Sunday, November 2, 2014

கத்தி. விமர்சனம் 2 - மக்களுக்குத் தரும் புத்தி.


கல்கத்தா ஜெயிலில் இருந்து சிறைவாசம் அனுபவித்துவரும் திருடர் கதிரேசன் என்கிற விஜய். அவர் அங்கிருந்து தப்பித்து சென்னை வந்து தனது நண்பர் ரூமில் செட்டிலாகிறார். அப்போது நடுஇரவில் யாரோ சிலர் ஒருவனை சுட்டுத்தள்ளிவிட்டுச் செல்ல காப்பாற்றப் போகும் விஜய் அதிரச்சியாகிறார். அங்கே உயிர்போகக் கிடப்பது ஜீவா எனப்படும் இன்னொரு விஜய்.

ஜீவாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பின்பு ஆள்மாறாட்டம் செய்துவிட்டு ஜீவா இருந்த முதியோர் இல்லத்தில் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்து கதிரேசன் ஜீவாவாய் முதியோர் இல்லம் செல்ல ஒவ்வொன்றாய் பிரச்சனைகள் கிளம்புகிறது. எந்நேரமும் விஜய்யை கொல்ல ஆட்கள் சுற்றி வர மெதுமெதுவே தெரிகிறது ஜீவா பற்றி.
ஜீவா தன்னூத்து எனும் தன் கிராம மக்களுக்காக போராடி வரும் ஒரு 'தீவிரவாதி'. தனது கிராமத்திலும், சுற்றுப்புற கிராமங்களிலும் விவசாயம் செழிக்க அந்தப் பகுதியிலேயே நிலத்தினடியில் இருக்கும் வற்றாத நீரூற்று இருப்பதை அறிகிறான் ஜீவா. அதை ஏற்கனவே அறிந்திருக்கும் கார்ப்பரேட் கோலா கம்பெனி அங்கிருக்கும் நிலங்களையெல்லாம் விவசாயிகளிடமிருந்து பலமடங்கு விலை கொடுத்து வாங்கிவிடுகிறது.
ஊர்மக்களை ஒன்று திரட்டி போராடுகிறான் ஜீவா. பதிலுக்கு அவனைக் கொல்ல ஏற்பாடு செய்கிறான் கோலா கம்பெனியின் அதிபர். கார்ப்பரேட் கோலா கம்பெனியின் ஆட்கள் ஜீவாவைக் கொல்ல முயன்றது போல் கதிரேசனை ஜீவா என்று நினைத்துக் கொல்ல முயல ஏற்கனவே பக்கா ரௌடியான கதிரேசன் அவர்களைப் பின்னிப் பெடலெடுக்கிறார். நடுவில் சமந்தாவுடன் மானே, தேனே பொன்மானே போல கொஞ்சம் ஜாலியாகக் காதலித்துக் கொள்கிறார்.
கார்ப்பரேட் முதலாளிகள் அனைவரும் கோலா கம்பெனிக்காரனுக்கு உறுதுணையாயிருக்க நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவினையும் விலைக்கும் வாங்கும் முதலாளியை எதிர்க்க சென்னை மாநகரத்துக்கு குடிநீர் வரும் ஏரிகளை அடைப்பதன் மூலம் சென்னை நகரமே கிராமத்தைத் திரும்பிப் பார்க்கும்படி செய்து தனது கிராமத்தை எப்படி காப்பாற்றுகிறார்கள் ஜீவாவும், கதிரேசனும் என்பதுதான் மீதிக்கதை.

படம் ஒரு பக்கா கமர்ஷியல் படமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவத்தை நாலே வரிகளில் விளக்கிவிடுகிறது. நாலாவது உலகப்போர் தண்ணீரால்தான் வரும் என்று யாரோ சொன்னார்கள். படத்தில் கம்யூனிசம் பற்றி கூட ஒரு எளிய விளக்கம் வருகிறது. சமீபத்தில் வேலை தருகிறேன் என்று பட்டை நாமம் சாத்திவிட்டுப் போன 'நோக்கியா'விலிருந்து மக்கள் கார்ப்பரேட்டுகளின் ஓநாய்க் குணத்தை மெல்ல மெல்ல புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

