Showing posts with label போர்க்குற்றம். Show all posts
Showing posts with label போர்க்குற்றம். Show all posts

Monday, November 25, 2024

தளபதி ஜெயம். போராளியின் இறுதி வெடி !





எல்லாம் முடிந்துவிட்டது.

முன்னால் கடல்.
பின்னால் நிலம்.

இதுதான் நான் இறுதியாக காணப்போகும் விடியும் வானம்.
நிலம் பூராவும் எதிரிகள். கந்தகமணம். சிறு பற்றைகள். அவற்றுக்கப்பால் நம் நிலம்பூராயும் எதிரிகள்.
எதிரிகள் பேசும் சத்தம் கேட்கிறது.

வானம் வெளித்ததும் அவர்கள் முழுமையாக பிடித்துவிடுவார்கள்.
சிலவேளை இறுதியாய் இருப்பது நாம் இருவராக இருக்கலாம்.
எங்கள் தரப்பின் துப்பாக்கி வேட்டுகள் பூராகவும் ஒய்ந்துவிட்டது.
திடீரென ஏற்பட்ட புவி அதிர்வில் உதிர்ந்த கோட்டைபோல் ஆகிவிட்டது எங்கள் தேசம்.

அருகே கபிலன். அவன் கட்டாய ஆட்சேர்ப்பில் வந்த பிள்ளை. ஆனால் கடைசிவரை என்னோடு வந்துவிட்டான். நீ போய்விடு என்றால் அடம்பிடித்துவிட்டான். என்னோடு ஒரு வருடமாகத்தான் இருந்தான். சரணடைய மறுத்தே விட்டான். எத்தனையோ போராளிகளை சந்தித்தேன். இவன் வாழ வேண்டிய பிள்ளை.
‘அண்ண உங்களுக்கு என்ன முடிவோ அதுவே எனக்கும் என்கிறான்.’
கபிலன் அறிவான பிள்ளை. ஒரு முழுமையான போராட்ட வாழ்வில் என் இறுதி கணம் கபிலன் அருகில் முடியப்போகிறது. எம்மை உயிரோடு எதிரி பிடிக்க முடியாது. இரண்டு குப்பிகள், இரண்டு கைத்துப்பாக்கி. இதுபோதும்.

நளாவும் வீரச்சாவு என்று அறிந்தேன். முக்கியமான அந்தத்தாயுடன் சேர்ந்து நளா வெடித்துச்சிதறிவிட்டாள். பிள்ளைகளோடு எவ்வளவு பிரியமாக இருந்தாள் ? அவளால் இதை எப்படிச்செய்ய முடிந்தது ? அவள் தியாகங்களுக்கு உலகில் உதாரணம் கிடையாது. தாயை விட்டுவிட்டு போர்க்களம் சென்ற பிள்ளைகள் இருந்தார்கள். தன் குழந்தைகளை விட்டுவிட்டு களமுனை சென்று வெடிக்கும் தாயை யாரும் அறிந்ததுண்டா ? தன் வீரச்சாவவைக்கூட மக்கள் அறியார் என்று தெரிந்தும், போராட்டம் இன்றோ நாளையோ வீழ்ந்துவிடும் என்று அறிந்தும் அவள் தன் மண்ணுக்காக வீழ்ந்தாள். அவளை இந்த இறுதி நேரத்தில் நினைக்கவேண்டும். என் மனம்போல இருந்தாள்.

பிள்ளைகளை உறவுகளுடன் விட்டுவிட்டு களமுனையில் கடைசிவரை நின்ற தாயாக நளா இருப்பாள். அது யாருக்கும் தெரியாமல் இருக்கும். இப்போது நடக்கும் எந்தக்காவியத்தையும் சொல்பவர்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை. நானே ஒருமுறை , ‘நீ பிள்ளைகளோடு வெளியேறு’ என்றபோது, மறுத்துவிட்டு கோள்சறோடு களமுனை சென்றாள்.
அன்பு நளா ! உன் திண்மை என்னிடம் இல்லை. உனக்கு என் நன்றி. நான் போராளியாக மட்டும் இருந்தேன். நீ தாயாக, போராளியாக, மனைவியாக.. என் விழுப்புண்கள் வலிதரும்போது தாதியாக.. உன் மனபலம் எந்த இரும்பையும் நொருக்கும். எந்த வலியையும் தாங்கும். நான் வலியால் துடிக்கும்போது ‘ஒருதளபதி இப்படி துடிப்பதா’ என்பாய். ஒருபோதும் உனக்கு வலித்தபோதும் நீ துடித்ததில்லை. எத்தனை மகத்தான துணையாக இருந்தாய் ?
உன் உடல் எங்கு சிதறியதோ நானறியேன். ஆனால் இந்த நிலத்தில் மிக அருகில் எங்கோ வெடிகுண்டு கட்டி வெடித்தாய் என்பது மட்டும் தெரியும்.
சூரியன் வரமுதல் உன்னை என் ஆன்மா சந்திக்கும். மறுமுறை பூரணவாழ்வு கிடைத்தால் உன்னோடு வாழவேண்டும். நாம் குறைந்த நாட்கள் வாழ்ந்து, நிறைய நாட்கள் போராளியாக இருந்தோம்.

