Showing posts with label பாஜக. Show all posts
Showing posts with label பாஜக. Show all posts

Saturday, March 15, 2025

புதிய கல்விக் கொள்கை 2025. மும்மொழிக் கொள்கை என்கிற வேஷம் போட்டு வந்திருக்கும் இந்தித் திணிப்பு.





தற்போது வந்துள்ள பாஜகவின் புதிய மும்மொழிக் கொள்கை என்பது நேரு காலத்திலேயே கொண்டு வரப்பட்ட இந்தியை மூன்றாவது மொழியாக திணித்த கல்விக் கொள்கையின் மேக்கப் போட்ட வேறு வடிவம் ஆகும்.

70 வருடமாக இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசுகளான காங்கிரஸும் தற்போது பாஜகவும் தொடர்ந்து முயன்று வந்துள்ளன.

உண்மையில் சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவதுதான் இந்தியாவை ஆளும் சங்கிகளின் திட்டம். அது ஆர்எஸ்எஸ்ன் கோட்பாடுகளில் எழுதப்பட்டு இருக்கும் திட்டம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களில் பெரும்பாலோர் பிராமணர் மற்றும் உயர்சாதியினர். அவர்களில் பெரும்பாலோர இந்துத்துவ அமைப்புகளான ஆர்எஸ்எஸ் போன்றவற்றில் ஈடுபாடு அல்லது தொடர்பு கொண்டவர்கள். அம்பேத்கர் மட்டுமே ஒரு தலித். ஆனால் அவர் மட்டுமே அவர்கள் எல்லோரையும் விட படித்தவர். அறிவாளி. அம்பேத்கரை சட்டம் இயற்றும் குழுவின் தலைவராகப் போட்டது நேரு மற்றும் காந்தியடிகளின் அழுத்தத்தாலேயே. இவை எல்லாவற்றையும் தாண்டி அரசியலமைப்பு சட்டம் 343லியே இந்தி வலியுறுத்தப்படுகிறது. தென் மாநிலங்கள் போராடிய பின்புதான் ஆங்கிலமும் இருக்கட்டும் என்று சேர்த்துக் கொண்டார்கள்.

2019 ல் கஸ்தூரிரங்கன் என்கிற பிராமணர் தலைமையிலான குழு இந்த புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியது.

ஏன் முன்று மொழி வந்தது ?  சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்தது. அரசு அலுவல்கள் இப்போதுவரை பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான்.

இந்த 70 வருடங்ஙளில் ஆங்கிலம் உலக அளவில் முக்கியமான அறிவியல் மொழியாக வளர்ந்துவிட்டது. உலகின் பெரும்பாலான நாடுகளிடையே தொடர்பு மொழியாக ஆங்கிலம் வந்துவிட்டது. ஆங்கிலத்தின் இந்த பெரும் வளர்ச்சி ஆங்கில மொழியை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டது. இந்தி மொழி இன்னும் அதே வளர்ச்சியில்லாத நிலையிலேயே தொடர்கிறது. தமிழ் கூட அறிவியல் வார்த்தைகள் சேர்த்து தன்னை புதிதாக வளர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது.

பெருமளவு அறிவியல் மற்றும் அனைத்து உலக முன்னேற்றங்களின் கருவியாக , உலக மக்களின் தொடர்பு ஊடகமாக வளர்ந்து கொண்டே வருகிறது ஆங்கிலம். இதே ஆங்கில மொழியை இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் தாய் மொழியை முதல் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும் படித்தால் இந்தியாவையே உலகத்துடன் இணைத்துவிட முடியும். இந்தியாவில் மாநிலங்களிடையேயான மொழிப் பிரச்சனைக்கு ஆங்கிலம் மிக எளிய தீர்வாக அமையும்.

ஆனால் அதைச் செய்ய சங்கிகள் விரும்பவில்லை. அவர்களுடைய நோக்கம் இந்தியாவில் இருந்து ஆங்கிலத்தை விரட்டிவிட்டு அங்கே சமஸ்கிருதத்தை கொண்டு வருவதாக ஆகிப் போனது.

