Sunday, March 4, 2012

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு - சென்னை.


26-பிப்ரவரி-2012
அன்று காலை மதுரையிலிருந்து வந்து இறங்கிய நண்பர் பரபரவென்று குளித்துக் கிளம்பிய போது தான் தெரிந்தது சென்னையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு காலை 9 மணிக்கு பீச்சில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் கருத்தரங்கமும் மாலையில் தி.நகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் மாநாடுமாக நடக்க இருப்பது. “ஒரு போஸ்டர் இல்லை... ஒரு பேனர் இல்லை... என்னடா மாநாடு இது? யாரோ நாலு பேர் சயன்ட்டிஸ்ட் என்று வந்து உட்கார்ந்து ரம்பமாய் அறுக்கப்போகிறார்கள்” என்று யோசித்தபடியே நண்பருடன் கிளம்பினேன்.

மௌன்ட் ரோடில் புதிதாய் கருணாநிதி கட்டி உபயோகப்படாமல் போன தலைமைச் செயலக கட்டிடம் தாண்டி உள்ள சிக்னலில் திரும்பினால் போலீஸ் வேன் குறுக்காக ரோட்டின் நடுவே நின்றபடி உள்ளே யாரையும் விடாதே என்று மெகா போனில் எச்சரிக்கை விட்டுக்கொண்டிருந்தது. திரும்பிச் சுற்றி சேப்பாக்கம் வழியாக அப்பக்கம் போனால், அண்ணா சமாதியின் அருகில் உள்ள நுழைவிலும் போலீஸ் சாலையை மறித்து யாரையும் போகவிடவில்லை(மாநாடு நடந்தால் மக்கள் வரக்கூடாதா? ). கடைசியில் கூவத்தை ஒட்டிய சந்தில் நுழைந்து மேடு பள்ளம் ஏறி அரங்கத்தை வந்தடைந்தோம். வாசலில் ஒரு சின்ன கையடக்க ஜெனரேட்டர் சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்தால் 3000 பேர் கொள்ளக்கூடிய அந்த அரங்கத்தில் 2500 பேர் இருளில் உட்கார்ந்திருந்தார்கள். பவர் கட்.

வெளியில் நின்றிருந்த அந்தச் சின்ன ஜெனரேட்டரின் உயிரில் மேடையில் மங்கலான ஒரு விளக்கொளியும், மைக்கும் இயங்க குழுவினரின் கலைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பாடியவரின் குரலிலும், பாடலிலும் எழுச்சியும் அரசை நோக்கிய சாடலும் நிறைந்திருந்தது. நண்பரும் நானும் கடைசி வரிசையில் உள்ள காலி சீட்டுக்களில் அமர்ந்தோம்.

பின்பு நடந்த அணு உலை எதிர்ப்பு மாநாட்டு கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார் ‘மே 17’ இயக்கத்தின் திரு. அவர் பேசியபோது இந்தியாவின் பெருமுதலாளிகள் இந்தோனேஷியாவில் எண்ணெய்க் கிணறு தோண்டுமளவு வளர்நதிருப்பதாக குறிப்பிட்டார். அணு உலை மட்டுமல்ல எண்ணெய் தோண்டுவதாலும் கூட சுற்றுப்புறச் சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் 2.5 முதல் 5 கிலோ மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்படும் எண்ணெய்க்குழிகளில் இருந்த 70 லட்சம் லிட்டர் வரை எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் புவியின் ஆழத்தில் ஏற்படும் வெற்றிடம் மற்றும் அடுக்கு நகர்வுகள் சுனாமி, பூகம்பம் போன்றவை ஏற்படவும் ஒரு காரணமாய் அமைகின்றன. காவிரி ஆற்றுப் படுகையில் மட்டும் 18 இடங்களில் எண்ணெயும், 11 இடங்களில் இயற்கை வாயுவும் எடுக்கும் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அடுத்து பேசிய தமிழ்த் தேச மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் உதயகுமாரின் இரு சகோதரர்கள் அங்கேயும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.