ஓ.. என் பிள்ளைகள் ! ஆகரன் ! சிந்துசை ! நீங்கள் இப்போது வவுனியா அகதி முகாமில் இருப்பீர்கள். என் பிள்ளைகள் என்று இராணுவம் கண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும். நீங்கள் கேட்ட பரிசுப்பொருட்களை தமிழீழம் கிடைத்தததும் வேண்டித்தருவேன் என்றேன். உங்கள் அடிமைப்பட்ட இனத்தின் தந்தையால் அதை செய்ய முடியவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆனால் அப்பாவையும், அம்மாவையும் நினைத்தபடியே இருப்பீர்கள். உங்களை அனாதையாக்கிவிடப்போகிறோம். இந்த பாவப்பட்ட பெற்றோரை பற்றி என்ன நினைப்பீர்களோ தெரியவில்லை.
எப்போதும் உங்களை பேரன்போடு வருடும் உங்கள் அம்மா நேற்று மாலை இறந்துவிட்டார். உங்கள் அப்பா இன்னும் சிறிய நேரத்தில்.

அப்பா, அம்மாவின் கனவுகளை மறக்க மாட்டீர்கள். எப்படியும் உங்களை என் தம்பி லண்டன் அழைத்துவிடுவான். நீங்கள் உறுதியோடு வளருங்கள். நம் மக்கள் உங்களை கைவிட மாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தான் நாம் போகிறோம்.

ஓ.. எத்தனை தியாகங்கள் ? எத்தனை உயர்த வீர புருசர்கள் ? எத்தனை தியாகங்களால் தேசம் உருவானது. இதோ.. இதோ.. எல்லாம் முடியப்போகிறது. இந்த முடிவு வேறொன்றின் தொடக்கம் ஆகலாம். ஆனால் இந்த உலகு அதர்ம அச்சிலே சுழல்கிறது. அதை மாற்றும் மனிதன் வருவான். காலம் எல்லாவற்றையும் உருவாக்கும்.
இந்தப்போராட்டம் உயிர்களை கொல்லத்தோன்றியதில்லை. கொலைகளை நிறுத்தத்தோன்றியது.

அவர்கள் தமிழர்களை தேடித்தேடி வேட்டையாடியபோது விரும்பா பிறப்பாகத்தானே பிறந்தது. இத்தனை இளைஞர்களின் உயிர்களும் இந்தத்தோல்விக்காகவா கொடுக்கப்பட்டது ? இத்தனை இறப்புகளும் நம் விடுதலைக்காகவே விதைக்கப்பட்டது. எப்படி இது தோற்றது?
காலம் ஆராய்ந்து கருத்திடட்டும். அது காலத்தின் வேவல.

நான் நம்மக்களுக்காக உண்மையாய் இருந்தேன். இந்த மரண நொடிவரை. என்னைப்போலவே உயிர்கொடுத்த என் வீரர்களும். இது நம் கடன். அதை நாம் தவமாக செய்தோம்.

இங்கினியாகலையில் காடையர்கள் 150 இளைஞர்களை வெட்டியதில் ஆரம்பித்தார்கள். அதன்பின் எத்தனை கொலைகளை மக்கள் சந்தித்தார்கள். ?ஆண்டாண்டுகாலம் வாழ்ந்த எங்கள் மண்ணில் எங்கள் மக்கள் முப்பது ஆண்டுகளாக துரத்தப்பட்டும், கொல்லப்பட்டதால்தானே ஆயுதம் ஏந்தினோம். ! அன்று அந்தக்கொலைகளை தடுத்திருந்தால் இந்த கொலைத்தொழிலை நாம் விரும்பி ஏற்றிருப்போமா ?
எனக்கு அந்த நாள் நினைவுக்கு வருகிறது..

வவுனியா எல்லைக்கிராமத்தில் நாம் இருந்தோம். எப்போதும் பதட்டத்துடனே ஐயா, அம்மா இருப்பார்கள். காடையர்கள் எப்போது வருவார்கள் ? வந்தால் மொத்த உயிரும் சிரச்சேதம் செய்யப்படும் என்று தெரியும். எமக்கு பாதுகாப்பென்று அன்று யாருமில்லை. நம்முயிரை எப்போதும் பறிக்கும் உரிமை சிங்களக்காடையருக்கு இருந்தது. முதலில் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது ? மனிதர்களை மனிதர்கள் கொல்ல எப்படி முடிகிறது ? சிங்களவர்களுக்கு நாம் என்ன செய்தோம் ? என்று புரியவில்லை.

ஒருநாள் அருகே இருந்த கிராமத்தில் புகுந்து வெட்டிவிட்டு சென்றுவிட்டனர். அம்மா கண்ணீரோடு இருந்தார். அப்போதுதான் அம்மாவிடம்
‘ஏன் அம்மா சிங்களவர் எம்மை கொல்கிறார்கள் ? ’
என்று கேட்டேன். அம்மாதான் கொலைகாலக்கதைகளைச்சொன்னார்.

என் மனமெங்கும் வேதனையும், கொடும் கோபமும் இருந்தது. இதற்கு சிறுவனான என்னால் எப்படி தடுக்க முடியும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டிருந்தேன்.
இந்தச்சம்பவம் நடைபெற்று சரியாக ஒருமாதம் கழிய எம் கிராமம் தாக்கப்பட்டது. என் அப்பா படுகாயத்தோடு தப்பியிருந்தார். மாட்டுப்பட்டவர்கள் வீடுகள் கொழுத்தப்பட்டு தலைகளை வேலிகளில் குத்திவிட்டு சென்றனர். பட்ளிக்கூடத்தால் வந்த எனக்கு கிடைத்த காட்சி மனிதத்தலைகளும், எரிந்த வீடுகளும். எங்கள் வீடும் எரிந்திருந்தது. முதல்நாள் என்னோடு விளையாடிய பத்துவயதான சிவதாசன் தலை வேலியில் குத்தப்பட்டிருந்தது. பிள்ளைத்தாச்சியாக இருந்த வக்சலா அக்காவின் வயிறு கிளிக்கப்பட்டு சிசுவை எடுத்து தடியில் குத்தி வைத்திருந்தார்கள். ஆண்களின் உடலங்கள் அங்கம் அங்கமாக வெட்டப்பட்டிருந்தது.