அதனால் தான் மும்மொழி என்று மூன்றாவதாக ஆங்கிலத்தை தள்ளிவிட முயல்கிறார்கள்.

மும்மொழியை சொல்லி  ஏற்கனவே இந்தியைத் திணித்த சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ சிலபஸ்கள் எல்லாம் ஒன்றிய அரசின் கல்வித் திட்டங்கள்.அதன் மூலம் படித்தால் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆசை காட்டப்பட்டது. அதனால் தமிழ்நாட்டில் பலரும் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தேடி ஓடினார்கள். (இன்றைக்கு நிலைமையே வேறு. அரசுத் துறைகளை வரிசையாக விற்றுக் கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு. அரசுத்துறை வேலைகளே இல்லை. குறைந்த படியே இருக்கின்றன. இதில் எங்கே போய் ஹிந்தி படித்து ஒன்றிய அரசில் வேலை வாங்குவது )

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இருந்தாலும், நடைமுறையில் அந்த மூன்றாவது மொழியாக ஹிந்தியே கற்றுத் தரப்படுகிறது.

எப்படி ? மூன்றாவது மொழியாக தமிழ்நாட்டில் தமிழை ஒருவர் விருப்ப பாடமாக படிக்க. வேண்டும் என்றால் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் வேண்டுமல்லவா ?

தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்து சொச்ச கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சிபிஎஸ்ஈ பள்ளிகளில் ஒன்றில் கூட தமிழ் சொல்லித் தரும் ஆசிரியர்கள்  இல்லை. வட மாநிலங்களில் இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களில் ஹிந்தியைத் தவிர வேறு எந்த மொழியும் கற்றுத் தரப்படுவதில்லை. இதுதான் அவர்கள் மும்மொழிகளை அமல்படுத்தும் லட்சணம்.

ஆக, இவர்கள் நோக்கம் இவர்கள் செய்யும் செயல்களில் தெளிவாக தெரிகிறது. மும்மொழி என்று இந்தி பற்றி பேசாமல் இருப்பதாலேயே இது மும்மொழிக் கொள்கை ஆகிவிடாது.

நேற்று வரை அசைவம் சாப்பிட்ட நரி இன்று முதல் நான் சுத்த சைவம். நான் இந்தியே சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் அதை நம்ப நாங்கள் ஆட்டுக் கூட்டமல்ல.

இருமொழிக் கொள்கையில் ஆங்கிலத்தில் பாஸ் செய்ய முடியாமல் அதில் பெயிலாகி பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்தியவர்கள்‌ ஏராளம்.

ஆங்கிலம் உலகளாவிய இணைப்பு மொழி. அதைப் படித்தால் நல்லது. ஆனாலும் கூட ஆங்கிலத்தை படித்து பாசாக முடியாமல் பெயிலாகும் மாணவர்கள் இருக்கும்போது ,

இந்தியையும் மூன்றாவதாக ஒரு மொழியாக சேர்ப்பதால் அதிலும் பாசாக முடியாமல் பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்துபவர்கள் எண்ணிக்கை இன்னும் பல மடங்குகளாகும்.

ஏதோ சில மாணவர்கள் இயல்பாகவே பல மொழிகளை எளிதில் கற்க முடிபவர்களாக இருப்பதால் எல்லா மாணவர்களும் மூன்று மொழி நான்கு மொழி படிக்கும் வல்லவர்கள் என்பதாக பில்டப் செய்து, மூன்றாவதாக ஒரு மொழியைப் படித்து பாசாகியே தீரவேண்டும் என்று அவர்கள் வாழ்க்கையையே பாழாக்குவது சரியா. 

