Thursday, December 6, 2012

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்க நடந்த நாடகம் வெற்றி


 
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்கிற கதையை கடந்த சில மாதங்களாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் மாற்றி வஜனங்கள் பேசி விறுவிறுப்பாகக் கொண்டு சென்றனர்.

ஆளுங்கட்சியோ அன்னிய முதலீடு பல லட்சம் கோடி வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்று புளுகியது.

இந்தப் புளுகு பற்றி தெரிய ஒரு நடந்த கதைக்குப் போவோம்.

ஒரு சேம்பிளுக்குப் பார்த்தீங்கன்னா  நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ்நாடு 2023 என்ற பெயரில் முதல்வர் ஜெயலலிதா டி.வி.எஸ், ஆம்வே, முருகப்பா, செயின்ட் கோபெய்ன் அப்புறம் ஹிடாச்சி ஆகிய ஐந்து கார்ப்பரேட் கம்பெனிகளுடன் எம்.ஓ.யு(MOU) அதாவது மெமோரண்டம் ஆப் அண்டர்ஸ்டாண்டிங் கையெழுத்திட்டிருக்கிறார்.

அதாவது அவர்கள் எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டில் சுமார் 20,000 கோடிகள் முதலீடு செய்யப் போகிறார்களாம். அப்பாடா தமிழ்நாடு சொர்க்கபுரியா மாறப்போகுதப்பான்னு சந்தோஷப்படாதீங்க..

இந்தப் பெரிய பணத்தைப் போட்டு அவர்கள் ஆரம்பிக்கப் போகிற கம்பெனிகளில் 1.36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பாம். உடனே ஆஹான்னு சொல்வீங்களே. அதிலேயும் ஒரு ட்விஸ்ட்டு இருக்கு.

அதாவது 2500 பேருக்கு தான் நேரடியா பெர்மணன்ட் வேலையாம். மிச்சம் ஒரு லட்சத்தி 34 ஆயிரம் பேருக்கும் அப்ரண்டிஸ், ட்ரெய்னீ, டெம்பரவரி, காண்ட்ராக்ட், பிச்சைக்காரன் என்கிற பெயர்களில் மாசம் 3000, 5000 என்று அடிமாட்டு சம்பளம் பேசி வேலை வாங்கப்படும்.

அப்ரண்டிஸ், ட்ரெய்னியெல்லாம் இப்படியே பிச்சையெடுக்கிறமாதிரி சம்பளம் வாங்கினா ஏழேழு ஜென்மம் போனாலும் அம்பானியாக முடியாது (ஆனா அவுங்க மட்டும் எப்படிப்பா ஒரே ஜென்மத்துல கும்பானியானாங்க? உங்கள விட கிட்னி ஜாஸ்தியா வேலை செய்யுதா அவங்களுக்கு மட்டும்?)

சரி விடுங்க. இவுங்க குடுக்கிற வேலை வாய்ப்பின் லட்சணம் இது தான். 20000 கோடியை இறக்குனாத்தான் 2500 பேருக்கு நிரந்தரம்னு சொல்லிக்கிறமாதிரி வேலை. அதுவும் எவ்வளவு நாள் நிரந்தரம்ன்னு உறுதியா சொல்ல முடியாது.

இவுங்க இருபதாயிரம் கோடி இன்வெஸ்ட் பண்றாங்க இல்லியா. அதுல 30-40 சதவீதம் தொழிற்கூடம், கட்டிடம் கட்டவும், அப்புறம் 30-40 சதவீதம் மிஷின்களை இறக்குமதி பண்ணவும் போக, மிச்சமிருக்கிற கொஞ்சூண்டு பணம் தான் ஆப்பரேட்டிங் காஸ்ட்.

அதுல லாபம் கண்டிப்பா வந்தே ஆகணும். 10 வருஷத்துல 20ஆயிரம் கோடி இன்வெஸ்ட் பண்ணினா அந்தக் கம்பெனி தர்மத்துக்கா இன்வெஸ்ட் பண்ணும் ? இல்லை.
அதே பத்து வருஷத்துல அதிலருந்து கிடைக்கிற லாபம் 40ஆயிரம் கோடியா இருக்கணும். இல்லாட்டி என்ன கர்மத்துக்கு அந்த இன்வெஸ்ட்மண்ட்ன்றேன்.

