அறிவியல். விஞ்ஞானப் பார்வை. மார்க்சியம். தமிழ். தமிழினம். தமிழ் தேசியம். தமிழீழம். இயற்கை விஞ்ஞானம். மனிதநேயம். தாழ்த்தப்பட்டோர் விடுதலை. சித்த மருத்துவம். மனவியல்
Monday, October 12, 2015
காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஒரு வழியாக கைவிட்டது அரசு!
Saturday, September 26, 2015
போக்ஸ்வேகனை அடிக்கும் அமெரிக்கா. மேகி நூடுல்ஸை கெஞ்சும் இந்தியா.
அமெரிக்காவில் விற்பனையான போக்ஸ்வேகன் கார்களை மாசுக்கட்டுப்பாடு டெஸ்ட் செய்யும் போது அமெரிக்க மாசுக் கட்டுப்பாட்டு அமைப்பு இதைக் கண்டுபிடித்தது. அமெரிக்காவில் ஓடிக்கொண்டிருக்கும் 80 ஆயிரம் கார்களில் இந்த மாசுக் கட்டுப்பாடு ஏமாற்றும் கருவி பொருத்தப்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டது போக்ஸ்வேகன். இதையொட்டி போக்ஸ்வேகன் மீது ரூ. 1.17 லட்சம் கோடி அபராதம் விதித்திருக்கிறது அமெரிக்க சுற்றுச் சூழல் அமைப்பு.
செய்தி வெளியான முதல் நாள் ‘ஃபோக்ஸ் வேகன்’பங்குகளின் மதிப்பு 20% வீழ்ந்தது; அடுத்த நாள் மேலும் 17% வீழ்ந்தது. முதலில் கள்ள மவுனம் சாதித்த ‘ஃபோக்ஸ்வேகன்’ அடுத்து, அமெரிக்காவில் நிறுவனத்தின் செயல்பாடு முடக்கப்படலாம் எனும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறது. தலைமைச் செயல் அதிகாரி மார்ட்டின் வின்டர்கோன் பதவி விலகியிருக்கிறார்.
போக்ஸ்வேகன் நிறுவனத்தை 1937ல் அடால்ப் ஹிட்லர் தான் உருவாக்கினார். தனது ஆரிய மக்களுக்கான சமுதாயத்தை உருவாக்க விரும்பிய ஹிட்லர் சீமான்கள் மட்டுமே கார்கள் வைத்திருந்த காலத்தில் அமெரிக்கா போலவே வீட்டுக்கு ஒரு கார் என்று ஜெர்மானிய மக்களும் கார் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த விலையில் இந்தக் கார்களை உருவாக்கினார். இரு பெரியவர்கள், மூன்று குழந்தைகளுடன் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியதாகவும், குறைந்த விலைக்குள்(999 ரெய்க்ஸ்)ளும் ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறையை வளர்ப்பதோடு, உள்நாட்டில் நாஜி கட்சியின் செல்வாக்கை மேலே கொண்டு செல்லவும் திட்டமிட்டே அவர் இந்தக் காரை அறிமுகப்படுத்தினார்.
யுத்தத்துக்குப் பின் மீண்டும் தலையெடுத்த ‘ஃபோக்ஸ்வேகன்’ 1950-களில் அமெரிக்கச் சந்தையில் கால் பதித்தது. அடுத்த 10 ஆண்டுகளில், தனக்கென அங்கு ஒரு சந்தையை உருவாக்கிக்கொண்டது. கடந்த முக்கால் நூற்றாண்டில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட கார்களை விற்று, உலகின் ஏனைய நிறுவனங்களை எல்லாம் பின்தள்ளி, ‘டொயாட்டா’வுக்கு அடுத்து பெரிய கார் நிறுவனம் எனும் இடத்துக்கு வந்தது.
இந்நிலையில்தான் எந்த அமெரிக்கச் சூழலை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ, எந்த அமெரிக்காவைத் தனது வலுவான சந்தை களில் ஒன்றாக உருமாற்றிக்கொண்டதோ, அதே அமெரிக்காவின் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை’யால் (இபிஏ) மிகுந்த பின்னடைவுக்கு ஆளாகியிருக்கிறது ‘ஃபோக்ஸ்வேகன்’. இதனால் ஜெர்மனியின் பொருளாதாரமே பின்னடைவுக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நடவடிக்கைக்குப் பின்னணியில், அமெரிக்க அரசுக்கு என்னென்ன உள் ஆதாய நோக்கங்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை; இருக்கலாம். ஆனாலும்கூட, மிகத் துணிச்சலான, மக்கள் - சூழல் நலன்சார் நடவடிக்கை இது. அதே சமயம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுப்புறச் சூழல் அரசால் கூட கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதும் நாம் கவனிக்கவேண்டியது.
1970-ல் அதிபர் நிக்ஸன் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை’. ஆண்டுக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு, 16,000 + நிரந்தர ஊழியர்கள் + அதற்கு இணையான ஒப்பந்த ஊழியர்கள், பரந்து விரிந்த ஆய்வகங்கள், கடல் ஆய்வுகளுக்குச் சொந்தக் கப்பல் என ஒரு பெரிய துறையாகச் செயல்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை சுற்றுச் சூழலை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவில் காற்று, நீர், நில மாசில் தொடங்கி கதிரியக்க அபாயம் வரை கண்காணிக்கும் / ஒழுங்குபடுத்தும் இந்த அமைப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றம் இன்னும் போதுமான அதிகாரங்களை வழங்கவில்லை என்ற குறை அமெரிக்கர்களிடம் உண்டு. ஆனால், அதன் கையில் இப்போது இருக்கும் அதிகாரமே எத்தகையது என்பதற்கு உதாரணம் ‘ஃபோக்ஸ்வேகன்’ விவகாரம்.
வெளிநாட்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால், சர்வதேச உறவுகள் பாதிக்கப்படும், அந்நிய முதலீடுகள் குறைந்துவிடும் என்றெல்லாம் பயந்து ‘யூனியன் கார்பைடு’ நிகழ்த்திய போபால் படுகொலைகள், மாகி நூடுல்ஸில் இருந்த ஆபத்தான வேதிப்பொருட்கள், கோக் பெப்ஸியில் இருந்த அளவு மீறிய வேதிப்பொருட்கள், ஸ்டெர்லைட் ஆலை மாசுகள், ‘நோக்கியா’, ‘வோடஃபோன்’, நிகழ்த்திய பொருளாதார மோசடிகள் வரை எல்லாவற்றிலும் முதலாளிகள் முதலீடு செய்யாமல் ஓடிவிடுவார்களே என்று சொல்லி அமைதியாயிருக்கும் இந்தியா எவ்வாறு மக்கள் நலனில் அக்கறை காட்டமுடியும் ? மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் என்ன ஆனது ? அந்த நிறுவனத்துக்கு எதுவுமே நடக்கவில்லை. இதோ அடுத்து மீண்டும் சந்தையில் நுழையப்போகிறது மேகி.
2014-ல் பொதுத் தேர்தல். குஜராத் முதல்வராக இருந்தபோது தொழில் வளர்ச்சியின் பெயரால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியவர் மோடி. பிரதமரான பின் அவருடைய நோக்கப்படி, சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாட்டின் முக்கியமான பாதுகாப்புச் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய டி.எஸ்.ஆர்.சுப்ர மணியன் குழுவை நியமித்தார். இரு மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது அக்குழு. அந்த அறிக்கை என்ன சொல்கிறது; அரசின் போக்கு எப்படியிருக்கிறது என்பதற்கு ரந்தீப் சர்ஜிவாலா விமர்சனத்தின் ஒரு வரி போது மானது: “இந்தியா 60 ஆண்டுகளாக உருவாக்கிய ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டமைப்பையும் அடித்து நொறுக்கி பெரு நிறுவனங்களின் கையில் எல்லாவற்றையும் ஒப்பளிக்க 60 நாட்களில் யோசனை தெரிவித்திருக்கிறது இந்த அறிக்கை.”. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால் “சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை உருவாக்கத்தில் அவசரப்படப் போவதில்லை” என்று தற்காலிகமாக இந்த விவகாரத்தைத் தள்ளிப்போட்டிருக்கிறது மோடி அரசு.
ஒவ்வொரு நாளும் தொழில் வளர்ச்சியின் பெயரால் சராசரியாக 333 ஏக்கர் வனப் பரப்பை இழந்துகொண்டிருக்கும், ஆண்டு உற்பத்தி மதிப்பில் 5% இழப்பைச் சூழல் கேடுகளால் பறிகொடுக்கும் நாடு இந்தியா! நாட்டின் பிரதமர் மோடி இப்போது, தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் நியூயார்க், கலிஃபோர்னியா என்று சுற்றும் மோடி, வாஷிங்டனில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் அலுவலகத்துக்கும் அவசியம் போக வேண்டும். ஜனநாயகம், வளர்ச்சி எனும் வார்த்தைகளுக்குள் உண்மையில் எத்தனை அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை அவருடைய அரசு இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்! மூன்றாம் உலக நாடுகள் ஆடுமாடுகளுக்குச் சமானம் என்று மோடி அரசும், மன்மோகன் அரசும் நினைத்ததால் தான் உலகில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி உரங்களும், தடை செய்யப்பட்ட மாத்திரைகளும், தடை செய்யப்பட்ட பானங்களும் இ்ந்தியாவில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
Tuesday, December 16, 2014
மாலத்தீவிலிருந்து பாடம் கற்போமா குடிநீருக்கு?
மாலத்தீவு மூன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட, 190 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடு. மாலத்தீவின் முக்கியத் துறையாக சுற்றுலாத் துறை உள்ளது. 80 க்கும் மேற்பட்ட தீவுகள் ஹோட்டல்களுக்காகவும், Resort களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
மாலத்தீவின் தலைநகராக மாலே என்ற தீவு உள்ளது. ஒரு பக்கம் நோக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கம்பெனிகள் உருவாக்கம் போன்றவற்றால் 70களின் பிற்பகுதியில் மாலத்தீவின் மக்கள் தொகை அதன் தலைநகரான மாலேவில் அதிகரித்தது. மாலத்தீவின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகையை கொண்டதாக மாலே நகரம் மாறியிருக்கிறது.