மூன்று மொழிக் கொள்கையே தவறானது என்று நாம் கேள்வி கேட்கிறோம். இவர்கள் மூன்று மொழி தானே ஈசியா எல்லாரும் படிச்சிடலாம் என்பதும், அதில் இந்தியை மூன்றாவதா எல்லாரும் படிச்சிடுவாங்க என்று நைசாக திணிப்பதும் எப்படி மாணவர்கள் கல்வியை மேம்படுத்தும் ?  உண்மையில் நிறைய மாணவர்களை பள்ளிப் படிப்பை தாண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவே புதிய கல்விக் கொள்கை  வடிகட்டியாக பயன்படுகிறது.

 புதிய கல்விக் கொள்கை மூலம் 3,5,8 வகுப்புகளில் வடிகட்டும் முறை 

மூன்றாவது ஐந்தாவது எட்டாவது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்கள் அத்தோடு படிப்பை நிறுத்த செய்யும் ஏற்பாடே ஆகும். முன்பெல்லாம் மாணவர்களை பெயிவாக்கும் முறை இருந்தது. பெயிலான மாணவர்கள் அதே வகுப்பை மீண்டும் படிக்க வேண்டும். தன் வகுப்புத் தோழர்கள் மேல் வகுப்புக்கு போய்விட தான் மட்டும் தன்னை விட இளம் வயதினருடன் மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் அவமான நிலையால் பெயிலான மாணவர்கள் அத்தோடு பள்ளிப்படிப்பை நிறுத்தினர். இதைத் தடுக்கவே கலைஞர் இனிமேல் பத்தாம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளில் யாரையும் பெயிலாக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

மாணவனின் கல்வி தரமாக இருக்க வேண்டும் என்பது இரண்டாவது விஷயம். முதல்‌ விஷயம் அவன் 10 வருடங்கள் பள்ளியில் வந்து படிக்க வைப்பது. பள்ளி அவனுக்கு பாடம் தவிர பல சமூக பண்புகளையும் கற்றுத் தரும் ஒரு இடம்.

சங்கிகள் எப்போதும் தரம் தரம் என்றே சொல்லி ஏழை எளிய மாணவர்கள் படிப்பதையே கெடுக்க‌ நினைப்பார்கள்.

குலக்கல்வி:

ராஜாஜி 1960 களில் வெளிப்படையாக குலக்கல்வி என்று திட்டத்தை கொண்டு வந்தார். இப்போது அதற்கு வேறு கலர் பூசி தொழில் கல்வி என்று பெயிண்ட் அடிக்கிறார்கள்.

இந்தக் கல்வியிலும் மாணவன் தனது குடும்பத்தினர் செய்யும் குலத்தொழிலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறான்.

அதாவது கூலிவேலை செய்பவரின் மகன் பள்ளி நேரத்தில் மதியான பாடத்திற்கு பதிலாக அப்பாவோடு சேர்ந்து கூலி வேலைக்கோ அவர் செய்யும் வேறு எந்த வேலைக்கோ செல்லலாம். அப்பாவின் அல்லது சித்தப்பாவின் தொழிலை மாணவன் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வேறு ஒரு வக்கீலிடம் சென்று அவரிடம் வேலை பார்த்து வக்கீல் தொழிலை கற்றுக்கொள்ள நினைத்தால் முடியாது. புரிகிறதா ?

புதிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளுக்கு எதிரானது:

ஆம். வட இந்தியாவில் ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலம் எதுவுமே கிடையாது என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆனால் அதுதான் உண்மை.

ஒவ்வொரு வட இந்திய மாநிலத்திலும் சுமார் மூன்‌று முதல் ஐந்து‌ வகையான இந்தி அல்லாத மொழிகள் தான் தாய்மொழிகளாக பேசப்பட்டு வருகின்றன.

ஹிந்தி என்கிற மொழியே இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ளைக்காரரால்‌ உருவாக்கப்பட்டது.

வடமாநில மொழிகளின் பொதுவான மூலங்களை வைத்து தேவநாகரி எழுத்து வடிவத்தை எடுத்து எழுத்து உருவாக்கி வந்தது தான் இந்தி மொழி. 2025 கணக்கெடுப்பின்படி, அந்தந்த மாநிலங்களின் மொழிகளை விட்டுவிட்டு, இந்தி மொழியை ஆட்சி மொழியாக ஆக்கியதால், இந்த 2025 ஆம் வருட கணக்கெடுப்பின் படி, 220 வட இந்திய மொழிகள் அழிந்து போய்விட்டன. இன்னும் சுமார் 800 மொழிகளுக்கு மேல் அழியும் நிலையில் உள்ளன.

