Saturday, December 24, 2011

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்னும் மோசடி.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்னும் மோசடி.

என்னப்பா இது. மக்களுக்கு உணவு தருவதை உத்திரவாதப்படுத்த நம்ம பொருளாதாரப் புலி
அண்ணன் மன்மோகன் கொண்டு வந்த திட்டத்தை நீ பாட்டுக்கு மோசடின்னா இன்னா அர்த்தம்
என்று நினைப்பவர்கள் மட்டும் கீழே தொடர்ந்து படிக்கவும். சட்டம் வேற பார்லிமண்டுல நிறைவேறப்
போற நேரத்துல இப்படி சொல்லலாமா ?

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்றால் என்னன்னு சொல்லிருக்காங்கன்னு முதல்ல பாத்துக்குவோம்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுடைய வீட்டிலும் உணவுப் பொருள் பற்றாக்குறை இல்லாது கிடைத்து
அவர்கள் எல்லோரும் மூன்று வேளை வயிறார, சத்தான உணவு சாப்பிட வழி செய்வதே உணவுப்
பாதுகாப்பு சட்டம் ஆகும்.

பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா செயல்ல என்னவா இருக்கு ? அது தான் இங்க பிரச்சனையே.
இப்போ பார்லிமண்ட்டில் நிறைவேறப் போகிற உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி கிராமத்துல 95 சதவீதம்
பேரும், நகரத்துல 55 சதவீதம் பேரும் ரேஷன் அட்டை (Public Distribution system Card) தரப்போறாங்களாம்.
சரிதானேன்னு நீங்க நினைக்கலாம். இதுக்கு முன்னாடி நாட்டுல மொத்தத்துல 65 சதவீதம் பேருக்கு கொடுத்த
ரேஷன் கார்டுகளைப் புடுங்கி பாதியா கட்பண்ணிடுறதுக்கு இது குறுக்கு வழி. இன்னும் சரியா சொன்னா இப்போ
பதிஞ்சிருக்கிற 12 கோடி ரேஷன் கார்டுகளை 6 கோடியா கட் பண்றது தான் அது. என்ன காரணம் சொல்லுறாங்க
இதுக்குன்னா போலி ரேஷன் கார்டு அதிகமாயிடுச்சாம். உண்மைதானே. நாமெ எல்லாருமே ஆளுக்கு 4 ரேஷன்
கார்டு வைச்சுக்கிட்டு அதுல கார், பங்களா வீடெல்லாம் கட்டிட்டோம்ல. போலி ரேஷன் கார்டுகள் இருக்கிறது
உண்மைதான். ஆனா நாட்ல பாதிப்பேரு ப்ராடுன்னு சொல்றதுக்கு என்ன அர்த்தம் அந்த அலுவாலியாவுக்கே வெளிச்சம்.

சரியோ தப்போ நம்ம தமிழ்நாட்டுல இலவச அரசி, ரூபாய்க்கு 2கிலோ போன்ற திட்டங்கள் ஏதோ ஒரு விதத்துல
ஏழைகளை காப்பாத்தவே செய்யுது. அது தான் நம்ம அம்மா கூட இத்திட்டத்தை எதுத்து சத்தம் போடறாங்க.
அவங்க எதை மனசுல வச்சிக்கிட்டு எதுத்து சத்தம் போடுறாங்கன்றது வேற விஷயம். ஆனா மத்திய அரசு இதையெல்லாம்
கண்டுக்கவே கண்டுக்காதுன்றது தான் உண்மை. ஏனா மன்மோகன் அப்பன் உலக வங்கி (world bank) சொல்லிட்டான..
மகனே ஏழை மக்களுக்கு அரிசி கூட கொடுக்க தேவையில்லை.. காசா குடுத்துடு.. அவங்க வேணா அம்பானி
கிட்டயோ, ஸ்பென்சர்லயோ, அண்ணாச்சி கிட்டயோ போய் அந்தக் காசுல அரிசி வாங்கித் தின்னட்டும்னு. ரேஷன்
கடையெல்லாம் கூட ஊழல் இருக்கறதால அத மூடிடுன்னு சொல்லுது. ஆனா உடனே அந்த அளவுக்கு போறதுக்கு மோகன்
அண்ணன் யோசிக்கிறாரு. ஏதாவது பிரச்சனையாயிடுமில்லியா. எல்லோரும் பார்லிமண்ட் வாசலுக்கு வந்து
பார்லிமண்ட் கேன்ட்டீன்ல் 5 ரூபாய்க்கு கிடைக்கிற புல் மீல்ஸை லவட்டிட்டா என்ன பண்றது?

