Thursday, March 7, 2013

ஹியூகோ சாவேஸ் - ஒரு மக்கள் தலைவனின் மரணம்


வெனிசூலா. தென்னமெரிக்காவின் வடக்குக் கடற்கரையில் இருக்கும் 3 கோடி மக்கள் கொண்ட ஒரு சிறிய நாடு. எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டை வல்லரசுகளான அமெரிக்காவும், இங்கிலாந்தும் கபளீகரம் செய்ய தங்கள் நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலம் முயன்ற காலத்தில் அதை தடுத்து நிறுத்தி தன் நாட்டின் எண்ணெய் வளங்களைக் காப்பாற்றி, அரசுடைமையாக்கி, அதன் வருமானம் முழுதும் தனது நாட்டு மக்களுக்கே போய்ச் சேரும்படிச் செய்தவர் தான் அதிபர் ஹியூகோ சாவேஸ். 58ஏ வயதான சாவேஸ், செவ்வாய் அன்று வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோயால் மரணமடைந்தார்.

ராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்த சாவேஸ் 1992ல் அப்போதைய அதிபர் கார்லோஸை கவிழ்க்க முயற்சி செய்து அது தோல்வியில் முடிய கைது செய்யப்படுகிறார். பின்பு இரண்டு வருடங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர் சமூக ஜனநாயக கட்சியை ஆரம்பித்து 1998ல் வெனிசுலாவின் அதிபரானார். அதன் பின் தொடர்ந்து நான்கு முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசியாக கடந்த 2012 டிசம்பரில் நடந்த தேர்தலில் கூட அவர் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது உடல் நலம் குன்றிய நிலையில் பதிவி ஏற்காமலேயே மரணமடைந்தார்.

நமக்கு சாவேஸ் யார்?  நாம் ஏன் அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும் ? இதற்கு பதில் அவர் ஜனாதிபதியாக வெனிசுலா மக்களுக்கு என்ன செய்தார் என்பதைப் பார்த்தால் தெரிந்துவிடும்.

வெனிசூலாவில் இருந்த பன்னாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை (அதாங்க நம்ப ஊர்ல ரிலையன்ஸ், ஷெல், மொபில் போன்ற கம்பெனிகளை) அரசுடைமையாக்கினார். அதனால் என்ன லாபம்? ரிலையன்ஸ் கம்பெனியின் எண்ணெய் வருமானம் பூராவும் அம்பானியின் பாக்கெட்டுக்குப் போகாமல் அரசுக்குப் போய்விடும் இல்லையா அது போல அங்கு எண்ணெய் வருமானங்கள் அனைத்தும் அரசுக்கே போய்ச் சேர்ந்தன. அந்தப் பணத்தை வைத்து குழந்தைகளுக்கு மூன்று வேளை சத்துணவுத் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவம், குடும்பத்துக்கு உழைக்கும் பெண்களுக்கும் ஓய்வூதியம்-பென்சன் என்று பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்தார்.

வெனிசூலாவில் வாண்டையார் பரம்பரைகள் போல் பல்லாயிரம் ஏக்கர்கள் வைத்து ராஜாவாகத் திரிந்த பிரபுக்களை சரிக்கட்டி அவர்கள் நிலத்தை விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்து கூட்டுறவு விவசாயத்தை உருவாக்கினார். கூட்டுறவு விவசாயம் வந்தால் என்ன ஆகும் ? விவசாயம் பெருகும். விளைபொருட்கள் பெருகும். உணவுக்கு அடுத்த நாட்டை நாடவேண்டிய அவசியம் வராது. கிராமங்கள் செழிப்பாக இருக்கும். விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்ள மாட்டார்கள்.

அமெரிக்காவின் ஏகபோக நிறுவனங்களையும், அமெரிக்காவின் ஆதிக்கப் போக்கையும் வெளிப்படையாகவே சாடி வந்தார். ஆனாலும் அவரது நாட்டு எண்ணெய்யின் பெரும்பகுதியை அமெரிக்காவுக்கே விற்கும்படி நேரிட்டதால், அமெரிக்காவை முற்றிலும் ஒதுக்கிவிட முடியவில்லை. அதற்காகவே ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் சேர்ந்து புதிய எண்ணெய் வர்த்தக திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் போய்ச் சேர்ந்துவிட்டார்.

கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நல்ல நண்பர். ஏதோ செத்தாரு எங்கள வுடுய்யா என்று நீங்கள் மனத்துள் பேசுவது கேட்கிறது. உலக வரைபடத்தில் அமெரிக்காவையும் அதன் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியையும் எதிர்த்து நின்று நாட்டின் பொருளாதாரம் மக்களையே போய்ச் சேரவேண்டும் என்று நினைக்கும் மிக மிகச் சில தலைவர்களில் சாவேஸூம் ஒருவர். சாவேஸின் மரணம் அப்படி ஒரு அமெரிக்க எதிர்ப்பாளத் தலைவரை நாம் இழக்க வைத்து விட்டது. நம்ம ஊர் போனியா, போன்மோகன்சிங், போரணாப்போகர்ஜி போன்றவர்களைப் பார்த்தே பழகிய நமக்கு இவர் இங்கிருந்தால் அண்ணா, பெரியார் ரேஞ்சுக்கு உயரே வைத்து போற்றப்படும் தலவைராக இருந்திருப்பார் என்பது புரிய வாய்ப்பு மிகவும் குறைவு.

அவர் ஒரு சிறந்த சோஸலிஸ்ட். அவருடைய முறைகள் இடது சிந்தனைகளையொட்டி இருந்தாலும் இடது சாரிகள் போல புரட்சி என்று வெளிப்படையாக உலகளாவியம்(Globalisation) போன்ற விஷயங்களை அவர் எதிர்க்கவில்லை. ஜனநாயக வழியிலேயே நாட்டைச் சீர்திருத்த முடியும் என்று நம்பினார். அவருடைய புதிய வழிமுறைக்கு பொலிவியனிசம் என்று பெயரும் சூட்டினார். அதன்படி வெனிசுலாவை அதன் மக்களை சமவாழ்வு மற்றும் தன்னிறைவு அடையச் செய்ய செயல்பட ஆரம்பித்திருந்தார். அதற்கு இன்னும் ஒரு 40 ஆண்டுகளாவது ஆகும் தான். ஆனால் அதற்குள்ளேயே இறந்து விட்டார்.

அவரே ஒரு முறை குற்றம் சாட்டியது போல அவருக்கு கேன்ஸர் வரும்படி செய்யவே ஏதோ வல்லரசு நாடுகள் சேர்ந்து ரகசியமாகத் திட்டம் நிறைவேற்றினர் என்றெல்லாம் கதைகள் உண்டு. அமெரிக்காவின் எதிரி அழிப்பு முறைகள் பலவிதம். பறக்கும் விமானங்கள் வெடித்து அதிபர்கள் இறப்பது, திடீரென்று முளைக்கும் புரட்சிப் படை லிபியாவில் கடாபியைக் கொன்றது போல தலைவர்களைக் கொல்வது இன்னொரு முறை, அல்லது நாட்டின் உள் அரசியலைப் பயன்படுத்தி உள்நாட்டு புரட்சி அமைப்புகளின் வழியாக வெடிவைத்துக் கொல்வது (நம் ராஜீவ் காந்தி போல) என்று பலவிதங்கள் உண்டு. அதில் இப்படி நோய்க்கிருமிகளை செலுத்தி தலைவர்களை சீக்கிரம் மேலே அனுப்புவது புது வழியாக இருக்கலாம். ஏற்கனவே சிஐஏ அவரைக் கவிழ்க்க முயற்சி செய்து தோற்றும் போயிருக்கிறது. ஆனால் மரணத்தின் குறி தப்பாததல்லவா?

சாவேஸ் போன்ற அற்புதமான மனித நேயமிக்க, மக்களின் வாழ்வு சிறக்கவேண்டும் என்று பாடுபட்ட தலைவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. புதிதாக அப்படிப்பட்ட நல்ல மனிதர்களை தலைவராக வர எந்த நாட்டின் ஆளும் வர்க்கமும் அனுமதித்துவிடுவதும் இல்லை.

உலகின் எதிர்காலம் படிப்படியாக மங்கிக் கொண்டே இருக்கிறது.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மான நாடகம் - இந்தியா தயக்கத்துடன் ஆதரித்தது



ஐ.நா.வில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் 24 ஆதரவு ஓட்டுக்களும், 15 எதிர் ஓட்டுக்களும் பெற்று வெற்றி பெற்றது (உடனே சந்தோஷப்பட்டுக்காதீங்க). 8 நாடுகள் எங்களுக்கு ஓட்டுப் போட இஷ்டமில்லைன்னுட்டு கழன்று கொண்டன. தீர்மானத்துக்கு ஆதரவாக(இலங்கைக்கு எதிராக) ஓட்டுப் போட்ட
அமெரிக்கா, இத்தாலி, மெக்ஸிகோ, ஆஸ்திரியா, நார்வே, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ரோமானியா, உள்ளிட்ட 24 நாடுகளுடன் கடைசிவரை இங்கிட்டா அங்கிட்டா என்று எந்தப் பக்கம் தாவுவது என்று பயங்கரமாக யோசித்து கடைசி வினாடியில் இந்தியாவும் சேர்ந்து கொண்டது. தீர்மானத்தை எதிர்த்த 15 நாடுகளில் சீனா, ரஷ்யா, கியூபா (இதுதான்டா கம்யூனிசம்), பங்களாதேஷ், தாய்லாந்து, சவூதி அரேபியா, க்வைத், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகள் அடக்கம்.