 போஜ்பூரி, ஹரியான்வி, மராத்தி , டோக்ரி, ராஜஸ்தானி, மைதிலி, விரசு போன்ற மொழிகள் அழிந்த வடஇந்திய தாய்மொழிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்.

எனவே இந்தித் திணிப்பு தென்னிந்தியாவை மட்டுமல்ல வட இந்தியாவையே பாதித்திருக்கும் விஷயமாகும்.

இப்போது தமிழ்நாட்டின் எதிர்ப்பை கண்டு வடமாநிலங்களும் தங்கள் தாய்மொழியை பாதுகாக்க வேண்டுமே என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டன.

இந்திய அரசியலமைப்பு சட்டமே பிராமணர்கள் பெரும்பான்மை கொண்ட உயர்சாதியினரால் உருவாக்கப்பட்டது. அதில் இருந்த ஒரே அறிஞர் மற்றும்  சிந்தனையாளர் அம்பேத்கர் மட்டுமே. அவரே கூட இந்த ஆரியக் கூட்டங்களின் அழுத்தத்தில் எதை பொது மொழியாக வைக்க வேண்டும் என்கிற சிந்தனையில் கொஞ்சம் குழம்பித்தான் போனார்.

எனவே பெரும்பான்மை ஆரியர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இதுபோன்ற இந்தியை, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் பிரிவுகள் நிறைய உண்டு.

அவற்றை எல்லாம் நீக்க வேண்டும். கல்வி‌ மீண்டும் மாநிலங்களின் உரிமைப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அதுவே இந்தியா பல்வேறு இனங்களும் சேர்ந்து வாழும் ஒரே நாடாக தொடர வழிசெய்யும்.

இப்படி இந்தியை பிற‌ மாநிலங்கள் மேல் மறைமுகமாக திணித்தால் இந்தியா துண்டு துண்டாக உடைந்து போகும்.

அதுதான் நீங்கள் விரும்புவதா ?

Thursday, March 4, 2021

சகாயம் ஐஏஎஸ்..!! பாஜகவின் மற்றுமொரு பகடைக்காய்.



இவ்வளவு வருடங்கள் அரசியல் வேண்டாமென்றிருந்த சகாயம் ஐஏஎஸ் திடீரென்று கொடி பிடித்து அரசியலுக்கு ஏன் வருகிறார் ?
அவருக்கு பின்புலமும் பணமும் திடீரென்று ஒரே நாளில் எப்படி கிடைத்தது ?

கமல்ஹாசனின் மநீமவுக்கு எப்படி திடீரென பணம் கிடைத்ததோ அப்படித்தான்.

சகாயத்தின் பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்தால், அவரது புதிய கட்சி அறிவிப்பு பேச்சு உட்பட, அவர் ஊழல் மட்டுமே தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை போல பேசுவதை கவனிக்கலாம். மற்றபடி நேர்மை , எளிமை , கருமை தான் அவருக்குத் தெரிந்த வார்த்தைகள்.

நீட் , விவசாய சட்டங்கள் , டீமானடைசேஷன் , பெட்ரோல் விலை உயர்வு, மதவெறி பாஜக, உழவர்கள் போராட்டம், இவையெல்லாம் சகாயம் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை ? கவனித்துப் பாருங்கள். இனியும் அவர் கண்ணுக்கு இவை தெரியாது. சகாயம் ஐஏஎஸ் பதவியில் இருந்த 6 வருடமும் ஊழல் மிகுந்த அதிமுகவாலும் , பாஜகவாலும் ஓட ஓட விரட்டப்பட்டவர். தூக்கியடிக்கப்பட்டவர். ஆனால் இன்று அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னும் அவர் தன்னை துன்புறுத்திய இந்தக் கட்சிகள் பற்றி வாயே திறக்கவில்லை. ஏன் ? பயமா ? எஜமான விசுவாசமா ? மோடிக்கோ, பாஜகவுக்கோ எதிராக இன்றுவரை சகாயம் ஒரு வார்த்தை பேசவில்லை.

