்டாவைப் பயன்படுத்தியது.

1971ல் இடி அமீன் அதிகாரத்தைக் கைப்பற்றி உகாண்டாவின் அதிபரானார். அவரது கொடுங்கோலாட்சியில் 3 லட்சம் உகாண்டாவினர் கொல்லப்பட்டனர். சிறுபான்மை இந்தியர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டி இந்தியர்களே அங்கு இல்லாதவாறு செய்தார். இவருக்கு லிபியாவின் கடாபியும், சோவியத் யூனியனும் ஆதரவளித்தன. 1979ல் நடந்த உகாண்டா-டான்சானியா போரில் இவர் பதவியிழந்தார். மில்டன் ஒபாடே மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 1985ல் அவரைப் பதவியிறக்கம் செய்தார் ஜெனரல் டிட்டோ ஒக்கல்லோ. யோவேரி முசவேனியின் தலைமையிலான NRA (National Resistance Army) அரச எதிர்ப்புப் படை புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியது. முசவேனி புதிய அதிபரானார். அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து முசவேனி ஜனாதிபதியாக உள்ளார். இங்கு பல கட்சி முறை நசுக்கப்பட்டுள்ளது. முசவேனி புதிய தலைமுறை ஆப்பிரிக்கத் தலைவர்களில் ஒருவராக மேற்குலகால் பார்க்கப்படுகிறார். இவரை எதிர்த்த, எதிர்க்கிற படையான அரசரின் எதிர்ப்புப் படை (Lords Resistance Army) குழந்தைப் போராளிகளை ஈடுபடுத்துதல், மக்கள்திரள் படுகொலைகள் என போர்க்குற்றங்களை செய்த இயக்கம் என குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்குலகு இங்கு கவனம் செலுத்தக் காரணம் இங்கிருக்கும் கனிம வளங்களான தாமிரமும், கோபால்ட்டும் மற்றும் இயற்கைச் செல்வங்கள் ஆகும். மேலும் இயற்கை வாயுவும், பெட்ரோலியமும் ஏராளமான அளவில் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை உறிஞ்சிக் கொண்டு கட்டுமானத்தை உருவாக்கித் தரும் ‘பணியை’ மேற்கத்திய உலகம் செய்கிறது. இங்குள்ள மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தான் இன்னும் வாழ்கிறார்கள். உகாண்டாவில் இருக்கும் உள்நாட்டுக் குழப்பங்களும், அரசியல் பிரச்சனைகளும் மேற்கத்திய நாடுகள் உகாண்டாவைக் கைக்குள் வைத்திருக்க உதவுகின்றன. உகாண்டாவில் 80 சதவீதம் பேர் கிறித்துவர்களாவர். அரசு மொழியாக ஆங்கிலமும், சுவாஹிலி என்னும் உள்நாட்டு மொழியும் உள்ளன.


சைனா கெய்டெட்சி:
சைனா கெய்டெட்சி 1976ல் உகாண்டாவில் டூட்சி (Tutsi) இனக்குழுவில் பிறந்தார். தனது ஒன்பதாவது வயதில் அரசை எதிர்த்துப் போராடிய யோவேரி முசவேனி(Yoweri Museveni) ன் தலைமையிலான NRA (National Resistance Army) அரச எதிர்ப்புப் படையில் குழந்தைப் போராளியாக சேர்க்கப்பட்டார். அப்போது முதல் 1995 வரை அப்படையில் பணியாற்றிய அவர் பின்னர் உகாண்டாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குத் தப்பியோடினார். அங்கும் உகாண்டாவின் உளவுப் படையினரால் வேட்டையாடப்பட்ட அவர் 1999ல் டென்மார்க் நாட்டில் அகதியாகத் தஞ்சம் புகுந்தார். தற்போது உகாண்டாவில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் குழந்தைப் போராளிகளுக்கான மறுவாழ்வு இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இப்புத்தகம் இவரது இளம் குழந்தைப் போராளி வாழ்க்கையை அவரே சொல்லும் சுயசரிதை வடிவத்தில் உள்ளது. மிகுந்த மனநெருக்கடிக்குள்ளாகி இளம் வயதிலேயே ஒரு 60 வருட போராட்ட வாழ்வின் மிக உக்கிரமான தருணங்களை கண்ட ஒரு வீரப் பெண்ணாக இவர் இருக்கிறார்.
இவரது வலைத்தளம் : http://www.chinakeitetsi.info