நாப்பதாயிரம் கோடி லாபம் வரணும்னா அவனெல்லாம் டாஸ்மாக் தான் வச்சி நடத்தணும். இதிலே நம்ம முதல்வரம்மா கிட்ட எதுக்கு 'அண்டர்ஸ்டேண்டிங்' பண்றாங்க ?
எதுக்குன்னா, இடம் சல்லிசா கிடைக்கும், தண்ணீர் சல்லிசா கிடைக்கும், கரண்ட் சும்மா கிடைக்கும் 24 மணி நேரமும், ரோடு போட்டுத் தரும் கவர்மெண்ட் ப்ரீயா. இவ்வளவும் சல்லிசா கிடைக்க ஆளுங்கட்சிய ஒரு 'அண்டர்ஸ்டேண்டிங்' பண்ணா போதும்.

இது நம்ம ஊரு முருகப்பா குரூப்புக்கே இவ்வளவு சலுகைன்னா அன்னிய முதலீடுன்றது லட்சம் கோடிகளில் புரளும். லட்சம் கோடியை எண்ணிப் பார்க்கவே நமக்கு ஆயுசு முடிஞ்சு போகும்.
http://trinitymirror.net/coimbatore/wp-content/uploads/2012/11/04-11-2012.pdf

ஆயிரம் கோடிகளுக்கு அம்மாவைப் புடிச்சவங்க.. லட்சம் கோடிக்கு மன்னுமோகனைப் பிடிச்சிட்டாங்க..அவ்வளவு தான் சிம்பிள்.
வந்திருச்சி சிறு வணிகத்தில் அன்னிய முதலீடு.

இதுக்கு பில்டப்புகள் பார்த்தா பலவிதம்...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தே ஆவணும்னு பிஜேபி, மம்தா பானர்ஜி ஒரே போராட்டம்..பில்டப். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தா அதை ஜெயிக்க தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை இல்லைன்றது எல்கேஜி பையனுக்குக் கூட தெரியும்.

இதுக்கு பதில் பில்டப் நம்ம கலைஞர், கசப்பாக இருந்தாலும் நாங்கள் அதை ஆதரிப்போம்ன்றார் கலைஞர். அவரு பேரனே நாளப் பின்ன அதுல ஒரு பெரிய ஷேர் ஹோல்டராக வாய்ப்பிருக்கு. அதை ஏன் அவரு விடணும்? ஈழத்தமிழனுக்கு நீலிக்கண்ணீர் வடிச்சப்பவே அவர் கூலிங்கிளாஸ் கண்ணாடிக்குப் பின்னாடி இருந்த முகமூடி கிழிஞ்சி போச்சி. இனி எதுக்கு முக்காடுன்னு நென்ச்சிட்டார் போல இருக்கு.

இதில் கம்யூனிஸ்ட்டுகள் பில்டப் கொஞ்சம் விசேஷமானது. அவர்கள் 'நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றுப் போகும்னு எல்.கே.ஜிப் பையனுக்குத் தெரியும்ன்றது எங்களுக்கும் தெரியும். அதனால அதை பார்லிமண்டில் விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு விடணும்'  அப்படின்னு வீர வசனம் பேசினாங்க.

கடைசில என்ன ஆச்சு நேத்திக்கு வீரதீரமா பார்லிமண்ட்ல ஷிப்ட் வச்சி ஆளாளுக்குப் பேசி இன்னிக்கு ஓட்டெடுப்புக்கு விட்டதில 254 ஆதரவாயும் 224 எதிராயும் விழுந்திடுச்சி. அன்னிய முதலீடு ஜெயிச்சுடுச்சு. ஆனா பாவம் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு யார் ஓட்டுப் போடுவாங்களோ அவங்களே தான் இந்த வாக்கெடுப்புக்கும் ஓட்டுப் போடுவாங்க.. அப்போ நம்பிக்கையில்லா தீர்மானமே தோத்துடும்னா இது மட்டும் எப்படியப்பா ஜெயிக்கும்னு ப்ளே ஸ்கூல் படிக்கிற பையனுக்கு தெரியற லாஜிக் இவங்களுக்கு மட்டும் புரியவேயில்லை.