கடல் நீர் மட்டம் அதிகரிப்பால் மாலத்தீவின் நிலத்தடி நீரின் ஒரு பகுதி ஏற்கனவே உப்புத் தன்மையுடையதாக மாறியிருக்கிறது. மாலே வின் குடிநீர் தேவை மற்றும் வீட்டு பயன்பாட்டு நீர் தேவைகளுக்கு ஒரு பகுதி நன்னீராக இருக்கிற நிலத்தடி நீரும், மழை நீர் சேமிப்பு திட்டங்கள் மூலமாக சேமிக்கப்படுகிற நீரும் பயன்படுத்தப்பட்டு வந்தது. வளர்ச்சி என்ற பெயரில் மாலே நகரை நோக்கி நடைபெற்ற கம்பெனிகளின் வருகையும், அதிகரித்த குடியேற்றங்களும் நடைபெற்றதால் மாலே நகரின் சூழல் மாறத் தொடங்கியது. முறையில்லாத கழிவு நீர் மேலாண்மையால் நன்னீர் பகுதியாக இருந்த நிலத்தடி நீரும் மாசுபடத் தொடங்கியது.
இந்நிலையில் மழைநீர் சேமிப்பு என்பது நீருக்கான முக்கிய ஆதாரமாக மாறியது. கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டம் என்பது மிகுந்த செலவு மிக்கதாக இருப்பதால் சில resort களில் மட்டும் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. சுனாமிக்கு பிறகு மழைநீர் தொட்டிகள் பெருமளவு சேதமடைந்து விட்டதாகக் கூறி, எதிர்கால குடிநீர் தேவைக்கு அதனை சரிசெய்வதைக் காட்டிலும், கடல் நீரை குடிநீராக்குதல்தான் சிறந்த திட்டம் என்று குடிநீரை வியாபரமாக்கும் பெரும் நிறுவனங்கள் வரிசை கட்டி நின்றன.
அதற்கு பின்பான காலங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்பது ஒன்றே நாட்டின் முக்கிய நீர் வளமாக மாற்றப்பட்டது. நிலத்தடி நீர் முதன்மையானதாகவும், மழைநீர் சேமித்து பயன்படுத்தல் என்பது இரண்டாவதாகவும், கடல் நீர் பயன்பாடு மூன்றாம் நிலையாகவும் இருந்த நிலை மாறி கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனங்களின் கையை மட்டுமே எதிர்பார்த்த ஒற்றை வளமாக இந்த நிறுவனங்களால் மாற்றப்பட்டது.
நிலத்தடி நீர் வளத்தினை நாட்டின் சொத்தாக கருதாமல், பெரு நிறுவனங்களின் கட்டிடங்களையும், அவற்றின் முதலீடுகளையும் மட்டுமே சொத்தாக கருதி நீர் வளங்களை இழந்ததால் கடந்த வாரம் மாலத்தீவு சந்தித்த பிரச்சினை மிகக் கொடியது. கடந்த வாரத்தில் மாலத்தீவின் தலைநகர் மாலேவில் உள்ள அரசுக்கு சொந்தமான கடல் நீர் சுத்திகரிப்பு ஆலையில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஆலைப் பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு முடங்கிப் போனது. இதனால் மாலே நகரில் வசிக்கும் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலைக்கு சென்றனர். ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை உருவானது.
நாட்டின் மிக மோசமான பிரச்சினையாக அறிவிக்கப்பட்டு, அவசர நிலை ஏற்படுத்தப்பட்டது. மக்கள் தண்ணீருக்காக கடைகள் மற்றும் விடுதிகளை உடைத்து சூறையாடக் கூடும் என்று மாலத்தீவு அரசு அஞ்சியது. உடனடியாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறைகளை அறிவித்தது. கையில் இருந்த தண்ணீரை வைத்து ஒவ்வொரு குடும்ப அட்டையாக சோதித்து இரண்டு லிட்டர் தண்ணீர் கேன்களை வழங்கியது. மாலே நகருக்கு குடி பெயர்ந்த மாலத்தீவின் பிற பகுதி மக்கள் அது கூட கிடைக்கப் பெறாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நிலைமையை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல், அண்டை நாடுகளிடம் கையேந்தி நின்றது மாலத்தீவு. இந்தியா, சீனா போன்ற நாடுகள் 2000 டன் தண்ணீர் பாட்டில்களை மாலே நகருக்கு கப்பல் வழியாக அனுப்பினர். அந்த தண்ணீர் கேன்களை வைத்து ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு லிட்டர், மூன்று லிட்டர் தண்ணீர் கேன்களை வழங்கியது. இரண்டு லிட்டர் தண்ணீருக்காக மக்கள் அனைவரும் வரிசையில் நின்று காத்துக் கிடந்தனர். இந்த சில நாட்களில் மாலத்தீவில் குடிக்கவும், உணவுப் பயன்பாட்டிற்கும் தண்ணீர் இன்றி மாலே நகர் மக்கள் அனுபவித்தவை ஏராளம். ஆலை சரிசெய்யப்பட்டாலும் இத்தோடு இந்த பிரச்சினை முடியப் போவதில்லை. அது தற்காலிக தீர்வு மட்டுமே. பெரு நிறுவனங்களின் மயக்க வளர்ச்சியை நம்பி தங்கள் மண்ணின் நீர் வளத்தினை இழந்த ஆப்பிரிக்க நாடுகள் படும் துன்பத்தை சொல்லி மாளாது.
கடல் நீரை குடிநீராக்குதல் என்பது ஆரோக்கியமான குடிநீரல்ல, நிலத்தடி நீரிலிருந்து கிடைக்கப் பெறுகிற எந்த சத்துப் பொருளும் அந்த நீரில் இருக்காது, அந்த நீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை பெருமளவு காக்காது என்றும், கடல் நீரின் சில பகுதிகளில் போரான், அல்கால் டாக்சின் போன்றவை இருப்பதால் அது ஆரோக்கியமான உடல் நிலைக்கு ஏற்றதல்ல என்றொரு வாதத்தினை சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் முன்வைக்கிறார்கள். கடல் நீரை குடிக்கிற தன்மையுடையதாக மாற்ற முடியுமே தவிர, ஒருபோதும் அதை நன்னீராக மாற்ற முடியாது என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.
அதுவும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் இந்த கம்பெனிகள் காட்டும் ஆர்வமென்பது அது தருகிற கொள்ளை லாபத்தை நோக்கித் தான் இருக்கிறது. மாலத் தீவு மக்கள் தங்கள் மாத வருமானத்தில் பெரும்பங்கு பணத்தை நீரை பெறுவதற்காக செலவழிக்கிறார்கள்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கொள்ளை லாபம் ஈட்ட நினைக்கும் இத்தகைய நிறுவனங்களின் அடுத்த குறி என்பது சுமார் 1 கோடி மக்கள் வசிக்கிற சென்னை என்பதாகவே உள்ளது.
சென்னையின் நன்னீர் வளங்கள் மிக விரைவாக நிறுவனங்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தண்ணீர் என்பது இந்த நாட்டின் மிக முக்கிய வளம் என்பதை இந்த அரசுகள் சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை. முதலில் சென்னையின் குறுக்கே ஓடிய மிகப் பெரிய நதியினை அழித்தோம். பிறகு நிலத்தடி நீர் வளம் என்பது படிப்படியாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. பல்லாவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள நிலத்தடி நீர் என்பது எதற்கும் பயன்படுத்த முடியாத நீராக மாற்றப்பட்டிருக்கிறது.
நிலத்தடி நீர் வளம் பெரு நிறுவனங்களின் கழிவுகள், வேதி குப்பைகள், முறைப்படுத்தப்படாத கழிவு நீர் மேலாண்மை போன்றவற்றால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் மக்களின் குடிநீர்த் தேவை என்பது பெரும்பாலும் என்பது சில தண்ணீர் கம்பெனிகளை சார்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த தண்ணீர் கம்பெனிகள் ஸ்டிரைக் என்று சொல்லி சப்ளையை நிறுத்தினாலே போதும் சென்னையை எப்படி ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்பதை கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இந்த நிறுவனங்களை நம்பித் தான் நிலத்தடி நீரை அழித்துக் கொண்டிருக்கிறதா இந்த அரசுகள்!
நிலத்தடி நீர் ஆரோக்கியமில்லாத தண்ணீர், பாட்டிலில் இருப்பதுதான் சிறந்த தண்ணீர் என்று மிகப் பெரிய அயோக்கியத்தனமான விளம்பரப்படுத்தல் என்பது தமிழகம் முழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுற்றுலாப் பொருளாக இருந்த பாட்டில் தண்ணீரை பயன்பாட்டுப் பொருளாக்க பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். 7 கோடி மக்களை தண்ணீருக்கான சந்தையாக மாற்ற தண்ணீர் நிறுவனங்களிடையே கடும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று காட்ட, அரசே பாட்டில் தண்ணீருக்கு மக்களை பழக்கப்படுத்த குறைந்த விலை என்ற Price Tag ஐ பயன்படுத்துகிறது. இந்த காண்ட்ராக்டும் தண்ணீர் நிறுவனங்களிடம் செல்ல வெகு நாள் பிடிக்காது.
தண்ணீர் வளங்களை காப்பதும், முழுமையான தண்ணீர் பயன்பாடு மற்றும் பகிர்வு வசதிகளை ஏற்படுத்துவதுதான் அரசின் கடமை. தண்ணீரை அவன் 20 ரூபாய்க்கு விற்றால் நான் பத்து ரூபாய்க்கு விற்கிறேன் என்பதல்ல அரசின் வேலை. தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவான பொருள். மனிதர்களுக்கு என்பதைக் கூட தாண்டி அது இந்த மண்ணில் வாழ்கிற அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.
குடிநீர், வீட்டுப்பயன்பாடு, விவசாயம் என அனைத்துக்குமான நிலத்தடி நீரை மொத்தமாக தனியார் மயமாக்கும் மசோதாவை மத்திய அரசு தயாராக வைத்திருக்கிறது. மின்சார கட்டணத்தைப் போன்று நம் நிலத்து குழாய்களில் மீட்டர் பொருத்தப்பட்டு, பெருநிறுவனங்களுக்கு நாம் கட்டணம் கட்டப் போகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? உண்மையில் இதற்கான விவாதம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் தொடங்கி விட்டது.
