Friday, November 23, 2012

தெய்வநாயகம் என்கிற மனிதநேய மருத்துவர்

பிரபல நெஞ்சு நோய் நிபுணரும், அமைதி இயக்கம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தவருமான டாக்டர் சி.என். தெய்வ நாயகம் அவர்கள் கடந்த திங்களன்று காலமானார். அவருக்கு வயது 70.

தெய்வநாயகம் அவர்களை சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு தண்டுவடத்தில் டி.பி. நோய் தாக்கி நடக்க இயலாமல் போனபோது,

அவருக்காக சரியான மருத்துவர்களைத் தேடியலைந்த போது தான் முதன்முதலாய் சந்தித்தேன்.

மிகப் பெரிய மருத்துவ பதவிகளை வகித்த அவர் வெறும் 50 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு தனது சேவை அமைப்பின் க்ளினிக்கில் அம்பாசடர் பல்லவா ஹோட்டல் அருகில் இருந்த கட்டிடத்தில் இலவசமாக மருத்துவம் செய்து கொண்டிருந்தார்.

அவர் நினைத்தால் அவருக்கு லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க பெரிய பணக்கார நோயாளிகள் கூட்டம் இருக்கிறது. ஆனாலும் அவர் சேவை செய்வதையே விரும்பினார். பணக்காரர்களும் கார் போட்டுக் கொண்டு, விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து அங்கு வந்து காத்து நிற்பார்கள். அவர்களுக்கும் அதே 50 ரூபாய் தான்.

இந்த 50 ரூபாயும் வெறும் பதிவுக் கட்டணமே. அதற்குப் பின்னர் எத்தனை முறை நீங்கள் சென்றாலும் இலவசமாகத் தான் பார்ப்பார்.

1942, நவம்பர் 15ல் பிறந்த தெய்வநாயகம், சென்னை மருத்துவக் கல்லூரியில் 1965ல் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் 18 மாதங்கள் பயிற்சி பெற்றார். FRCS பட்டமும் பெற்றார். அவர் உலக அளவில் புகழ் பெற்ற எடின்பர்க்கில் உள்ள ராயல் ஸ்கூல் ஆப் பிசிசியன்ஸ் (Royal School of physicians)ல் உறுப்பினராவார். பிரிட்டனின் மருத்துவ ஆய்வுக் கவுன்சிலில் ஆய்வு அதிகாரியாகவும் இருந்தார்.

1970 முதல் 2000 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சு நோய்த் துறையின் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இந்திய நெஞ்சு நோய் கழகம் என்கிற அமைப்பையும் லங் இந்தியா என்கிற இதழையும் நடத்தி வந்தார்.

சென்னை மருத்துவமனையில் கடுமையான எதிர்ப்பை மீறி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் பிரிவை உண்டாக்கினார்.
மருத்துவத்தில் அவருடைய முக்கிய பங்கு அல்லோபதி மருத்துவத்துடன் நமது நாட்டின் பாரம்பரிய சித்த மருத்துவத்தையும் கலந்து வெற்றிகரமாகப் பயன்படுத்தியதாகும். இதற்காக எம்.பி.பி.எஸ் மருத்துவரான அவர் சித்த மருத்துவப் படிப்பையும் படித்துத் தேர்ந்தார்.

சென்னை சானேட்டோரியத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சித்த மருந்து ஆய்வு ஒன்றைச் செய்தார். அதில் சுமார் 80 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சித்த மருந்தான ரஸகந்தி மெழுகு எவ்வாறு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ந்ததில் 90 சதவீத நோயாளிகள் நோயின் கடுமையிலிருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பினர். அவர்கள் எல்லோரும் வாழ்நாள் முழுதும் அந்த மருந்தை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். மற்றபடி சாதாரணமாக வாழ ஆரம்பிக்கலாம். நோய் அவர்களை கொல்வதிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.

தனது கண்டுபிடிப்புக்களை ஐ.நாவில் இருக்கும் மருத்துவ அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் சென்று சமர்ப்பித்தார். எல்லோரும் சித்தமருத்துவத்தை வியந்து பார்க்க வைத்தார். வழக்கம் போல நமது அரசின் தொடர் உதவிகள் இல்லாததில் அந்த முயற்சியை மேலும் பரவலாக்கி நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியாமல் போனது.