சரி இந்த திட்டப்படி கிராமத்துல 95 சதம் பேருக்கு ரேஷன்ல அரிசி கிடைக்குதேன்னு சந்தோஷப் படாதீ்ங்க.
இந்த 95ல 60 சதம் பேரை கண்டுபிடிச்சு அவுக உண்மையிலேயே ஏழையா இருந்தாத்தான் அரிசி குடுப்பாகளாம்.
அதே மாதிரி நகரத்துல 65 சதவீதம்ல 44 சதவீதம் (தலை சுத்துதா?) பேரை மட்டும் செலக்ட் பண்ணி அவுகளுக்குத்
தான் அரிசி குடுப்பாகளாம். மத்தவக எல்லாம் அவுக சித்தப்பா ரிலையன்ஸ் இருக்காரில்லை, அங்க போய்
வாங்கிக்க வேண்டியது தான். நல்ல அரிசியா கிடைக்குமாமே.

சரி இந்த சதவீதமெல்லாம் எப்புடிப்பா கணக்கு பண்றாங்க. ஒரு பிகர் கணக்குப் பண்றதுக்குள்ளே நமக்கு முழி
பிதுங்குதுன்னு நினைப்பவர்களுக்கு சொல்றேன். வறுமைக் கோடு, வறுமைக்கோடு அப்படின்னு ஒரு கோடு
இருக்கு. எங்க இருக்குன்னு கேக்காதீங்க. அது சும்மா மன்மோகன் அண்ணாச்சியும், அன்னை சோனியாவும்
ஏற்கனவே இருந்ததை அழிச்சுட்டு போட்ட புது கோடு. அந்தக் கோட்டுக்கு அந்தப்பக்கம் உள்ளவங்கள்ளாம்
நல்லா சம்பாரிச்சி, மூணு வேளை தின்னுட்டு பெருசா ஏப்பம் விடுறவங்க. கோட்டுக்கு இந்தப்பக்கம் உள்ளவங்க
சோறு சரியா திங்காத வெத்து வயிறு புரண்டு குர்ருன்னு ஏப்பம் விடுறவங்க.

இந்தக் கோட்டுக்கும் வறுமைக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் இன்னாபா சம்பந்தம்னு சண்டைக்கு வராதீங்க.
சொல்றேன். இந்த கோட்டுக்கு கீழே இருக்கிறவுகள குறி வைச்சுதான் உணவுப் பாதுகாப்பு சட்டம், ரேஷன்
கடை எல்லாம் அரிசி, பருப்பு எல்லாம் தரும். மத்தவுகளுக்கு கிடையாது. இதுல டெக்னிக் என்னன்னா
கோட்டை எங்கன போட்டா ஒரு ஊருக்கு நாலு பேரு கூட வறுமைக் கோட்டுக்கு கீழே வரமாட்டங்கன்னு பாத்து
அஙகன கோட்டைப் போட்டுட்டாரு நம்ம கில்லாடி அண்ணாச்சி மன்மோகன். அதுக்கு ஒரு துப்புக் கெட்ட.. சாரி
திட்டக் கமிஷன்.

இந்த திட்டக் கமிஷன் என்னா சொல்லுச்சுன்னா ஒரு நாளைக்கு 32 ரூபா நகரத்துல செலவழிக்க முடிஞ்சவங்களும்,
கிராமத்துல 20 ரூபா செலவழிக்க முடிஞ்சவங்களும் வறுமைக் கோட்டுக்கு மேல இருக்காங்கன்னு சொல்லிடுச்சு.
அதாவது தாம்பரத்துல 32 ரூபாயோட டவுன் பஸ்ல ஏறி சென்டரல் வந்துட்டு ஒரு டீ, வடை சாப்பிட்டுட்டு கைல
பைசா இல்லாம திரும்பி வீட்டுக்கு போனீகன்னா நீங்க வறுமைக் கோட்டுக்கு மேல. புரிஞ்சதா?
வீடு போறப்போ திருட்டு ரயில்ல போனா அந்தச் செலவு மிச்சம். அப்போ மிச்சப்படுற காசுனால நீ்ங்க அம்பானிக்கு
அடுத்த ஆளா ஆயிடுவீங்க. எப்படி புள்ளி விவரம் ?