மேலும் சென்னையின் குடிநீர் தேவை என்பது கடல்நீர் சுத்திகரிப்பு என்ற ஒற்றை முகத்தை நோக்கி தள்ளப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமக்கே நமக்கான சொத்தான தண்ணீரை மாத வருமானத்தில் பாதியை செலவழித்து பண்டப் பொருளாக வாங்க நாம் தயாரா?
100,000 மக்களுக்கு தேவையான நீரை பக்கத்து நாடுகளிடம் கேட்டுப் பெற்றது மாலத்தீவு. சென்னையில் அந்த நிலை ஏற்பட்டால் 1 கோடி மக்களுக்கான நீரை யாரிடமிருந்து பெறப்போகிறோம்.
மாலத்தீவுகளுக்கு நீரை வழங்கிய நாடுகள் எதுவும் பரிதாபப்பட்டு அந்த நீரை வழங்கியிருக்கவில்லை. அந்த நாட்டின் இன்னொரு பகுதி வளங்களை கைக்கொள்ளும் திட்டத்துடன் தான் இந்த உதவியையே செய்ய முன்வருகின்றன. எனவே உலகின் எந்த வல்லாதிக்கத்தையும் நம்பி நம் வளங்களை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது.
மாலத்தீவிலிருந்தாவது பாடம் கற்போமா? தண்ணீரை தனியார்மயமாக்கும் எந்த திட்டங்களானாலும் அதை எதிர்த்து களம் காண்போம். நம் வளம் உரிமை, அதை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என உரக்கச் சொல்வோம். தண்ணீர் மசோதாவை எதிர்த்த போராட்டங்களுக்கு தயாராவோம்.
மே 17 இயக்கம் முகநூல் பக்கத்திலிருந்து
https://www.facebook.com/mayseventeenmovement?fref=nf
Friday, September 21, 2012
கூடங்குளம்: சி.பி.எம்மின் புரட்சி! அறிஞர் அ.மார்க்ஸின் மகிழ்ச்சி!!
காரத் எழுதிய இந்த வழா வழா கொழா கொழா கட்டுரையின் சாரம் என்ன? அல்லது ஏற்கனவே சி.பி.எம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை இந்தக் கட்டுரை மறுக்கின்றதா அல்லது ஆதரிக்கின்றதா? நிச்சயமாக ஆதரிக்கவே செய்கிறது.
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்திற்கு முன்பேயே ரசியாவிடமிருந்து இரண்டு அணு உலைகள் வாங்கப்பட்டு 15,000 கோடி ரூபாய் செலவில் கூடங்குளத்தில் கட்டப்பட்டு விட்டதால் அதை மூடுவது சாத்தியமானது அல்ல என்பதோடு நாட்டு நலனிற்கும் உகந்தது இல்லையாம்.
இதைத் தவிர்த்த மற்ற அணு உலைகள் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு வந்தவையாம். இந்திய சுதேசி அணு உலைகளை விட இவை மிகுந்த செலவு பிடிப்பவையாம். அதனால் அமெரிக்க, ஐரோப்பாவிலிருந்து இறக்குமடி செய்யப்பட்ட அணு உலைகளை சி.பி.எம் கட்சி எதிர்க்கிறதாம். சரி, இதன்படி இந்த ஐரோப்பாவின் மேப்பில் ரசியா வராது போலும். மேலும் இத்தகைய அணு உலைகளின் பாதுகாப்பும் பிரச்சினையாம். அதாவது ஒரு இடத்தில் இரண்டு உலைகள் இருந்தால் பிரச்சினை அல்ல, நான்கு, ஆறு என்று இருந்தால் பிரச்சினை என்பதை காரத் சுற்றி வளைத்து கூறுகிறார். இதற்கு ஆதாரமாய் புகுஷிமா வில் ஆறு உலைகள் இருந்ததை காரத் கண்டுபிடித்துக் கூறுகிறார்.
புகுஷிமா விபத்திற்குப் பிறகு அணு உலைகள் குறித்த மக்களின் அச்சம் அதிகரித்திருக்கிறதாம். இதை நிவர்த்தி செய்யுமாறு சுயேச்சையான நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்து அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டுமாம். பாதுகாப்பு தொடர்பான அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தில் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அரசு தெளிவு படுத்தி அதையும் மக்கள் முன் வைக்க வேண்டுமாம்.
அணுமின் நிலையங்களை ஆதரிக்கும் அப்துல் கலாம் உள்ளிட்டு பலரும் காரத் பேசுவதைப் போலத்தான் பேசுகின்றனர். மக்களின் அச்சத்தை போக்குவது என்ற போர்வையில்தான் கூடங்குளம் அணுமின்நிலைய அனுமதியும், துவக்கமும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இதையெல்லாம் செய்து விட்டால் அணுமின்நிலையங்களை சேமமாக நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் காரத் மற்றும் அவரது கட்சியின் நிலைப்பாடு.
தந்திரமான மொழியிலும், விவாதத்திலும் மறைந்து கொண்டாலும் காரத்தின் சந்தர்ப்பவாதம் இங்கே பட்டவர்த்தனமாக காட்டிக் கொள்ளவே செய்கிறது. இந்தியாவின் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களது பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காகவே இங்கு அணுமின்நிலையங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அமெரிக்கா முதல் ஆதாயம் அடைகிறது என்றால் பிரான்ஸ், ரசியா அடுத்தடுத்து ஆதாயம் அடைகின்றன. இதில் ஒன்றை எதிர்த்து விட்டு பிறிதொன்றை ஆதரிப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.
மேலும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் என்று என்.ஜி.ஓ மொழியில் விளக்கமளிப்பது சி.பி.எம்மின் மறைமுக ஆளும் வர்க்க சேவையையே குறிக்கிறது. ஒரு வேளை போராடும் மக்கள் அப்படித்தான் அதை புரிந்து கொண்டு எதிர்த்தாலும் அதை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்துக் கொண்டு செல்வது நமது கடமை. மேலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பது என்பது இந்திய அரசையே எதிர்ப்பதாக கருதப்பட்டு அங்கு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை ஒரு பகுதியின் பொருளாதார பிரச்சினையாக சுருக்கி பார்ப்பதன் மூலம் சி.பி.எம் கட்சி தனது மறைமுக இந்திய முதலாளிகளது சேவையை தொடர்கிறது.
அடுத்து கூடங்குளம் திட்டம் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு முன்பேயே வந்தாலும் அது முற்றிலும் தற்போதைய அமெரிக்க ஒப்பந்த்தத்தின் ஷரத்துக்களின் படியே அமல்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமானது விபத்து ஏற்பட்டால் அணுஉலைகளை அளித்த நாடுகள் நிவாரணம் வழங்கத் தேவையில்லை என்பது. இதை காரத் குறிப்பிட்டாலும் பெரிய மனதுடன் இரண்டு உலைகளை அங்கே செயல்படலாம் என்று அனுமதிக்கிறார். அங்கு கூடுதலாக வரும் இரண்டு உலைகளை மட்டும் அவரது கட்சி எதிர்க்குமாம்.
கூடங்குளம் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அது இதர அணு உலை எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்குமென்பதால்தான் இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அதை அடக்க முனைகிறது. இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட காரத்திற்கு அறிவு இல்லை என்பதல்ல, அவரது சந்தர்ப்பவாதம் இங்கே உண்மைகளை கொன்று விடுகிறது.
இதற்கு மேல் நிறைய செலவு செய்து விட்டார்கள் என்று கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிப்பதை இப்படியும் சொல்லலாம். அதாவது முதலாளித்துவம் இதுவரை செலவழித்து உருவாக்கியிருக்கும் பல கோடி பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கைப்பற்றி சோசலிச சமூகத்தை படைக்கும் புரட்சி கூட நாட்டு நலனுக்கு உகந்தது அல்லதான். அதனால்தான் சி.பி.எம் கட்சி புரட்சியிலிருந்து விலகி மனமகிழ் மன்றமாக மாறிவிட்டது போலும்.
அதே நேரம் காரத்தின் இந்தக் கட்டுரை அறிஞர் அ.மார்க்சை குஷிப்படுத்தியிருக்கிறது. முகநூலில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கும் அ.மா அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
இந்தக்கட்டுரை சி.பி.எம்மிடம் எந்த நிலைப்பாட்டு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதே காரத்தே ஒத்துக் கொண்டாலும் அறிஞர் அ.மா மறுப்பார் போலும். நிலவுகின்ற சமூக அமைப்பை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொண்டு சீர்திருத்தம் கோரும் ஒரு நிலையை மாபெரும் புரட்சி என்று சித்தரிக்கும் அளவு அறிஞரின் காமன்சென்ஸ் குறுகிவிட்டது. அணு மின்சாரம் தவிர்த்த மாற்று எரி சக்தி திட்டங்களை மையமாகக் கொள்ள வேண்டும் என்று காரத் கூறயிருப்பதெல்லாம் அ.மாவுக்கு மாபெரும் கலக குரலாக தென்படுகிறது. இதைத்தான் டிராபிக் ராமசாமி முதல் சூரிய விளக்கிற்காக என்.டி.டி.வியுடன் கூட்டணி அமைத்து செயல்படும் பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான் வரை பலரும் சலிப்பூட்டும் விதத்தில் சொல்கிறார்கள். அதன்படி அவர்களையும் புரட்சிக்காரர்களாக அ.மா ஏற்றுக்கொள்வார் என்று நம்புவோம்.
மக்களை அணிதிரட்டும் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்கள் மட்டும் இது போல ஏதாதாவது கூவிக் கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறார் அ.மா. இதைத்தான் கருணாநிதி பலமுறை ஈழம் குறித்து சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும், ஆட்சியில் இருக்கும் போது எச்சரிக்கையாகத்தான் செயல்பட முடியும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட முடியாது…. இதெல்லாம் கூட அ.மாவின் இந்த இரும்பு இலக்கணத்தில் கண்டிப்பாக வரும். ஒரு பிரச்சினைக்கு இறுதித் தீர்வு என்ன என்பதும் அதை நோக்கியே தற்கால போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பதும் புரட்சி குறித்து ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சி அறிய வேண்டிய அடிப்படைப் பாடம். அதாவது புரட்சிக்காகத்தான் மக்களை திரட்டுகிறோமே அன்றி மக்கள் எதற்காகவாவது திரண்டு விட்டால் அது புரட்சி அல்ல. ஆனால் அ.மா இரண்டாவதைத்தான் புரட்சி என்று நம்புவதால் அதை அதற்கு உரிய சி.பி.எம்மிற்கும் விருதாக அளித்து மகிழ்கிறார்.