அடுத்து பேசிய விடுதலைத் தமிழ்ப் புலிகள் அமைப்பின் குடந்தை அரசன் பேசிய போது அமெரிக்காவில் கடத்தப் பட்ட விமானத்தை அணு உலையைச் சுற்றி பறக்க விட்டு மிரட்டி அரசுடன் பேரம் பேசியதைக் குறிப்பிட்டு அணு உலை அந்த அளவிற்கு ஆபத்து நிறைந்தது என்பதை வலியுறுத்தினார்.
இந்தக் கணத்தில் மேடையேறிய உதயகுமார் மிக சாதாரணமாக வேட்டி சட்டையணிந்து வந்திருந்தார். கடைசி வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டார். பின் சில பேச்சாளர்கள் அவரை முன்னே அழைத்து தங்கள் இருக்கையில் அமர வைத்தனர்.

தமிழ்த் தேச தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த கருப்பசாமி பேசும் போது அணு உலை பாதுகாப்பானது என்று ஒரு பிரிவும் பாதுகாப்பற்றது என்று மற்றொரு பிரிவும் நின்று பேசுவதானது அணு உலையே வேண்டாம் என்று எழும் குரலை அமுக்கி விடவே என்று குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேசும் போது ஒரு கதையைக் கூறினார். விவசாயி ஒருவர் விளைந்த நெல்லை தீட்டி அரிசியாக்க ஆலைக்குச் சென்று கொடுத்தார். திரும்பி அரிசியாக வாங்கி வரும் போது வெளியில் வாசலில் இருந்த போர்டில் ‘தங்கப் பாண்டி தவிட்டாலை’ என்று போட்டிருந்தது. ‘ஏன் அரிசியாக ஆக்கிக் கொடுக்கும் ஆலையை அரிசியாலை என்று போடாமல் தவிட்டாலை என்று போட்டிருக்கிறீர்கள்?’ என்று இவர் கேட்க அந்த ஆலை அதிபர் சொன்னாராம் ‘இதில் தவிடும் தானே நாங்கள் பிரித்து தருகிறோம்’ என்று. அதே போல அணு குண்டுகள் செய்ய பயன்படும் புளுட்டோனியத்தை டன் கணக்கில் உற்பத்தி செய்யும் அணுகுண்டு உலையில் கரண்ட்டும் கிடைப்பதால் அணு மின் நிலையம் என்று கூறுவதும் இருக்கிறது.

பெண்கள் உரிமைப் பேரவையின் பானுமதி பேசும் போது தமிழகமே இருளில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது நெய்வேலியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் நம் தமிழ்நாட்டுக்கு தரப்படாமல் கேரளாவிற்கும், கர்னாடகாவிற்கும் விற்கப்படுவது கண்டிக்கப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டார்.

வின் டிவியின் டி.எஸ்.எஸ். மணி பேசும் போது தூத்துக்குடி பழைய காயலில் கன நீர் ஆய்வகம் என்ற பெயரிலும், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் என்ற பெயரிலும், கூடங்குளத்தில் மஹேந்திரபுரியில் கன நீர் ஆய்வகம் என்கிற பெயரிலும் இயங்குபவை எல்லாம் உண்மையில் அணு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளே என்று குற்றம் சாட்டினார். நண்பர் கல்பாக்கத்தின் பக்கத்தில் கூட இது போல ஒரு இடத்தில் அணுகுண்டுகள் செய்யும் தொழிற்சாலை இருப்பதாகக் கூறினார். எனக்கு நெஞ்சில் திடுக்கென்று அடித்துக் கொண்டது.

தலித் விடுதலைக் கட்சியைச் சேர்ந்தவர் பேசும் போது கன்னியாகுமரியில் சுனாமியின் போது 200 டன் எடையும் 200 அடி நீளம், 65 அடி அகலம் கொண்ட இரும்புப் பாலம் தூக்கி வீசப்பட்டது என்று குறிப்பிட்டார். ஆனால் அப்துல் கலாமோ சுனாமியால் அணு உலைக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று சாமி சத்தியம் செய்கிறார்.