அவரது சித்த மருத்துவ சேவையினால் அவர் தேசிய சித்த மருத்துவக் கவுன்சிலின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகக் கண்டிப்பாகவும், கறாராகவும் பேசக் கூடியவர். எளிமையாக வேட்டி, சட்டை அல்லது குர்த்தா அணிந்திருப்பார். செயின் இணைக்கப்பட்ட கண்ணாடி அணிந்திருப்பார்.

நடக்க இயலாமல் போன எனது நண்பரை ஆட்டோவில் வைத்துக் கூட்டிப் போய் அவரை அலேக்காகத் தூக்கிச் சென்று அவரது க்ளினிக்கில் பெஞ்ச்சில் படுக்க வைத்திருந்தோம். நண்பரின் முறை வந்ததும் மிக சகஜமாகப் பேசி அவரது ஸ்கேன் மற்றும் அனைத்து ரிப்போர்ட்களையும் ஒரு முறை பார்த்தார்.

பின்பு தனது பரிசோதனையின் மூலம் கால் செயலிலழந்து போனதை பரிசோதித்தார். பரிசோதித்து விட்டு சர்வ சாதாரணமாகச் சொன்னார். 'டி.பி. கட்டி ஸ்பைனல் கார்டுல இருந்து போகிற நரம்புகளை அழுத்திட்டு சில எலும்புகளை அரிச்சுட்டு இருக்கு. சரிபண்ணிடலாம்.'

நடக்கவே இயலாது எனக் கைவிடப்பட்ட எனது நண்பர் அவரது அல்லோபதி மற்றும் சித்த மருத்துவ முறையால் ஒரு வருடத்தில் திரும்பவும் எழுந்து நடந்தார். அதற்குப் பின் நிறைய பேரை அவரிடம் போய்ப் பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறேன்.

மக்கள் டி.வியில் தினமும் மக்களின் மருத்துவ கேள்விகளுக்கு பதில் சொல்லும் தொடரை நடத்தி வந்தார். இயற்கை உணவு மற்றும் மருந்துகளையும், பக்க விளைவுகளில்லாத சித்த மருந்துகள் பற்றியும் விரிவாக சாதாரண மக்களுக்கும் புரியும்படி விளக்குவார்.

அவர் வாழ்க்கையில் நடந்ததாக பின்வரும் நிகழ்வைச் சொல்வார்கள். அவர் மிகச்சிறந்த மருத்துவ நிபுணராக அறியப்பட்ட காலம் அது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் வெங்கட்ராமன்.

ஒரு நாள் காலை தெய்வநாயகம் அவர்களின் க்ளினிக்கிற்கு அரசு மாளிகைக் கார் வந்து நிற்கிறது. க்ளினிக்கில் சில பேஷண்ட்டுகள் இருக்கிறார்கள்.

அவசரமாக காரில் வந்த அதிகாரி ஒருவர் வெங்கட்ராமன் அவர்களுக்கு உடல் நிலை சிறிது சரியில்லை எனவும் உடனே மருத்துவரை அழைத்து வர கார் அனுப்பினார்கள் என்றும் சொன்னார்.

அதற்குப் பதிலளித்த தெய்வநாயகம், தனது பேஷண்ட்டுகளை சிறிது நேரத்தில் பார்த்து முடித்துவிட்டு உடனே வருவதாகக் கூறினார். அதிகாரியோ குடியரசுத் தலைவர் விஷயம் நீங்கள் எல்லாவற்றையும் போட்டுவிட்டு உடனே வந்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்.

"ஐயா, உங்களது குடியரசுத் தலைவருக்கு உடல் நலமில்லை என்றாலும் தலை போகும் அவசரமில்லை. இதோ எனது பேஷண்ட் வயிற்று வலி என்று துடித்துக் கொண்டிருக்கிறார். இவரை கவனித்து விட்டுத் தான் என்னால் வரமுடியும்" என்று உறுதியாகக் கூறி தனது பேஷண்ட்களை கவனித்து அனுப்பி விட்டே வெங்கட்ராமனைச் சென்று கவனித்தார்.