வடக்கில் அன்னா ஹாசாரே என்கிற காந்தியவாதி காங்கிரஸ் ஊழல் மட்டுமே இந்தியாவின் பெரும் பிரச்சினை என்று பேசினாரே நியாபகம் வருகிறதா ? அதில் பாஜக ஆதாயம் அடைந்ததே. இப்போது அதே அன்னா ஹாசாரே ஏன் பேசவில்லை ? மோடி ஆட்சியில் ஊழலே இல்லையா என்ன ? எக்கச்சக்கமாய் இருக்கிறது. நம் சகாயம் இன்னொரு ஹசாரே முகம்.

சகாயமும் , கமலஹாசனும் , அண்ணாமலை ஐபிஎஸ்ஸும் பாஜகவின் 'போலியான நேர்மை முகம்' காட்டும் பகடைக்காய்கள்.

தேர்தல் நேரத்தில் EVMல் குளறுபடிகள் செய்ய பாஜகவுக்கு மேலும் சில புதிய குட்டிக் கட்சிகள் தேவை.

ரஜினி , கமல் , சகாயம், சரத்குமார் என்று பலரும் களமிறக்கப்படுவார்கள். எதற்கு ? இவர்களால் ஓட்டுக்கள் பிரிந்துவிட்டன என மக்களை நம்பவைப்பதற்கு மட்டுமே. தேர்தல் முடிவுகளில், ஒரு தொகுதியில் ஜெயிக்கவேண்டிய நபர் பாஜக கூட்டணியாக இல்லாவிட்டால் அங்கே EVM குளறுபடிகள் ஆரம்பமாகும்.

EVMல் பித்தலாட்டங்கள் செய்து, ஜெயிக்கும் நபரின் ஓட்டுக்கள் இந்த புதிய நேர்மையாளர்களுக்கு, அதாவது 'நல்லவர்'களுக்கு பிரித்து போடப்படும். பாஜக சார்பு வேட்பாளருக்கு இவர்கள் எல்லாரையும் விட கொஞ்சமே கொஞ்சம் அதிகமாக ஓட்டுக்கள் விழும்படி போடப்படும்.

இன்று புதிதாய் அரசியலுக்கு வந்த சகாயமும், கமலும் 40 ஆயிரம் ஓட்டுக்கள் ஒரு தொகுதியில் திடீரென வாங்கினால் நீங்கள் சந்தேகப்படுவீர்களா ? மாட்டீர்கள் தானே ?

ஆம். நேர்மையாளர் சகாயம் 40 ஆயிரம் ஓட்டு வாங்குகிறார் என்பது நம்பி விடக்கூடிய ஒரு விஷயம் தான். அந்த நம்பகத்தன்மைதான் EVM மோசடி செய்ய தேவையான விஷயம்.

இப்படி இந்த நேர்மையாளர்களோடு சேர்ந்து பாஜகவின் முதல்வர் வேட்பாளர், ஆட்டுக்குட்டி மேய்ப்பாளர் அண்ணாமலைக்கு 40 ஆயிரத்து ஐநூறு ஓட்டுக்கள் விழுகின்றன என்று கொள்ளுவோம். 500 ஓட்டுக்கள் தானே அதிகம்? இதுவும் நம்பக்கூடியதாக மாறிவிடும் இல்லையா ? ஐபிஎஸ் அதிகாரி , ஊழலை ஒழிப்பவர் etc etc .