ஜனநாயக முறைப்படி போராடி நாலு நாள் பார்லிமண்டை ஒத்தி வைச்சாச்சு. கடைசில ஜனநாயக முறைப்படி தான் அன்னிய முதலீடும் வெற்றி பெற்றிடுச்சு 20 ஓட்டு கூட அதிகமா வாங்கிடுச்சு. அதுக்காக ஜனநாயக முறைல, பார்லிமண்ட்ல சொன்னா சரிதான்னு போயிடுவாங்களா கம்யூனிஸ்ட்டுகள் ?

அடுத்த புளுகு 'சில்லறை அந்நிய முதலீடு வந்தா விவசாயிகளுக்கு லாபம்..ஏன்னா இடைத் தரகர்கள் இல்லாமல் நேரடியா வால்மார்ட்டே வந்து கொள்முதல் பண்றதுனாலே '

இதுக்கு இன்னொரு கதைக்குப் போவோமா.. ஒரு ஊர்ல ஒரு நாட்டாமை(40 வருஷத்துக்கு முந்தின இந்திய கவுர்மெண்ட்டு) இருந்தாராம்.

அந்த ஊர்ச் சந்தைல மாடு விக்க வர்றவங்க(விவசாயி) மாட்டை சரியான விலைக்கு வித்துட்டுப் போகனும்றதுக்காக எல்லாரும் நாட்டாமையோட தரகர்கள் கிட்டே தான் விலை பேசனும்னு சொல்லி வியாபாரத்தை ஒழுங்கா வெச்சிகிட்டாராம்.

நடுவுல இருந்த நாலு ரவுடிப் பசங்கள் (ப்ரைவேட் கம்பெனிகள்) இதை உடைக்கிறதுக்கு அவுங்க நாலு தரகர்களை உள்ளே வுட்டு அவுங்க வேணும்னே விலையை கூட்டிக் குறைச்சிப் பேசி கடைசில மாடெல்லாம் இந்த ரவுடிப் பசங்களுக்கு கிடைக்கிற மாதிரி பண்ணிட்டாங்களாம்.

இதையெல்லாம் பாத்த பெரிய தாதா (வால்மார்ட்) இவனுங்கள் என்ன சல்லிப் பசங்க.. நானே நேரடியா புகுந்து எல்லாத்தையும் அள்றேன் பாருன்னுட்டு உள்ள புகுந்தானாம்.

இந்தச் சின்ன ரவுடிப் பசங்க, அவங்களோட தரகர்களை அடிச்சி விரட்டிட்டு ஹீரோ மாதிரி எபக்ட் குடுத்து நின்னானாம். உடனே மாட்டுச் சந்தை மக்களெல்லாம் இனிமே எங்க மாட்டையெல்லாம் நீங்க தான் நிரந்தரமா நல்ல விலை கொடுத்து வாங்கிக்கிட்டே இருக்கணும்ணு கேட்டுக்கிட்டாங்களாம்.

ஒரு மாசம், ரெண்டு மாசம் போயிட்டு பின்னாடி தாதா சொன்னானாம்.. எனக்கு இவ்வளவு மாடு தேவையில்லை. நானே நிறைய மாடு வெச்சிருக்கேன். நீங்கள்லாம் போய் ஆடு கொண்டு வாங்கன்னானாம்.

எல்லோரும் வளத்த மாட்ட அடிமாட்டு விலைக்கு அவன்கிட்டவே தள்ளிட்டு ஆடு வளர்க்க ஆரம்பிச்சுட்டாங்களாம். அப்புறம் வந்தா சீச்சி... எனக்கு ஆடு வேண்டாம் ஒட்டகம் தான் வேணும்னானாம்.