குழந்தைப் போராளி – நூல் மதிப்புரை
சைனா கெய்டெட்சி 2001ல் தனது 24வது வயதில் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் மூன்று பாகங்கள் உள்ளன. சைனாவின் 9 வயது வரையிலான பிஞ்சு வயதுப் பருவம் முதல் பாகத்திலும், குழந்தைப் போராளியாக 19 வயது வரை NRA படையில் இருந்த அவரது அனுபவங்கள் இரண்டாம் பாகத்திலும், அரசியல் கைதியாக தென்னாப்பிரிக்காவிற்கு தப்பித்து ஓடி டென்மார்க்கில் அகதியாக புகுந்த கணம் வரையிலான பகுதி மூன்றாம் பாகத்திலும் விவரிக்கப் பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் எனது மனதில் மிக அழுந்தியது முதல் பாகமாகும். இம் முதல் பாகத்தில் தனது கலாச்சார வேர்களை தொலைத்துவிட்டு, மேற்கத்திய காலாச்சார வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும், வறுமைக்குட்பட்ட ஒரு சமூகத்தில், குடும்பம் கூட வன்முறை தலைவிரித்தாடும், வன்மங்கள் மிகுந்த போர்க்களமாக மாறிவிடும் தன்மை தென்பட்டது. கனவில் கூட நாம் எண்ணியிராத பாட்டியும், தந்தையும், சித்தியும் கொடும் சூனியக்காரர்களாய் சைனாவின் பிஞ்சு மனதை கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு எடுக்கிறார்கள். 7 வயதில் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு கிழவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். ஒரு நாள் இரவில் தந்தை இவள் செய்யாத ஒரு தவறுக்காக கண்மண் தெரியாமல் தாக்குகிறான். இவளது சுண்டு விரல் முறிந்து போகிறது. அதை அடுத்த நாள் காலையில் பார்க்கும் போது தான் தந்தைக்குத் தெரிகிறது. சைனாவின் ஆடுகளுக்கு இதுபோல எத்தனையோ குழந்தைகள் நண்பர்களாயிருக்கக் கூடும். ஒன்பதாவது வயதில் தனது உண்மையான தாயைச் சென்று அடையும் சைனா தாயின் மிதமிஞ்சிய அன்பை முதன் முறையாகக் கண்டபோது பயந்து வெளியேறி ஓடிப் போய் மாட்டிக்கொள்ளும் இடம் தான் NRA போராளிக் கூட்டம்.

இங்கு குழந்தைப் போராளியாக மாற்றப்பட்ட சைனா, குழந்தைகள் போர்ச் சூழ்நிலையில் அடையும் மனப் பிறழ்வை உணர்கின்ற அளவிற்கு முதிர்ச்சியுள்ளவராக இருக்கிறார். இவருடைய சைனா என்கின்ற பெயர், தளபதி ஒருவர் ‘சைனாக்காரி மாதிரி இருக்கிறாள்’ என்று பட்டப் பெயராக அழைத்ததால் ஒட்டிக்கொண்ட செல்லப் பெயரே. புரட்சி செய்யும் ராணுவமான NRA மிக ஆழ்ந்த கோட்பாடுகள் எதுவும் இல்லாத வெறும் ஆட்சிக் கவிழ்க்கும் ராணுவமாக மட்டுமே வளர்ந்திருக்கிறது. அது அதன் நிறுவனர் முசவேனியை பெரும் வீரராக புகழ் பாடி போலியாக மக்களை கவர்ந்திழுத்துள்ளது. வீரர்களும், அதிகாரிகளும் போர் என்றால் மிருகத்தனமான வெறியுடனும், குடி, கூத்து என்று ஒழுங்கற்ற, லட்சியமற்ற வெறும் நாடு பிடிக்கிற ஆட்களாகவே இருக்கின்றனர். அதன் அதிகார அமைப்புகள் ஒரு சர்வாதிகார ராணுவ அரசின் அதிகார அமைப்பையே ஒத்திருக்கிறது. பெண்கள் பாலியல் பொருட்களாகவும், குழந்தை பெறும் ஆட்களாகவும் உபயோகப்படுத்தப் படுகிறார்கள். சைனாவும் பாலியல் வன்முறைகளுக்கும், அதிகாரத்தின் கொடூரங்களுக்கும் ஆட்படுகிறார். அவற்றிலிருந்து உறுதியுடன் போரிட்டு விடுபடுகிறார்.