படத்தில் இதுபற்றி மட்டுமல்ல பாலாற்றில் கோக் கம்பெனி துளை போட்டு நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவது, காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயுவை (அதாங்க சமையல் கேஸ்) எடுக்கும் ரிலையன்ஸ் கம்பெனிபற்றி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி, இவற்றிலெல்லாம் கார்ப்பரேட்டுக்கள் மக்களுக்கு மொட்டையடிப்பது பற்றி சர்வசாதாரணமாக வசனங்கள் பளிச்சிடுகின்றன. முருகதாஸூக்கு ஒரு சபாஷ். முருகதாஸ் இனி கார்ப்பரேட்டுக்குப் படமெடுப்பாரா? இல்லையா? என்பது நமது நாளைய கேள்வி.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் கொலைவெறித்தாக்குதலிலிருந்தும் படம் தப்பிப் பிழைத்திருப்பது நம் அதிர்ஷ்டமே. ஜார்ஜ் சி.வில்லியமஸின் ஒளிப்பதிவுக்கு ஒரு சியர்ஸ். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் (கதையைச் சுட்ட)முருகதாஸின் கதைக்கு பலம் சேர்க்கிறது. ஹீரோ படம் என்பதால் விஜய் மற்றும் விஜய்யின் நண்பன் சதீஷ் போன்றோரே படம் முழுவதும் தெரிகிறார்கள். கிராமத்துத் தாத்தாக்களின் சென்ட்டிமென்ட் வசனங்கள் சில நெஞ்சைத் தொடுகின்றன.

'கத்தி' படத்தின் தயாரிப்பாளராக இனப்படுகொலைகளுக்கு துணை போன ராஜபக்சேவின் பினாமி லைகா மொபைல்ஸ் இருந்ததும் அந்தப் பிரச்சனை பெரிதாகியதும் தெரிந்ததே. விஜய் கோக் போன்ற குளிர்பான கம்பெனிகளின் விளம்பர ஹீரோ. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் திரைக்கதையை அப்படியே ஒருவரிடம் இருந்து கறந்துவிட்டு அவரை கழற்றிவிட்டார் என்று ஏகப்பட்ட குளறுபடிகள் இந்தப் பட விவகாரத்தில் உண்டு. 'கார்ப்பரேட்டுகள் தங்களுக்கான சவப்பெட்டிகளுக்கு தாங்களே ஆர்டர் கொடுக்கும்' என்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது.

திரையரங்கினுள் படம் பார்க்க அமரும் ஆடியன்ஸ் இதுபோன்ற முரண் அரசியல்களை உணர்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லைதான். படம் கார்ப்பரேட்டுகள் எவ்வாறு ஒவ்வொரு கிராமம், டவுன், நகரங்கள், ஆறு, குளம் என்று எல்லா வளங்களையும் தங்கள் லாபமாக உறிஞ்சுகிறார்கள் என்பதை மிகத் துணிவாகப் பேசுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை எவ்வாறு கைகட்டி சேவகம் செய்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது திரைக்கதை. இப்படி துணிவாகப் பேசியதற்காக ஏ.ஆர்.முருகதாஸுக்கும், விஜய்க்கும் நாம் சல்யூட் வைக்கலாம்.

இந்த நுகர்வுக் கலாச்சார உலகில் வெறும் ஆடலும், பாடலும் காமெடியுமே  பிரதானமாய்க் கொண்டு படம் எடுக்க முடியாமல் போகும் நிலைக்கு சினிமா உலகம் வந்திருக்கிறது. ரத்தமும் சதையுமாக சமூக அவலங்களும், வேலைவாய்ப்பின்மையும், அமைதியான வாழ்க்கை வாழமுடியாத நிலையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் மேலும் மக்களை சக்கைகளாக கரும்பு எந்திரத்தில் பிழியும் சூழலில் நிஜ உலகை விட்டு நிறையவே விலகிப் போய்விட்ட கமர்ஷியல் சினிமா மக்களின் பிரச்சனைகளை

இப்படியாகவாவது மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்களே என்று நாம் லேசாக திருப்திப் பட்டுக்கொள்ளலாம் தான். அந்த வகையில் கத்தி ராஜபக்சேக்களும், லைக்காக்களும் தாங்களே தங்களுக்கு வைத்துக்கொண்ட ஆப்பு என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
வசூலுக்காகவாவது பேசியே ஆகவேண்டிய சூழல் இன்று வந்திருக்கிறது. விஜய்யின் குத்துப் பாட்டுக்கும், காற்றில் பறந்து அடிக்கும் ஹீரோயிசத்துக்கும் மட்டுமே விசிலடித்து வந்த ரசிகன் இப்போது தனது ஆதர்சன ஹீரோ விஜய் ஒரு போராட்டக்காரனாக ஆவதைக் காணும்போது தானும் மக்கள் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவனாக ஆகும் வாய்ப்பு ஒரு பத்து சதவீதம் இருந்தால் கூட அது ஒரு சமூக நன்மையே.