அணுமின்நிலையத்தை சுற்றுசூழல் பிரச்சினையாக மட்டும் பார்ப்பது என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உத்தி. சி.பி.எம் அதையும் பேசிக் கொண்டு அமெரிக்க எதிர்ப்பு என்பதாகவும் நாடகம் ஆடுகிறது. உள்நாட்டு உலை பாதுகாப்பானது, வெளிநாட்டு உலை ஆபத்தானது என்ற காரத்தின் அபத்தத்தை சுட்டிக்காட்டும் அ.மா அதன் அரசியல் சந்தர்ப்பவாதத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் எப்படியும் புரட்சி வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் போது ஒரு அறிவாளியின் நடவடிக்கையில் சந்தர்ப்பவாதம் மட்டும்தானே மையமாக இருக்க முடியும்? ஆனாலும் இது ஒரு நாசுக்கான, நாகரீகமான முறையில் வெளிப்படும் என்று அறிஞர் அ.மார்க்ஸ் நம்பிக் கொண்டிருந்தால் அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
- http://www.vinavu.com/2012/09/18/karat-a-marx/ - வினவு கட்டுரை
Thursday, March 22, 2012
கூடங்குளம் மக்கள் நடத்தும் அநியாயமான(?!) போராட்டம்..
நமது புரட்சித் தலைவி, அம்மா, சங்கரன் கோவிலில் அமோக வெற்றி பெற்ற புரட்சி நாயகி, போன மாதம் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும் பின்பு ஒரே மாதத்தில் பெங்களூர் கோர்ட் வழக்கில் வாய்தா கெடு தீர்வதற்குள் கூடங்குளம் மக்களுக்கு ஆப்பு கொடுக்கவும் மாபெரும் தமிழ் நாடு சட்டசபையில் தீர்மானம் போட்டுச் சொல்லியும் கேளாமல்..
அண்ணல் சூப்பர் ஸ்டார் அப்துல்கலாம் அவர்கள் சூறாவளிச் சுற்றுப்பயணம் அணு உலைக்குள் நடத்தி, வெளிவந்து வாசலில் நின்றபடியே தயாரித்து அளித்த நாற்பது பக்க 'பாதுகாப்பானது உலை' என்கிற இன்ஸ்டென்ட் காபி, இன்ஸ்டென்ட் டீ போன்ற சூடான மணமான இன்ஸ்டன்ட் அறிக்கையைப் படித்தும் திருந்தாமல்...
அதற்குப் பின் மத்திய அரசின் ஐயாவும், மாநில அரசின் அம்மாவும் அனுப்பிய அணு உலையை கடனுக்கு சுற்றிப் பார்க்கும் குழுவின் அறிக்கையையும் மதிக்காமல்..
இன்று அம்மா கருணை கூர்ந்து அனுப்பியுள்ள, 10 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவம் ஆகியவை துப்பாக்கி சகிதம் கூடங்குளம் ரோடுகளில் எல்லையில் நடப்பது போல் 'பரேட்' நடந்து காட்டியும், அஞ்சாமல்...
இப்படி...
உண்ணாவிரதம் இருந்து போராடுவது எவ்வளவு அநியாயம்..?
மக்களே ! நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.. உங்களில் பத்து பேரையாவது கவர்மென்ட் சுட்டாகனுமா இல்லையா ? அப்போதானே செத்தவனுக்கு நஷ்ட ஈடு, கோர்ட், கேசுன்னு பிரச்சனையை திசை திருப்பி சத்தமில்லாமல் அணு உலையை முதலாளிங்க திறந்து பிசுனஸ் ஸ்டார்ட் பண்ண முடியும்.
கரண்ட்.. கட்.. கரண்ட்.. கட்ன்னுட்டு எல்லாரையும் பழி வாங்கி... ஏதோ கூடங்குளம் வந்தவுடனே உங்களுக்கெல்லாம் 25 பைசாவுக்கு ப்ரீயா கரண்ட் தரப்போற மாதிரி பீலா உட்ற அம்மாவும், ஐயாவும்... இவ்வளவு கரண்ட் கட் நாடு பூரா வந்தப்ப.. 8 மணி நேரம்... 12 மணி நேரம்னுட்டு சிறு தொழில்களும், மக்களும் ராத்திரிப் பகல்ன்னு கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டப்போ.. ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனுகளுக்கு மட்டும் ஒரு செகண்ட்ன்னா.. ஒரே செகண்ட் கூட கரண்ட் கட்டே பண்ணாம 24 மணி நேரமும் கரண்ட் விட்டுட்டு இருக்கிற ரகசியம் என்னாங்க ? கூடங்குளம் மாதிரி அவியளுக்கு மட்டும் ரகசியமா ஒரு மாடங்குளம் திறந்திருக்கீகளோ ?
கூடங்குளம் மக்களுக்கு இரண்டு நாட்களாக மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. பால், குடிநீர், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. எதற்கு ? அவுங்க தான் உண்ணாவிரதம் இருக்காங்களே.. எதுக்கு இதெல்லாம் அவுங்களுக்குன்னுட்டு கவர்மென்ட் நினைச்சிட்டாங்க போல..
உதயகுமார் அமெரிக்காவோட ஆதரவுல போராட்டம் பண்றார்ன்னுட்டு கூசாம சொல்ற பிரதமர் ஐயா.. நீங்க போட்ட மிகப் பெரிய அணு உலை ஒப்பந்தம் 1..2.. 3 அது ஏதோ 50 லட்சம் கோடியாமே.. ரஷ்யா கூட போட்ட இந்த ஒப்பந்தமெல்லாம் அமெரிக்கா போட்ட ஒப்பந்தத்துக்கு கால் தூசி அளவு பணமாமே... அப்போ உதயகுமார் போராடினா... இந்த அணு உலை நின்னா...பின்னால எல்லா அணு உலையும் நின்னு போகுமில்லையா.. இதனால் எதிர்காலத்துல யாருக்கு பெரிய ஆப்பு...? அமெரிக்காவுக்கா..? ரஷ்யாவுக்கா..? கம்யூனிஸ்ட்டு தோழர்களே வழக்கம் போல 'அமைதி'க்கு வேண்டுகோள் வெச்சுட்டு அமைதியாயிட்டீங்க.. இனி உங்க பாஸ் மிச்சத்தை பாத்துக்குவாருன்னா..?
நம்ம தினமலம்.. போன்ற பத்திரிக்கைகளெல்லாம்.. வரிஞ்சுகட்டிட்டு அணு உலை வேணும்.. இடிந்த கரை மக்கள் ரவுடிகள்னு.. எழுதறத படிச்சா நமக்கு என்ன தோணும்?
இது அநியாயமான போராட்டம்னு தானே..
கூடங்குளத்துக்கு வெளியே இருக்கும் மக்களே.. நீங்க யோசியுங்க.. யாரையாவது கவர்மெண்ட் சுட்டு பலி எடுக்கிறதுக்குள்ள யோசியுங்க..
சற்று முன் உதயகுமாரிடன் பேசினோம்,,,, அங்கு மக்கள் கடல் மார்க்கமாக
குவிந்து கொண்டு இருக்கிறார்கள்... குழந்தைகளுக்கு தேவையான எதுவும்
சென்று சேரவில்லை... தண்ணீர் தடுக்கப்பட்டு இருக்கிறது.. கழிவறைகள்
மூலமாக சுகாதார கேடு வெகு சீக்கிரமாக பரவும் ஆபத்து அதிகமாக இருக்கிறது..
கிட்ட தட்ட 10000 மக்கள் 3 நாட்களாக ஒரு இடத்தில் குவிந்து
இருப்பதால்சுகாதார கேடுகள் மோசமடையும் என்று கவலை தெரிவித்தார்..
மருத்தவமனை இருக்கிறது, மருத்துவர்கள் இல்லை, மருந்துகள்
இல்லை...ஊடகங்கள் வட இந்திய ஊடகங்கள் மட்டுமே உள்ளே வந்து இருக்கின்றன...” என்றார்..... தமிழ் நாட்டு ஊடகங்கள் வாய் திறக்க மறுக்கின்றன. தோழர்களே அடுத்த முள்ளிவாய்க்கால் இது...
கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி
மொத்த நிறுவுதிறன் - 1000 Mw
உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் - 450 Mw (only 45% output)
இதில் தமிழகத்தின் பங்கீடு / ஒதுக்கீடு - 157 Mw (only 35% for TN)
இந்த மின்சாரம் நம்மை வந்தடையும் போது நமக்கு கிடைக்கும் மின்சாரம் 25% இழப்பு போக - 117 Mw
இந்த 117 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த பற்றாக்குறையும் சரி செய்ய முடியும், என்று நீங்கள் நம்பினால்
நாங்கள் அல்ல முட்டாள்கள்!!
போராடுவது மனித இனத்தைக் காக்கவே அன்றி.! ஆதாயத்துக்காக அல்ல..! உனக்கும் எனக்குமான போராட்டம் தான் இது...
Sunday, March 4, 2012
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு - சென்னை.
அன்று காலை மதுரையிலிருந்து வந்து இறங்கிய நண்பர் பரபரவென்று குளித்துக் கிளம்பிய போது தான் தெரிந்தது சென்னையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு காலை 9 மணிக்கு பீச்சில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் கருத்தரங்கமும் மாலையில் தி.நகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் மாநாடுமாக நடக்க இருப்பது. “ஒரு போஸ்டர் இல்லை... ஒரு பேனர் இல்லை... என்னடா மாநாடு இது? யாரோ நாலு பேர் சயன்ட்டிஸ்ட் என்று வந்து உட்கார்ந்து ரம்பமாய் அறுக்கப்போகிறார்கள்” என்று யோசித்தபடியே நண்பருடன் கிளம்பினேன்.