இந்தக்காட்சிதான் என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. வன்னியில் மாத்தையா அண்ணரின் தொடர்புள்ளவர்களோடு தொடர்பை கடுமையான பிரயத்தனத்தில் ஏற்படுத்தி புலிகள் இயக்கத்தில் இணைந்தேன்.

எனது நோக்கம் எங்கள் மக்களை காப்பதே. அதைவிடுத்து எந்த மாற்றமும் என்னிடம் இருந்தால் மரணம்தான். என்று நானே முடிவெடுத்திருந்தேன்.
இயக்கத்தினுள் நடந்த சூறாவளிக்காலத்தில் என் மனம், உடல் வதங்கியகாலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன். போராட்டம் என்பது எவ்வளவு கடுமையானது என்பதை சொல்லித்தந்தது அந்த நாட்கள். உயிரையும் கொடுத்து காக்க வேண்டியவரே தவறு செய்திருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் ?

எந்த நிலையிலும் இறுதிவரை களமுனையில் போராடிச்சாவதே என் நோக்கம். நான் பார்த்த இனக்கொலைக்காட்சி எப்போதுமே என் மனதில் இரும்புத்திரையாக நிற்கும். அதனாலே உறுதியோடு இருந்த என் நிலையால் 1994 இல் மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.

அதைவிட கொடுமையான காலத்தை நான் சந்தித்ததில்லை. இதோ இப்போது நாம் முற்றாக அழியும் நிமிடங்களானாலும் நாம் நம் மக்களுக்காக இறக்கின்றோம் என்ற நிம்மதி உண்டு. போராடப்புறப்பட்டவர்களின் ஆசைகளால் ஏற்படும் தவறுகளால் இழந்த உயிர்களும், தவறும் இலட்சியச்சியத்தை விட கொடிய விசம் வேறொன்றுமில்லை.

எந்தச்சூழலிலும் என்கிராமத்தில் நான் கண்ட காட்சிதான் எத்தடையையும் தாங்கி இந்த மக்கள் இலட்சியத்தில் என்னால் இந்த நிமிடம்வரை நிற்க முடிந்தது.

எங்கள் மக்களுக்கு என்ன சொல்வது ?! உங்கள் இயக்கம் உங்களை விட்டுப்போகிறது. உங்களில் இருந்துதோன்றிய இந்த வீரர்களில் சில தவறுகளும் பல தியாகங்களும் நிகழ்ந்தன. எந்த சமூக அமைப்பிலும் குழப்பமானவர்கள் இருப்பார்கள். அவர்களின் செயல்களால் உங்களுக்காக உயிர்கொடுத்த அந்த உன்னதங்களை மறந்து விடாதீர்கள்.
உங்களை மீண்டும் ஒரு அனாதை நிலையில் விட்டுவிட்டு நாம் செத்துப்போகிறோம். நீங்கள் பட்ட துயர்களுக்கு உண்மையானவர்கள் உண்மையாக இறுதிவரை போராடினோம். எங்களை மீறிய முட்கள் உங்களை குத்தியதை நாம் அறிவோம்.
உங்களின் நல்வாழ்வுக்காக உண்மையோடிருந்த உங்கள் பிள்ளைகளின் ஏக்கங்கள் ஒருநாள் உங்களுக்கு நிம்மதியான வாழ்வைத்தரும். நீங்கள் ஒற்றுமையாக காத்திருங்கள். உங்கள் பிள்ளைகளை அறிவானவர்களாக வளர்த்தெடுங்கள். வரலாறு உங்கள் கைகளில் ஒருநாள் வந்துசேரும்.

மனிதனை மனிதன் கொல்வது கொடிது. இந்த கொடிய காலம் எங்கள் கரங்களில் திணிக்கப்பட்டது. கொலைவெறியற்ற சிங்களம் உருவானால் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழமுடியும். அதன் வழிமுறைகளை கண்டுபிடிக்க உங்கள் குழந்தைகள் முயலட்டும்.
எங்கள் மரணத்தின் பின்னாவது உலகம் உங்களை காக்கும்.

விடமாட்டார்கள் ! எங்கள் மக்கள் விடமாட்டார்கள் ! நம் தமிழக உறவுகள் கொதித்தெழுவார்கள் ! புலம்பெயர் உறவுகள் சேர்ந்தெழுவார்கள்.
இந்த இழப்பு. இன்னொன்றை பிறப்பிக்கும். நிச்சயம் நம் மக்களின் கொடிய வாழ்வு முடிவுக்கு வரும்.
எங்கள் மக்களே ! சென்று வருகிறோம். மண்ணே ! உன்மடியில் நீண்ட ஓய்வெடுக்கப்போகிறேன்.
‘’கபிலன் ! கபிலன் ! வானம் வெளிக்கிறது.. தயாராகு… இதோ நான் தயாராகிவிட்டேன் . குப்பியை வாயில் கடித்ததும் காதுக்குள் பிஸ்ரலால் சுட்டுவிடு. அடுத்த நொடி உடல்மட்டும் மிஞ்சும்.’’