இந்நிலையில் இலங்கையில் விடுதலைப் புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டையும் அதன் தாக்கத்தையும் இத்துடன் வைத்து எண்ணிப் பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகளையும், NRA இயக்கத்தையும் அவற்றின் நோக்கங்கள், அவை வளர்ந்த விதங்கள், கலாச்சாரப் பின்புலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது இவ்வியக்கங்களுக்கிடையேயான கூர்மையான வேறுபாடுகள் தெரிய வரும். விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் தேசியக் கட்டுமானத்தில் வளர்க்கப்பட்டிருந்தாலும், அதன் கலாச்சாரப் பின்புலம் அக்கட்டமைப்பை உறுதியாகவும், தூய்மையானதாகவும் உருவாக்கிக் கொள்ள உதவியிருக்கிறது எனலாம். NRA வைப் போல ‘குழந்தைகள் பலமில்லாத அப்பாவிகள்’ என்ற போர்க்கருத்தை நயவஞ்சகமாகக் கையாளும் தன்மை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரதான கொள்கையாகவோ, நோக்கமாகவோ வைக்கப்படவில்லை. புலிகள் இயக்கத்தில் குழந்தைகள் பாடம் பயிற்றுவிக்கப் பட்டதோடு, ராணுவக் கல்வியும் அளிக்கப்பட்டனர். தகுந்த வயதையடைந்ததும் அவர்கள் விரும்பினால் மட்டுமே ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். நடைமுறையில் குழந்தைப் போராளிகளாக வளர்க்கப்பட்ட யாரும் ராணுவத்தில் இணையாமலிருந்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. விடுதலைப் புலிகள் குழந்தைகளை கடத்தியதில்லை. போரில் அனாதவராய் விடப்பட்ட குழந்தைகளை அரவணைத்து புகலிடம் தந்து கல்வி பயிற்றுவித்தனர். விடுதலை இயக்கம் மிசனரிகள் போல் நடந்துகொள்ளும் என்று நாம் எதிர்பார்த்தல் தவறானது இல்லையா.

சைனா கெய்டெட்சியின் இப் புத்தகம் எவ்வளவு அப்பட்டமாக அரச எதிர்ப்புப் படையின் உண்மையை வெளியிட்டிருந்தாலும் அரச அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை பலவீனமானவாக, கேவலமானவையாகச் சித்தரிக்கும் ஒரு ஆளும் வர்க்க வேலையையும் சேர்த்து செய்வதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழில் இன்னும் சற்று காலங்களில் இது போல தலைப்பில் ஒரு விடுதலைப் போராளி புத்தகம் வெளியிடும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது எனக்கு. அப்புத்தகம் இந்தியா, இலங்கை மற்றும் சீன அரசுகளுக்கு சாதகமாக விடுதலைப் புலிகளை குழந்தைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்த கொடூர இயக்கமாகச் சித்தரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எல்லோரும் வசதியாக மறந்துவிடும் ஒரு உண்மை இது தான். ‘குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை முறைக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழலை அரச பயங்கரவாதங்கள் உருவாக்கியதும், குழந்தைகள் போராளிகளாக உருமாறின சமூகச் சூழலுக்கு ஒரு அடிப்படைக் காரணம்’ என்பதே அது.

சைனா கெய்டெட்சியின் புத்தகத்தின் மூன்றாவது பாகத்தில் குவேனி அதிபராக பதவியேற்ற பின்னர் அரசு பயங்கரவாதம் தலைதூக்கி அதில் சைனா அகப்படாமல் நைரோபிக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்து தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க்கில் நான்கு வருடம் அமெரிக்காவிற்குச் செல்லும் கனவோடு உயிர் வாழ்கிறார். இறுதியில் UNHC (United Nations High Commission) அவரைக் காப்பாற்றும் ஆபாத்பாந்தவனாக வருகிறது. அவர் டென்மார்க்கில் அகதியாகக் குடியேறுகிறார். இப்புத்தகத்தின் இறுதியில் உகாண்டாவின் அதிபர் முசவேனிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.

இப்புத்தகம் வாசிக்கப் படவேண்டிய ஒரு புத்தகம். இது முற்றுப் பெறாத ஒரு கைப்பிரதி போல ஆங்காங்கே தென்பட்டாலும், சைனா கெய்டெட்சி இன்னும் பல புத்தகங்கள் எழுதி அதில் ஆழமான குழந்தைப் போராளிகள் பிரச்சனையைப் பற்றி விடுபட்டவற்றை மேலும் விரிவாகப் பேசுவார் என நம்பலாம். இப்புத்தகம் மூன்றாம் பாகத்தைப் பொறுத்தவரை UNHC ஐ ஒரு கைவிடப்பட்டோரின் ஆதரவாளராகக் காட்டி நிற்கிறது. சைனா கெய்டெட்சியின் வாழ்வில் அது உண்மையிலேயே பெரிய உயிர்காப்பு நிகழ்வு, எனினும் UNHC இப்புத்தகத்தின் வாயிலாக அணிந்துகொள்ளும் முகமூடியாக அது மாறிவிடுகிறது. சைனா கெய்டெட்சி இதை ஒரு காலத்தில் உணர்வார் என நம்புகிறேன். அந்த வீர மங்கைக்கு எனது வணக்கங்கள்.