மௌன்ட் ரோடில் புதிதாய் கருணாநிதி கட்டி உபயோகப்படாமல் போன தலைமைச் செயலக கட்டிடம் தாண்டி உள்ள சிக்னலில் திரும்பினால் போலீஸ் வேன் குறுக்காக ரோட்டின் நடுவே நின்றபடி உள்ளே யாரையும் விடாதே என்று மெகா போனில் எச்சரிக்கை விட்டுக்கொண்டிருந்தது. திரும்பிச் சுற்றி சேப்பாக்கம் வழியாக அப்பக்கம் போனால், அண்ணா சமாதியின் அருகில் உள்ள நுழைவிலும் போலீஸ் சாலையை மறித்து யாரையும் போகவிடவில்லை(மாநாடு நடந்தால் மக்கள் வரக்கூடாதா? ). கடைசியில் கூவத்தை ஒட்டிய சந்தில் நுழைந்து மேடு பள்ளம் ஏறி அரங்கத்தை வந்தடைந்தோம். வாசலில் ஒரு சின்ன கையடக்க ஜெனரேட்டர் சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்தால் 3000 பேர் கொள்ளக்கூடிய அந்த அரங்கத்தில் 2500 பேர் இருளில் உட்கார்ந்திருந்தார்கள். பவர் கட்.
வெளியில் நின்றிருந்த அந்தச் சின்ன ஜெனரேட்டரின் உயிரில் மேடையில் மங்கலான ஒரு விளக்கொளியும், மைக்கும் இயங்க குழுவினரின் கலைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பாடியவரின் குரலிலும், பாடலிலும் எழுச்சியும் அரசை நோக்கிய சாடலும் நிறைந்திருந்தது. நண்பரும் நானும் கடைசி வரிசையில் உள்ள காலி சீட்டுக்களில் அமர்ந்தோம்.
பின்பு நடந்த அணு உலை எதிர்ப்பு மாநாட்டு கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார் ‘மே 17’ இயக்கத்தின் திரு. அவர் பேசியபோது இந்தியாவின் பெருமுதலாளிகள் இந்தோனேஷியாவில் எண்ணெய்க் கிணறு தோண்டுமளவு வளர்நதிருப்பதாக குறிப்பிட்டார். அணு உலை மட்டுமல்ல எண்ணெய் தோண்டுவதாலும் கூட சுற்றுப்புறச் சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் 2.5 முதல் 5 கிலோ மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்படும் எண்ணெய்க்குழிகளில் இருந்த 70 லட்சம் லிட்டர் வரை எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் புவியின் ஆழத்தில் ஏற்படும் வெற்றிடம் மற்றும் அடுக்கு நகர்வுகள் சுனாமி, பூகம்பம் போன்றவை ஏற்படவும் ஒரு காரணமாய் அமைகின்றன. காவிரி ஆற்றுப் படுகையில் மட்டும் 18 இடங்களில் எண்ணெயும், 11 இடங்களில் இயற்கை வாயுவும் எடுக்கும் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அடுத்து பேசிய தமிழ்த் தேச மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் உதயகுமாரின் இரு சகோதரர்கள் அங்கேயும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய விடுதலைத் தமிழ்ப் புலிகள் அமைப்பின் குடந்தை அரசன் பேசிய போது அமெரிக்காவில் கடத்தப் பட்ட விமானத்தை அணு உலையைச் சுற்றி பறக்க விட்டு மிரட்டி அரசுடன் பேரம் பேசியதைக் குறிப்பிட்டு அணு உலை அந்த அளவிற்கு ஆபத்து நிறைந்தது என்பதை வலியுறுத்தினார்.
இந்தக் கணத்தில் மேடையேறிய உதயகுமார் மிக சாதாரணமாக வேட்டி சட்டையணிந்து வந்திருந்தார். கடைசி வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டார். பின் சில பேச்சாளர்கள் அவரை முன்னே அழைத்து தங்கள் இருக்கையில் அமர வைத்தனர்.
தமிழ்த் தேச தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த கருப்பசாமி பேசும் போது அணு உலை பாதுகாப்பானது என்று ஒரு பிரிவும் பாதுகாப்பற்றது என்று மற்றொரு பிரிவும் நின்று பேசுவதானது அணு உலையே வேண்டாம் என்று எழும் குரலை அமுக்கி விடவே என்று குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேசும் போது ஒரு கதையைக் கூறினார். விவசாயி ஒருவர் விளைந்த நெல்லை தீட்டி அரிசியாக்க ஆலைக்குச் சென்று கொடுத்தார். திரும்பி அரிசியாக வாங்கி வரும் போது வெளியில் வாசலில் இருந்த போர்டில் ‘தங்கப் பாண்டி தவிட்டாலை’ என்று போட்டிருந்தது. ‘ஏன் அரிசியாக ஆக்கிக் கொடுக்கும் ஆலையை அரிசியாலை என்று போடாமல் தவிட்டாலை என்று போட்டிருக்கிறீர்கள்?’ என்று இவர் கேட்க அந்த ஆலை அதிபர் சொன்னாராம் ‘இதில் தவிடும் தானே நாங்கள் பிரித்து தருகிறோம்’ என்று. அதே போல அணு குண்டுகள் செய்ய பயன்படும் புளுட்டோனியத்தை டன் கணக்கில் உற்பத்தி செய்யும் அணுகுண்டு உலையில் கரண்ட்டும் கிடைப்பதால் அணு மின் நிலையம் என்று கூறுவதும் இருக்கிறது.
பெண்கள் உரிமைப் பேரவையின் பானுமதி பேசும் போது தமிழகமே இருளில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது நெய்வேலியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் நம் தமிழ்நாட்டுக்கு தரப்படாமல் கேரளாவிற்கும், கர்னாடகாவிற்கும் விற்கப்படுவது கண்டிக்கப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டார்.
வின் டிவியின் டி.எஸ்.எஸ். மணி பேசும் போது தூத்துக்குடி பழைய காயலில் கன நீர் ஆய்வகம் என்ற பெயரிலும், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் என்ற பெயரிலும், கூடங்குளத்தில் மஹேந்திரபுரியில் கன நீர் ஆய்வகம் என்கிற பெயரிலும் இயங்குபவை எல்லாம் உண்மையில் அணு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளே என்று குற்றம் சாட்டினார். நண்பர் கல்பாக்கத்தின் பக்கத்தில் கூட இது போல ஒரு இடத்தில் அணுகுண்டுகள் செய்யும் தொழிற்சாலை இருப்பதாகக் கூறினார். எனக்கு நெஞ்சில் திடுக்கென்று அடித்துக் கொண்டது.
தலித் விடுதலைக் கட்சியைச் சேர்ந்தவர் பேசும் போது கன்னியாகுமரியில் சுனாமியின் போது 200 டன் எடையும் 200 அடி நீளம், 65 அடி அகலம் கொண்ட இரும்புப் பாலம் தூக்கி வீசப்பட்டது என்று குறிப்பிட்டார். ஆனால் அப்துல் கலாமோ சுனாமியால் அணு உலைக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று சாமி சத்தியம் செய்கிறார்.
பூவுலகின் நண்பர்கள் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர் பேசும் போது கூடங்குளம் 1000 மெகாவாட் திறனுள்ளது என்கிறார்கள். அதில் 700 மெகாவாட் தான் அதனால் சாதாரணமாக உற்பத்தி செய்ய முடியும். தமிழ் நாட்டுக்கு அதில் 20 சதவீதம் அதாவது 280 மெகாவாட் தான் இதிலிருந்து கொடுக்கப்படும். மீதி அனைத்தும் மற்ற மாநிலங்களுக்கு. இதே போலத் தான் கல்பாக்கத்திலிருந்து கடப்பாவிற்கு அணு மின்சாரம் கொடுக்கப்படுகிறது என்றார். சென்னை பல்கலைக் கழகத்திற்கு அருகேயுள்ள பழம்பெரும் காஸா மஹால் தீப்பிடித்து அங்கு இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் தீக்கிரையான போது அதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பியது தமிழக அரசு. அந்தக் குழு காஸா மஹாலைச் சுற்றிப் பார்த்து விட்டு சேதம் பற்றிய ஆய்வு செய்யவும் அறிக்கை தரவும் ஒரு வார காலம் ஆகும் என தமிழக அரசிடம் தெரிவித்தது. ஆனால் நம் அப்துல் கலாமோ காலையில் போய் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பு என்ற பெயரில் இருக்கும் கூடங்குளம் அணு உலையை சுற்றிப் பார்க்கிறார். மாலையிலேயே பத்திரிக்கையாளர் பேட்டியில் ஆய்வு முடிந்ததாகக் கூறி, அணு உலை மிக்க பாதுகாப்பாக இருப்பதாய் அறிவித்து 40 பக்க அறிக்கை தருகிறார். இந்த அறிக்கை எப்படிப் பட்டது என்று வினவினார் பேசியவர்.
டி.எஸ்.எஸ் மணி பேசும் போது நடுவில் சிறு சலசலப்பு. வந்தது விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவன் வந்து மேடையில் ஏறினார். சிறிது நேரத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வந்து சேர்ந்தார்.
சிறிது நேரத்திலேயே திருமா பேசினார். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து பார்லிமெண்ட்டில் உண்ணாவிரதம் இருந்ததாகவும், நாடாளுமன்றத்தில் அணு சக்தி கூடாது என்று வாதிட்டதாகவும் தெரிவித்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று போராடும் கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்று கேட்டார். ரஷ்யாவோ அமெரிக்காவோ யார் கொண்டு வந்தாலும் அணு உலை தீயது தான். கம்யூனிஸ்ட்டு கட்சியின் (சிபிஎம்) நேற்று நடந்த மாநாட்டில் போடப் பட்ட முக்கியமான தீர்மானம் தமிழ்நாட்டில் இன்னும் சாதிய ஒழிப்புக்காகப் போராட வேண்டும் என்பது. அறுபது வருடங்களுக்கு முன் பெரியார் போட்ட தீர்மானம் இது. கம்யூனிஸ்ட்டுகள் கடந்த பத்தாண்டு காலமாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் நாடுகளின் எல்லா அணு உலைகளையும் மூடிவிடப் போவதாக அறிவித்துள்ளன. கேரளாவில் தான் முதன் முதலில் கூடங்குளம் கட்டப்படுவதற்காக இடம் பார்க்கப் பட்டது. பின்னர் கேரள அரசின் எதிர்ப்பால் தமிழ்நாட்டில் கூடங்குளம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றார்.