டாக்டர் தெய்வநாயகம் போன்ற மனித நேயம் நிரம்பிய மனிதர்கள் மருத்துவர்களாய் இருந்த காலம் போய் மணிக்கு ஒரு ஆப்பரேஷன் என்று கல்லா கட்டும் மருத்துவர்களே பெருகியிருக்கிறார்கள்.

சித்த மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் கலந்து செய்ததன் மூலம் சித்த மருத்துவத்துக்கும் அங்கீகாரம் பெற்றுத் தந்த அந்த நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மூன்று மகள்களுக்கும் மற்றும் குடும்பத்தினர், அமைதி இயக்கத்தினர் எல்லோருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, September 21, 2012

கூடங்குளம்: சி.பி.எம்மின் புரட்சி! அறிஞர் அ.மார்க்ஸின் மகிழ்ச்சி!!

சி.பி.எம்-மின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் “இறக்குமதி அணு உலைகள் ஆகாது பாதுகாப்பில் சமரசம் கூடாது” என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். முதலில் இந்தக்கட்டுரையை அவர் ஏன் எழுதினார்? கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் சி.பி.எம் கட்சி மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூர் திட்டத்தை மட்டும்  ஏன் எதிர்க்கிறது என்ற கேள்விக்குத்தான் இந்த பதில். அதாவது சி.பி.எம்மின் இரட்டை வேடத்தை அல்லது டபுள் ஆக்டிங் சரிதான் என்பதே காரத்தின் பதில்.

காரத் எழுதிய இந்த வழா வழா கொழா கொழா கட்டுரையின் சாரம் என்ன? அல்லது ஏற்கனவே சி.பி.எம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை இந்தக் கட்டுரை மறுக்கின்றதா அல்லது ஆதரிக்கின்றதா? நிச்சயமாக ஆதரிக்கவே செய்கிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்திற்கு முன்பேயே ரசியாவிடமிருந்து இரண்டு அணு உலைகள் வாங்கப்பட்டு 15,000 கோடி ரூபாய் செலவில் கூடங்குளத்தில் கட்டப்பட்டு விட்டதால் அதை மூடுவது சாத்தியமானது அல்ல என்பதோடு நாட்டு நலனிற்கும் உகந்தது இல்லையாம்.

இதைத் தவிர்த்த மற்ற அணு உலைகள் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு வந்தவையாம். இந்திய சுதேசி அணு உலைகளை விட இவை மிகுந்த செலவு பிடிப்பவையாம். அதனால் அமெரிக்க, ஐரோப்பாவிலிருந்து இறக்குமடி செய்யப்பட்ட அணு உலைகளை சி.பி.எம் கட்சி எதிர்க்கிறதாம். சரி, இதன்படி இந்த ஐரோப்பாவின் மேப்பில் ரசியா வராது போலும். மேலும் இத்தகைய அணு உலைகளின் பாதுகாப்பும் பிரச்சினையாம். அதாவது ஒரு இடத்தில் இரண்டு உலைகள் இருந்தால் பிரச்சினை அல்ல, நான்கு, ஆறு என்று இருந்தால் பிரச்சினை என்பதை காரத் சுற்றி வளைத்து கூறுகிறார். இதற்கு ஆதாரமாய் புகுஷிமா வில் ஆறு உலைகள் இருந்ததை காரத் கண்டுபிடித்துக் கூறுகிறார்.

புகுஷிமா விபத்திற்குப் பிறகு அணு உலைகள் குறித்த மக்களின் அச்சம் அதிகரித்திருக்கிறதாம். இதை நிவர்த்தி செய்யுமாறு சுயேச்சையான நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்து அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டுமாம். பாதுகாப்பு தொடர்பான அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தில் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அரசு தெளிவு படுத்தி அதையும் மக்கள் முன் வைக்க வேண்டுமாம்.

அணுமின் நிலையங்களை ஆதரிக்கும் அப்துல் கலாம் உள்ளிட்டு பலரும் காரத் பேசுவதைப் போலத்தான் பேசுகின்றனர். மக்களின் அச்சத்தை போக்குவது என்ற போர்வையில்தான் கூடங்குளம் அணுமின்நிலைய அனுமதியும், துவக்கமும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இதையெல்லாம் செய்து விட்டால் அணுமின்நிலையங்களை சேமமாக நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் காரத் மற்றும் அவரது கட்சியின் நிலைப்பாடு.