பூவுலகின் நண்பர்கள் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர் பேசும் போது கூடங்குளம் 1000 மெகாவாட் திறனுள்ளது என்கிறார்கள். அதில் 700 மெகாவாட் தான் அதனால் சாதாரணமாக உற்பத்தி செய்ய முடியும். தமிழ் நாட்டுக்கு அதில் 20 சதவீதம் அதாவது 280 மெகாவாட் தான் இதிலிருந்து கொடுக்கப்படும். மீதி அனைத்தும் மற்ற மாநிலங்களுக்கு. இதே போலத் தான் கல்பாக்கத்திலிருந்து கடப்பாவிற்கு அணு மின்சாரம் கொடுக்கப்படுகிறது என்றார். சென்னை பல்கலைக் கழகத்திற்கு அருகேயுள்ள பழம்பெரும் காஸா மஹால் தீப்பிடித்து அங்கு இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் தீக்கிரையான போது அதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பியது தமிழக அரசு. அந்தக் குழு காஸா மஹாலைச் சுற்றிப் பார்த்து விட்டு சேதம் பற்றிய ஆய்வு செய்யவும் அறிக்கை தரவும் ஒரு வார காலம் ஆகும் என தமிழக அரசிடம் தெரிவித்தது. ஆனால் நம் அப்துல் கலாமோ காலையில் போய் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பு என்ற பெயரில்  இருக்கும் கூடங்குளம் அணு உலையை சுற்றிப் பார்க்கிறார். மாலையிலேயே பத்திரிக்கையாளர் பேட்டியில் ஆய்வு முடிந்ததாகக் கூறி, அணு உலை மிக்க பாதுகாப்பாக இருப்பதாய் அறிவித்து 40 பக்க அறிக்கை தருகிறார். இந்த அறிக்கை எப்படிப் பட்டது என்று வினவினார் பேசியவர்.

டி.எஸ்.எஸ் மணி பேசும் போது நடுவில் சிறு சலசலப்பு. வந்தது விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவன் வந்து மேடையில் ஏறினார். சிறிது நேரத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வந்து சேர்ந்தார்.
சிறிது நேரத்திலேயே திருமா பேசினார். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து பார்லிமெண்ட்டில் உண்ணாவிரதம் இருந்ததாகவும், நாடாளுமன்றத்தில் அணு சக்தி கூடாது என்று வாதிட்டதாகவும் தெரிவித்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று போராடும் கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்று கேட்டார். ரஷ்யாவோ அமெரிக்காவோ யார் கொண்டு வந்தாலும் அணு உலை தீயது தான். கம்யூனிஸ்ட்டு கட்சியின் (சிபிஎம்) நேற்று நடந்த மாநாட்டில் போடப் பட்ட முக்கியமான தீர்மானம் தமிழ்நாட்டில் இன்னும் சாதிய ஒழிப்புக்காகப் போராட வேண்டும் என்பது. அறுபது வருடங்களுக்கு முன் பெரியார் போட்ட தீர்மானம் இது. கம்யூனிஸ்ட்டுகள் கடந்த பத்தாண்டு காலமாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் நாடுகளின் எல்லா அணு உலைகளையும் மூடிவிடப் போவதாக அறிவித்துள்ளன. கேரளாவில் தான் முதன் முதலில் கூடங்குளம் கட்டப்படுவதற்காக இடம் பார்க்கப் பட்டது. பின்னர் கேரள அரசின் எதிர்ப்பால் தமிழ்நாட்டில் கூடங்குளம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றார்.

பின்னர் பேசிய சீமான் தனக்கே உரிய பாணியில் அரை மணி நேரம் பேசினார். கூடங்குளம் ஆபத்தில்லாததுன்னு சொல்பவர்கள் பார்லிமண்டைச் சுற்றி பாதுகாப்பாக பத்து கட்டி வைத்துக் கொள்ள வேண்டியது தானே என்றார். அணு மின்சாரம் பாதுகாப்பானது என்றால் தெருவுக்கு தெரு அணு மின் உலை வைக்க வேண்டியது தானே என்று கோபமாகக் கேட்டார். மாலை நடக்க விருக்கும் மாநாட்டில் தொடர்ந்து பேசுவதாகச் சொல்லி சீக்கிரமே பேச்சை முடித்துக் கொண்டார்.