பின்னர் பேசிய சீமான் தனக்கே உரிய பாணியில் அரை மணி நேரம் பேசினார். கூடங்குளம் ஆபத்தில்லாததுன்னு சொல்பவர்கள் பார்லிமண்டைச் சுற்றி பாதுகாப்பாக பத்து கட்டி வைத்துக் கொள்ள வேண்டியது தானே என்றார். அணு மின்சாரம் பாதுகாப்பானது என்றால் தெருவுக்கு தெரு அணு மின் உலை வைக்க வேண்டியது தானே என்று கோபமாகக் கேட்டார். மாலை நடக்க விருக்கும் மாநாட்டில் தொடர்ந்து பேசுவதாகச் சொல்லி சீக்கிரமே பேச்சை முடித்துக் கொண்டார்.
தமிழ்நாடு மக்கள் பீடம் – கண்ணன்., சிபிஐ எம்.எல் – சுப்பிர மணியன் போன்று இன்னும் பல அமைப்பினரும் பேசினர். கூட்டத்திற்கு வந்த கூட்டம் எல்லாம் காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டமாகத் தெரியவில்லை. இடிந்த கரை மக்களின் போராட்டத்தில் மிஷனரிகளின் பங்கு சர்ச்சுகளின் வழியாகவும், போதனைகள் வழியாகவும் இருப்பதாகவும், அதே போல் சாதிய அமைப்புகளின் மூலமாகவும் ஆதரவுகள் திரட்டப்பட்டதாக நண்பரொருவர் கூறினார். இதில் உண்மையும் இருக்கிறது. ஆனால் நம் பிரதமர் சொல்வது போல் உதயகுமார் அமெரிக்காவிலிருந்து வரும் பணத்திற்காக அணு உலையை எதிர்த்துப் போராடுகிறார் என்பது எவ்வளவு தூரம் உண்மை ?
சிபிஎம் நண்பர் ஒருவரிடம் கூடங்குளம் அணு உலை பற்றி சிபிஎம்மின் நிலைபாடு பற்றிக் கேட்ட போது கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளைத் திறப்பதில் அவர்களுக்கு சம்மதம் என்றும், மற்ற 6 அணு உலைகளும் 1-2-3 ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப் படுவதால் அவற்றைக் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். சிபிஎம் அணு சக்திக்கு எதிரானது அல்ல. மாறாக அமெரிக்காவின் பிடியினுள் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி துறையை அடமானம் வைக்கும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மட்டுமே எதிரானது என்று ஆணித் தரமாகக் கூறினார்.
உலகெங்கும் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் வலுக்கும் காலத்தில் இந்திய சிபிஎம் மட்டும் இன்னும் விவரம் தெரியாமல் ‘ஆக்கத்திற்கே அணு சக்தி’ என்கிற சிறுபிள்ளைத் தனமான வாசகங்களைக் கையாளுவது வேதனையாக இருக்கிறது. சிபிஐ கூட பரவாயில்லை. எல்லோரும் மக்களின் கோபத்தை வடிக்க ஆளும் வர்க்கம் பயன்படுத்தும் கருவி சிபிஎம் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதை எப்போது உணர்வீர்கள்? முன்பு ஈழப் பிரச்சனை (2009ல் ஈழப் படுகொலைகள் நடந்த போது வாயே திறக்காத சிபிஎம் இன்று ராமகிருஷ்ணன் இலங்கையில் மக்கள் கொல்லப்பட்டதையும் இன்னும் முகாம்களில் அல்லல் படுவதையும் கண்டித்து தீக்கதிர் நாளேட்டில் 2012 மார்ச்ல் முழங்குகிறார்); இப்போது கூடங்குளம்.. அணு சக்தி ஆக்கத்திற்கு பயன்படுத்தப் படுவதென்பது சிங்கத்தின் நகங்கள் நீளமாக இருக்கிறதென்பதால் அதை முதுகு சொறியச் சொல்வது போல இருக்கிறது.
அணு உலைக்கு யுரேனியம் தோண்டுவது முதல் கடைசியில் அணு உலை கழிந்த அணுக் கதிர் கழிவுகளை பூமிக்கடியில் 3 கி.மீ ஆழத்தில் புதைத்து அதை இளவு காத்த கிளி போல பல நூறு வருடங்கள் பார்த்துக் கொள்வது வரை எல்லாமே பணம் தின்னும் தனியார் காசு கொழிக்கும் ப்ராஜக்ட்கள் என்பதற் காகத்தான் அவை முன்னிறுத்தப் படுகின்றன. மக்களுக்கு ரொம்ப உபயோகமுள்ளது என்று நம்ப வைக்கப் படுகின்றன. மக்கள் பணங்களை பல்லாயிரம் கோடிகளைத் தின்று கோழி கழிவது போல கொஞ்சமே கொஞ்சம் கழியும் மின்சாரத்தை மக்களுக்கு அல்வா என்று கூறி விற்கும் கதை தான் இங்கு நடக்கிறது.
உதயகுமார் கட்சி சார்ந்தவர் அல்லர். தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர் தான். அவர் போராடுவது மனதுக்கு சந்தோஷமாக இருந்தாலும் என்ஜிஓக்களின் மீதான நம்பகத்தன்மை நமக்கு சமீப காலமாக வலுவிழந்து வருவதால் இவர் என்றைக்கு குடை சாய்வார் என்று உள்ளூர ஒரு பயமும் எழுகிறது. ஏனென்றால் அரசியல் அற்ற போராட்டம் என்பது ஏகாதிபத்தியத்தின் நாடக மேடையில் மக்களுக்காக நடத்தப் படும் புரட்சி எனும் நாடகமாகத் தான் இருக்க முடியும் என்பதை கடந்த காலத்தில் நிகழ்ந்த எவ்வளவோ நிகழ்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன. லிபியாவில் கடாபி கொல்லப்பட்டது கடைசியாய் நடந்த புரட்சி நாடகம்.
மேலும் உதயகுமார் என்னதான் உறுதியாகவே இருந்தாலும் இது போல அரசியல் பின்புலமில்லாத தலைவர்களை, இயக்கங்களை ஒரு என்கௌன்டர், ஒரு துப்பாக்கிச் சூடு, ஒரு தடியடியில் வேண்டுமென்றே அடிவயிற்றில் உதைத்து ஆறு மாதங்களுக்கு ஆஸ்பத்திரியில் அவதிப்பட வைக்கும் போலீஸ் பூட்ஸ் கால்கள் என்று இவர்களை தடுக்க ஏகப்பட்ட தடைகள் இருக்கின்றன. இதையும் தாண்டி இவர் ஜெயிக்க முடியுமா என்பது சந்தேகமே!
கூடங்குளம் மக்களின் எதிர்காலம் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அணு உலையின் சாதக பாதகங்களை அலசும் சுவ்ரத் ராஜூவின் கட்டுரையை படியுங்கள். இன்னும் நிறைய விஷயங்கள் புலனாகும்.
Saturday, August 8, 2009
தி மன்ஹட்டன் ப்ராஜக்ட்
அவ்வாயுதத்தின் அளவிடப்படாத வீரியத்தால், அதன் அழிவு சக்தி எவ்வளவு என்று சரியாக அவர்களுக்கே தெரியாத காரணத்தால், தாக்குதல் இலக்கை பின்வரும் அளவுக் காரணிகளைக் கொண்டு அந்த அறிவு சார்ந்த பெரும் விஞ்ஞானிகள் தீர்மானிக்கிறார்கள்.
1. இலக்கு 3 சதுர மைல்களை விட பெரிதாயிருக்கவேண்டும். பரிசோதனையின் படி ஆயுதத்தின் வீரியம் 3 சதுர மைல்களையும் தாண்டும்.
2. இலக்கில் ஏற்படும் அழிவு பெரிதாய், முழுமையாய் தெரிய குண்டு வீசப்படும் பகுதி மக்கள் செறிவானதாய் இருக்கவேண்டும். எனவே இலக்கு மக்கள் தொகை மிகுந்த நகரமாயிருந்தால் நல்லது.
3. தாக்குதல் தீர்மானிக்கப்படும் நாள் வரை இலக்கு வேரெதுவும் தாக்குதல்களுக்கு உட்படாதிருக்கவேண்டும். இது அதன் அழிவுசக்தியை மட்டும் தனியாக தனித்து அளக்க உதவும்.
அவர்கள் நாள் முழுவதும் உட்கார்ந்து விவாதித்து நான்கு இலக்குகளை தேர்ந்தெடுத்தார்கள். அவை க்யோட்டோ, ஹிரோஷிமா, யோகஹாமா மற்றும் கோகுரா. இந்நகர இலக்குகளை தாக்குதல் தினம் வரை நேசப்படைகளின் சாதாரண வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களிலிருந்து 'பத்திரமாக' விலக்கி வைக்க உத்தரவிடப்பட்டது.
ஜூலை 26 1945. அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், மற்றும் சில நேசநாடுகளின் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து ஜப்பானுக்கு சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர்களின் புதிய ஆயுதம் பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. ஜப்பான் சரணடைய மறுத்தது; பாவம் விவரம் புரியாமல்.
ஆகஸ்ட் 6 1945. விடியற்காலை 2 மணிக்கு டினியன்(Tinian) தீவு ராணுவ தளத்திலிருந்து கிளம்புகிறது ஒரு அமெரிக்கப் போர் விமானம்.