தந்திரமான மொழியிலும், விவாதத்திலும் மறைந்து கொண்டாலும் காரத்தின் சந்தர்ப்பவாதம் இங்கே பட்டவர்த்தனமாக காட்டிக் கொள்ளவே செய்கிறது. இந்தியாவின் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களது பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காகவே இங்கு அணுமின்நிலையங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அமெரிக்கா முதல் ஆதாயம் அடைகிறது என்றால் பிரான்ஸ், ரசியா அடுத்தடுத்து ஆதாயம் அடைகின்றன. இதில் ஒன்றை எதிர்த்து விட்டு பிறிதொன்றை ஆதரிப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

மேலும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் என்று என்.ஜி.ஓ மொழியில் விளக்கமளிப்பது சி.பி.எம்மின் மறைமுக ஆளும் வர்க்க சேவையையே குறிக்கிறது. ஒரு வேளை போராடும் மக்கள் அப்படித்தான் அதை புரிந்து கொண்டு எதிர்த்தாலும் அதை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்துக் கொண்டு செல்வது நமது  கடமை. மேலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பது என்பது இந்திய அரசையே எதிர்ப்பதாக கருதப்பட்டு அங்கு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை ஒரு பகுதியின் பொருளாதார பிரச்சினையாக சுருக்கி பார்ப்பதன் மூலம் சி.பி.எம் கட்சி தனது மறைமுக இந்திய முதலாளிகளது சேவையை தொடர்கிறது.

அடுத்து கூடங்குளம் திட்டம் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு முன்பேயே வந்தாலும் அது முற்றிலும் தற்போதைய அமெரிக்க ஒப்பந்த்தத்தின் ஷரத்துக்களின் படியே அமல்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமானது விபத்து ஏற்பட்டால் அணுஉலைகளை அளித்த நாடுகள் நிவாரணம் வழங்கத் தேவையில்லை என்பது. இதை காரத் குறிப்பிட்டாலும் பெரிய மனதுடன் இரண்டு உலைகளை அங்கே செயல்படலாம் என்று அனுமதிக்கிறார். அங்கு கூடுதலாக வரும் இரண்டு உலைகளை மட்டும் அவரது கட்சி எதிர்க்குமாம்.

கூடங்குளம் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அது இதர அணு உலை எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்குமென்பதால்தான் இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அதை அடக்க முனைகிறது. இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட காரத்திற்கு அறிவு இல்லை என்பதல்ல, அவரது சந்தர்ப்பவாதம் இங்கே உண்மைகளை கொன்று விடுகிறது.

இதற்கு மேல் நிறைய செலவு செய்து விட்டார்கள் என்று கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிப்பதை இப்படியும் சொல்லலாம். அதாவது முதலாளித்துவம் இதுவரை செலவழித்து உருவாக்கியிருக்கும் பல கோடி பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கைப்பற்றி சோசலிச சமூகத்தை படைக்கும் புரட்சி கூட நாட்டு நலனுக்கு உகந்தது அல்லதான். அதனால்தான் சி.பி.எம் கட்சி புரட்சியிலிருந்து விலகி மனமகிழ் மன்றமாக மாறிவிட்டது போலும்.

அதே நேரம் காரத்தின் இந்தக் கட்டுரை அறிஞர் அ.மார்க்சை குஷிப்படுத்தியிருக்கிறது. முகநூலில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கும் அ.மா அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

   

 ” மக்கள் திரளைச் சார்ந்து இயங்கும் ஒரு கட்சி இப்படியான ஒரு கருத்தியல் மாற்றத்தையும், அதனடிப்படையில் ஒரு நிலைபாட்டு மாற்றத்தையும் மேற்கொள்வது கேலிக்குரியதோ, இழிவானதோ அல்ல. மக்களைத் திரட்டுவது குறித்துக் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்களுக்கு வேண்டுமானால் தாங்கள் கொள்கை மாற்றம் இல்லாமல் என்றோ உருவாக்கப்பட்ட பழைய திட்டத்தின் அடிப்படையில்  கறாராகச் செயல்படுவது பெருமையாக இருக்கலாம். இந்த அடிப்படையில் காரட்டின் கட்டுரையினூடாக வெளிப்படும் அணுகல் முறை மாற்றம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, தனி மனித ஆர்வங்கள், சுற்றுச் சூழல் இயக்கங்கள், சிறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் துணையுடனேயே இதுவரை நடைபெற்று வந்த அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் இந்தியாவின் முக்கிய இடதுசாரி அமைப்பான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு ஒரு பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பலாம்.”