வலப்பக்கத்தில் தென்னைமரம் ஒன்று நின்றது. காகம் ஒன்று பதட்டத்தோடு குறுக்கே பறந்து சென்றது. அலை வீசிய கடல் அழுதுகொண்டிருந்தது. எங்கள் கடலில் எதிரிகளின் போர்க்கப்பல் தெரிந்தது. எங்கும் துப்பாக்கி இயங்கிக்கொண்டே இருந்தது. அவை இராணுவத்தின் துப்பாக்கிச்சத்தங்கள்தான். அவர்கள் வீரர்கள் வாழ்ந்த காற்றுக்கும் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.

மேகங்கள் ஒன்றையும் காணவில்லை. அதிகாலைக்குருவிகளின் சத்தம்கூட இல்லை. அவை எங்கு பறந்து போயினவோ தெரியவில்லை. தங்களோடு வாழ்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பறவைகள் அழுதிருக்கும். மனிதர்களை நினைத்து அவை குளம்பிப்போயிருக்கும். ‘இவர்கள் அறிவற்றவர்கள்’ என்று அவை நினைத்திருக்கும். மனிதனை மனிதன் கொல்வதை பார்க்கும் பறவைகளால் வேறெதை நினைக்க முடியும். ?!

அண்ணருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. வரலாறு ஒரு பெருமகனை இழந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் இருந்து மனிதர்கள் கற்காவிட்டால் அவை மீண்டும் மீண்டும் நிகழும்.

‘’ கபிலன்…. கபிலன்.. சத்தம் அருகே கேட்கிறது. நிலம் வெளிக்கிறது, தயாராகு ! நாம் உயிருடன் பிடிபடக்கூடாது.. நாமிருவரும் இந்த மண்ணில் வாழும் நிமிடங்கள் இவைதான். ‘’

இருவரும் தயாரானார்கள்.
குப்பி கொடுப்பில் வைக்கப்பட்டது.
வலக்கையில் இருந்த பிஸ்ரல் காதோரம் வந்தபோது, இடக்கை அருகே இருந்த அறுகம்புல்லோடு சேந்த தாய்மண்ணை அள்ளி நெஞ்சில் வைத்துக்கொண்டு தளபதி ஜெயம் 1994 இல் தலைவரால் மீண்டும் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை தன் காதோரம் வைத்து விசையை அமத்தினார்.

பட்ட்டீர்ர்….பட்ட்டீர்ர்.. !

‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ‘

என்று கூற அதன்பிறகு அந்த நிலத்தில் யாரும் இருக்கவில்லை.

பிரிகேடியர் ஜெயம் வீரவணக்கம்-விம்பகம் | ஈழவிம்பகம்\ Eelam Images

———————————————————————-

இக்கட்டுரை ஜெனரல் ஜெயம் அவர்களின் போராட்டத்தின் கடைசி நாள் பற்றியது. விடுதலைப் புலிகளின் ராணுவத்தில் ஜெனரலாக இருந்தவர். ஆஸ்லோ பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர். இவரது மனைவி நளா. இவரும் ஒரு போராளி. தங்களது இரு குழந்தைகளான சிந்துசை மற்றும் துவாரகனை இயக்கமும் மக்களும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டு இருவரும் போராடி வீரமரணம் அடைந்தார்கள். 

ஜெனரல் ஜெயம் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பு கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
https://eelamhouse.com/?p=2173

Friday, October 2, 2015

ஐ.நா நிறைவேற்றிய இலங்கையை தப்பவைக்கும் கண்துடைப்பு தீர்மானம் !

ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அத்தீர்மானத்தில்,
  • இலங்கையுடன் இணைந்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • அத்துடன், காமன்வெல்த் அமைப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் இணைந்த விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  தலைப்பில் போர்க்குற்றம் என்கிற வார்த்தையே இல்லை. இந்த தீர்மானம் கடந்த வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு  அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கிரீஸ், லுத்வியா, மான்டினிக்ரோ, போலந்து. ருமேனியா, மாசிடோனியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கியிருந்தன. நாடு கடந்த ஈழ அரசும், இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அமைச்சரவையும், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் இத்தீர்மானத்தை கடுமையாக எதிர்த்துள்ளன.
இத்தீர்மானத்தைப் பற்றி ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கெய்த் ஹாப்பர், சீனா, ஸ்ரீலங்கா, தென்னாப்பிரிக்கா, கானா, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள்  உரையாற்றினார். இதை ஓட்டெடுக்கக்கூடத் தேவையில்லாமல் நிறைவேற்றியபின் இந்தியாவின் பிரதிநிதி பேசினார்.
பன்முகத் தன்மையுள்ள நாடாக இலங்கை இருக்க இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், 13வது சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி 1980களில் பாடிய பல்லவியையே திரும்பப் பாடினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சிம்பிளாக கதையை முடித்து விட்டார்கள். அப்படியென்றால் கொல்லப்பட்ட லட்சம் தமிழர்களும் பயங்கரவாதிகளா?
இலங்கையின் மீதான போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இலங்கையே முன்மொழிகிறது. நீதி எந்த அளவிற்கு வெளிவரும் என்பது இதிலிருந்தே தெரிகிறது. 
இலங்கையை கழுவும் மீனில் நழுவும் மீனாக தப்பிக்க வைக்க புத்திசாலித்தனமான வார்த்தைகளைப் போட்டு இயற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் முக்கியமான தகிடுதத்தங்கள்.
காமன்வெல்த் - காமன் வெல்த் நாடுகள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், சீனா போன்ற ஈழப் போரில் சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்ற அரசுகள் கொண்ட அமைப்பு. இந்த காமன்வெல்த்திலிருந்து நீதிபதிகளை அனுப்பி அவர்களை 'சர்வதேச நீதிபதிகள்'என்று கண்துடைப்பு விசாரணை செய்யவே காமன்வெல்த்  அமைப்பு இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
சிறிசேனா அரசு - அமெரிக்க அரசு முந்தைய ராஜபக்சே அரசை போர் புரிந்த அரசாகவும் தற்போதைய சிறிசேனா அரசை மக்கள் நலப் பணிகளைச் செய்யும் அரசாகவும் தந்திரமாகக் குறித்து தீர்மானத்தில் பேசுகிறது. ராஜபக்சே புலிகளுடன் போர் என்று எல்லாத் தமிழர்களையும் கொன்ற போது அவரிடம் ராணுவ அமைச்சராக இருந்தவர் தான் தற்போதைய இலங்கை அரசின் அதிபர் சிறிசேனா. பின் எப்படி சிறிசேனா அரசு நியாயமாக விசாரணை நடத்தும் என்று நம்புவது ?
இலங்கையுடன் இணைந்து - அனைத்து உலகத் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வந்த இந்த ஆலோசனையை இந்தத் தீர்மானம் முன்மொழிந்திருக்கிறது. அதாவது திருடனைக் கூப்பிட்டு 'அவனே அவனை விசாரித்து அவனை தண்டித்துக் கொள்ளவேண்டும்' என்று தீர்ப்பு வழங்குவது போன்றது இது. திருடன் தன்னையே தான் ஒழுங்காக விசாரிக்கிறானா என்று மொழி தெரியாத ஊரிலிருந்து நான்கு பெருசுகள் வந்து இதைக் கண்காணிக்கும்.
இவ்வளவு மோசமான நிலைமை தமிழர்களுக்கு உலகில் ஏற்ப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலையை அவர்களை ஆளும் இந்தியாவே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சிங்கள ராணுவத்துடன் இந்தியா இணைந்து போர்ப் பயிற்சி செய்தது. போன மாதம் ஒரு போர்க்கப்பலை இலங்கை கடற்படைக்கு தானமாக வழங்கியது இந்தியா தான். இப்படி தமிழருக்கு பச்சைத் துரோகம் செய்யும் இந்தியாவும் மோடியும் ஒரு நாளில் இதற்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்.

Thursday, September 17, 2015

போர்க்குற்றம் நடந்தது உண்மையே !- ஐ.நா. அறிக்கையின் நோக்கம் என்ன?

சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை 16ம் தேதி புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் உசைன் ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் முக்கிய அம்சம் உள்நாட்டு விசாரணையை மறுதலித்து, மாறாக பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் மூலம் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதாகும். இது இலங்கைக்கு வைக்கப்படும் நெருக்கடியாகும். ஆனால் இதில் எவ்வளவு தூரம் விஷயங்கள் வெளிவரும் என்பது கேள்விக்குறியே.

இதுதவிர அறிக்கையிலுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்:
இறுதிகட்ட போரின்போதும், போருக்கு முன்பாகவும், அப்பாவி மக்கள், இலங்கை ராணுவத்தாலும், விடுதலை புலிகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்தவர்களையும் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. தங்களுக்கு எதிராக செயல்பட்டோரை விடுதலை புலிகள் கொன்றுள்ளனர். இதில் தமிழ் அரசியல் தலைவர்களும் அடங்குவர். இரு தரப்பிலுமே மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. போர் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகியும், ஒருவர் கூட போர்க்குற்றத்திற்காக இலங்கையில் தண்டிக்கப்படவில்லை.

இலங்கை ராணுவ வீரர்கள், தங்களால் கைது செய்யப்படும், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, இறுதி போர் முடிந்த பிறகு, இலங்கை ராணுவத்தினர் அதிக பாலியல் குற்றங்களில் ஈடுட்டுள்ளனர். இந்த பாலியல் பலாத்காரங்களை, ஒரு தண்டனை முறையாக செய்திருக்கின்றனர். விடுதலை புலிகளோடு தொடர்புள்ளவர்கள் என்று தெரிந்தால் அவர்களை இழிவுபடுத்தும் செயலாகவும் ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அச்சம், வெட்கம் போன்ற காரணங்களால், பாதிக்கப்பட்டோர் தங்களது பாதிப்பு குறித்த முழு விவரத்தையும் தெரிவிக்காததால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை முழுமையாக கண்டறிய முடியவில்லை. ஆனால் பெருமளவில் இக்குற்றங்கள் நடந்துள்ளன. இசைப்பிரியா, பாலச்சந்திரன், நடேசன் போன்றோரை சிங்கள ராணுவம் படுகொலை செய்தது தெளிவாகியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி, இலங்கை ராணுவத்தினர் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். சில பலாத்காரங்களும், அதையொட்டிய டார்ச்சர்களும், மனித குலத்திற்கே எதிரான அளவுக்கு மோசமாக இருந்துள்ளன.