பால் திபெத் (Paul Tibbet) என்கிற அமெரிக்க கமாண்டர் விமானத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். கடல்படை காப்டன் வில்லியம் பார்சன்ஸ் கூடவே மாரீஸ் ஜாப்ஸன் என்கிற துணை கமாண்டெர். இருவரும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் செயது கொண்டிருக்கும் பணியின் கணத்தால் அமைதியாக இயங்குகின்றனர். சின்னப் பையன்(Little Boy) பக்கத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறான். இவோ ஜிமா தீவை அடைந்து அதை மேலிருந்து சுற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஜப்பானை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. காலை 8.00 மணியளவில் ஜப்பானின் ரேடார்கள் அத்துமீறி நுழைந்த அந்த அமெரிக்க விமானத்தை இனங்கண்டு கொண்டன. மூன்று விமானங்கள் தானே ஏதாவது உளவு பார்த்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.
அப்படியே அவை தாக்கினாலும் பெரிய சேதம் ஒன்றும் நிகழ்ந்துவிடாது. போரில் ஏற்கனவே தோல்விமுகம் கொண்டிருந்த ஜப்பான் ராணுவம், எரிபொருள் மற்றும் விமானங்களை மிச்சம் பிடிக்க இதுபோன்ற சிறு தாக்குதல்களை எதிர்த்துத் தாக்கத் தீர்மானிக்கவில்லை. காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமாவை வட்டமடித்த விமானம் யுரேனியம்-235 ல் செய்யப்பட்ட வெறும் 60 கிலோ எடை கொண்ட, 10 அடியே உயரமுள்ள சின்னப்பையன் என்கிற அந்த அணுகுண்டை வானில் 9 கி.மீட்டர் உயரத்திலிருந்து கீழே விடுவித்தது.
புவிஈர்ப்பு விசையால் கீழிறங்கிய 'சின்னப் பையன்', சரியாக ஷிமா அறுவைசிகிச்சை மருத்துவமனையின் மேல் தரைக்கு மேலே 600 மீட்டர் உயரத்தில் வெடித்தது. அந்த அணுகுண்டு வெடித்ததும் 13 ஆயிரம் டன் டி.என்.டியை வெடித்ததற்கு இணையான மாபெரும் தொடர் வெடிப்பை அது உண்டாக்கியது. அந்த ஆற்றல் பக்கவாட்டில் பரவாமல் கீழ்நோக்கி பரவியதால் சுற்றியிருந்த 5 சதுர கி.மீ பரப்பளவில் இருந்த அனைத்தையும்; சாதாரண செடிமுதல் உறுதியான இரும்புத் தூண்கள் வரை அது உருக்கி கருக்கி, சாம்பலாக்கி அழித்தது. கூடவே மனித உயிர்களையும்..
குண்டு வெடித்த இடத்திலிருந்து 45000 அடி உயரத்திற்கு வானில் குடைக் காளான் வடிவில் கரும் புகை வானைச் சூழ்ந்தது. இந்த நிகழ்வை, கூட பறந்து வந்த விமானங்களிலொன்று பல்வேறு அளவீடுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது.
4000 டிகிரி வெப்பம்; சுற்றிலும் அனல்.வெடித்த இடத்தைச் சுற்றியிருந்த அனைவரும் அலறியடித்து ஓடினார்கள். ஆனால் ஒருவரை மற்றவருக்கு அடையாளம் தெரியவில்லை. ஏனென்றால் அனைவரின் முகங்களும், கைகால்களும், உடல்களும் வெப்பத்தில் கருகிப் போய், தோல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அனைவரும் சிறிது நேரத்தில் இறந்து போனார்கள். நகரத்தின் சுமார் 30% மக்கள், அதாவது எழுபதாயிரம் பேர் உடனே மரணமடைந்தார்கள். இன்னும் 30% பேர் சில வருடங்களில் சாவார்கள்.
டோக்கியோவிலிருந்து ஜப்பான் அதிகாரிகள் ஹிரோஷிமாவில் இருந்த ஒரு சிறிய ராணுவத் தளத்தைத் தொடர்பு கொள்ள முயன்று தகவில்லாமல் போகவே காரணம் அறிந்துகொள்ள ஒரு சிறிய விமானத்தில் ஒரு இளம் வீரரை அனுப்பினர். 3 மணிநேரம் விமானத்தில் பறந்து அந்த வீரர் ஹிரோஷிமாவுக்கு 100 கி.மீ தூரத்தில் வந்தபோது வானத்தில் தெரிந்தது காளான் புகைமண்டலம்.
ஆகஸ்ட் 7,8, 1945. ஜப்பானிய அரசு செயலிழந்தது. ஒரு சின்ன விமானத்திலிருந்து வீசப்பட்ட ஒரேயொரு குண்டால் ஒரு நகரமே அழிந்தது என்ற அதிர்ச்சியிலிருந்து அவர்களால் எளிதில் விடுபட முடியவில்லை. சேதத்தின் அளவீட்டைக் கூட அவர்களால் சரியாக எடுக்க வழியில்லை. அவர்கள் அந்த ஆயுதம் பற்றி இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
ஆகஸ்ட் 9, 1945. அன்று காலை புறப்பட்ட மற்றொரு அமெரிக்க போர் விமானத்தில் 6 கிலோ எடையுள்ள, புளுட்டோனியம்-239 த்தால் ஆன, 'குண்டு மனிதன்'(Fat Man) இருந்தான். கோக்குராவை இலக்காகக் கொண்டு பயணித்த அவ்விமானம் கோக்குராவை காலையில் அடைந்தபோது, கோக்குரா மக்களின் அதிர்ஷ்டம், அங்கு வானில் ஒரே மேகமூட்டமாயிருந்தது. எனவே அக்குழு அங்கிருந்து துணை இலக்காக லிஸ்ட்டில் இருந்த 'நாஹாசாகி'யை நோக்கிப் பறந்தது.
அங்கும் மேகமூட்டமாயிருந்ததால் இலக்கு 'clear' ஆகவில்லை. ஆனால் அவர்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை. பொறுமையாக வானில் சுற்றியபடியே இருந்தனர். கொஞ்ச நேரத்தில் மேகம் சிறிது விலகி இலக்கு தெரிய ஆரம்பித்தது. சரியாக காலை 11.00 மணிக்கு நாஹாசாகியின் மேல் குண்டு மனிதன் குதித்தான். இது குதித்த வேகத்தில் 12 ஆயிரம் டன் எடையுள்ள டி.என்.டியை வெடிக்கச் செய்த விளைவு உண்டானது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த குண்டைப் போடுவதற்கு சற்று முன்னால் ஜப்பானின் அணு விஞ்ஞானிக்கு இக்குண்டின் தீமைகள் பற்றிய கடிதம் ஒன்றையும் இதே விமானத்திலிருந்து வீசி எறிந்திருக்கின்றனர் இந்தக் குண்டை எறிந்தவர்கள். அந்த எச்சரிக்கைக் கடிதம், எல்லாம் முடிந்து போய், செத்தவர்களுக்கு பால் வார்த்து திவசம் செய்து ஒரு மாதம் கழித்து கண்டெடுக்கப்பட்டு, அந்த விஞ்ஞானியிடம் 'பத்திரமாக' வழங்கப்பட்டது. நாஹாசாகியில் ஐம்பதாயிரம் பேர் குண்டு விழுந்த உடன் சிலமணி நேரங்களில் மாண்டுபோயினர்.
ஆகஸ்ட் 6, 2009.இன்று. நாஹாசாகியில் குண்டு வெடிப்பில் மாண்டுபோனவர்களின் புதைக்கப்பட்ட எலும்புகளிலிருந்தும், பாதுகாக்கப்பட்ட உடற்பாகங்களிலிருந்தும் உட்கதிர்வீச்சு எனப்படும் ஆல்பா கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குண்டுவீச்சின் போது வெளியான புளூட்டோனியக் கதிர்வீச்சை அளவிலும் பண்பிலும் ஒத்துள்ளது என்கிற அதிர்ச்சியான தகவலும் வெளிப்படுகிறது. இவ்வளவு வருடங்களாக இந்த உட்கதிர்வீச்சு பற்றி விஞ்ஞானிகள் பெரிதாக எண்ணவில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்து 64 வருடங்கள் கழித்தும் கதிர்வீச்சு இவ்வாறு வெளிப்படுவதைக் கொண்டு நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன ?
ஒரு மாபெரும் அழிவைக் கூட அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்வது போல படிப்படியாக, குறிப்புக்கள் எடுத்து, புகைப்படங்கள் எடுத்து, அதன் கோரத்தை பதிந்து வைப்பது தான் இந்த கார்ப்பரேட் உலகில் அறிவியலின் வேலையாக இருக்கிறது. அதில் மனிதனும், மனிதாபிமானமும் இருப்பதில்லை. அணுவைப் பிளப்பது பற்றி மனிதன் கற்றுக்கொண்டது ஒரு கடலில் மிதக்கும் பனிப்பாறையைக் கண்டுபிடிப்பது போல் தான்; மேம்போக்கானது; அந்தப் பனிப்பாறை கடலின் அடியில், பெரும் மலையாக, மனிதகுலம் என்கிற டைட்டானிக் கப்பலையே கவிழ்க்கும் அளவிற்கு பெரிதாய் இருக்கும் என்பதை நாம் இன்னும் உணரவில்லை.
அணு உலைக் கழிவுகளை கையாளுவதில் நாடுகள் காட்டும் அலட்சிய மனப்பான்மையைப் பார்த்தால் இது உங்களுக்குப் புரியும். சமீபத்தில் டெல்லி அருகே பயிற்சியில் ஈடுபட்ட ஒரு போர் விமானத்திலிருந்து தவறுதலாக பாய்ந்த குண்டு ஒன்று கிராமம் ஒன்றில் வயற்காட்டில் விழுந்து ஒரு ஏக்கர் நிலம் கரிந்து போனது. நல்லவேளையாக மனிதர்கள் யாரும் அருகிலில்லை.
இதுவே ஒரு அணு ஏவுகணையாக இருந்திருந்தால்...
Friday, April 17, 2009
வாழ்க்கையின் விளையாட்டு.
புதுதில்லி:
வாழ்க்கை :
ஜனவரி 2009, ஒரு அதிகாலை 5 மணி.
வழக்கம் போல் சீக்கிரமே எழுந்து குடிசையை விட்டு தன் சாக்குப் பையுடன் வேலைக்குக் கிளம்புகிறார்.
20 வருட வேலை. அலுக்காத, சளைக்காத வேலை. குப்பை பொறுக்கும் வேலை.