சரி இப்படி திருட்டுத் தனமா மானிய விலை அரிசி வாங்குற ஆளுகளைக் குறைக்கறாங்கன்னா ஏதாவது காரணம்
இல்லாமயா? நாட்டு மக்கள் தொகை கூடிட்டே போகுதுல்ல.. அரிசி பத்தாக்குறை இருக்கும்ல.. என்று அக்கறைப்
படும் அம்பியா நீங்கள். உங்களுக்கு ஒரு விவரம். கடந்த பத்து வருஷத்துல நாட்டுல கவர்மெண்ட் குடோன்கள்ல
சரியா பராமரிக்காம, எலி திங்க விட்டு, சரியான ஏசி பண்ணாத குடோன்ல வச்சி புழுத்துப் போன அரிசி எவ்வளவு
தெரியுமா? ஏழு லட்சம் டன். சும்மா நான் சொல்லலை. நம்ம தேசிய உணவுக் கழகம்(Food Corporation of India)
ஷர்மான்னு ஒரு ஆள் RTI சட்டத்துல(தகவல் அறியும் சட்டம்) கேட்ட கேள்விக்கு சொன்ன புள்ளி விவரம் இது.
இப்போ புரியுதா ஏன்டா இந்த தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்தோம்னு காங்கிரஸூக்காரன் எல்லாம்
புலம்புறது ஏன்னு ? இந்த ஏழு லட்சம் டன் அரிசியை வைச்சு நாட்ல எல்லோருக்கும் சும்மாவே வருஷம் பூராச்
சோறு போடலாம் தெரியுமா.

அதுக்குத் தான் நம்ம தேசபக்த அம்பானி அண்ணாச்சி கவருமென்ட் கிட்ட உள்ள குடோன் எல்லாத்தியும் சீப்பா
வாடகைக்கு எடுத்து அவுரு தனியார் மார்க்கெட்டுல வுடுற அரிசியை நல்லா ஏசில வச்சி பாதுகாத்து கொடுத்து
கிட்டு இருக்காறே அவர் கடையில அரிசி வாங்கி திங்க வேண்டியது தான. என்ன நான் சொல்றது?

ஏ.. ஆளை விடப்பா எவன் எந்தக் கோட்ல நின்னா என்ன..எக்கேடோ கெட்டா என்ன.. பார்லிமண்டை ஒழுங்கா நடக்க
விடப்பா.. பார்லிமண்ட் ஸ்டால்ல டீ, வடையெல்லாம் டெய்லி விக்காம வீணாப் போகுதுன்னு நம்ம மன்மோகன்,
பாஜக இத்துவானி..சாரி அத்துவானி அப்புறம் லொள்ளு பிரசாத்து, மம்தாஜி, பிரகாஷ் காரத்து ஜி எல்லாரும் கூடிப் பேசி
பார்லிமண்டை நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. இதென்ன ஸ்கூலா ? ஒரு நாளைக்கு நடக்காட்டியும் பாடம் போச்சேன்னு
பதற்றதுக்கு. நாளைக்கு ஏதாவது மாசோதா.. மசாலா இல்லை.. மசோதா.. எல்லோரும் வீட்ல டெய்லி ஒரு பாட்டில்
அக்காபீனா தண்ணிய வாங்கியே ஆகனும்னு நிறைவேறினால். அப்படியா.. தண்ணி நல்லா இருக்குமான்னு கேக்குற
கோஷ்டியாச்சே நாம எல்லாம். இதை என்னத்துக்கு கண்டுக்கணும்கிறேன்.


தேவைப் பட்டா கீழே இருக்கிற சுட்டியைக் கூட படிங்க..

முல்லைப் பெரியார் அணை பிரச்சனை – கேரளாவின் அடாவடித்தனம்!