இப்படியாகவாவது மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்களே என்று நாம் லேசாக திருப்திப் பட்டுக்கொள்ளலாம் தான். அந்த வகையில் கத்தி ராஜபக்சேக்களும், லைக்காக்களும் தாங்களே தங்களுக்கு வைத்துக்கொண்ட ஆப்பு என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

Wednesday, April 9, 2014

கண்ணில்லாத குயில்கள் பாடும் 'குக்கூ'


தமிழில் ராஜபார்வை தொடங்கி காசி வரை எப்போதாவது வரும் பார்வையற்றவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட படங்கள் தோல்வியையே தழுவும் என்கிற மூடநம்பிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. தனது குக்கூ படத்தின் மூலம் அதை பொய்யாக்குவேன் என்று கிளம்பிய எழுத்தாளர் ராஜூ முருகன் ஓரளவிற்கு வெற்றி கண்டிருக்கிறார் என்று சொல்லலாம். தமிழில் படங்கள் நல்ல தரமாக இருந்தால் அதைப் பாராட்டும் நல்ல மீடியாக்கள் இருப்பதும், ரசிகர்கள் தியேட்டரில் போய் காசு கொடுத்து ஓடவைக்காவிட்டாலும் நல்ல படங்களை நல்ல படங்கள் என்பதால் அவற்றுக்குத் தரும் மதிப்பும் தமிழ் சினிமாவை நல்ல சினிமாக்கள் நிரம்பியதாக ஆக்கிவருகிறது ஒரு நல்ல அறிகுறியே.
இயக்குனர் ராஜூமுருகன் தான் விகடனில் நிரூபராக எழுதிவந்த காலத்தில் சந்தித்த பார்வையற்றவர்களான தமிழ்-சுதந்திரக்கொடியின் காதலை பற்றி கூறுவதாக கதை ஆரம்பிக்கிறது. தமிழ் (அட்டகத்தி தினேஷ் ) மின்சார ரயில்களில் பொருட்கள் விற்றும் மற்றும் பாட்டுக்கச்சேரிகளில் இளையராஜாவின் குரலில் பாடியும் வருபவர். அவர் மற்றொரு பார்வையற்றவரான சுதந்திரக்கொடியை (மாளவிகா நாயர்) சந்திக்கிறார். கொடி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தானே முயற்சி எடுத்து ஆசிரியை படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். அண்ணன்-அண்ணி இருந்தும் சுயநலமிக்க அவர்களுடன் வசிக்காமல் தனியாக சிஸ்டர்ஸ் ஹாஸ்டலில் வசிக்கிறார்.
இவர்களிருவரும் சந்தித்து, அது மோதலாகி, பின் காதலாக மலர்ந்து, வளர்ந்து, உறவினர்களின் சூழ்ந்திருப்பவர்களின் சூழ்ச்சிகளால் எவ்வாறு கலைக்கப்பட்டது? பின் கடைசியில் கண்ணுள்ளவர்களின் உலகில், இரக்கமுள்ளவர்களின் கைதூக்கல்களில், கண்ணில்லாத கொடியும் தமிழும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் கதைச் சுருக்கம். சுருக்கமாகச் சொன்னால் ஒரு எளிமையான காதல் கதை.
இது பார்வையற்ற இருவரின் காதல் கதை என்பதால் தான் இந்தக் கதை கவனிப்பு பெறுகிறது. அதற்கேற்றபடி பார்வையற்றோரின் உலகை ஓரளவிற்கு காட்சிப்படுத்த முயல்கிறார் இயக்குனர். பிங்க் நிறம் எப்படியிருக்கும். மார்க் போட்டதால் கோபப்படும் கொடியின் மீதான காதலை இன்னதென்று வரிகளில் விளக்கும் தினேஷ், கொடியின் காலடித் தடத்தையும், வாசனையையும் தூரத்திலிருந்தே  தினேஷ் உணர்வதான புனைவு, 'நீ எப்படி இருக்கேன்னு பாத்துக்கறேன்'என்று தொடு உணர்வுகளில் நபர்களை உணரும் அவர்களின் உலகம், காதலை எதிர்பார்த்துச் செல்லும் கொடிக்கு கிடைக்கும் அயர்ன்-செய்யப்பட்ட-ட்ரெஸ்கள் இரக்கம், இசை - இளையராஜா, மின்சார ரயில்களில் பார்வையற்றோர், திருநங்கை, பிச்சைக்காரர்களின் வாழ்க்கை, பார்வையற்றோரின் குசும்புகள், பேசும் வார்த்தைகள் என்று அவர்களின் உலகினுள் நம்மை எட்டிப் பார்க்க வைக்கிறார்.