அப்பாடா இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தாச்சீ (சிங்கம் களமிறங்கிடுச்சீ..) இனி ராஜபக்சேல இருந்து கோத்தாபய(முன்னாடி 'ங்' சேக்கலைங்க) ராஜபக்சே வரை எல்லாருக்கும் தூக்குத் தண்டனை நிச்சயம்னு  நாம் நீதி கிடைச்ச சந்தோஷத்துல துள்ளிக் குதிக்க ஏதுமில்லை என்பது தான் உண்மை. இதைப் புரிஞ்சிக்கணும்னா கொஞ்சம் போனவருஷத்துக் கதையை ரீவைண்ட் பண்ணிப் பார்க்கனும்.

ஈழத்துல போர் நடந்தப்பவே அமெரிக்காவுல இருந்து சீனாவுல இருந்து இந்தியா வரைக்கும் எல்லோருக்கும் தெரிஞ்ச உண்மை என்னான்னா "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற சொல்லாடல்ல கதை கட்டி இந்த உலகமயமாக்கல் காலத்துலயும் தனித்து திறமையா போராட முடிஞ்ச உலகின் சக்தி வாய்ந்த புரட்சி இயக்கமாக (அதாவது தீவிரவாத இயக்கமா) மாறிட்டு இருந்த விடுதலைப் புலிகளை 'கதம் கதம்' பண்றது தான் எல்லா அரசுகளும் ஒன்று சேர்ந்த மையப் புள்ளி என்பது.  போராளிகளின் கதையை பூண்டோடு முடித்த  இலங்கை வெறும் அம்பு மட்டுமே. வில் சீனாவாக, அமெரிக்காவாக, இந்தியாவாகத் தானிருந்தது.

2009ல் மே மாதம் 17ம் தேதி போர் முடிஞ்சதும் ஐ.நா. பத்து நாட்கள் கழித்து 27ம் தேதியில் கொண்டு வந்த ஒரு தீர்மானம் விடுதலைப் புலிகளை ஒழித்ததற்காக இலங்கை அரசை பாராட்டியும், விடுதலைப் புலிகள் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தது போன்று மகாக் கொடிய பாபங்களைச்(?) செய்ததால் அவர்களை கண்டித்தும் ஓரு தீர்மானம் நிறைவேற்றியது.  மனித உரிமை மீறல்கள் பற்றி அந்த மனித உரிமைகள் கமிஷன் கண்டுக்கவேயில்லை. தீர்மானத்தை(இலங்கையை) 29 நாடுகள் ஆதரித்தன. 12 நாடுகள் எதிர்த்தன.

ஜூன் 2010ல் பான்-கி-மூன், இலங்கைல என்னதான் நடந்துச்சுன்னு ஆராய்ஞ்சு ஒரு ரிப்போர்ட் தாங்க பாக்கலாம்னு ஒரு மூன்று பேரை நியமிக்கிறார். அவங்களும் கிளம்பி இலங்கைக்கு வந்து நல்லா ராஜபக்சே வீட்ல விருந்தெல்லாம் சாப்டுட்டு திரும்பப் போய் நிறைய மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கிறது வாஸ்தவம் தான். ஆனால் அதுல விடுதலைப் புலிகளுக்கும் பங்குன்னுட்டு போய்ட்டாங்க. இப்படி இலங்கையை ரொம்ப காட்டிக்கொடுக்காத அந்த ரிப்போர்ட்டே கதிகலங்க வைக்கிற உண்மைகளோட இருந்துச்சா, உடனே பான்-பராக்-மூன் ... சாரி... பான்-கி-மூன் அந்த அறிக்கையை தூக்கி குப்பைத் தொட்டில போட்டுட்டார் செல்லாது செல்லாதுன்னுட்டு.