'வெள்ளை வேன்' கலாசாரம் என்று அந்த நாட்டில் அழைக்கப்படும், ஆள் கடத்தலும், அதைத்தொடர்ந்த சித்திரவதைகளும் நின்றபாடில்லை. உலக அளவில் அதிக பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நாடு இலங்கை. ஐ.நா. ஆய்வாளர்கள் நேரில் சென்று விசாரணை நடத்த இலங்கை அனுமதிப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதையொட்டி தமிழக சட்டசபையில் ஈழப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை கோரி ஏகமனதாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவில் தீர்மானம் இயற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அமெரிக்காவின் இந்த அறிக்கை மிகுந்த நேர்மையோடு விஷயங்களைப் பட்டியலிடுவது போலத் தோன்றினாலும் இதன் உண்மையான போக்கை அனுமானிக்க வசதியாக உள்ளது.

இந்த அறிக்கையில் அமெரிக்கா தற்போதை சிரிசேனாவின் அரசை பாராட்டியிருக்கிறது. அதே சமயம் முந்தைய அரசு போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டது எனக்குறிப்பிடுகிறது. இது ஈழப்படுகொலைகள் அத்தனைக்கும் ராஜபக்சேவை மட்டும் கட்டம் கட்டி காட்டிவிட்டு பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழர் X சிங்களர் இனப்பிரச்சனையை வெறும் போர்க்குற்றமாகச் சுருக்கி முடிக்கிறது. விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளாகக் கருதப்படாமல் போர்க்குற்றம் புரிந்த ஒரு தீவிரவாதக் குழுவாகவே காட்டப்படுகிறார்கள். ஜெயவர்த்தனேயிலிருந்து தற்போதைய ரணில் வரை அனைவரும் தமிழனத்திற்கு எதிராக அநீதியாகச் செயல்பட்டவர்களே !

இந்த விசாரணையில் தமிழர்களை அழித்ததில் இந்தியாவின், அமெரிக்காவின் மற்றும் சீனாவின் பங்கும் மறைக்கப்படும். இதில் நிலைநாட்டப்படுவது அமெரிக்காவின் நீதியாக மட்டுமே இருக்கும். தமிழர்கள் கிடைத்த நீதியை வைத்து சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். தமிழினம் இலங்கையில் அமைப்பு ரீதியாக அழிக்கப்படுவதை இந்த அறிக்கையும் அதன் விளைவுகளும் கண்டுகொள்ளவே போவதில்லை.

Tuesday, September 15, 2015

ஈழப் படுகொலைகள், போர்க்குற்றம் – ஐ.நா வின் கள்ள அழுகை !

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 30-வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. கவுன்சிலின் தலைவர் ஜெத்ராட் உல் உசேன் அதில் ஈழப் படுகொலைகள் பற்றி பேசியதாவது: “இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இறுதிகட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளன. பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.

இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா மனித உரிமை விவகாரங்களில் காட்டும் அக்கறை வரவேற்கத் தக்கது. அதேநேரம் அந்த நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை புதன் கிழமை வெளியிடப்படும். அப்போது சில கடுமையான முடிவுகளும் அறிவிக்கப்படும்.” என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா. சபையின் இந்த அறிக்கை இலங்கை அரசிடம் கடந்த வெள்ளிக்கிழமையை அளிக்கப்பட்டிருக்கிறது. 6 நாட்களில் இலங்கை பதில் அளிக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இலங்கை தரப்பில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் மங்கள சமர வீரா பங்கேற்றுள்ளார்.

மங்கள சமரவீரா ஐ.நா அறிக்கை பற்றி கூறியதாவது: “தென் ஆப்பிரிக்காவைப் பின்பற்றி உள்நாட்டுப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும், இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்க அரசின் ஆலோ சனையைக் கோரியுள்ளோம். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசியல் சாசனம் வரையறுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இலங்கை அரசு சார்பில் சுதந்திரமான விசாரணை அமைப்பு அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விஷயத்தை மேலோட்டமாகப் பார்த்தாலே இதன் போலித்தன்மை தெரியும். முதலாவதாக ‘போர்க் குற்றம்’ என்கிற வார்த்தை. இரு நாடுகளுக்கிடையே தான் போர் நடைபெற இயலும். இலங்கையில் நடந்ததோ உள்நாட்டில், கிளர்ச்சியாளர்களான விடுதலைப் புலிகளுடனான சண்டை மட்டுமே. இந்த உள்நாட்டுச் சண்டையே இரு நாடுகளுக்கிடைப்பட்ட போர் போல நடத்தப்பட்டிருப்பதிலிருந்து தமிழர்கள் வேறு நாட்டவராக, எதிரிகளாகவே நடத்தப்பட்டனர் என்பது தெளிவு. அதனாலேயே இன்னும் தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் நிற்கிறது. தமிழர்கள் பகுதிகளில் சிங்கள மக்களைக் குடியமர்த்தி அவர்களுக்கான பகுதிகள் சிங்களர் வசமாக்கப்படுகின்றன.

ஐ.நா. கவுன்சில் தலைவர் ஜெத்ராட் போர்க்குற்றங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன என்று பொதுவாகத் தெரிவித்துள்ளார். அதே சமயம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனாவை பாராட்டியுள்ளார். இதற்கு விசாரணை கமிஷனை இலங்கை அரசே அமைக்கப் போகிறது. அதாவது தான் செய்த குற்றங்கள் பற்றி தானே விசாரிக்கப் போகிறது. இதன் முடிவு என்னவாக இருக்கும் ?