இப்படிப் போகுது கதை..  ரொம்ப சிம்பிளா கேக்கணும்னா வால்மார்ட் வந்ததால் அமெரிக்காவில் விவசாயிகள் என்கிற இனமே அழிந்து போகும் நிலையில் இருக்கிறது. அங்கே எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகள் தான் விவசாயம் பண்ணுகின்றன. விவசாயிங்க இல்லை.

ஒரு காலத்தில் 100 பேருக்கு ஆண்டு முழுதும் வேலை கொடுத்த 4 ஏக்கர் நிலம் இன்று 4 பேர் கூட பார்த்துக் கொள்ள தேவையில்லை. எல்லாம் மிஷின் பார்த்துக்கிடும் என்று இருக்கிறது அமெரிக்காவில்.

அப்புறம் எப்படி வேலை வாய்ப்பு பெருகும் ?

அடுத்த புளுகு வால்மார்ட் வந்தால் உணவுப் பொருட்கள் வீணாகாது. குளிர் பதன அறைகளில் பத்திரமாக சேமிக்கப்படும்.


40 வருடங்களுக்கு முன் உணவு தானியங்களை சேமிக்கும் குளிர் பதன கிடங்குகளை நாட்டில் நிறுவியது ஆளும் அரசு மட்டுமே. அன்றைக்கு கிடங்கை வாடகைக்கு பயன்படுத்தக் கூட வக்கின்றி இருந்தது தனியார் துறை.

இன்று அரசு பிச்சைக் காரனாய் நிற்கிறது. ரிலையன்ஸ் அம்பானி அரசை விட அதிகமாக குளிர்பதனக் கிடங்குகளை கைவசம் வைத்திருக்கிறார். அரசு கிடங்கில் தானியங்களை எலிகள் தின்கின்றன. அப்படி வீணாகப் போவதை எடுத்து மக்களுக்கு ரேஷன் கடைமூலம் குடுய்யா என்ற சுப்ரீம் கோர்ட்டைப் பார்த்து நம்ம மன்மோகன் சிங் சொல்கிறார் "உங்க வேலையப் பாருங்கப்பா.. எனக்கு வேற வேல இருக்கு".

இது யார் தவறு ? அரசு என்றால் மக்கு மோகன்களும், மௌன குரு நரசிம்மா ராவ்களும் ஆண்டதில் அரசு தனியாரிடம் கைகட்டி நிற்கும் நிலை வந்தது யாரால்?

மக்களே... உங்களால். உங்களால் தான்.
அரசுத் துறையில் இருக்கும் மக்கள் பொறுப்பற்று இருப்பதும், சாதாரண மக்கள் தனியார் தான் நல்லா வசதி செய்யுதே என்று உங்கள் சுயநலத்துக்கு தனியாரிடம் போய் தனியாரை இன்று அசுரர்களாக வளரவிட்டதும் தான்.

அதன் பலனை நீங்கள் நாளை அனுபவிப்பீர்கள்.. எஞ்சாய்..ஆல் தி பெஸ்ட்.

Friday, November 23, 2012

தெய்வநாயகம் என்கிற மனிதநேய மருத்துவர்

பிரபல நெஞ்சு நோய் நிபுணரும், அமைதி இயக்கம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தவருமான டாக்டர் சி.என். தெய்வ நாயகம் அவர்கள் கடந்த திங்களன்று காலமானார். அவருக்கு வயது 70.

தெய்வநாயகம் அவர்களை சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு தண்டுவடத்தில் டி.பி. நோய் தாக்கி நடக்க இயலாமல் போனபோது,

அவருக்காக சரியான மருத்துவர்களைத் தேடியலைந்த போது தான் முதன்முதலாய் சந்தித்தேன்.

மிகப் பெரிய மருத்துவ பதவிகளை வகித்த அவர் வெறும் 50 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு தனது சேவை அமைப்பின் க்ளினிக்கில் அம்பாசடர் பல்லவா ஹோட்டல் அருகில் இருந்த கட்டிடத்தில் இலவசமாக மருத்துவம் செய்து கொண்டிருந்தார்.