முல்லைப் பெரியார் அணை பிரச்சனை கேரளாவின் அடாவடித்தனம்!
14-டிசம்பர்-2011
முல்லைப் பெரியார் அணை பிரச்சனை மறுபடியும் மலையாளிகளால் பெரிதாக்கப்பட்டு, கேரள எல்லைகளில் தமிழர்கள் தாக்கப்பட்டு, பரபரப்பாகியிருக்கும் இச்சூழலில் இந்த அணை பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வோம்.
பெரியாறு தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள சிவகிரி மலைகளில் கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர்கள் உயரத்தில் உற்பத்தியாகி வடக்காக 48 கி.மீ பாய்ந்து தேக்கடி ஏரியில் மேற்கு நோக்கிச் செல்லும் முல்லையாற்றுடன் கலக்கிறது. அங்கிருந்து கேரளாவினுள் வடக்காகப் பாய்ந்து இடுக்கி வழியாகச் சென்று அரபிக் கடலில் கலக்கிறது.
முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே சுமார் பத்து அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் முதலில் வருவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள பழைமையான முல்லைப் பெரியாறு அணை. இது முல்லையாறும், பெரியாறும் கலக்குமிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இவ்வணையைத் தாண்டி தான்  பெரியாற்றின் போக்கில் கேரளாவினுள் புத்ததான்கெட்டு, மேட்டுப்பட்டி, மூணாறு (ஜாலி ட்ரிப் அடிப்பீங்களே), இடுக்கி என்று வரிசையாக சுமார் 10 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவ்வணைகளுக்கு நீர் இன்னும் நிறைய வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் பொறுப்பில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணை இல்லாது போக வேண்டும்.
 கேரளா மலைப்பாங்கான நாடு. அங்கு மழை அதிகம். ஆறுகளும், ஏரிகளும் அதிகம். சுமார் 44 ஆறுகள் கேரளாவில் ஓடுகின்றன. 1880களில் தமிழ்நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நதிகள் குறைவு. அவையும் தென்மேற்கு பருவமழையை நம்பியே இருக்கின்றன. சிவகிரி மலையில் உற்பத்தியாகி வடக்கு, மேற்காகச் சென்று கடலில் கலக்கும் பெரியாறு மற்றும் முல்லையாறு கலக்கும் இடத்தில் அணை கட்டி அதில் தேங்கும் நீரில் சிறிது பகுதியை மலையைக் குடைந்த பாதை வழியே தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் எண்ணம் பிரிட்டிஷாருக்குத் தோன்றியது. அதன் விளைவே முல்லைப் பெரியாறு அணை.

முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாடு கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், 1887-1895களில், பெரியாற்றின் குறுக்கே பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பொறியியலாளர் பென்னி குயிக் என்பவரின் மேற்பார்வையில் (அன்றைய தொகை 62 லட்சம் ரூபாய்கள் செலவில்) கட்டப்பட்ட அணை. இதன் சிறப்பம்சம் இது மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 2700 அடி உயரத்தில் உள்ளது.. அவ்வுயரத்திலிருந்து ஒரு சிறிய கணவாய் வழியாக முல்லைப் பெரியாறு தேக்கும் நீர் தேக்கடியில் சேருகிறது. பின் அங்கிருந்து 5000 அடிகள் நீளத்திற்கு மலையினுள் குடையப்பட்ட நீர்வழி வழியாக தமிழ்நாட்டின் சுருளியாற்றில் நீர் வந்து சேர்கிறது. வைகை அணை இந்நீரைத் தேக்குகிறது. தேக்கடி இருக்கும் உயரத்திலிருந்து நீர் திருப்பிவிடுவது மிக எளிது என்பதால் இது கைகூடியுள்ளது. பிரிட்டிஷ் காலத்துக்குப் பின் இவ்வணை கேரள வரம்பிற்குள் இருந்தாலும் ஒப்பந்தப்படி தமிழக அரசால் இன்றும் பராமரிக்கப்படுகிறது.
வைகை நதிக்கு திருப்பிவிடப்பட்ட முல்லைப் பெரியாறு தண்ணீரால் மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, போன்ற மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களும், 10 லட்சம் விவசாயிகளும் பயன் பெறுகிறார்கள். சுமார் 60 லட்சம் பேருக்கு குடிநீரும் கிடைக்கிறது. இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து தண்ணீர் தேவைகளும் இத்தண்ணீரால் தீர்கின்றன.
ஆனால் துரதிர்ஷடவசமாக மலையாளிகளின் நோக்கம் முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதாகவே இருக்கிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 125 வருடங்களாகிறது. இது கட்டப்பட்ட போது சுண்ணாம்பு மற்றும் ஜல்லிகளால் குழைத்து கட்டப்பட்டது. 50 வருடங்கள் தான் இந்த அணை தாங்கும். எனவே இதை இடித்துவிட்டு வேறு அணையை கொஞ்சம் கீழே கட்டவேண்டும் என்று. இது உண்மையல்ல. உலகெங்கும் மிகப் பழைய அணைகள் காலாகாலமாக இன்னும் நீர் தேக்கியபடி நிற்கின்றன. நம் ஊர் கல்லணை கூட சுமார் ஆயிரம் ஆண்டுகளாக தற்போதைய தொழில் நுட்ப அறிவால் வலுவாக்கப்பட்டு உறுதியாக நிற்கிறது. எந்தக் கட்டிடமும் தொடர்ந்த பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப வலுவூட்டல்களாலேயே காலம் காலமாக நிற்கும். இது தான் யதார்த்தம்.
இன்னொரு அணைகட்டச் சொல்லும் கேரளாவின் பின்னாலிருக்கும் நயவஞ்சகம் என்னவென்றால் முல்லைப் பெரியாறிலிருந்து வைகை அணைக்கு தண்ணீர் திருப்ப பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட கணவாய் புது அணையை விட உயரத்திலிருக்கிறது. இவர்கள் சொல்லும் மாற்று இடத்தில் முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே அணையைக் கட்டினால் நீரை தேக்கடியில் தேக்கி வைத்து, வைகை அணைக்கு கொண்டு வரவே இயலாது. முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட்டால் அதிலிருந்து வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் தண்ணீர் பெறும் தமிழ்நாட்டின் 10 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரம் பாழாய் போகும். மேலும் இவர்கள் கட்டுவதாகச் சொல்லும் புது அணையை முழுக்க முழுக்க மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப் போவதால் தண்ணீர் தேங்கவே தேங்காது. முழுதும் திறந்து விடப்படும். அப்போது தான் மின்சாரம் தயாரிக்கமுடியும். போதாததற்கு நீரை ஆற்றின் போக்கில் கீழே சமதளத்தில் தேக்க ஏற்கனவே இடுக்கி அணையை கட்டிவிட்டார்கள்.
இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 50 கி.மீ கீழே 1973ல் கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவிலேயே பெரிய வளைவு அணை’(Arch Dam). முல்லைப் பெரியாரைப் போல் 7 மடங்கு பெரிது இடுக்கி அணை. 70 டி.எம்.சி கொள்ளளவு. முல்லைப் பெரியாரின் கொள்ளளவோ 16 டி.எம்.சி மட்டுமே. அதிலும் 10 டி.எம்.சி தண்ணீரைத் தான் பாசனத்திற்கு திறந்துவிட முடியும்.
இடுக்கி அணையின் கொள்ளளவு மிக மிக அதிகம் ஆதலால் அணை நிரம்பவில்லை. எனவே முல்லைப் பெரியாறு அணை ரொம்ப வீக், அங்கு நிலநடுக்கம் வந்தது என்று பத்திரிக்கைகள் மூலம் புரளி கிளப்ப ஆரம்பித்தது கேரள அரசு. இப்பிரச்சனையில் இந்திய நீர்வள ஆணையம் தலையிட்டு ஆய்ந்து பரிந்துரை செய்ததன்படி முல்லைப் பெரியாறு அணையை 18 கோடி ரூபாயில் தமிழ்நாடு அரசு பலப்படுத்தியது.

பெரியாற்றில் செல்லும் மொத்த நீர் சுமார் 5 ஆயிரம் மில்லியன் கனமீட்டர்கள். இதில் கேரளாவிற்கு விவசாயம், தொழில், குடிநீர் அனைத்திற்கும் 2021ல் தேவை எப்படியிருக்கும் என்று பார்த்தால் கூட 2300 மில்லியன் கனமீட்டர்கள் தான். மீதித் தண்ணீர் அனைத்தும் (சுமார் 2 ஆயிரம் மி.க.மீ நீர்) கடலில் வீணாகக் கலக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கி தமிழ்நாட்டிற்கு கொடுத்தால் கூட வெறும் 126 மி.க.மீட்டர் தான் வரும். இதைத் தரக் கூட மனமில்லாததுதான் கேரளா. இத்தனைக்கும் கேரளாவிற்கு 700 டன் அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து தான் செல்கிறது.