தமிழ்நாடு மக்கள் பீடம் – கண்ணன்., சிபிஐ எம்.எல் – சுப்பிர மணியன் போன்று இன்னும் பல அமைப்பினரும் பேசினர். கூட்டத்திற்கு வந்த கூட்டம் எல்லாம் காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டமாகத் தெரியவில்லை. இடிந்த கரை மக்களின் போராட்டத்தில் மிஷனரிகளின் பங்கு சர்ச்சுகளின் வழியாகவும், போதனைகள் வழியாகவும் இருப்பதாகவும், அதே போல் சாதிய அமைப்புகளின் மூலமாகவும் ஆதரவுகள் திரட்டப்பட்டதாக நண்பரொருவர் கூறினார். இதில் உண்மையும் இருக்கிறது. ஆனால் நம் பிரதமர் சொல்வது போல் உதயகுமார் அமெரிக்காவிலிருந்து வரும் பணத்திற்காக அணு உலையை எதிர்த்துப் போராடுகிறார் என்பது எவ்வளவு தூரம் உண்மை ?

சிபிஎம் நண்பர் ஒருவரிடம் கூடங்குளம் அணு உலை பற்றி சிபிஎம்மின் நிலைபாடு பற்றிக் கேட்ட போது கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளைத் திறப்பதில் அவர்களுக்கு சம்மதம் என்றும், மற்ற 6 அணு உலைகளும் 1-2-3 ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப் படுவதால் அவற்றைக் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். சிபிஎம் அணு சக்திக்கு எதிரானது அல்ல. மாறாக அமெரிக்காவின் பிடியினுள் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி துறையை அடமானம் வைக்கும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மட்டுமே  எதிரானது என்று ஆணித் தரமாகக் கூறினார்.

உலகெங்கும் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் வலுக்கும் காலத்தில் இந்திய சிபிஎம் மட்டும் இன்னும் விவரம் தெரியாமல் ‘ஆக்கத்திற்கே அணு சக்தி’ என்கிற சிறுபிள்ளைத் தனமான வாசகங்களைக் கையாளுவது வேதனையாக இருக்கிறது. சிபிஐ கூட பரவாயில்லை. எல்லோரும் மக்களின் கோபத்தை வடிக்க ஆளும் வர்க்கம் பயன்படுத்தும் கருவி சிபிஎம் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதை எப்போது உணர்வீர்கள்? முன்பு ஈழப் பிரச்சனை (2009ல் ஈழப் படுகொலைகள் நடந்த போது வாயே திறக்காத சிபிஎம் இன்று ராமகிருஷ்ணன் இலங்கையில் மக்கள் கொல்லப்பட்டதையும் இன்னும் முகாம்களில் அல்லல் படுவதையும் கண்டித்து தீக்கதிர் நாளேட்டில் 2012 மார்ச்ல் முழங்குகிறார்); இப்போது கூடங்குளம்.. அணு சக்தி ஆக்கத்திற்கு பயன்படுத்தப் படுவதென்பது சிங்கத்தின் நகங்கள் நீளமாக இருக்கிறதென்பதால் அதை முதுகு சொறியச் சொல்வது போல இருக்கிறது.

அணு உலைக்கு யுரேனியம் தோண்டுவது முதல் கடைசியில் அணு உலை கழிந்த அணுக் கதிர் கழிவுகளை பூமிக்கடியில் 3 கி.மீ ஆழத்தில் புதைத்து அதை இளவு காத்த கிளி போல பல நூறு வருடங்கள் பார்த்துக் கொள்வது வரை எல்லாமே பணம் தின்னும் தனியார் காசு கொழிக்கும் ப்ராஜக்ட்கள் என்பதற் காகத்தான் அவை முன்னிறுத்தப் படுகின்றன. மக்களுக்கு ரொம்ப உபயோகமுள்ளது என்று நம்ப வைக்கப் படுகின்றன. மக்கள் பணங்களை பல்லாயிரம் கோடிகளைத் தின்று கோழி கழிவது போல கொஞ்சமே கொஞ்சம் கழியும் மின்சாரத்தை மக்களுக்கு அல்வா என்று கூறி விற்கும் கதை தான் இங்கு நடக்கிறது.