யதார்த்தமான காட்சியமைப்புகளும், நாடகத்தன்மையற்ற நடிப்பும், பளிச்சென்ற வசனங்களும், எளிமையான காதலும் படத்தைவிட்டு ரசிகர்கள் விலகாமல் பார்த்துக் கொள்கின்றன. அட்டகத்தி தினேஷூம், புதுமுக நாயகியான கேரளாவைச் சேர்ந்த மாளவிகாவும் நடிப்பில் பிரமாதப் படுத்திவிடுகின்றனர். தினேஷின் அந்த முழியும், வசனங்களைப் பேசும்போது பார்வையற்றவர்கள் போலவே பேசுபவரை நோக்கிப் பேசாமல் காதைச் சாய்த்தபடி பேசுவது என்று சின்ன விஷயங்களிலிருந்து விரல் நுனியில் உணர்வுகளைப் பரிமாறுவது வரை அருமையாகச் செய்திருக்கிறார்கள். இளையராஜா வெறியர், நாடகக் குழு உறுப்பினர்கள், தினேஷின் நண்பன், கொடியின் நண்பிகள், அண்ணன், உதவி செய்பவர்கள் என்று எல்லோரும் சரியாகவே நடித்திருக்கிறார்கள். இயக்குனருக்கும் இவர்களை நடிக்க வைத்ததில் பெரும்பங்குண்டு.
படம் யதார்த்த படங்களின் சாயலைக் கொண்டிருப்பது படத்தின் கதைக் களத்திற்கு அவசியமானதென்பதால் யதார்த்த ஒளியமைப்பு கொண்ட ஒளிப்பதிவு படத்திற்கு பலமாய் நிற்கிறது. ஒளிப்பதிவு ஷர்மா. இயக்குனரோடு இணைந்து அவருடைய உணர்வுகளை சரியாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார். அடுத்த பலம் சந்தோஷ் நாராயணின் இசை. பாடல்களும் அவற்றை படமாக்கிய விதமும் தமிழ்-கொடியின் காதலை ரசிகர்கள் மனத்தில் அச்சேற்ற உதவுகின்றன. பிண்ணணி இசையில் இசைஞானி ராஜாவுக்கும் சேர்த்து டைட்டில் கார்டு போடலாம் என்கிற அளவுக்கு படம் முழுக்க இளையராஜாவின் பாடல்கள் வியாபிக்கின்றன. தமிழ் இளையராஜாவின் குரலில் பாடுபவர் என்று வைத்திருப்பதும் பார்வையற்றோருக்கும் - இசைக்கும் - இளையராஜாவுக்குமிடையேயான உறவை பதியவைக்கும் நோக்கத்தில் கையாளப்பட்ட ஒரு உத்தியே. இந்த உத்தி படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.
படம் நன்றாக இருக்கிறது என்பதைத் தாண்டி ஒரு க்ளாசிக்காக மாறுவதற்கான வாய்ப்பை தவறவிட்டுவிட்டது என்பதை நாம் கூறித்தான் ஆகவேண்டும். பிற்பாதியில் சொல்லப்பட்ட கதை வலிந்து சொல்லப்பட்ட புனைவாக, வலுவில்லாததாகத் தென்படுகிறதேயன்றி அழுத்தமானதாக இல்லை(விக்ரம் நடித்த காசியில் கதையின் முடிவில் அப்படியொரு அழுத்தம் இருக்கும்). முற்பாதியில் கதையில் இருந்த தெளிவும் முதிர்ச்சியும் பிற்பாதியில் இல்லை. பார்வையற்றவர்களின் உலகின் காதல் உணர்வுகளுக்குள் தானும் பயணித்த இயக்குனர் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குள் ஊடுருவிப் பயணிக்காமல் போனதால் இது ஏற்பட்டிருக்கலாம். அது போல க்ளைமாக்ஸ், ஆன்ட்டி க்ளைமாக்ஸ் என்று திரும்பித் திரும்பி எங்கோ அலைய வேண்டிய தேவை சுவையானதொரு திரைக்கதை அமைந்திருந்தால் ஏற்பட்டிருக்காது. படம் முடிவு தெரிந்துவிட்ட பின் காதலர்கள் படும் துன்பத்தை மூன்றாம் பிறை ஸ்டைலில் சொல்ல முனைந்ததும் படத்துக்கு தொய்வையே தருகின்றன. படம் முடியும்போது அப்பாடா நல்லவேளை சொதப்பிவிடவில்லை என்று நாம் ஆறுதலடைகிறோம். ஆனாலும் ராஜூமுருகன் நி்ச்சயம் அடுத்த படத்தில் நம்மை நெகிழ்த்திவிடுவார் என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறார்.
மொத்தத்தில் இந்தக் கண்ணில்லாத குயில்களின் காதல் ராகம் எப்போதும் நெஞ்சுக்குள்ளேயே நிற்கும் தெய்வீக ராகமாக இல்லாமல், அமைதியான ஒரு காலை வேளையில் எழுந்தவுடன் கேட்கும் இனிமையான குயில்களின் ராகமாக ஆனதோடு மட்டுமே நின்றுவிட்டது. அதனாலென்ன ? குயில்களின் ராகமும் இனிமையானதுதானே !