இவர்கள் எல்லோரும் சேர்ந்து அத்தொகுதியில் பல வருடங்களாக சேவை செய்து வரும் , வெற்றி பெறும் வாய்ப்புள்ள, பெரிய , மாநில (ஊழல்?) கட்சியின் வேட்பாளரின் ஓட்டுக்களை ஆளுக்கு 40 ஆயிரம் பிரித்துவிட்டார்கள் என்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் (EVM) சொல்லும். இப்படி ஓட்டுக்கள் பிரிந்த நிலையில் ஜெயிக்கப்போகும் மாநிலக் கட்சியின் வேட்பாளரை விட வெறும் 501 ஓட்டுக்கள் மட்டுமே கூடுதலாகப் பெற்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற்று விடுவார்.

இதுதான் மக்கள் நம்பவைக்கப்படும் தேர்தல் முடிவு.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், EVM மூலம் தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற்றாலும் , மக்கள் அதை நம்பும்படியாக செய்யவேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய நோக்கம்.

ஏனெனில் EVM ஐ, அதாவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை, மக்கள் நம்பவில்லை என்றால் சகாயமோ , கமலோ , ரஜினியோ அரசியலுக்கு வந்து பாஜகவுக்கு பிரயோசனமே இல்லை. ஏனெனில் கடந்த காலங்களில் , இப்படித் தோன்றும் திடீர்த் தலைவர்கள் யாரும் மக்கள் நம்பிக்கையை உடனே ஓட்டுக்களோ , வெற்றியோ பெற்றதேயில்லை.

எனவே தேர்தல் நேரத்தில் தோன்றியிருக்கும் இந்தப் புதிய மின்மினிகள் நீங்கள் நினைப்பது போல விண்மீன்களல்ல. இவர்கள் ஆளும் பாஜக நடத்தப் போகும் EVM தில்லுமுல்லுகளை தேர்தல் முடிவுகளில், ஓட்டுக்களை பிரித்துப் போட்டு விளையாடப்படும் விளையாட்டை மறைத்து, தேர்தல் நேர்மையாக நடந்ததாக நம்பவைக்க பலியிடப்படும் 'நேர்மையான' வெள்ளாடுகள்.

இந்த வெள்ளாடுகள் தேர்தல் முடிந்தவுடன், அன்னா ஹாசாரே போல, காற்றில் கரைந்து மறைந்து போவார்கள்.

பாஜக நடத்தும் இந்த தேர்தல் ஆட்டத்தில் சகாயம் போன்ற நல்லவர்களுடன், இந்த நல்லவர்கள் மேல் நன்மதிப்பு கொண்ட பல லட்சம் அப்பாவி இளைஞர்களும், பாஜகவின் கருவேப்பிலையாக உபயோகப்பட்டு வீணாகப் போவார்கள். அடுத்த 5 வருடங்கள் பாஜகவின் கையில் சிக்குண்டு தமிழகம் சின்னாபின்னமாகும்.

இந்த தேர்தல் சதுரங்க வேட்டையை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஒருவேளை சீமான்,சகாயம் , கமல் , ரஜினி போனறோர் அடுத்த ஐந்தாண்டுகள் ஊழலை எதிர்த்து , பாஜகவையும் எதிர்த்து போராடி நிற்பார்கள் எனில் அப்போது போய் சகாயத்துடன் இணைந்து நில்லுங்கள்.

இப்போது தமிழகத்தின் மாநிலக் கட்சிகள் பெரும்பான்மை சீட்டுக்கள் வெற்றி பெறுவதைத் தடுக்கும் நோக்குடன், தேர்தல் வர இருக்கும் இந்த ஒரு வருடத்திற்குள் தோன்றியிருக்கும் இந்த திடீர் புரட்சியாளர்களை நம்பாதீர்கள். ஓட்டுப் போடாதீர்கள்.

அப்போதுதான் இவர்களை முன்னிறுத்தி செய்யப்படப் போகும் பாஜகவின் EVM மோசடிகளை நாம் தோற்கடிக்க முடியும்.

இன்றைய தேர்தல் தேவை பாஜகவை உள்ளே நுழையவிடாத ஒரு மாநில எதிர்க்கட்சியின் கையில் அதிகாரம் செல்வதே.

--- அம்பேதன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.