உதயகுமார் கட்சி சார்ந்தவர் அல்லர். தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர் தான். அவர் போராடுவது மனதுக்கு சந்தோஷமாக இருந்தாலும் என்ஜிஓக்களின் மீதான நம்பகத்தன்மை நமக்கு சமீப காலமாக வலுவிழந்து வருவதால் இவர் என்றைக்கு குடை சாய்வார் என்று உள்ளூர ஒரு பயமும் எழுகிறது. ஏனென்றால் அரசியல் அற்ற போராட்டம் என்பது ஏகாதிபத்தியத்தின் நாடக மேடையில் மக்களுக்காக நடத்தப் படும் புரட்சி எனும் நாடகமாகத் தான் இருக்க முடியும் என்பதை கடந்த காலத்தில் நிகழ்ந்த எவ்வளவோ நிகழ்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன. லிபியாவில் கடாபி கொல்லப்பட்டது கடைசியாய் நடந்த புரட்சி நாடகம்.

மேலும் உதயகுமார் என்னதான் உறுதியாகவே இருந்தாலும் இது போல அரசியல் பின்புலமில்லாத தலைவர்களை, இயக்கங்களை ஒரு என்கௌன்டர், ஒரு துப்பாக்கிச் சூடு, ஒரு தடியடியில் வேண்டுமென்றே அடிவயிற்றில் உதைத்து ஆறு மாதங்களுக்கு ஆஸ்பத்திரியில் அவதிப்பட வைக்கும் போலீஸ் பூட்ஸ் கால்கள் என்று இவர்களை தடுக்க ஏகப்பட்ட தடைகள் இருக்கின்றன. இதையும் தாண்டி இவர் ஜெயிக்க முடியுமா என்பது சந்தேகமே!

கூடங்குளம் மக்களின் எதிர்காலம் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அணு உலையின் சாதக பாதகங்களை அலசும் சுவ்ரத் ராஜூவின் கட்டுரையை  படியுங்கள். இன்னும் நிறைய விஷயங்கள் புலனாகும்.

Sunday, February 26, 2012

பரமக்குடி துப்பாக்கிச்சூட்டின் மீதான பொதுவிசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கை வெளியீடு



டிசம்பர் 3, 2011. சென்னை. லயோலா கல்லூரி.

காலை எட்டு மணித் தூக்கத்தை மதுரையிலிருந்து வந்து கெடுத்த தீண்டாமை ஒழிப்பு முண்ணணியைச் சார்ந்த நண்பர் ஒருவர் சொல்லித்தான் கடந்த செப்டம்பர் 11 அன்று, காவல்துறையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட, பரமக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வின், காரணங்களை அறிய ஒரு பொது விசாரணைக் குழு அமைக்கப்பட்டதும், அக்குழு விசாரித்து இப்படி ஒரு அறிக்கை வெளியிடப்படுவதே தெரியும். இத்தனைக்கும் நான் எல்லா நியூஸ் சானல்களையும் நாளைக்கு மூன்று வேளையும் மேயும் கழுதை தான். இருட்டடிப்பு?!. ஆச்சரியப்பட்டவாறே மாலை சுமார் 4 மணி அளவில் நானும் நண்பரும் லயோலா கல்லூரி வாசலை அடைந்தோம்.

வாசல் செக்யூரிட்டி நமது வாகனத்தை நிறுத்தி வண்டியின் எண்களை பிழையின்றி எழுதியபின் உள்ளே அனுமதித்தார்.
கல்லூரி விடுமுறை தினம். மாணவர்கள் தென்படவில்லை.
விடுதி மாணவர்கள் ஒன்றிரண்டு பேர் எப்போதாவது உலவினார்கள்.

லயோலாக் கல்லூரியின் மைதானத்தைப் பார்த்தபடி நின்றிருந்த பெரியதொரு ஹால் அது. இரண்டாயிரம் பேரை அடைத்து வைக்கலாம். ஹாலின் முன்புறமிருந்த பெரிய பெரிய மரங்களின் நிழல்களில் புத்தகங்களின் விற்பனை களை கட்டியிருந்தது. கூட்டம் துவங்கும் நேரம் சரியாகத் தெரியவில்லை.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது மக்கள் கண்காணிப்பகம் (People’s Watch) என்கிற தன்னார்வ மனித உரிமை இயக்கம்(NGO).
பளிச் சென்ற ப்ளக்ஸ்கள் வாசலில் வரவேற்றன. வாசலில் மக்கள் கண்காணிப்பகத்தின் ப்ராஜக்ட்கள் பலவும் புத்தக வடிவில் கிடைத்தன. வாசலில் ஒரு ஆள் உயர ப்ளக்ஸ்களில் பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்து போன ஒவ்வொரு நபரின் பெயர், அவர் மேல் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடங்கள், உடலில் மேலிருந்த காயங்கள், அவர் எவ்வாறு கொல்லப்பட்டிருப்பார் என்பதை விளங்கவைக்கும் விவரங்களோடு புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன.