இந்தக்கட்டுரை சி.பி.எம்மிடம் எந்த நிலைப்பாட்டு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதே காரத்தே ஒத்துக் கொண்டாலும் அறிஞர் அ.மா மறுப்பார் போலும். நிலவுகின்ற சமூக அமைப்பை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொண்டு சீர்திருத்தம் கோரும் ஒரு நிலையை மாபெரும் புரட்சி என்று சித்தரிக்கும் அளவு அறிஞரின் காமன்சென்ஸ் குறுகிவிட்டது. அணு மின்சாரம் தவிர்த்த மாற்று எரி சக்தி திட்டங்களை மையமாகக் கொள்ள வேண்டும் என்று காரத் கூறயிருப்பதெல்லாம் அ.மாவுக்கு மாபெரும் கலக குரலாக தென்படுகிறது. இதைத்தான் டிராபிக் ராமசாமி முதல் சூரிய விளக்கிற்காக என்.டி.டி.வியுடன் கூட்டணி அமைத்து செயல்படும் பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான் வரை பலரும் சலிப்பூட்டும் விதத்தில் சொல்கிறார்கள். அதன்படி அவர்களையும் புரட்சிக்காரர்களாக அ.மா ஏற்றுக்கொள்வார் என்று நம்புவோம்.

மக்களை அணிதிரட்டும் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்கள் மட்டும் இது போல ஏதாதாவது கூவிக் கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறார் அ.மா. இதைத்தான் கருணாநிதி பலமுறை ஈழம் குறித்து சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும், ஆட்சியில் இருக்கும் போது எச்சரிக்கையாகத்தான் செயல்பட முடியும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட முடியாது…. இதெல்லாம் கூட அ.மாவின் இந்த இரும்பு இலக்கணத்தில் கண்டிப்பாக வரும். ஒரு பிரச்சினைக்கு இறுதித் தீர்வு என்ன என்பதும் அதை நோக்கியே தற்கால போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பதும் புரட்சி குறித்து ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சி அறிய வேண்டிய அடிப்படைப் பாடம். அதாவது புரட்சிக்காகத்தான் மக்களை திரட்டுகிறோமே அன்றி மக்கள் எதற்காகவாவது திரண்டு விட்டால் அது புரட்சி அல்ல. ஆனால் அ.மா இரண்டாவதைத்தான் புரட்சி என்று நம்புவதால் அதை அதற்கு உரிய சி.பி.எம்மிற்கும் விருதாக அளித்து மகிழ்கிறார்.

அணுமின்நிலையத்தை சுற்றுசூழல் பிரச்சினையாக மட்டும் பார்ப்பது என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உத்தி. சி.பி.எம் அதையும் பேசிக் கொண்டு அமெரிக்க எதிர்ப்பு என்பதாகவும் நாடகம் ஆடுகிறது. உள்நாட்டு உலை பாதுகாப்பானது, வெளிநாட்டு உலை ஆபத்தானது என்ற காரத்தின் அபத்தத்தை சுட்டிக்காட்டும் அ.மா அதன் அரசியல் சந்தர்ப்பவாதத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் எப்படியும் புரட்சி வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் போது ஒரு அறிவாளியின் நடவடிக்கையில் சந்தர்ப்பவாதம் மட்டும்தானே மையமாக இருக்க முடியும்? ஆனாலும் இது ஒரு நாசுக்கான, நாகரீகமான முறையில் வெளிப்படும் என்று அறிஞர் அ.மார்க்ஸ் நம்பிக் கொண்டிருந்தால் அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

--நன்றி. வினவு இணையதளம்(http://www.vinavu.com).

தொடர்புடைய சுட்டிகள்