முடிவு தமிழருக்கு சாதகமானதாக இருக்காது. சிங்களச் சார்பு ராஜபக்சே பலிகடாவாக்கப்பட்டு அவர் மேல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும். அதே சமயம் தமிழர் அழிப்புக்கு இலங்கையும், இந்தியாவும் சேர்ந்து செயல்பட்டு விசாரணையை ஒப்புக்கு நடத்தி முடிக்கும். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடரும். இந்திய நிறுவனங்களுக்கு இலங்கையில் கான்ட்ராக்டுகள் பல இதற்கு லஞ்சமாகக் கிடைக்கும். இந்திய அரசு தமிழருக்குச் செய்யும் துரோகம் தொடரும். அது மோடியோ அல்லது மன்மோகனோ அல்லது வேறு யாரோவாக இருந்தாலும் சரி.

Thursday, March 7, 2013

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மான நாடகம் - இந்தியா தயக்கத்துடன் ஆதரித்தது



ஐ.நா.வில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் 24 ஆதரவு ஓட்டுக்களும், 15 எதிர் ஓட்டுக்களும் பெற்று வெற்றி பெற்றது (உடனே சந்தோஷப்பட்டுக்காதீங்க). 8 நாடுகள் எங்களுக்கு ஓட்டுப் போட இஷ்டமில்லைன்னுட்டு கழன்று கொண்டன. தீர்மானத்துக்கு ஆதரவாக(இலங்கைக்கு எதிராக) ஓட்டுப் போட்ட
அமெரிக்கா, இத்தாலி, மெக்ஸிகோ, ஆஸ்திரியா, நார்வே, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ரோமானியா, உள்ளிட்ட 24 நாடுகளுடன் கடைசிவரை இங்கிட்டா அங்கிட்டா என்று எந்தப் பக்கம் தாவுவது என்று பயங்கரமாக யோசித்து கடைசி வினாடியில் இந்தியாவும் சேர்ந்து கொண்டது. தீர்மானத்தை எதிர்த்த 15 நாடுகளில் சீனா, ரஷ்யா, கியூபா (இதுதான்டா கம்யூனிசம்), பங்களாதேஷ், தாய்லாந்து, சவூதி அரேபியா, க்வைத், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகள் அடக்கம்.

அப்பாடா இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தாச்சீ (சிங்கம் களமிறங்கிடுச்சீ..) இனி ராஜபக்சேல இருந்து கோத்தாபய(முன்னாடி 'ங்' சேக்கலைங்க) ராஜபக்சே வரை எல்லாருக்கும் தூக்குத் தண்டனை நிச்சயம்னு  நாம் நீதி கிடைச்ச சந்தோஷத்துல துள்ளிக் குதிக்க ஏதுமில்லை என்பது தான் உண்மை. இதைப் புரிஞ்சிக்கணும்னா கொஞ்சம் போனவருஷத்துக் கதையை ரீவைண்ட் பண்ணிப் பார்க்கனும்.

ஈழத்துல போர் நடந்தப்பவே அமெரிக்காவுல இருந்து சீனாவுல இருந்து இந்தியா வரைக்கும் எல்லோருக்கும் தெரிஞ்ச உண்மை என்னான்னா "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற சொல்லாடல்ல கதை கட்டி இந்த உலகமயமாக்கல் காலத்துலயும் தனித்து திறமையா போராட முடிஞ்ச உலகின் சக்தி வாய்ந்த புரட்சி இயக்கமாக (அதாவது தீவிரவாத இயக்கமா) மாறிட்டு இருந்த விடுதலைப் புலிகளை 'கதம் கதம்' பண்றது தான் எல்லா அரசுகளும் ஒன்று சேர்ந்த மையப் புள்ளி என்பது.  போராளிகளின் கதையை பூண்டோடு முடித்த  இலங்கை வெறும் அம்பு மட்டுமே. வில் சீனாவாக, அமெரிக்காவாக, இந்தியாவாகத் தானிருந்தது.

2009ல் மே மாதம் 17ம் தேதி போர் முடிஞ்சதும் ஐ.நா. பத்து நாட்கள் கழித்து 27ம் தேதியில் கொண்டு வந்த ஒரு தீர்மானம் விடுதலைப் புலிகளை ஒழித்ததற்காக இலங்கை அரசை பாராட்டியும், விடுதலைப் புலிகள் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தது போன்று மகாக் கொடிய பாபங்களைச்(?) செய்ததால் அவர்களை கண்டித்தும் ஓரு தீர்மானம் நிறைவேற்றியது.  மனித உரிமை மீறல்கள் பற்றி அந்த மனித உரிமைகள் கமிஷன் கண்டுக்கவேயில்லை. தீர்மானத்தை(இலங்கையை) 29 நாடுகள் ஆதரித்தன. 12 நாடுகள் எதிர்த்தன.

ஜூன் 2010ல் பான்-கி-மூன், இலங்கைல என்னதான் நடந்துச்சுன்னு ஆராய்ஞ்சு ஒரு ரிப்போர்ட் தாங்க பாக்கலாம்னு ஒரு மூன்று பேரை நியமிக்கிறார். அவங்களும் கிளம்பி இலங்கைக்கு வந்து நல்லா ராஜபக்சே வீட்ல விருந்தெல்லாம் சாப்டுட்டு திரும்பப் போய் நிறைய மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கிறது வாஸ்தவம் தான். ஆனால் அதுல விடுதலைப் புலிகளுக்கும் பங்குன்னுட்டு போய்ட்டாங்க. இப்படி இலங்கையை ரொம்ப காட்டிக்கொடுக்காத அந்த ரிப்போர்ட்டே கதிகலங்க வைக்கிற உண்மைகளோட இருந்துச்சா, உடனே பான்-பராக்-மூன் ... சாரி... பான்-கி-மூன் அந்த அறிக்கையை தூக்கி குப்பைத் தொட்டில போட்டுட்டார் செல்லாது செல்லாதுன்னுட்டு.