நேரே விறுவிறுவென நடந்து அருகிலிருக்கிற கார்ப்பரேஷன் குப்பைக்கிடங்கு வந்து சேர்கிறார். இதுதான் அவருடைய ‘ஆபீஸ்’. 60 மீட்டர் உயர குப்பை மலை அது. 3 – 4 சதுர கி.மீட்டர் பரப்பளவு இருக்கும். அதன் நாற்றம் அரை கிலோமீட்டர். டில்லியின் மூன்று பெரிய குப்பைக்களங்களில் இதுவும் ஒன்று.
இன்னும் விடியவில்லை. டீ குடிக்கவும் தற்போது முடியாது.
கையிலிருக்கும் குச்சியைக் கொண்டு காலடியில் மிதிபடும் குப்பையை கவனமாகக் கிளறுகிறார்.
என்ன கிடைக்கும் ? பழைய பாட்டில்கள், உடைந்த பழைய பல்புகள், இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக் இன்னும் உங்கள் வீட்டில் எதெது வேண்டாமோ அவற்றையெல்லாம் இங்கே சேர்த்துக்கொள்ளவும்.
குப்பை சேகரிப்பும், பிரிப்பும் எவ்வாறு நடக்கிறது ? முதுகில் ஒரு பெரிய கோணியும், கையில் ஒரு குச்சியுமாகத் தெருக்களில் நாம் பார்க்கிறோமே. இவர்கள் ‘பேரிவாலாக்கள் ’ என்றும் ‘போரிவாலாக்கள் ‘ என்றும் (ஹிந்தியில்) அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் பணி.. தெருக்களிலும், தெருக்குப்பைகளிலும் இருந்து ‘மறுசுழற்சி’(recycling) செய்யப்படக்கூடிய இரும்பு, பிளாஸ்டிக் முதலான பொருட்களைப் பிரிப்பது. அதுதான் அவர்களின் ‘மால்’.
பேகம் போன்றவர்கள் ‘பின்னிவாலா’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பெரிய குப்பைக்களங்களில் இறங்கி குப்பை பிரிப்பவர்கள். ‘காடிவாலா’க்கள் ஆபீஸ்களிலிருந்து வேஸ்ட் வாங்குபவர்கள். ‘கபாரிகள்’ வீடுகளில் பழைய பொருட்களை வாங்குபவர்கள். நம்ம ஊரில் குப்பை பொறுக்குபவன், பழைய பேப்பர்க்காரன் என்ற இரண்டே பெயர்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.
இவர்கள் அனைவரும் குப்பைகளை கொண்டு சேர்க்கும்(விற்கும்) இடம் ‘குடோன்’ (godown) எனப்படும் குப்பைப் பிரிப்பறை. இதை நடத்துபவர்கள் சிறுசிறு முதலாளிகள். இங்குதான் குப்பைகள் தொழிற்சாலை, ரசாயன மற்றும் வீட்டுக்கழிவுகளாகவும், மற்றும் எளிதில் உயிர்ச்சிதையக்கூடிய, உயிர்ச்சிதைவடைய இயலாத மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
இங்கிருந்து அந்தந்த சுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகின்றன.
பேகம், இந்தப் பரந்த குப்பைச்சந்தையில் தான் ஓர் முக்கிய அங்கம் என்ற உணர்வேயின்றி பரபரவென்று குப்பைகளிலிருந்து பொறுக்கி தன் சாக்குப் பையில் போட்டுக்கொண்டே முன்னேறுகிறார். சுற்றுமுற்றும். அந்த அழுகிய நாற்றத்தினால் எள்ளளவும் பாதிக்கப்படாதவர்கள் போல மேலும் பல தலைகள் குனிந்தவாறே ஆங்காங்கே தென்பட்டன. யாரும் யாரையும் பார்த்து ‘ஹாய் குட்மார்னிங்’ சொல்லவில்லை. ரொம்பவும் நெருங்கி தன் தேடுதல் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் விரட்டவும் இல்லை. அவரவர் குப்பை அவரவருக்கு.
பேகம் குப்பைகளுக்குள் ஏதோ பளீரென்று தட்டுப்பட, கூர்ந்து பார்க்க குனிந்தபோது, ‘மட்’டென்று பின் மண்டையில் ஓர் அடி விழுந்தது. நிலைகுலைந்து விழுந்தவரின் முகம் நசநசவென்ற எதையோ உணர்ந்தது. நிமிர்ந்து பார்க்க, எதிரே நின்ற ஆள் ‘யூனிபாரம்’ அணிந்திருந்தான். கோபமாகப் பேசினான்.
“இங்கேயெல்லாம் வந்து இனிமேல் குப்பை பொறுக்கக்கூடாது...எங்க கம்பெனி காண்ட்ராக்ட் எடுத்திருக்கு.. புரிஞ்சதா.. போ போ..” பேகம் அவன் சொல்வதன் அர்த்தம் புரியாமல் வலியைத் தாங்கியபடி “ஏன் பொறுக்கக்கூடாது ” என்றதற்கு மீண்டும் பிரம்படியும், உதையும்தான் பதிலாகக் கிடைத்தன பேகத்திற்கு.
ஏதோ தவறாக நடந்துவிட்டது என்று புரிகிறது பேகத்திற்கு. ஆனால், என்னவென்றுதான் புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். நாளை முதல் பேகம் இங்கு குப்பை பொறுக்கமுடியாது.
------ ****** ----------------
விளையாட்டு :
இங்கிலாந்தின் அடிமை நாடுகளாக இருந்த காலனி நாடுகளுக்கிடையே (அடிமை)நல்லுணர்வை வளர்த்துக் கொள்வதற்காக 1921ல்ஆரம்பிக்கப்பட்டது ‘காமென்வெல்த்’. இதன் தலைவர் இங்கிலாந்து ராணி எலிசபெத் ஆவார்.
பிற்காலத்தில் விடுதலையடைந்த பின் இவை காமென்வெல்த் குடும்பங்களாயின. காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இதன் தற்போதைய 54 உறுப்பினர் நாடுகளுக்கிடையே ‘நல்லுணர்வை’ வளர்க்க நடத்தப்படும் போட்டிகளாகும். வரும் 2010 அக்டோபரில் இப்போட்டிகளை நடத்தும் ‘பெருமை’யை இந்தியா பெற்றுள்ளது.
தலைநகர் தில்லியில் நடைபெற இருக்கும் இப்போட்டிகளுக்கான விளையாட்டுக்கிராமம் (sports village) யமுனையாற்றின் கரையில் எழிழுடன் கட்டப்பட ஆயிரத்து நூற்று ஐம்பத்தியொரு(1151) கோடி ரூபாய்ச் செலவில் 160 ஏக்கர் இடத்தில் ‘பிரம்மாண்டமாய்’த் தயாராகிக்கொண்டிருக்கிறது.
54 நாடுகளிலிருந்தும் வரவிருக்கும் வீரர்களும் தங்க, விளையாட, சுற்றிப் பார்க்க வசதிகள் செய்யப்படும். பெரிய பெரிய தலைவர்கள் விருந்தினராய் வருகை தருவார்கள். இப்படிப்பட்ட ‘முக்கியமான’ நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் தில்லி மாநகரம் மட்டும் அழுக்காகத் தெரியலாமா ? பளபளக்க வேண்டாமா ?
நல்ல விஷயந்தானே. ‘இந்தியா மிளிரவேண்டாமா ?’
யோசித்தது ‘தில்லி கார்ப்பரேஷன்’. விளைவு. தில்லியின் குப்பைகளை அள்ளும் பொறுப்பை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது. இதனால் குறைந்த செலவில் நிறைந்த குப்பையை அள்ள முடிகிறது. கார்ப்பரேஷன் இதில் மிச்சம் பிடிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா ?
நாற்பது ( ௪௦ ) கோடி ரூபாய். அடேங்கப்பா.
நல்ல விஷயந்தானே. எந்தக் கார்ப்பரேஷன் தான் லாபத்தில் ஓடியிருக்கிறது ? 40 கோடி ரூபாய் அரசுக்கு லாபம் தானே ?
----------- ************ --------------------------------------------------------
வாழ்க்கையின் விளையாட்டு:
இவ்வளவு நாளும், தில்லி கார்ப்பரேஷனின் அரசு ஊழியர்கள் வாறிய 80 சதவீத குப்பைகள் போக மீதி 20 சதவீத குப்பைகளை அள்ளி ‘சுதந்திரமாய்’ பிழைத்த பேகம் போன்ற ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர்(1,50,000) இனிமேல் ‘நடு குப்பையில்‘ தான் நிற்க வேண்டும்.
ஒரு நாளில் 150 – 200 ரூபாய்கள் சம்பாதித்து ‘ ராஜபோக’ வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இவர்கள்.
இதில் சில ஆயிரம் பேர் தங்கள் வருமானத்தில் பாதிக்கும் குறைவான சம்பளத்திற்கு இந்தத் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளிடமே ‘கொத்தடிமை’ வேலை பார்க்க நேரிடும்.
ஒரு லட்சம் பேர் அள்ளிய குப்பையை இந்த சில ஆயிரம் பேரே அள்ளிவிடவேண்டும்.
ஒருவேளை கார்ப்பரேட்டுகளுக்காக குப்பை அள்ளும்போது கழுத்தில் ‘டை’ கட்டி அள்ள வேண்டிவருமாயிருக்கும். பாவம், இந்த வாழ்நாள் ‘ஒப்பந்த’ அடிமைகளுக்கு அது தான் தூக்குக் கயிறு.
இந்த (கொடுமையான) வேலைகூட கிடைக்கப்பெறாத மற்றவர்கள் ? இருக்கவே இருக்கிறது திக்கற்றவர்களின் பழம்பெரும் பாரம்பரியத் தொழில், பாலியல் தொழில்.
காமன்வெல்த் போட்டிகளை DDயில் காட்டுவார்களா ? இல்லை டிஷ்ஷில் மட்டும் தான் காட்டுவார்களா ? அதுதானே நம் கவலை.
சரி. நம்ம ஊர்க்கதை என்ன எனகிறீர்களா ? 'ஓனிக்ஸ்'காரனிடம்தான் கேட்கவேண்டும்.
- அம்பேதன்.



