அதுக்கப்புறமா போனாப் போவுதுன்னு இலங்கைக்கு எதிரான விஷயங்களை இன்னும் குறைச்சிட்டு 2011ல் அந்த அறிக்கையை வெளியிட்டாங்க. அதுல ஐ.நா.க்காரங்க சொன்ன தீர்வு தான் ரொம்ப வினோதமானது. "கொன்னது நீங்களே(இலங்கை).. எனவே நீங்களே ஒரு கமிஷன் 'கத்துக்கிட்ட பாடங்களும்' மறுசீரமைப்பும்ன்ற பேர்ல (LLRC - பேர்ல இருந்தே தெரியுது ஐ.நா. விடுதலைப்புலிகளைக் கொன்னது சரிதான்னு நினைக்கிறது..) ஆரம்பிச்சி விசாரிச்சி நீங்களே தீர்ப்பும் குடுத்துக்கோங்க.."ன்னுட்டாங்க, அதாவது கையும் களவுமா பிடிபட்ட திருடன் கிட்ட போலீஸ்காரன் திருட்டுப் பயலே உன்னைப் பிடிச்சிட்டேன், அதனாலே இப்போ உன்னை நீயே தண்டிச்சுக்கோன்னு சொல்லிட்டு போனா மாதிரி... ஏன்னா ஐ.நா.க்காரவுக ரொம்ப ஸ்ட்ரிக்டாம் அடுத்த நாட்டோட 'இறையாண்மை'ல நுழைய மாட்டாங்களாம். அமெரிக்கா ஈராக்கிலும், இந்தியா காஷ்மீரிலும், சீனா பர்மாவிலும் என்னா பண்றாங்களாம் ?

இதுக்கே ஏதோ பதிவிரதையோட விரல் நகத்தை அன்னிய ஆடவன் தொட்டுட்ட மாதிரி குய்யோ முறையோன்னு ராஜபக்சேக்கள் கத்தி எங்களைத் தொடாதே.. தொட்டா என்ன ஆகும் தெரியுமான்னு சவால்லாம் விட்டு, அதை இந்தியா போய் தாஜா பண்ணின்னு காமெடியா நடந்திருக்கு. அத்தோட இன்னொரு காமெடியா இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதும். இந்தத் தீர்மான வெற்றியானதால் என்ன நடக்கும் ?

ஒன்னும் நடக்காது. இலங்கை தான் நியமிச்ச LLRCயின் செயல்பாடுகளையும், பரிந்துரைகளையும் உடனே  செயல்படுத்த வேண்டும். இது தான் இந்தத் தீர்மானத்தின் வெற்றி வலியுறுத்துவது. (எனக்குத் தெரிஞ்சு LLRCயோட பரிந்துரையெல்லாம், மொத்தமா கொன்னா ஒழுங்கா புதைக்கனும்.. பெரிய தலைங்கலைக் கொன்னா, ரேப் பண்ணி கொன்னா உடனே தடயமில்லாம எரிக்கனும்... அப்படின்ற ரேஞ்சுக்கு தான் இருந்தது).

இதுக்கு ஒரு ஓட்டுப் போடச் சொன்னா ஒருத்தர் "இலங்கை நமக்கு எதிரி நாடில்லை மாறாக நட்பு நாடு"ன்னு பார்லிமண்ட்ல இழுக்கிறார். இன்னொருத்தர் பறந்து போய் ராஜபக்சாவைப் பார்க்கிறார் "பதறாதீங்க ராஜபக்ஷே நாங்க இருக்கோம் சப்போர்ட்டுன்னு காதில ஓதிட்டு வர்றார்". இன்னொருத்தார் 'அவங்க நாட்டு உள்விவகாரத்துல நாம தலையிட முடியாது(திருட்டுத் தனமா எட்டி மட்டும் பார்ப்பாங்க போல)' ன்னு மக்களுக்கு புத்திமதி சொல்ல ஆரம்பிக்க, கடைசியில் பாலச்சந்திரனின் கொலையான வீடியோவைப் பார்த்து தமிழகம் கொதிக்க, இன்று கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்கிற 50 வயதானவர் 'ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளி என அறிவிக்க வலியுறுத்தி'தீக்குளித்துவிட்டார். இந்தியா-சோனியா அந்த அளவுக்கு ராஜபக்சேவுக்கு ஸ்ட்ராங் சப்போர்ட்டு.

தமிழகம் நன்றாக தூக்கத்திலும், தொலைக்காட்சி மயக்கத்திலும் இன்னும் வாழ்ந்து வருகிறது.  பாலச்சந்திரன் மரணத்தில் திடீரென்று அது கொதித்து எழுந்ததைக் கண்டு பதறி தமிழர்களை கூல் பண்ணுவதற்காக போடப்பட்ட சந்தர்ப்பவாத ஓட்டே  இந்த இந்தியாவின் ஆதரவு ஓட்டு.

இப்போது சொல்லுங்கள் தீர்மானம் ஐ.நாவில் வெற்றி பெற்றதால் யாருடைய வாழ்வாவது திரும்பக் கிடைக்குமா என்று, இல்லை. ஒருபோதும் இல்லை.