அப்போது தான் அதில் கொடுக்கப்பட்டிருந்த பேச்சாளர்களின் பட்டியலைப் பார்த்தேன். அதிர்ச்சி.. ஆச்சரியம். மு.க.ஸ்டாலின் தி.மு.க, நல்லகண்ணு சி.பி.ஐ, பழ.நெடுமாறன் த.தே.இ, மருத்துவர் ராமதாஸ் பா.ம.க, வை.கோ ம.தி.மு.க, ஜி.ராமகிருஷ்ணன் சி.பி.எம், திருமாவளவன் வி.சி., கொளத்தூர் மணி பெ,தி.க, ஜவாஹிருல்லா ம.நே.ம.க, ஜான் பாண்டியன் த.ம.மு.க, பெ.மணியரசன் த.தே.பொ.க, ஆம்ஸ்ட்ராங்க் பி.எஸ்.பி, சிவகாமி சமத்துவப்படை, பாலசுந்தரம் இ.க.க ம-லெ, சிதம்பரநாதன் , தீரன் நாம் தமிழர் என்று 16 பேரின் பெயர் போடப்பட்டிருந்தது. அதிமுக, காங்கிரஸ், பிஜேபி தவிர கிட்டதட்ட எல்லா கட்சிகளும் கலந்துகொள்ள இருக்கின்றன.

எனக்கோ ஆச்சரியம். அப்படியென்றால் கட்சிக்கு முன்னூறு பேர் என்றாலும் கூட்டம் ஹால் கொள்ளாதே என்று நினைத்தபடியே உள்ளே நுழைந்தோம். ஒவ்வொரு தலைவராக வர ஆரம்பிக்க கூட்டம் பெரிதானது. முன்கூட்டியே தயாராக விளம்பரம் ஏதும் செய்யாமல் இருந்திருந்தும், சுவரொட்டிகளோ, பத்திரிக்கை விளம்பரங்களோ கொடுக்காமல் இருந்திருந்தும்(ஏன்?) கிட்டத்தட்ட 2000 பேர் வந்து ஆஜராகிவிட்டார்கள்.

மேடையில் வே.வசந்தி தேவி, கருப்பன் ஐ.ஏ.எஸ், திரு சுதா ராமலிங்கம், வி. கிருஷ்ணா ஆனந்த், டாக்டர் சேவியர் செல்வ சுரேஷ், பேரா. கல்விமணி, பொன்னீலன் மற்றும் தியாகு உள்ளிட்ட பொதுவிசாரணைக் குழுவின் நடுவர் குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

மேடையில் பேசிக் கொண்டிருந்த மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த அம்மணியும், பின்னர் பேசிய பலரும் குறிப்பிட்டது இது: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை சாதிக் கலவரம் (இரு சாதிகளுக் கிடையே சண்டையே அங்கு வரவில்லை) என்று சட்டசபையில் புளுகிய ஜெயலலிதா அம்மையார் அதை விசாரிக்க அவசரமாக ஒரு கண்துடைப்பு தனி நபர் கமிஷனையும் ஏற்பாடு செய்தார்.
ஆனால் பரமக்குடி மக்கள் எந்தக் கிராமத்திலும் இவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவே இல்லை. யாரும் வந்து சாட்சியமும் கூறவில்லை. ஏனென்றால் அப்பாவி மக்களைக் கொன்றது அரசின் காவல்துறை தானே. ஆனால் தன்னார்வக் குழுவினர் தலைமையில் சென்ற பொதுவிசாரணைக் குழுவிடம் எல்லா பாதிக்கப்பட்டவர்களும் வந்து விரிவாக வாக்குமூலம் தந்தார்கள்.