 
தமிழ்நாடு அரசு 1981 முதல் 1994 வரை அணையை பலப்படுத்தும் வேலைகளை செய்தது. அணைக்கு 12 ஆயிரம் டன் எடையுள்ள கான்கிரீட் தொப்பி(cap), கேபிள் ஆங்கரிங் என்கிற முறை மூலம் அணையின் உட்புறம் போடப்பட்ட கான்க்ரீட் கம்பிவடங்கள், தாங்கு அணையை வெளிப்புறம் மேலும் கான்க்ரீட் போட்டு உறுதிப்படுத்தல் போன்ற வேலைகள் செய்து அணை மிகப் பலமாய் ஆக்கப்பட்டது. இதைத் தவிர முல்லைப் பெரியாறு அணையுடன் கூடிய பேபி டேம் எனப்படும் சிறிய அணையையும் தமிழ்நாடு அரசு பலப்படுத்த ஆரம்பித்தது. இது நடந்தால் சுப்ரீம் கோர்ட் சொன்னபடி பழையபடி அணையில் 152 அடி நீர் தேக்கிக் கொள்ளலாம் என்கிற நிலை. உடனே கேரள அரசு வேலை செய்யவந்த தமிழக அதிகாரிகள் மேல் வழக்குகள் போட்டு வேலையை நடத்த விடாமல் செய்தது.
இரு அரசுகளும் கோர்ட்டுக்குப் போனதில் கோர்ட் நியமித்த நிபுணர் குழு 2000ஆம் ஆண்டு மீண்டும் அணையை சோதித்தது. அதன் அறிக்கையை வைத்து நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு அணையின் நீர் மட்டத்தை 146 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையை தடையின்றி பலப்படுத்தவும் தீர்ப்பு வழங்கியது.
இப்போது 2011ல் மீண்டும் இணையதளம், சினிமா, கிராபிக்ஸ், பத்திரிக்கை, மியூசிக் ஆல்பம் என்று பல விதங்களில் முல்லைப் பெரியாறு பற்றி கேரள மக்களிடையே பீதியைக் கிளப்புகிறது கேரள அரசு. தமிழக ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் தங்களது கேரள அணி கேரளா பக்கம் நின்று பேசுவதும், தமிழ்நாட்டு அணி தமிழ்நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவதாகவும் இரட்டை வேடம் போடுகின்றன. காங்கிரஸ், பா.ஜனதா, இவற்றுடன் சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியும் இதில் அடக்கம்.

சென்ற நான்கு தினங்களாக கட்சிகளை நம்பாமல் மக்கள் தேனி, கம்பம், பகுதி மக்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து லட்சம் பேர் திரண்டு முல்லைப் பெரியாறு நோக்கிப் படையெடுக்க கேரள அரசு ஸ்தம்பித்தது. தடியடி நடத்தி காவல் துறை மக்களை விரட்டியது. இன்று லேட்டாக நம்ப விஜயகாந்தும், மு.க.ஸ்டாலினும் பேரணி நடத்துகிறார்கள் கண்துடைப்புக்கு. அம்மாதான் அரசு என்பதால் அம்மா நோட்டீஸ் விட்டு கோர்ட்டு பக்கம் நமக்கு வரும் ஞாயத்தை அடக்கமாகப் பேசுகிறார். மக்கள் தன்னிச்சையாக கிளர்ந்தெழ ஆரம்பித்துவிட்டார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம். எந்தக் கட்சியும் நியாயமாகவும், மனசாட்சியோடும் இல்லாமல் பூசிமெழுகினால் அவர்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்பதையும் கட்சிகள் புரிந்துகொள்ள இது உதவும். சுப்ரீம் கோர்ட் வேறு முல்லைப் பெரியாறு அணையை 120 அடிதான் தேக்கவேண்டும் என்கிற கேரளாவின் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது நேற்று. 
  
தமிழர்களாகிய நாம் இவ்விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒன்று படுவோம். அநீதியை தட்டிக் கேட்போம். இதில் தமிழன், மலையாளி என்கிற பாகுபாடு தவிக்க இயலாமல் பேசப்பட்டே ஆகவேண்டும். ஒன்றாக இணக்கமாக வாழும் எண்ணம் இருக்கும் பட்சத்தில் நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரத்துவத்துடன் பழகுவோம். ஆனால் அது இல்லாத பட்சத்தில் அந்த வேறுபாடும் பேசப்பட்டே ஆகவேண்டும்.
பின்வரும் வீடியோ முல்லைப் பெரியாறு அணைபற்றி தமிழக சிவில் இன்ஜினியர்கள் அமைப்பு உருவாக்கியுள்ள ஆவணப்படம்.