அவர் நினைத்தால் அவருக்கு லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க பெரிய பணக்கார நோயாளிகள் கூட்டம் இருக்கிறது. ஆனாலும் அவர் சேவை செய்வதையே விரும்பினார். பணக்காரர்களும் கார் போட்டுக் கொண்டு, விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து அங்கு வந்து காத்து நிற்பார்கள். அவர்களுக்கும் அதே 50 ரூபாய் தான்.

இந்த 50 ரூபாயும் வெறும் பதிவுக் கட்டணமே. அதற்குப் பின்னர் எத்தனை முறை நீங்கள் சென்றாலும் இலவசமாகத் தான் பார்ப்பார்.

1942, நவம்பர் 15ல் பிறந்த தெய்வநாயகம், சென்னை மருத்துவக் கல்லூரியில் 1965ல் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் 18 மாதங்கள் பயிற்சி பெற்றார். FRCS பட்டமும் பெற்றார். அவர் உலக அளவில் புகழ் பெற்ற எடின்பர்க்கில் உள்ள ராயல் ஸ்கூல் ஆப் பிசிசியன்ஸ் (Royal School of physicians)ல் உறுப்பினராவார். பிரிட்டனின் மருத்துவ ஆய்வுக் கவுன்சிலில் ஆய்வு அதிகாரியாகவும் இருந்தார்.

1970 முதல் 2000 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சு நோய்த் துறையின் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இந்திய நெஞ்சு நோய் கழகம் என்கிற அமைப்பையும் லங் இந்தியா என்கிற இதழையும் நடத்தி வந்தார்.

சென்னை மருத்துவமனையில் கடுமையான எதிர்ப்பை மீறி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் பிரிவை உண்டாக்கினார்.
மருத்துவத்தில் அவருடைய முக்கிய பங்கு அல்லோபதி மருத்துவத்துடன் நமது நாட்டின் பாரம்பரிய சித்த மருத்துவத்தையும் கலந்து வெற்றிகரமாகப் பயன்படுத்தியதாகும். இதற்காக எம்.பி.பி.எஸ் மருத்துவரான அவர் சித்த மருத்துவப் படிப்பையும் படித்துத் தேர்ந்தார்.

சென்னை சானேட்டோரியத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சித்த மருந்து ஆய்வு ஒன்றைச் செய்தார். அதில் சுமார் 80 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சித்த மருந்தான ரஸகந்தி மெழுகு எவ்வாறு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ந்ததில் 90 சதவீத நோயாளிகள் நோயின் கடுமையிலிருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பினர். அவர்கள் எல்லோரும் வாழ்நாள் முழுதும் அந்த மருந்தை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். மற்றபடி சாதாரணமாக வாழ ஆரம்பிக்கலாம். நோய் அவர்களை கொல்வதிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.

தனது கண்டுபிடிப்புக்களை ஐ.நாவில் இருக்கும் மருத்துவ அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் சென்று சமர்ப்பித்தார். எல்லோரும் சித்தமருத்துவத்தை வியந்து பார்க்க வைத்தார். வழக்கம் போல நமது அரசின் தொடர் உதவிகள் இல்லாததில் அந்த முயற்சியை மேலும் பரவலாக்கி நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியாமல் போனது.

அவரது சித்த மருத்துவ சேவையினால் அவர் தேசிய சித்த மருத்துவக் கவுன்சிலின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகக் கண்டிப்பாகவும், கறாராகவும் பேசக் கூடியவர். எளிமையாக வேட்டி, சட்டை அல்லது குர்த்தா அணிந்திருப்பார். செயின் இணைக்கப்பட்ட கண்ணாடி அணிந்திருப்பார்.

நடக்க இயலாமல் போன எனது நண்பரை ஆட்டோவில் வைத்துக் கூட்டிப் போய் அவரை அலேக்காகத் தூக்கிச் சென்று அவரது க்ளினிக்கில் பெஞ்ச்சில் படுக்க வைத்திருந்தோம். நண்பரின் முறை வந்ததும் மிக சகஜமாகப் பேசி அவரது ஸ்கேன் மற்றும் அனைத்து ரிப்போர்ட்களையும் ஒரு முறை பார்த்தார்.