இந்த விரிவான வாக்குமூலங்களைப் பெற்று ஆய்வு செய்து 500 பக்க அறிக்கையொன்றை தயாரித்தது பொதுவிசாரணைக் குழு. அவ்வறிக்கை தான் இன்று வெளியிடப்படுகிறது. மேடையில் முழங்கிக் கொண்டிருந்த தன்னார்வக்குழு அம்மையார் முடித்தவுடன் அறிக்கையை வந்திருந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் சேர்ந்து வெளியிட்டனர்.

பின் தீண்டாமை ஒழிப்பு முண்ணணியின்(சிபிஎம் சார்பு) மாநிலச் செயலாளர் சாமுவேல் ராஜ் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. வரிசையாக ஒவ்வொரு தலைவராக அழைக்கப்பட பேசினர்.

முதலில் திமுக சார்பாக வீராவேசமாகப் பேசிய திமுக செயலாளர்(இவர் ஒரு தலித்) உடனே கிளம்பிவிட்டார். பின்பு பேசியவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்.
தேவரின் குருபூஜைக்கு காங்கிரஸ் முதல் அம்மா வரை எல்லாரும் தவறாமல் ஆஜராவதையும் அதற்கான தடபுடல் ஏற்பாடுகளையும் அதே நேரத்தில் தலீத்துக்களின் தலைவர்களுக்கான விழாவிற்கு ஊரடங்குகளும், தடையுத்தரவுகளும் பிறப்பிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டினார். கருணாநிதி யாரோ உயர் சாதித் தலைவர்களை வரவேற்கப் போனதை சுட்டிக் காட்டினார். தலித்துக்களுக்கான பஞ்சமி நிலங்கள் கூட அவர்களுக்குக் கொடுக்கப்படாமல் இருப்பது பற்றி அரசுகள் கண்டுகொள்வதே இல்லை என்று குற்றம் சாட்டினார்.

அடுத்துப் பேசிய சிபிஐ நல்லகண்ணு பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காவல் துறை செய்த சூழ்ச்சி என்றார். அதில் கொல்லப்பட்டவர் ஒருவர் இளநீர் விற்பவர், ஒருவர் தம் பெண்ணின் திருமணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கச் சென்றவர், இன்னொருவர் தனது பிரசவத்திற்கு வந்த மனைவியையும், குழந்தையையும் பார்க்க வந்திருந்தவர். இவர்கள் யாரும் குருபூஜைக்கு வந்தவர்களோ அல்லது போராடிய போராட்டக்காரர்களோ அல்ல. ஆனால் அனைவரும் தலித்துகள்.
மேலும் இது போன்று சாதிச் சண்டைகளோ, இனச் சண்டைகளோ கிளப்பி விடப்படும் இடங்களில் பெரும்பாலும் முதலில் சொல்லப்படும் குற்றச்சாட்டு பெண்ணை மானபங்கப் படுத்தினான் என்பது. அது எதிர்ப்புறத்தின் மீது வெறுப்பை உடனே ஏற்படுத்தும் ஆயுதம் என்பதால் இங்கு காவல் துறை அதைச் செய்திருக்கிறது என்றார். இம்முறை அவர்கள் சொன்ன காரணம் பெண் சப்-இன்ஸ்பெக்டரை போராட்டக்காரர்கள் கையைப் பிடித்து இழுத்தார்கள் என்பது. காவல் துறை அங்கே இரண்டு நாட்களாக ஆயுதங்களுடன் நிற்கிறது. சுற்றிச் சூழ்ந்து எங்கு பார்த்தாலும் நிற்கும் காவல் துறைக்கு அப்படி யாரேனும் அத்துமீற முயன்றிருந்தால் அவர்களை ஏன் உடனே பிடித்து கைது செய்யவில்லை. துப்பாக்கிச் சூடு வரை போவானேன். மேலும் பேசிய அவர் சாதிச் சண்டைகளே முதலில் இல்லை என்கிற நிலை ஏற்பட வேண்டும் என்றார்.