அதுக்கப்புறமா போனாப் போவுதுன்னு இலங்கைக்கு எதிரான விஷயங்களை இன்னும் குறைச்சிட்டு 2011ல் அந்த அறிக்கையை வெளியிட்டாங்க. அதுல ஐ.நா.க்காரங்க சொன்ன தீர்வு தான் ரொம்ப வினோதமானது. "கொன்னது நீங்களே(இலங்கை).. எனவே நீங்களே ஒரு கமிஷன் 'கத்துக்கிட்ட பாடங்களும்' மறுசீரமைப்பும்ன்ற பேர்ல (LLRC - பேர்ல இருந்தே தெரியுது ஐ.நா. விடுதலைப்புலிகளைக் கொன்னது சரிதான்னு நினைக்கிறது..) ஆரம்பிச்சி விசாரிச்சி நீங்களே தீர்ப்பும் குடுத்துக்கோங்க.."ன்னுட்டாங்க, அதாவது கையும் களவுமா பிடிபட்ட திருடன் கிட்ட போலீஸ்காரன் திருட்டுப் பயலே உன்னைப் பிடிச்சிட்டேன், அதனாலே இப்போ உன்னை நீயே தண்டிச்சுக்கோன்னு சொல்லிட்டு போனா மாதிரி... ஏன்னா ஐ.நா.க்காரவுக ரொம்ப ஸ்ட்ரிக்டாம் அடுத்த நாட்டோட 'இறையாண்மை'ல நுழைய மாட்டாங்களாம். அமெரிக்கா ஈராக்கிலும், இந்தியா காஷ்மீரிலும், சீனா பர்மாவிலும் என்னா பண்றாங்களாம் ?

இதுக்கே ஏதோ பதிவிரதையோட விரல் நகத்தை அன்னிய ஆடவன் தொட்டுட்ட மாதிரி குய்யோ முறையோன்னு ராஜபக்சேக்கள் கத்தி எங்களைத் தொடாதே.. தொட்டா என்ன ஆகும் தெரியுமான்னு சவால்லாம் விட்டு, அதை இந்தியா போய் தாஜா பண்ணின்னு காமெடியா நடந்திருக்கு. அத்தோட இன்னொரு காமெடியா இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதும். இந்தத் தீர்மான வெற்றியானதால் என்ன நடக்கும் ?

ஒன்னும் நடக்காது. இலங்கை தான் நியமிச்ச LLRCயின் செயல்பாடுகளையும், பரிந்துரைகளையும் உடனே  செயல்படுத்த வேண்டும். இது தான் இந்தத் தீர்மானத்தின் வெற்றி வலியுறுத்துவது. (எனக்குத் தெரிஞ்சு LLRCயோட பரிந்துரையெல்லாம், மொத்தமா கொன்னா ஒழுங்கா புதைக்கனும்.. பெரிய தலைங்கலைக் கொன்னா, ரேப் பண்ணி கொன்னா உடனே தடயமில்லாம எரிக்கனும்... அப்படின்ற ரேஞ்சுக்கு தான் இருந்தது).

இதுக்கு ஒரு ஓட்டுப் போடச் சொன்னா ஒருத்தர் "இலங்கை நமக்கு எதிரி நாடில்லை மாறாக நட்பு நாடு"ன்னு பார்லிமண்ட்ல இழுக்கிறார். இன்னொருத்தர் பறந்து போய் ராஜபக்சாவைப் பார்க்கிறார் "பதறாதீங்க ராஜபக்ஷே நாங்க இருக்கோம் சப்போர்ட்டுன்னு காதில ஓதிட்டு வர்றார்". இன்னொருத்தார் 'அவங்க நாட்டு உள்விவகாரத்துல நாம தலையிட முடியாது(திருட்டுத் தனமா எட்டி மட்டும் பார்ப்பாங்க போல)' ன்னு மக்களுக்கு புத்திமதி சொல்ல ஆரம்பிக்க, கடைசியில் பாலச்சந்திரனின் கொலையான வீடியோவைப் பார்த்து தமிழகம் கொதிக்க, இன்று கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்கிற 50 வயதானவர் 'ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளி என அறிவிக்க வலியுறுத்தி'தீக்குளித்துவிட்டார். இந்தியா-சோனியா அந்த அளவுக்கு ராஜபக்சேவுக்கு ஸ்ட்ராங் சப்போர்ட்டு.

தமிழகம் நன்றாக தூக்கத்திலும், தொலைக்காட்சி மயக்கத்திலும் இன்னும் வாழ்ந்து வருகிறது.  பாலச்சந்திரன் மரணத்தில் திடீரென்று அது கொதித்து எழுந்ததைக் கண்டு பதறி தமிழர்களை கூல் பண்ணுவதற்காக போடப்பட்ட சந்தர்ப்பவாத ஓட்டே  இந்த இந்தியாவின் ஆதரவு ஓட்டு.

இப்போது சொல்லுங்கள் தீர்மானம் ஐ.நாவில் வெற்றி பெற்றதால் யாருடைய வாழ்வாவது திரும்பக் கிடைக்குமா என்று, இல்லை. ஒருபோதும் இல்லை.