பின்பு தனது பரிசோதனையின் மூலம் கால் செயலிலழந்து போனதை பரிசோதித்தார். பரிசோதித்து விட்டு சர்வ சாதாரணமாகச் சொன்னார். 'டி.பி. கட்டி ஸ்பைனல் கார்டுல இருந்து போகிற நரம்புகளை அழுத்திட்டு சில எலும்புகளை அரிச்சுட்டு இருக்கு. சரிபண்ணிடலாம்.'

நடக்கவே இயலாது எனக் கைவிடப்பட்ட எனது நண்பர் அவரது அல்லோபதி மற்றும் சித்த மருத்துவ முறையால் ஒரு வருடத்தில் திரும்பவும் எழுந்து நடந்தார். அதற்குப் பின் நிறைய பேரை அவரிடம் போய்ப் பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறேன்.

மக்கள் டி.வியில் தினமும் மக்களின் மருத்துவ கேள்விகளுக்கு பதில் சொல்லும் தொடரை நடத்தி வந்தார். இயற்கை உணவு மற்றும் மருந்துகளையும், பக்க விளைவுகளில்லாத சித்த மருந்துகள் பற்றியும் விரிவாக சாதாரண மக்களுக்கும் புரியும்படி விளக்குவார்.

அவர் வாழ்க்கையில் நடந்ததாக பின்வரும் நிகழ்வைச் சொல்வார்கள். அவர் மிகச்சிறந்த மருத்துவ நிபுணராக அறியப்பட்ட காலம் அது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் வெங்கட்ராமன்.

ஒரு நாள் காலை தெய்வநாயகம் அவர்களின் க்ளினிக்கிற்கு அரசு மாளிகைக் கார் வந்து நிற்கிறது. க்ளினிக்கில் சில பேஷண்ட்டுகள் இருக்கிறார்கள்.

அவசரமாக காரில் வந்த அதிகாரி ஒருவர் வெங்கட்ராமன் அவர்களுக்கு உடல் நிலை சிறிது சரியில்லை எனவும் உடனே மருத்துவரை அழைத்து வர கார் அனுப்பினார்கள் என்றும் சொன்னார்.

அதற்குப் பதிலளித்த தெய்வநாயகம், தனது பேஷண்ட்டுகளை சிறிது நேரத்தில் பார்த்து முடித்துவிட்டு உடனே வருவதாகக் கூறினார். அதிகாரியோ குடியரசுத் தலைவர் விஷயம் நீங்கள் எல்லாவற்றையும் போட்டுவிட்டு உடனே வந்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்.

"ஐயா, உங்களது குடியரசுத் தலைவருக்கு உடல் நலமில்லை என்றாலும் தலை போகும் அவசரமில்லை. இதோ எனது பேஷண்ட் வயிற்று வலி என்று துடித்துக் கொண்டிருக்கிறார். இவரை கவனித்து விட்டுத் தான் என்னால் வரமுடியும்" என்று உறுதியாகக் கூறி தனது பேஷண்ட்களை கவனித்து அனுப்பி விட்டே வெங்கட்ராமனைச் சென்று கவனித்தார்.

டாக்டர் தெய்வநாயகம் போன்ற மனித நேயம் நிரம்பிய மனிதர்கள் மருத்துவர்களாய் இருந்த காலம் போய் மணிக்கு ஒரு ஆப்பரேஷன் என்று கல்லா கட்டும் மருத்துவர்களே பெருகியிருக்கிறார்கள்.

சித்த மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் கலந்து செய்ததன் மூலம் சித்த மருத்துவத்துக்கும் அங்கீகாரம் பெற்றுத் தந்த அந்த நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மூன்று மகள்களுக்கும் மற்றும் குடும்பத்தினர், அமைதி இயக்கத்தினர் எல்லோருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.