பழ.நெடுமாறன் பேசிய போது தலித்துகளின் பொருளாதார நிலை இன்று வரை மேம்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். அதனால் அவர்களால் கோர்ட், கேஸ் என்று கூட அலைவது வாழ்க்கையைத் தொலைப்பது போலாகும் என்றார். அன்று ஜான் பாண்டியனை கைது செய்ததற்காக மறியல் செய்தவர்கள் ஆயிரம் பேரல்ல. வெறும் முப்பது நாற்பது பேர். அங்கே திரண்டு நின்ற போலீசோ நூற்றுக் கணக்கில் இருக்கும். இந்த சில நூறு போலீசால் முப்பது நாற்பது பேரை அவர்கள் வன்முறையே செய்திருந்தாலும் சுற்றி வளைத்துப் பிடித்திருக்க முடியும். அப்படியிருக்க துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்றார். இதில் ஒருவரின் நெஞ்சின் மீது கைத்துப்பாக்கி வைத்து சுடப்பட்டு அது பின்புறம் துளைத்து வெளிவந்து அவர் இறந்திருக்கிறார். இருவர் போலீசால் சுற்றி வளைத்து அடித்தே கொல்லப்பட்டு இருக்கிறார்கள். காயம் பட்டவர்கள் யாருக்கும் ஒரு கை முறிவு, ஒரு கால் முறிவு என்று தற்செயலாக நிகழ்ந்த காயம் போல இல்லாமல் ஒவ்வொருவருக்கும் மூன்று அல்லது நான்கு இடங்களில் முறிவுகள், உடலில் இடைவெளி விடாமல் அடிபட்ட காயங்கள் இப்படி கொடூரமாக குறிவைத்து தாக்கப்பட்டது தெரிகிறது என்றார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது சட்டசபையில் முதல்வர் மோசடியாகக் கூறியபடி அது ஜாதிகளுக்கிடையே நடந்த கலவரம் அல்ல. காவல் துறையின் அத்துமீறிய செயல் என்று குறிப்பிட்டார்.
பின்னர் ஜான் பாண்டியன் உணர்ச்சி பொங்கப் பேசினார். அவரை முன்னெச்சரிக்கையாக கைது செய்தவர்கள் ஏன் காவல்துறை துப்பாக்கிச் சூடு பயிற்சி மைதானத்தில் கொண்டு போய் தன்னை சிறை வைத்தார்கள் என்று கேட்டார். ஜான் பாண்டியன் என்கவுன்டர் செய்யப்படுவாரோ என்கிற பதற்றமே பரமக்குடியில் அவர்களை மறியல் செய்ய வைத்தது. மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்டின் செரின் மற்றும் பாலசுந்தரம், சிதம்பரநாதன், நாம் தமிழர் இயக்கத்தின் தீரன் முதலானோர் பேசினர்.
விழா முடியும் சமயத்தில் கொஞ்சம் முன்கூட்டியே வெளியே வந்தால் வாயிலில் ஒரு டி.வி.க்காக சுற்றிலும் விளக்குகள் பளபளக்க ஒரு சாதீய இயக்கத்தின் முக்கிய பொறுப்பிலுள்ள ஒருவர் வீராவேசமாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். சுற்றிலும் அவரைப் படமெடுக்கும் பாம்புகள் போல் நாற்புறமும் கேமராக்கள் அவரை கவர் செய்தன. அவர் நினைத்திருப்பார் இன்றைக்கு சன் டி.வி.யின் தலைப்புச் செய்தி நாம தான் என்று. பாவம் அவர். அன்று தலைப்புச் செய்தி நயன்தாரா. அன்று, அடுத்த நாள், அந்த வாரக் கடைசியில் கூட நான் தொலைக்காட்சியில் இப்படி ஒரு கூட்டம் நடந்த்தையோ, இவ்வளவு தீவிரமான பேச்சுக்கள் பேசியதையோ எந்தத் தொலைக்காட்சியிலும் காணவில்லை திருமாவின் தமிழன் தொலைக்காட்சி தவிர. சரியான சோம்பேறி நிருபரான நான் இந்தக் கட்டுரையை முடித்து வெளியிட இவ்வளவு நாள் ஆகி விட்டது.

பரமக்குடியில் அநியாயமாய் கொல்லப்பட்ட ஆத்மாக்கள் என்னை மன்னிக்கட்டும்.